தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள் பற்றிப் பார்ப்போம். தமிழ்நாடு சுமார் 22,877 சதுர கிமீ காடுகளின் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59 சதவீதம் ஆகும்.

தேசிய வனக் கொள்கையின்படி மாநிலங்கள் தங்களது நிலப்பரப்பில் 33.33 சதவீதத்தை காடுகளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள் ஐந்து ஆகும். அவை

1. வெப்ப மண்டலப் பசுமை மாறாக் காடுகள்

2. வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள்

3. முட்புதர் காடுகள்

4.சதுப்புநிலக் காடுகள்

5. மலையகக் காடுகள் ஆகியவை ஆகும்.

 

வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்
வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

இக்காடுகள் என்றும் பசுமையான இலைகளை உடைய மரங்களைப் பெற்று செழிப்பாகக் காணப்படுகின்றன. இவை இலைகளை உதிர்க்காமல் எப்பொழுதும் பசுமையான இலைகளைப் பெற்றிருப்பதால் பசுமை மாறாக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்காடுகள் அதிக மழைப்பொழிவையும், அதிக வெப்பத்தையும் பெறுகின்றன. இக்காடுகளில் மழையளவு ஆண்டிற்கு 200 செமீக்கு மேலும், வெப்பம் 25டிகிரி செல்சியசுக்கு மேலும் காணப்படுகின்றன.

இக்காடுகள் எபோனி, தேக்கு, செம்மரம், கருங்காலி போன்ற மரங்களைக் கொண்டுள்ளன. இம்மரங்கள் சுமார் 60 மீட்டர் உயரம் வரை வளரும்.

இவ்வகைக் காடுகள் தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலைச் சரிவுகளிலும், கடலோரப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

 

வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள்

அகன்ற இலைக் காடுகள்
அகன்ற இலைக் காடுகள்

இக்காடுகள் அகன்ற இலைகளை உடைய மரங்களைக் கொண்டுள்ளன. ஆண்டிற்கு 100 செமீ முதல் 200 செமீ வரை மழைப் பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள் காணப்படுகின்றன.

இவை வறண்ட காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுகின்றன. இதனால் இவை இலையுதிர் காடுகள் மற்றும் பருவக்காற்றுக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இக்காடுகளில் பல்வேறு வகையான குட்டையான, உயரமான, மென்மையான மற்றும் கடினமான மரங்கள் காணப்படுகின்றன. சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக் ஆகியவை குறிப்பிட்டத்தக்க வெப்ப‌ மண்டல அகன்ற இலை வகையை சார்ந்த மரவகைகள் ஆகும்.

இக்காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் காணப்படுகின்றன.

 

முட்புதர் காடுகள்

முட்புதர் காடுகள்
முட்புதர் காடுகள்

நீண்ட வறண்ட காலமும் குறைவான மழைப்பொழிவும் உள்ள இடங்களில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. சிறிய குட்டையான மரங்களும், புதர்களும் இக்காடுகளில் காணப்படுகின்றன.

இக்காடுகளில் காணப்படும் தாவரங்கள் ஆழமான வேர்களுடன் கனமான தண்டினையும் சதைப்பற்றுள்ள இலைகளையும் பெற்றுள்ளன.

வறண்ட காலநிலையை எதிர் கொள்ளும் வகையில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. பனை, கள்ளி போன்றவை முட்புதர் காடுகளில் காணப்படும் தாவரவகைகள் ஆகும்.

 

சதுப்புநிலக் காடுகள்

சதுப்புநிலக் காடுகள்
சதுப்புநிலக் காடுகள்

வெப்ப‌ மண்டல, துணை வெப்ப‌ மண்டலப் பகுதிகளில் அதிக உப்பளவு நீர் கொண்ட ஓதப் பெருக்குப் பகுதிகளில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் ஓதக்காடுகள், மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆற்று முகத்துவாரம் மற்றும் ஓதப் பெருக்கு அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளில் சதுப்பு மரங்கள் செழித்து வளருகின்றன. தமிழ்நாட்டில் பிச்சாவரம், கோடியக்கரை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன.

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டின் மிக முக்கிய பெரிய காடுகளாகும். கடலூர் மாவட்டத்தில் சிதரம்பரத்திற்கு அருகில் இக்காடுகள் சுமார் 1214 ஹெக்டேர் பரப்பில் கடலில் அமிழ்ந்த நிலப்பகுதியில் காணப்படுகின்றன.

இங்கு சிறுசிறு தீவுகளாக உள்ள மரக்கூட்டங்களால் வெப்ப‌ மண்டல பசுமை மாறா மரங்களும், புதர்வகைகளும் காணப்படுகின்றன. இவை ரைசோபோரா என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தவை.

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் 25சதுர கிமீ பரப்பிலும், கோடியக்கரையில் 17சதுரகிமீப் பரப்பிலும் இக்காடுகள் பரவியுள்ளன.

 

மலையகக் காடுகள்

மலையகக் காடுகள்
மலையகக் காடுகள்

மழைப்பொழிவு அதிகமாக உள்ள மலைச்சரிவுகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகளில் மரங்களைத் தவிர்த்து சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் காணப்படுகின்றன.

இக்காடுகளில் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகள் தமிழ்நாட்டில் ஆனைமலைப் பகுதிகளிலும், நீலகிரிப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

 

3 Replies to “தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.