5 ரூபாய்

தர்மத்தின் சம்பளம்- சிறுகதை

அந்நகரின் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த அந்த ஓட்டலிலிருந்து வெளிப்பட்ட முருகானந்தம், அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு, ஓட்டல் வாசலில் நின்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து கண்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

யாரைத் தேடுகிறான்?

சில விநாடிகளில் அவன் முகம் பிரகாசம் அடைந்தது. அவன் தேடிய நபர் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு பிச்சைக்காரப் பெண்மணி!

நடுத்தர வயது. எண்ணெய் பார்க்காத பரட்டைத் தலை. ஒட்டிய கன்னங்கள்; பஞ்சடைந்த கண்கள்; அழுக்குடன் கூடிய கிழிசல் உடை; சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை நாள் முழுக்க கால் கடுக்க நின்று, நடந்து, தொண்டை கிழிய வருவோர் போவோரிடம் கெஞ்சி, கையேந்தி கிடைக்கும் சொற்பத் தொகையைக் கொண்டு காலத்தைப் பொறுமையுடன் தள்ளும் ஓர் ஜீவன்.

பிள்ளைகள் படிப்பு நிமித்தம் மற்றும் மனைவியின் பணியை உத்தேசித்து குடும்பத்தை அழைத்து வராமல், மாற்றலாகி வந்தது முதல் அந்த ஓட்டலில் தான் சாப்பிட்டு வருகிறான் முருகானந்தம்.

அந்த ஓட்டலுக்கு சாப்பிடவரும் சமயமெல்லாம் வாயிலில் அந்த பெண்மணி கையேந்திக் கொண்டிருப்பாள். அப்பெண்மணிக்கு ஓரிரு ரூபாய்களைத் தர்மம் செய்துவிட்டு தான் சாப்பிட்ட உள்ளே நுழைவான்.

இது இன்று, நேற்று நடப்பது அல்ல. அவன் என்றைக்கு மாற்றலாகி வந்தானோ அன்று முதலே நடந்து வரும் ஓர் பழக்கம்.

இவனது ஆரோக்கிய விஷயத்தில் முருகானந்தம் மனைவிக்கு ரொம்பவும் அக்கறை. தினமும் போனில் உரையாடும்போது, ‘எதைச் சாப்டீங்க? இப்படி இருக்காதீங்க. அப்படி இருக்காதீங்க’ என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விக்கணைகளும், உத்தரவுகளும் இவனை வந்தடையும். அதற்கு பயந்தே அலைந்து திரிந்து இந்த ஓட்டலைத் தேர்ந்தெடுத்து இருக்கிறான்.

இன்று சாப்பிட்டு முடித்து வெளியே வந்ததும் அப்பெண்மணியைக் காணாததால் அவன் மனம் ஒருவித திருப்தியற்ற நிலையில் காணப்பட்டது.

மிகப்பிரமாதமாகத் தான, தருமங்கள் செய்ய முடியா விட்டாலும் அன்றாடம் ஒரு சிலருக்காவது தன்னால் இயன்றவரை தர்மம் செய்யும் ஓர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால், அன்று தர்மம் செய்யாமலேயே சாப்பிட்டு முடித்ததில் அவனுக்கு நிறைவில்லை.

தன்னை நோக்கி அப்பெண்மணி வருவதைக் கண்டதும் தயாராக ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.

நாணயமும் ‘நல்லா இரு மகராசா’ வாழ்த்தும் இடம் மாறின.

முருகானந்தம் அங்கிருந்து சென்றதும், அப்பெண்மணி ஓட்டல் வாயில் முன் நின்று கொண்டாள். ஓட்டலை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்தாள்.

‘இவ்வுலகை விட்டு மறையும் முன் ஒரு தடவையாவது எல்லோரையும் போல ஓட்டல் உள்ளே சென்று டேபிள் முன் அமர்ந்து ஆசை தீர விரும்பிதை வாங்கிச் சாப்பிட்டு விட வேண்டும்’- ஏக்கம் பெருமூச்சு வடிவில் அவளையறியாமல் வார்த்தைகளாக வெளிப்பட்டது.

