பக்தி, யோகம், ஞானம், தமிழ், சித்தர் இலக்கியம் ஆகிய அனைத்தும் கூட்டுக் கலவையாக நிறைந்திருக்கும் ஓர் அற்புதமான இணையதளம் இதுவாகும்.
மிகச்சிறந்த கலைப் பொக்கிஷமாக, அறிவுப் பொக்கிஷமாகத் தேடுகிற எல்லாவற்றையும் தருகிற களஞ்சியமாக விளங்குகின்ற ஒரு இணைய தளம் தான் ”சித்தன்” எனும் இந்த இணையதளம் ஆகும்.
எங்கும் கிடைக்காத அரிய தகவல்களும், தமிழ் மருத்துவ முறைகள், தமிழ்த் திரைப்படப் பாடல்கள், உலக இலக்கியக் கதைகள், பல்துறை கேள்விப் பதில்கள், சிறப்பான அறிஞர்களின் தத்துவக் கருத்துக்கள், பக்திமயமான பல்வேறு மதங்களின் பாடல்களோடு கூடிய கருத்துக்கள், ஞானக் கதைகள், கட்டுரைகள், கிடைப்பதற்கு அரிய பலநூறு சித்த வைத்திய நூல்கள், சிந்தனைக்குத் தீனி போடும் அறிஞர்களின் சிந்தனைகள், கருத்துக்கள் என ஒரே இடத்தில் அனைத்தையும் சேகரித்து அதை மிகச் சரியாக இதில் பட்டியலிட்டு இருக்கின்றது.
இத்தளத்தை உருவாக்கியவர் ஒரு சித்த வைத்திய மரபில் வந்திருக்கிற பெயரை அடைப்பெயராக வைத்திருப்பவர். தன்னையும் தான் சார்ந்த பல விஷயங்களையும் எங்கும் கூறுவதற்கு விருப்பம் இல்லாதவர்.
அவருடைய புகைப்படம் ஒன்றும், அதற்குக் கீழாகத் தான் மதுரையைச் சேர்ந்தவர். எனது பெயர் ”ஞானவெட்டியான்” என்பதோடு அவருடைய அனைத்து செய்திகளும் முடிவடைந்து விடுகிறது. வேறு எந்தச் செய்தியையும் இந்த இணையப் பக்கத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை.
மிகக் கடினமான உழைப்பால் ஏற்படுத்தப்பட்ட இந்த இணையதளம் தன் பெயரையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்த விரும்பாத மிகச்சிறந்த தன்னடக்கத்தோடு, சிறப்புகளோடு, அறிவோடு இருக்கிற ஒரு சித்தரை தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அந்த வகையில் அவரை நாம் பெருமிதத்தோடு இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். அவரின் பணி மிகப் பெரிய பணியாகவே தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டிருக்கும்.
இத்தளத்தில், பெரும் பகுப்புகளாகச் சித்தன், ஆலயங்கள், மருத்துவம், சிந்தனையாளர்களின் கருத்துக்கள், மிக அரிய பொக்கிஷமான பழைய, புதிய திரைப்பட பாடல்கள், ஏன் எதற்கு எப்படி எனும் தலைப்பில் மிகப்பெரிய ஆய்வுகளில் அடங்கிய கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த குறிப்பு, சொற்களுக்கான விளக்க உரைகள், விளக்கங்கள், ஆங்கிலபதங்கள், உலக இலக்கிய வகையில் கதைகள் என்பன உள்ளன.
அரிய நூல்கள் எனும் தலைப்பில்,
சித்தர் இலக்கியம், எனும் தலைப்பில்,
பக்தி இலக்கியம் எனும் தலைப்பில்,
ஞானம் எனும் தலைப்பில்,
தமிழ் அமுது எனும் தலைப்பில்,
சிந்தனைக்கு எனும் தலைப்பில் பெரும் தலைப்புகள் காணப்படுகின்றன
இவை ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்கள் செய்திகளும் கட்டுரைகளும் பாடல்களும் நூல்களும் இதனுள் இடம் பெற்றிருக்கின்றன
அரிய நூல்கள் எனும் தலைப்பின் கீழ் இசுலாம், ரசவாதம், இலக்கணம், இலக்கியம், கிறிஸ்துவம், சமயம், சோதிடம், ஞானம், நிகண்டு, நீதி எனும் உள் தலைப்புகள் காணப்படுகின்றன.
இவற்றில் சித்தர் இலக்கியம் எனும் தலைப்பின் கீழ் சிவவாக்கியம், பஞ்ச பட்சி சாஸ்திரம் எனும் உள் தலைப்புகள் காணப்படுகின்றன.
