தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’,’தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்’ என்ற பாரதிதாசன் வரிகளை மேடைதோறும் பெருமையுடன் முழங்கி வரும் புகழ் பெற்ற விண்வெளி அறிஞர்கள் மூவர்.

உலக மொழிகளின் ராணி எனப்படுவது ஆங்கிலம். ஆங்கில வழிக் கற்றால் தான் அறிஞராக முடியும், வல்லுநராக முடியும் என்ற கருத்தைத் தகர்த்தெரிந்தவர்கள் இம்மூவர்.

1. டாக்டர். அப்துல்கலாம்

2. டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை

3. டாக்டர். நெல்லை சு.முத்து

டாக்டர். அப்துல்கலாம்

டாக்டர். அப்துல்கலாம் அக்னி, ரோகிணி ஏவுகணைகளை தயாரித்து ‘இந்தியாவின் ஏவுகணை வீரர்’ எனப் பெயர் பெற்றவர். பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் இந்தியாவை வல்லரசு நாடுகளின் தரத்திற்கு உயர்த்தியவர். இந்திய இராணுவ‌ ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவர். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் விண்வெளித் துணைக் கோள்களை விண்ணில் செலுத்தி நிறுத்தும் ராக்கெட்டுகளுக்கு அந்நிய நாட்டைச் சார்ந்திருந்த நம்மை எஸ்.எல்.வி.3 மூலம் சுயசார்பு அடைய வைத்த‌ சாதனையாளர். அப்துல்கலாம் ராக்கெட் விட்ட தமிழன்.

பத்மபூசன், பத்மவிபூசன், பாரத ரத்னா, வீரசாகர் போன்ற விருதுகளுக்கும், 60க்கும் மேற்பட்ட பல்கலைக் கழங்கள் கொடுத்த டாக்டர் பட்டங்களுக்கும் சொந்தகாரர். அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, எனது பயணம், எழுச்சியூட்டும் எண்ணங்கள் போன்ற நூல்களுக்குச் சொந்தமானவர்.

டாக்டர். அப்துல்கலாம் படித்தது, ராமேஸ்வரம் அரசுத் தொடக்கப் பள்ளி மற்றும் இராமநாதபுரம் சுவார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி. பயின்றதோ தமிழ் வழிக் கல்வி. அறிவியல் புரட்சி தாய்மொழியால் தான் ஏற்படுத்த முடியும் என நம்பியவர்.

அறிவியல் ஆராய்ச்சிகளை தமிழ் மொழியிலேயே செய்ய வேண்டும், பிற நாட்டு ஆராய்ச்சி நூல்களையும் தமிழாக்கம் செய்ய வேண்டும் என செல்லுமிடமெல்லாம் ஒதியவர். திருக்குறள் அவரது வாழ்க்கை வழிகாட்டி.

டாக்டர். அப்துல்கலாமுக்கு பிடித்த குறள்’

அறிவு ஆற்றல் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

டாக்டர். அப்துல்கலாம் படித்தது தமிழ், பள்ளி மாணவர்களிடம் பேசுவது தமிழ், எதிலும் தமிழ், எங்கும் தமிழ் என்பதே அவரது மூச்சு.

 

 

மயில்சாமி அண்ணாதுரை

 

டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை

டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கொத்தவாடி எனும் கிராமத்துப் பறவை. டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை அந்த ஊர் ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் மலர்ந்த மொட்டு. டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத்த பூ. டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை தான் பெற்ற தமிழ் வழிக் கல்வி மணத்தை உலகெல்லாம் பரப்பிய பூங்காற்று. டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை கிராமத்து மண்ணிலே பிறந்து விண்ணைத் தொட்ட செம்மல்.

டாக்டர் அப்துல் கலாமுக்குப் பிறகு இஸ்ரோ நிறுவனப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு வருபவர். IRSSS (Director of Indian Remote sensitive and small, Science and student satellite) – யின் திட்ட இயக்குநர்.

