தர்மா குறும்படம்

தர்மா குறும்படம் விமர்சனம்

பெரிய தத்துவார்த்தமான கருத்தை, இரண்டு நிமிடத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் காட்டி, மனதுக்குள் புகுத்தி விட முடியுமா?

வசனமற்ற முறையில் ஆயிரம் வார்த்தைகளுக்கான வெளிப்பாட்டைக் கூறி விடத்தான் முடியுமா?

இசையும் காட்சியும் தீர்த்து விட முடியாத பக்கங்களில் உள்ளீடுகளை அச்சாணி போல் பிறரில் பதிந்து விடச் செய்ய முடியுமா?

உலக நியதிகளின் தாத்பரியத்தைப் பொட்டில் அடித்தார் போல் காட்சிகளால் புலப்படுத்தி விட முடியுமா?

‘முடியும்’ என்கிறது தர்மா குறும்படம். இரண்டு நிமிட தொலைபேசியில் எடுக்கப்பட்ட குறும்படம்.

குறும்படம் வசனமே இல்லாத நல்லதொரு குறும்படம். ஆனால் 3 மணி நேரம் ஓடும் படம் தராத கருத்தை, அனுபவத்தை, சுகத்தை இக்குறும்படம் தருகின்றது.

உலக நிகழ்வுகளின் மையப்புள்ளியின் ஆழம் அறிந்து, அதன் பிரதி பலன்களை நம்மோடு இணைத்துக் கொள்ளும் நிலையில் சாந்தமும் சமாதானமும் நிலைக்கிறது.

எதிராளி எச்சூழலில் எவ்விதமாய் நடந்து கொண்டான் என்பதை உணர்தல் என்பது வாழ்வின் சூட்சுமத்தை அறிந்து வாழ்தல் ஆகிறது.

நம் நிலையில், நம் யோசனையும், நம் உணர்வும் மட்டுமே நம்மை ஆளும்.

ஆனால், எதிரான மனநிலையும் முடிவுகளும் சில நேரம் பெரும் தீங்குகளை ஏற்படுத்தி விடுகின்றன.

இரு பக்கங்களும் இதனால் விரிவாகி தளர்வாகி இடைவெளி மனிதர்களுக்குள் பெருத்து விடுகின்றன.

அதனதன் பிறவிக் குணம் என்று ஒன்று உண்டு. அது உலக உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் உண்டு. அது பிறருக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளாது. அதற்கான பக்குவமும் அதற்கு இல்லை.

ஆனால், மனித சமூகம் அதிலிருந்து வேறுபட்டது. நிலை அறிந்து தன் சுபாவங்களைச் சிறிது மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.

ஆனால், யாரும் தான் அதை மாற்றிக் கொள்வதில்லை.
இதை உணர்தல் ஞானமாகிறது.

இதனை எல்லா மதங்களும் ஆதிகாலத்தில் இருந்து பேசுகின்றன. மனிதனை பக்குவப்படுத்துவதற்குத் தானே மதங்கள்?

எனவே, அது குறித்து அவைகள் நிறையச் சிந்தித்துப் பேசி இருக்கின்றன. விட்டுக் கொடுத்தல், பிறருக்கு உதவுதல், பணி செய்து கிடத்தல், என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் உலக மதங்கள் எல்லாம் இவற்றைத் தத்துவங்களாக மாற்றி இருக்கின்றன.

நிகழ்வின் தொடக்கப் புள்ளியை நோக்கி நகர்ந்து, அதன் வலி உணர்வதே பிறவியின் ஞானத்தை நமக்கு வழங்குகின்றது.

இந்து மதம், புத்த மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம் இவை எல்லாம் மேற்கண்ட தத்துவத்தையே மனிதனுக்கு ஆதி முதல் கற்றுத் தருகின்றன.

வாழ்க்கை முரண்

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உணவுக்காக மனிதன் பிற உயிர்களைக் கொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

உணவுச் சங்கிலி எனும் இயற்கை குறித்த தத்துவத்தைப் பலரும் கூறியுள்ளனர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆப்பிரிக்க அரபு விஞ்ஞானி மற்றும் தத்துவ ஞானி அல் ஷாகிஷ் உணவு சங்கிலியின் பிணைப்பை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

1927இல் சார்லஸ் எல்டன் எனும் அறிஞர் ஒருவரும் உணவு வலை என்னும் அமைப்புக் குறித்து சிறந்த நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதைத் தாண்டி தத்துவங்களும், அறிவு நிலையில் இருந்து, நடத்தை நிலைக்கு வரவேண்டிய கருத்தாக்கங்களைப் போதித்துள்ளது.