அவற்றிலும் பஞ்சபட்சி சாத்திரம் எனும் தலைப்பின் கீழ் அகத்தியர் பஞ்சபட்சி, உரோமரிஷி பஞ்சபட்சி என்று இரு தலைப்புகளில் அதனுள் உள்தலைப்புகளாக அமைந்திருக்கின்றன.
பக்தி எனும் தலைப்பின் கீழ், சைவம், சைவத்தின் உட்பகுதிக்குள் திருவாசகம், திருவெம்பாவை போன்ற இலக்கியப் பாடல்களும் அதன் விளக்கங்களும், வைணவம் எனும் தலைப்பின் கீழ் திருப்பாவை நூலும், நூலினுடைய விளக்கமும் உள்ளன.
துதி என்னும் தலைப்பின்கீழ், அனுமன் துதி, அம்மை 108 எனும் உட்தலைப்புகள் அதனூடாக அது சார்பான பாடல்களும் விளக்கங்களும் காணப்படுகின்றன.
கௌமாரம் எனும் தலைப்பில், கந்தர் கலிவெண்பா, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் ஆகிய இரு தலைப்புகள் அதனுடைய பாடல்கள் விளக்கங்கள் காணப்படுகின்றன.
பக்தித் தகவல்கள் எனும் தலைப்பும், பக்திக் கதைகள் எனும் பெருந்தலைப்பும் பக்தி எனும் மிகப்பெரும் தலைப்பின் கீழ் அமைந்திருக்கின்ற தன்மையை காண்கின்றோம்.
ஞானம் எனும் தலைப்பின் கீழ், ஐந்து துணைத் தலைப்புகள் காணப்படுகின்றன. ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான முத்துக்கள், ஞானம் வெட்டியான் 1500, காகிதம், அவ்வை குரல் எனும் உள் தலைப்புகள் காணப்படுகின்றன. அவற்றினுள் அவை சார்ந்த நூல்களும் பாடல் பாடல்களும் அதன் விளக்கங்களும் காணப்படுகின்றன.
தமிழ் அமுது எனும் தலைப்பின் கீழ் அகரமுதலி, கட்டுரைகள், பழமொழி நானூறு, பழமொழிகள் 515, பிரபுலிங்கலீலை, விவேக சிந்தாமணி ஆகிய நூல்களின் பாடல்களும், பாடல் விளக்கங்களும் காணப்படுகின்றன.
சிந்தனைக்கு என்னும் பெரும் தலைப்பில், ராமகிருஷ்ணர், பொன்மொழிகள், யாரோ சொன்னது, விவேகானந்தர் போன்ற உள் தலைப்புகள் காணப்படுகின்றன.
வகை இடப்படாதவை எனும் தலைப்பின் கீழ், கதைகள், பலசரக்கு, மற்ற சமயங்கள் எனும் உள் தலைப்புகளில் பல்வேறு விதமான நாடுகளினுடைய கதைகளும், பல்வேறு தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளும், பிற சமயங்கள் குறித்த கட்டுரைகளும் இப்பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகப்பெரும் சிறப்பாக இருக்கிறது.
ஆலயங்கள் என்பது தனி இணையப் பக்கமாக இத்தளத்திலிருந்து விரிகிறது. கோயில்.சித்தன்.ஒஆர்ஜி என்பதாகத் தொடர்கிறது.
இப்பக்கத்தின் கீழாக ஆலயங்கள், இதரக் கோயில்கள், மாவட்டவாரியாக ஆலயங்கள், இதர மாநிலங்களில் தலங்கள், தகவல்கள் எனும் தலைப்புகளோடு இப்பகுதியானது ஒரு மிகப்பெரும் இணையதள பக்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இத்தளத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு திருக்கோவில்கள் குறித்தான செய்திகளும் குறிப்புகளும், கோயில் குறித்தான தகவல்களும், அமைவிடம் குறித்தான, சிறப்புகள் குறித்தான, பல்வேறு விபரங்கள் இங்கு பதிவிட பட்டிருப்பது மிகப்பெரிய தொகுப்பாகக் காணப்படுகிறது.
