தம்மபதம்

தம்மபதம் – புத்த சமய அற நூல்

தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.

எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.

கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.

ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.

மறுநாள் கல்லூரி நூலகம், வடசேரிச்சாலை; சித்திரா நூலகம், வேப்ப மூடு நூலகம் என்று சல்லடை போட்டுச் சலித்து விட்டேன். ஆனால், அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை.

இந்நாளைப் போன்று அன்று ‘இன்டெர்நெட்’ வசதிகள் நம்மிடம் இல்லை. அந்த வசதியிருக்குமானால் பத்து நிமிடங்களில் விபரம் விரல் நுனிக்கு வந்திருக்கும்.

மிகுந்த முயற்சிக்குப்பின் பின்னாளில் P.L. Vaidya, ‘Dhammapada’ என்ற ஒரு சிறிய ஆங்கில நூல் எனக்குக் கிடைத்தது. அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

1989இல் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மாலை நேரக் கல்லூரி மாணவனாக எம்ஃபில் வகுப்பில் சேர்ந்தேன். அங்கு நான் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட தலைப்பு “தம்மபதமும் திருக்குறளும் – ஓர் ஒப்பாய்வு” என்பதாகும். ஆகவே, அது தொடர்பாக மென்மேலும் அறிய அறிய எனது அறியாமை வெளிப்பட்டது.

என் பேராசிரியரும் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் டாக்டர். ஆ. கேசவமூர்த்தி அவர்கள் என் ஆய்வை வழி நடத்தினார். இதிலும் இளங்கலை, முதுகலை போன்று கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேறினேன்.

தம்மபதம் – புத்த சமய அற நூல்

கிறிஸ்து பிறப்பதற்கு 563 ஆண்டுகளுக்கு முன் கௌதம புத்தர் பிறந்தார். தனது 35வது வயதில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

தனது வாழ்வின் பெரும்பகுதியை நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசியும், விவாதித்தும், உரையாடியும் தன்னுடைய கொள்கைகளையும், வழிமுறைகளையும் வெளியிடுவதிலேயே கழித்தார்.

அவர் தனது கருத்துக்களை எழுத்து வடிவாக எழுதியதாக எங்கும் சான்றில்லை. அவருடைய மாணவர்கள் பின்னாளில் அவற்றை எழுத்து வடிவமாகக் கொண்டு வந்தனர்.

புத்தரின் மறைவிற்குப் (கி.மு. 483) பின் மகத நாட்டின் தலைநகர் ‘இராஜ கிரஹத்தின்’ அருகில் ‘சத்தபணி;’ என்ற மலைக் குகையில் வயது முதிர்ந்த ஐந்நூறு பிக்குகள் கூடினர்.

அம்மகாநாட்டில் புத்தரின் போதனைகளைத் தொகுத்தனர். அத்தொகுப்பிற்கு விநயபிடகம், தம்மபிடகம் என்று இருபெயர் சூட்டினர். பிடகம் என்றால் ‘பெட்டி’ என்று பொருள். ஒவ்வொரு பிடகத்திற்குள்ளும் பல நூல்கள் இருந்தன.

பின்னர், சிறிது காலம் சென்று மூன்றாவதாக ஒரு பிடகம் தொகுக்கப்பட்டது. மூன்றாவதாகத் தொகுக்கப்பட்ட நூலிற்குத் ‘திரிபிடகம்’ (மூன்றாவது பெட்டி) என்று பெயர். இத்திரிபிடகத்தில் மட்டும் சுமார் முப்பதற்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவே தம்மபதம்.

தம்மபதத்தில் இருபத்தியாறு அதிகாரங்களும் நானூற்று இருபத்து மூன்று பாடல்களும் உள்ளன. அவை புத்திரின் தொடக்க காலச் சொற்பொழிவுகளிலிருந்து திரட்டப்பட்டவை எனக் கூறப்பட்டாலும், சில பாடல்கள் மகாபாரதம் மற்றும் மனுஸ் மிருதி நூல்களில் காணப்படுபவைகளாக உள்ளன.

தம்ம பதத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலின் ஆசிரியர் யார்? என்பதனைக் குறிப்பிடவில்லை.