சந்திராயன்-1 நிலவு பயணக்குழுவின் தலைவர். உலகளவில் முதல் முயற்சியிலேயே சந்திராயன்-2 மார்ஸ் பயணத்தில் வெற்றி கண்டு இந்தியாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற அரசுப் பள்ளி அறிஞர். டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை செல்லுமிடமெல்லாம் தாம் அரசுப் பள்ளி மாணவன், தமிழ்வழிக் கற்றவன் என்று பெருமையோடு பேசும் உத்தமர்.

இன்சாட்-2சி, இன்சாட்-டி, இன்சாட்-இ என்று வரிசையாக வெளிக் கலங்களை விண்ணில் அனுப்பி வெற்றி கண்ட தமிழர். தினதந்தி நாளிதழில் ‘கையருகே செவ்வாய்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வரும் கட்டுரையாளர். ‘வளரும் அறிவியல்’ என்ற மாத இதழை வெளியிட்டு வரும் சிறந்த பத்திரிக்கை ஆசிரியர். விக்ரம் சாராபாய் பெயரில் வழங்கப்படும் விருதுக்கும், 21 பல்கலைக் கழகங்கள் வழங்கிய முனைவர் பட்டங்களுக்கும் உரிமையாளர்.

 

 

நெல்லை சு.முத்து

டாக்டர் நெல்லை சு.முத்து

டாக்டர் நெல்லை சு.முத்து தமிழ் வளர்த்த அறிவியல் அறிஞரில் இவரும் ஒருவர். தமிழும் அறிவியலும் இவரது இரு கண்கள். சிறந்த தமிழ் எழுத்தாளர்.’தமிழால் முடியும், தமிழில் முடியும் எனச் செல்லுமிடம் அனைத்தும் சொல்லிப் பறை சாட்டுபவர்.

டாக்டர் நெல்லை சு.முத்து நெல்லைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர். சதிஷ் தவான் விண்வெளி ஆராய்சி மையத்தில் பணிபுரிந்தவர்.’நிலவு நமது பயணத்தின் எல்லையல்ல, நமது பயணம் அதையும் தாண்டியுள்ளது’ என்று ஊக்கப்படுத்தியவர்.

விண்வெளி 2057, அறிவூட்டும் அறிவியல் விளையாட்டு, அறிவியல் வரலாறு, விண்வெளி நாட்குறிப்பு, அறிவியல் பெண்மணிகள், ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் ஆகிய நூல்கள் இவர் இளம் மாணவர்களுக்காகப் படைத்தவை.

டாக்டர் நெல்லை சு.முத்து இலக்கியவாதியாகத் திகழும் சிறந்த அறிவியல்வாதி. பாரதியார் பல்கலைக் கழகம் டாக்டர் நெல்லை சு.முத்துவுக்கு ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’ என்ற விருதுதைக் கொடுத்துச் சிறப்பித்துள்ளது. சமீபத்தில் ஜுலையில் நடந்த தினமணி நாளிதழ் நடத்திய திருக்கோவிலூர் கபிலர் விழாவில் ‘கபிலவாணர்’ என்ற பட்டம் டாக்டர் நெல்லை சு.முத்துக்கு அளிக்கப்பட்டது.

தமிழ் படியுங்கள், தமிழில் படியுங்கள், நீங்களும் விண்வெளி அறிஞராகலாம், ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாழி நானாழி’ என்ற ஒளவையார் மொழியில் பாஸ்கலைக் காணலாம்.

‘தினையளவு போதா சிறுபுல் நீர் தீண்ட பனையளவு காட்டும்’ என்ற கபிலர் பாடலில் கலிலியோவைக் காணலாம். எனவே தமிழில் படிப்போம். அதுவும் அரசுப்பள்ளியில் படிப்போம். விண்ணில் பறப்போம். விண்ணளவு உயர்வோம்.

-எம்.காமராஜ்