பாடல் பெற்ற திருத்தலங்களிலும், பாடல் பெறாத திருத்தலங்களும், தோஷ நிவர்த்தித் தலங்கள், நவகிரக தலங்கள், பஞ்ச பூத தலங்களில் பரிகார தலங்கள், அறுபடை வீடுகளாக முருகன் கோயில்களிலும், பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிற திருக்கோயில்களும், மாவட்ட வாரியாக இருக்கின்ற திருக்கோயில்களும் என வகை பிரிக்கப்பட்டு மிகச்சரியான வழிகளோடு, ஊர் குறித்தான சிறப்புகளோடு, சிற்ப வேலைப்பாடுகள் குறித்த முழுத் தகவல்களும் அடங்கிய ஒரு அற்புதமான தொகுப்பாக இந்த ஆலயங்கள் எனும் பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவம் எனும் பெரும்பகுதி தனி இணையதளப் பகுதியாக மெடிசன் சித்தன் ஒஆர்ஜி எனும் பகுதியாக விரிவடைகிறது.
வைத்திய சாகரம் குருநாதர் அருளிய எளிய மருத்துவம் எனும் தலைப்பின் கீழ் இப்பகுதியானது அமைந்திருக்கிறது. சித்தர்களின் பாடல்கள், நோய்களுக்கான தீர்வுகள் எனப் பல ஆயிரம் நோய்களுக்கான மருந்துகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
உடல், கண், காது, சிறுநீரகம், தலை, தொண்டை, நெஞ்சு, முகம், வயிறு, வாய், விஷக்கடி, மூலாதாரம் எனும் ஒரு தலைப்புக்களின் கீழ் இன்னும் பல உள்தலைப்புக்கள் அமைந்து நோய் ஒவ்வொன்றிற்கும் ஏற்படுகிற வைத்தியக் குறிப்புகளை மூலிகை குறித்த புகைப்படங்களோடு விளக்கி, அதை எந்த ஒரு சித்தர் கூறி இருக்கிறார் என்பதையும் கூறி, அதற்கான பாடலையும் தந்து, விளக்கி இருப்பது பொக்கிஷமான கட்டுரைகளாக அமைந்திருக்கின்றன.
எப்படி ஏன் எதற்கு எனும் தலைப்பில், பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றியும் புகைப்படங்களுடன் பல நூறு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவை, அறிவியல் சார்ந்த உலக இயக்கம், ஞானம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் பகுதியாக அமைந்திருக்கிறது.
அடுத்து அறிவியல் சார்ந்த பல ஆயிரம் சொற்களுக்கு ஆங்கில விளக்கம் தரப்பட்டிருக்கிறது. தனி இணையதளமாக இதுவும் விரிகிறது.
கதைகள் எனும் பகுதி மிக விரிவாக தனித் தளத்தில் இயங்குகிறது. அதில் அரபிய நாட்டினுடைய கதைகள், கிரீஸ் நாட்டின் உடைய கதைகள், இந்திய நாட்டின் உடைய கதைகள், ருஷ்ய நாட்டு கதைகள், ஜென்ம கதைகள், மத்திய ஐரோப்பிய நாட்டுக் கதைகள் எனப் பல்வேறு நாட்டுக் கதைகள், குழந்தைகளுக்கான கதைகளாகத் தொகுக்கப்பட்டு எழுதப் பட்டுள்ளன.
அரிய நூல்கள் பகுதியில் பல நூறு சித்தர்களின் இலக்கிய நூல்கள் பிடிஎஃப் வடிவில் அப்படியே தரப்பட்டுள்ளன. அரிய பொக்கிஷமாக இவை கருதப்படுகிறன. பழங்காலத் திரையிசைப்பாடல்களும் பல நூறு பாடல்கள் தகவலுடன் உள்ளன.
இணையதளத்தைப் படித்து இன்புற http://siththan.org/ எனும் பகுதியைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
Comments
“தமிழ் பொக்கிசம் – சித்தன்.ஓஆர்ஜி” அதற்கு 2 மறுமொழிகள்
இறையருள் நாடும் அன்பர்களின் இறை பசித்திருக்கும் இணையதளம் பற்றிய கட்டுரை மிகவும் அருமை
சிறந்த ஆராய்ச்சி. ஒவ்வொரு தனிமனிதரின் முயற்சியும் கண்டறிந்து அவர்களை அடையாளம் படுத்துவதும் அவர்கள் செய்த அளப்பரிய பணியையும் வெளிக்கொணரும் முயற்சியும் பாராட்டத் தகுந்தது.
சித்தன் என்கிற இணையத்தை அறிமுகம் படுத்திய விதம் சிறப்பு. அதே சமயத்தில் அந்த இணையத்தில் இருக்கும் நூல்களைப் பற்றிய ஆராய்ச்சியும் போற்றுதலுக்குரியது.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா.