கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழம் தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
தர்பூசணி 92 சதவீதம் தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது இனிப்பு கலந்த சாறு நிறைந்த சதைப்பகுதியையும் குளிர்ச்சியையும் நாம் உணரலாம்.
இப்பழத்தின் தாயகம் ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனம் என்று கருதப்படுகிறது. அங்கிருந்து எகிப்து சென்று பின் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளை இப்பழம் சென்றடைந்தது.
தற்போது வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் சீனாதான் இப்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகின் தர்ப்பூசணி உற்பத்தியில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக சீனா செய்கிறது.
இப்பழம் கொடி வகையைச் சார்ந்த தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. பயிர் செய்த சில நாட்களில் மஞ்சள் நிறப்பூ இத்தாவரத்திலிருந்து பூக்கிறது.
இப்பழத்தின் வெளிப்புறம் மஞ்சள் கலந்த பச்சைநிறத்தில் வெள்ளை நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. இப்பழத்தின் உட்புறம் வெளிர் சிவப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் சாறு நிறைந்த சதைப்பகுதியினைக் கொண்டுள்ளது.
இப்பழம் கறுப்புநிறக் கொட்டைகளை சதைப்பகுதியில் கொண்டுள்ளது. இப்பழம் உருண்டை, நீள்வட்டம், வட்ட வடிவங்களில் காணப்படும்.
தர்ப்பூசணியில் உள்ள சத்துக்கள்
விட்டமின்கள் ஏ,சி, தயாமின்(பி1), நியாசின் (பி3), பான்தோனிக் அமிலம் (பி5), பைரிடாக்ஸின் (பி6), இ, போலேட்டுகள், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள், ஆல்பா கரோட்டீன், பீட்டா கரோட்டீன், லைக்கோபீன்கள், கோலைன், சிட்ருலின், லுடீன்-ஸீக்ஸாக்னை போன்றவைகளும் 92 சதவீத நீர்ச்சத்தும் உள்ளன.
மருத்துவப் பண்புகள்
இதயம் மற்றும் எலும்புகள் பலம் பெற
இப்பழத்தில் காணப்படும் லைக்கோபீன்கள் இதயம் எலும்புகள் பலம்பெற பெரிதும் உதவுகின்றன. லைக்கோபீன்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிசெய்கிறது. எனவே இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
லைக்கோபீன்கள் அதிகம் உள்ள தர்ப்பூசணியை உட்கொள்ளும்போது ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் தாக்குதலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் உடல் உட்கிரகிக்கும் கால்சியத்தின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் எலும்புகள் மற்றும் எலும்பு மூட்டுகள் பலம் பெறுகின்றன.
உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்க
இப்பழத்தில் உள்ள சிட்ருலின் என்ற அமினோ அமிலம் நமது உடலில் உள்ள செல்களில் கொழுப்பு சத்து சேரவிடாமல் தடைசெய்கிறது. சிட்ருலினானது அர்ஜினைன் என்ற அமினோ அமிலமாக சிறுநீரகத்தால் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த அமினோ அமிலம் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் குறைந்த கொழுப்பினை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. மேலும் உடலில் கொழுப்புச்சத்து சேரவிடாமல் தடை செய்கிறது.
அழற்சிக்கு எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பலம் பெற
இப்பழத்தில் ஃப்ளவனாய்ட்ஸ், கரோடீனாய்டகள், டிரைடெர்பெனாய்டுகள் போன்ற பீனாலிக்குகள் அதிகம் காணப்படுகின்றன. லைக்கோபீன் என்ற கரோடீனாய்டு அழற்சியினால் ஏற்படும் வீக்கத்தினைக் குறைப்பதோடு ப்ரீ ரேடிக்கல்சுகளையும் தடைசெய்கின்றது.
இப்பழத்தில் காணப்படும் டிரைடெர்பெனாய்டுகள் உடலுக்கு அழற்சி எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கிறது. இந்த பீனாலிக்குகள் பழுத்த தர்ப்பூசணியில்தான் அதிகம் காணப்படுகின்றன.
