மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.
எமதர்ராஜா வந்து கதவைத் திறந்து பார்த்து, “யாருப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?” என வினவ, கோடீஸ்வரனோ “நான் ஒரு கோடீஸ்வரன். நான் சொர்க்கத்திற்குப் போக வேண்டும்” என்றான்.
“அப்படியா? நீ பூவுலகில் இருந்த சமயம் பிறருக்கு எந்தெந்த வகையில் நன்மை செய்திருக்கிறாய்? உதவியிருக்கிறாய்?” மீண்டும் எமதர்ராஜா கேட்டார்.
“பசியால் பரிதவித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் ஒருவனுக்கு ஒருமுறை ஒரு ரூபாய் தர்மமாகக் கொடுத்திருக்கிறேன்” என்று கோடீஸ்வரன் கூறவும், எமதர்மராஜா சித்திரகுப்தனை அழைத்து “இவன் செய்த தர்மம் நம்மிடம் பதிவாகியுள்ளதா?” எனக் கேட்க சித்திரகுப்தனும் கோப்புகளை நோட்டமிட்டு “பதிவாயிருக்கிறது பிரபு!” என்றான்.
மறுபடியும் கோடீஸ்வரனிடம் “வேறு என்னென்ன செய்திருக்கிறாய்?” என்று எமதர்மராஜா கேட்டார்.
“என் வீட்டினருகே உள்ள ஏழைச் சிறுவனுக்கு ஒருமுறை மீண்டும் ஒரு ரூபாய் கொடுத்தேன்” என்றான்.
சித்ரகுப்தனை அழைத்து கோப்புக்களைப் பார்க்கச் சொல்ல பதிவாகியிருப்பதாகச் சொன்னான்.
“வேறு ஏதாவது குறிப்பிடும்படிச் செய்திருக்கிறாயா?”
கோடீஸ்வரன், எமதர்மராஜன் மீண்டும் இப்படிக் கேட்டதும் எரிச்சலடைந்து “இல்லை” என ஒரே வார்த்தையில் பதில் கூறினான்.
சித்ரகுப்தனை மீண்டும் அழைத்து, “இவன் தன் வாழ்நாளில் இரண்டே இரண்டு தடவைகளே தர்மம் செய்திருக்கிறான். அதுவும் இரண்டே ரூபாய் மட்டுமே. வேறு எந்த நல்ல காரியமும் செய்து புண்ணியத்தை சம்பாதிக்கவில்லை. எனவே இவனிடம் அந்த இரண்டு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும் ஒரு ரூபாய் வட்டியாகச் சேர்த்துக் கொடு. கொடுத்து விட்டு இவனை நரகத்திற்கு அனுப்பு” என்று ஆணை பிறப்பித்தார் எமதர்மராஜா.
குழந்தைகளே! மாணவச் செல்வங்களே!! கூடுமானவரை நாம் பிறருக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும்.
பிறர் மனம் புண்படும்படி நடந்து கொள்ளாமல், நம்மால் இயன்ற அளவு தான தர்மங்கள், உதவிகள் செய்து அடுத்தவர் கணிப்பில் நாம் உயர்ந்து நிற்க வேண்டும். என்ன சரியா? ஆல் தி பெஸ்ட்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998