நெட்டையான காலுடனே
நீளமான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில் கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்; அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா?
ஒட்டகம்
முறத்தைப் போன்ற காதுடனே
முகத்தில் ஒற்றைக் கையுடனே
உரலைப் போன்ற காலுடனே
ஊர்வலத்தில் வருமே; அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா?
யானை
பட்டுப் போன்ற உடலுடனே
பல நிறத்தில் இறகுடனே
கட்டையான குரலுடனே
களித்து நடனம் ஆடும்; அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா?
மயில்
வட்டமான முகத்துடனே
வளைந்திருக்கும் மூக்குடனே
முட்டை போன்ற கண்ணுடனே
வேட்டை ஆடும் இரவில், அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா?
ஆந்தை
-அழ.வள்ளியப்பா