புத்த சமயத்தவர் தழுவிய பொது அறங்களைப் பரவலாகத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்ட ஒரு நூல் தம்மபதம்.

சிறுகவிதை வடிவில் உள்ள தம்மபதப் பாக்கள் பெரும்பாலும் ஒன்றிற்கொன்று வைப்பு முறையில் நெருங்கிய தொடர்பில்லாமல் இருக்கின்றன.

அதிகாரப் பிரிப்பு முறையும் ஒரு சொல்லாக வழிப்படாது, தன்னிச்சையாக அமைந்துள்ளது. சில அதிகாரங்களில் வந்த சொல்லோ, அல்லது தொடரோ, மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் இருக்கின்றன.

தம்மபதத்தில் உள்ள பாடல்களில் பாதிக்கு மேற்பட்டவை மரபு வழிபட்ட பிற நூல்களில் காணக் கிடக்கின்றன. இதன் மூலம் தம்ம பதத்தைத் தொகுத்தவர் நல்ல மலர்களை ஆங்காங்கே தேடி மாலையாகத் தொடுப்பதைப் போன்று பல்வேறுபட்ட மூலங்களிலிருந்து திரட்டப்பட்ட பாடல்களால் இந்த அரிய தொகுப்பைத் தொகுத்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

பண்டைய இந்திய அற நூல்களில் நன்கு பயிற்சியுள்ள ஒரு புத்த சமயச் சீடனால் தொகுக்கப்பட்ட அரிய நூல் தம்மபதம்.

தம்ம பதம் காட்டும் வழி

தன்னலத்தை ஒழித்து, ஆசைகளையும் வெறுப்புகளையும் அகற்ற வேண்டும்.

உள்ளத்தில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு மலர்ந்து பரிமளிக்கச் செய்ய வேண்டும்.

ஒழுக்கம் என்னும் உறுதியான பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மெய்யறிவின் மூலம் அறியாமையைப் போக்க வேண்டும்.

அறியாமை போனால், ஆசை ஒழியும்; ஆசை ஒழிந்தால் பிறவியும் ஒழியும்; நிலையான நிருவாகப் பேறு கிடைக்கும்.

இவையே தம்ம பதம் மக்களுக்குக் காட்டும் வழியாகும்.

புத்தருடைய இக்கொள்கைகள் அம்மதத்தாருக்கு மட்டுமின்றி, மனித குலத்திற்கே பொருந்துவன. இதில் சாதிகள் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் இல்லை; புத்தருடைய சமயம் அருள் மயமானது; யாரும் அதில் சேரலாம்.

புத்த மதம் தமிழ் நாட்டிற்குக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வந்தது என்றும், இதனை இங்குக் கொண்டுவந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவர் உறவினர் மகேந்திரரும் மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறும் கருத்து, ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

புத்தமதம் தமிழகத்தில் பரவத் தொடங்கும் பொழுது திரிபிடக நூல்கள் நன்கு தொகுக்கப்பட்டு விட்டன. பௌத்த மதத் தத்துவத்தில் மனத்தைப் பறி கொடுத்த தமிழக அறிஞர்கள் திரிபிடகத்தைக் கற்றது மட்டுமின்றித் தமிழ் மொழியிலும் அதனை மொழி பெயர்த்தனர் என்பதை மணிமேகலை நூல் வரிகள் மூலம் உணர முடிகிறது.

திருக்குறளிலும் இதன் தாக்கம் பெரிதும் இல்லாமல் இல்லை.

காதல், வீரம், கொடை ஆகிய சிறந்த பண்புகளிலும், இயற்கை இன்பத்திலும் ஈடுபட்டிருந்த நமது சங்ககால மக்களின் வாழ்க்கை நிலையைத் தம்மபதம் எந்த அளவு பாதிக்கச் செய்தது என்பது உங்களின் தெளிவான சிந்தனைக்கு உரியது.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

 


Comments

“தம்மபதம் – புத்த சமய அற நூல்” மீது ஒரு மறுமொழி

  1. […] பல நூற்றாண்டுகளாக அழியாது தொடர்ந்து புத்தரின் ஞானத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையினாலும் […]