சிறுநீர் நன்கு வெளியேற
இப்பழமானது சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உடலில் உள்ள சிறுநீரை நன்கு வெளியேறச் செய்கிறது. கல்லீரல் செயல்பாட்டினால் உருவாகும் அமோனியாவை சிறுநீர் வடிவில் உடலில் இருந்து வெளியேற்ற இப்பழம் உதவுகிறது.
தசைகள் மற்றும் நரம்புகள் நன்கு செயல்பட
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியமானது தசைகள் மற்றும் நரம்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. இப்பழத்தினை உண்டு வலுவான தசைகள் மற்றும் நரம்புகளைப் பெறலாம்.
மேலும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு.
செரிமானத்திற்கு
இப்பழம் உண்ணும்போது காரத்தன்மையை உண்டாக்கி உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு அமிலப் பாதிப்பால் உணவுப் பாதையில் ஏற்படும் நோய்களையும் சரிசெய்கிறது.
தெளிவான கண்பார்வைக்கு
இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பீட்டா கரோடீனாய்டுகள் அதிகளவு விட்டமின் ஏவை உற்பத்தி செய்கின்றன. இது கண்களின் ரெக்டினாவைப் பாதுகாப்பதோடு, கண்அழற்சி நோய் ஏற்படாமலும், மாலைக்கண் நோய் ஏற்படாமலும் கண்களைப் பாதுகாக்கிறது. மேலும் விட்டமின் ஏ தோல், பற்கள், மென்மையான சதைப்பகுதிகள் ஆகியவற்றையும் பாதுகாக்கின்றன.
நோய் தடுப்பாற்றல், காயங்களை ஆற்றும் திறன், செல்கள் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. காயங்களை குணப்படுத்தும் கோலஜன் என்சைமை உருவாக்க விட்டமின் சி அவசியமாகிறது. எனவே விட்டமின் சி நிறைந்த இப்பழத்தினை உண்டால் காயங்களை விரைந்து ஆறும். மேலும் விட்டமின் சி செல்களுக்கு பாதுகாப்பினையும் வழங்குகிறது.
தர்ப்பூசணியை தேர்வு செய்யும் முறை
தர்ப்பூசணியைத் தேர்வு செய்யும்போது முழுபழமாக வாங்க நேர்ந்தால் பழமானது நல்ல எடையுடன் இருப்பதாகத் தேர்வு செய்ய வேண்டும்.
விரல்களால் தட்டும்போது பழம் உறுதியானதாகவும், பழத்தின் மேற்பரப்பு மென்மையாகவும் இருக்க வேண்டும். நன்கு பழுத்த பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வெள்ளை அல்லது பழுப்பு நிறக் கோடுகளுடன் காணப்படும்.
முழு பழத்தினை குளிர்பதனப் பெட்டியில் வைக்கும்போது வெப்பநிலை 20 டிரிகி இருக்குமாறு செய்து ஒரு வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நறுக்கிய பழத்துண்டுகளை வாங்க நேர்ந்தால் பழமானது சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும். விதைகள் கறுப்பானதாகவோ வெள்ளையாகவோ இருக்க வேண்டும். நறுக்கிய பழத்தினை டப்பாக்களில் அடைத்து குளிர்பதனப்பெட்டியில் வைத்து ஒரிரு நாட்கள் பயன்படுத்தலாம்.
இப்பழத்தினை அப்படியே கடித்து உண்ணலாம். பழச்சாறாக அருந்தலாம். பழக்கலவையில் சேர்த்து உண்ணலாம். இப்பழத்தின் கொட்டைகள் வறுத்து கேக் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாம்,சர்பத்,காக்டெயில் போன்ற வடிவிலும் இப்பழம் பயன்படுத்தப்படுகிறது.
இப்பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை
இப்பழத்தினை அளவோடு உண்ணும்போது அவை நமக்கு பல நன்மைகளைத் தருகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக உண்ணும்போது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
வளம் நிறைந்த இப்பழத்தினை உண்டு அதிகப்பலன் பெறுவோம்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்