மறுநாள் மாலை முருகானந்தம் வழக்கம் போல வந்தான். ஓட்டல் வாயிலில் நின்றிருந்த அப்பெண்மணியிடம் வழக்கத்திற்கு மாறாக ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து,

“இந்தாம்மா, நாளை என் பையனுக்குப் பிறந்த நாள் விழா. இன்று இரவு ஊர் செல்கிறேன். வர நான்கைந்து நாட்கள் ஆகும். அதனால்தான் ஐம்பது ரூபாய்” எனப் புன்னகையுடன் கூறியவாறே சாப்பிட உள்ளே சென்றான்.

அப்பெண்மணிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

‘இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு ஓட்டலுக்குள் சென்று அமர்ந்து ஆசை தீரச் சாப்பிட்டு நீண்ட நாள் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.’ மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தவன், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுத் தாமதமாக அன்று காலை சாப்பிடச் சென்ற சமயம் ஓட்டல் முன் ஜனத்திரள். ஆள் ஆளுக்குப் பரபரத்துக் கொண்டிருந்தனர்.

காவலர்கள் ஓட்டல் பணியாளர்களை ஏதேதோ விசாரித்து கொண்டிருக்க, ஆம்புலன்ஸில் ஒவ்வொருவராக ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். ஓட்டல் இழுத்து மூடப்பட்டிருந்தது.

அங்கு கூடியிருந்தவர்களிடம் விசாரித்ததில் சாம்பாரில் பல்லி விழுந்து, அதைச் சாப்பிட்டவர்கள் உடனே மயக்கமடைந்து வாந்தி எடுத்ததையும், மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவதையும் விலாவாரியாக எடுத்துரைத்தார்கள்.

முருகானந்தத்திற்கு பகீர் என்றது. ஓருவிதப் பதட்டத்துடன் ஆம்புலன்ஸ் உள்ளே எட்டிப் பார்க்க, பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியாக அந்தப் பிச்சைக்காரப் பெண்மணியும் இருந்தாள். கண்கள் சொருகிப் போய், துவண்டு கிடந்தாள்.

‘இவள் எப்படி இங்கே?’ என அவன் குழம்பியபோது இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

“பாவங்க, வழக்கமாக வெளியில் நின்று பிச்சை எடுக்கும் இவள் அதிசயமாக இன்று காலை ஓட்டல் உள்ளே வந்து ஓர் ஓரமாக டேபிள் முன் அமர்ந்து வேண்டியவற்றை ஆசை தீர வாங்கிச் சாப்பிட்டிருக்கிறாள். சாம்பாரை அதிகமாக வாங்கிச் சாப்பிட்டதால் இவள் நிலைமைதான் கவலைக்கிடமாக உள்ளது.”

ஆம்புலன்ஸ் படுவேகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. அன்றைய மாலை நாளிதழில் அந்தப் பிச்சைக்காரப் பெண்மணி மட்டும் இறந்து விட்டதாகவும் மற்றவர்கள் ஒருவழியாகப் பிழைத்துக் கொண்டார்கள் என்றும் செய்தி வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான் முருகானந்தம்.

வழக்கமாகத் தான் சென்று சாப்பிடும் நேரத்தில் அந்தப் பிச்சைக்காரப் பெண்மணி சென்று சாப்பிட்டு உயிரைவிட்டிருக்கிறாள். ஏதோ ஓர் சக்தி அன்று அவனைச் சற்றுத் தாமதமாகச் செல்ல வைத்திருக்கிறது.

‘தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்’ அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து டி.எம்.சவுந்திரராஜன் குரலைக் காற்றில் மிதக்க வைத்துக் கொண்டிருக்க முருகானந்தம் நெஞ்சமோ பாறாங்கல்லாய் கனத்தது.

அப்பிச்சைக்கார பெண்மணிக்காக அன்று காலை தயாராக எடுத்து வைத்திருந்த அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கண் கொட்டாமல் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான்.

‘என் உயிரைக் கொடுத்து உன் உயிரைக் காப்பாத்திட்டேன் மகாராசா!’

அப்பிச்சைக்காரி நாணய வடிவத்தில் தோன்றி அவனிடம் இப்படிக் கூறியதாகவே பட்டது அவனுக்கு.

‘பொல பொல’வென கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தன.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.