உதவுதல் என்பது மனித குணம். அது அறிவோடு கூடியது. உண்ணல் என்பது மனித தேவை. அது உறுப்போடு சம்பந்தம் உடையது.

இந்த இரண்டு தத்துவ ஞானமும், தத்துவார்த்தமும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும். ஆனால் ஒரே நேர்கோட்டில் இவை இரண்டும் பயணிக்கின்றன.

இரண்டு பக்கமும் இரண்டு நியதிகள் உண்டு. ஆனால், இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிகின்றன. இதன் மையப்புள்ளி அறிவது தெளிவின் மூலமாகவும், இதை முன்னோர்கள் பல நூறு உதாரணங்களால் மானுட சமூகத்திற்கு விளக்கி உள்ளனர்.

குறும்படத்தின் காட்சிகள்

தர்மா குறும்படம் இரண்டே காட்சிகளை முன்வைக்கின்றது.

முதல் காட்சியில் ஜென் தத்துவக் கதையில் வரும் தேள் கதை மிக அழகாகப் பேசப்படுகிறது; காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

தூரமான ஒரு காட்சி அமைப்பில் ஒரு பெருவெளிக் கண்மாய். அங்கு ஒருவர் குளிக்கின்றார். அவ்விடத்தில் நீரில் தேள் ஒன்று தத்தளிக்கிறது. குளிப்பவர் தன் கையால் அதை எடுத்துக் காப்பாற்ற முனைகிறார்.

தேள் கொட்டுகிறது. மீண்டும் மீண்டும் அவர் காப்பாற்ற நினைக்கிறார். தேளும் கொட்டுகிறது. கடைசியாக மண் மேட்டில் இருந்த காய்ந்த மரத்துண்டில் அந்தத் தேளைக் கொண்டு போய் விடுகிறார்.

பிறகு அவர் தன் உடலைத் துவட்டிக் கொண்டு அருகாமையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

இரண்டாம் காட்சியில் ஒரு மேடான பகுதி உள்ளது. அதில் அவர் ஏறுகிறார். பறவைகள், குருவிகள் சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் அதைக் குறி பார்த்துச் சுடுகின்றார்.

குறும்படம் அவ்வளவுதான்.

குறும்படத்தின் சிறப்பு

இந்த இரண்டு காட்சிகள் கருத்தால் முரணாக இருக்கின்றன. ஒன்று ஓர் உயிரினத்தைக் காப்பாற்றுகிறார். தேள் தன்னைத் தீண்டுகிற பொழுது கூட அதை ஏற்றுக் கொண்டு அந்த உயிரைக் காப்பாற்றுவதற்கு முனைகிறார்.

அவ்வளவு இரக்கக் குணம் உடையவரே குருவியைப் பார்த்துச் சுடுகிறார். இவை இரண்டும் முரணாக வெளிப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, வாழ்வின் சரியான பாதையை, சரியான நடத்தையை ஞானத்துடன் செய்வதற்கு அவர் முனைந்திருக்கிறார்.

அவரின் இரு செயல்களும் ஒரே நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுதான்.

மேற்கண்ட கருத்து இக்குறும்படத்தில் தானே புரிந்து கொள்ளும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

மெல்லிய உணர்வுகள் தத்துவார்த்தமான எண்ணங்கள், செயல்பாடுகள் குறுகிய நேரத்தில் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அந்தப் பெருவெளியாக இருக்கிற கண்மாய் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. அது எடுக்கப்பட்ட விதமும் அழகாக இருக்கிறது.

தொலைதூரக் காட்சியும் அருகாக அமைந்த காட்சியும், அதற்கு ஊடாக வெளிப்பட்ட இசையும் நுணுக்கமாக இருக்கிறது. கேமராக் கண்கள் அழகை, அற்புதத்தை அப்படியே உறிஞ்சி இருக்கிறது இயற்கையிடமிருந்து.

தர்மாவாகத் தர்மத்தை நிலைநாட்டும் நபர் தன் முகபாவத்தால் அருமையாக நடித்திருக்கிறார்.

அவரின் தோற்றம் ஒரு சாமியாரைப் போல அல்லது குருவிகளைப் பிடித்து விற்கும் வேட்டைக்காரரைப் போல மிகக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது.

இரண்டாம் கட்சியில் மண் மேட்டில் ஏறுவதும், குறி வைப்பதும், சுடுவதும் தொலைதூரக் காட்சியில் எடுக்கப்பட்டுஇருக்கிறது. அப்பொழுதுதான் கூற வந்த செய்தி புலப்படும்.

பெரிய விரிந்த அந்த மரம், அதன் எதிரான திசையில் உள்ள மரத்திலுள்ள பறவை குறி பார்த்துச் சுடப்படுகின்றது. இக்காட்சி அழகாக எடுக்கப்பட்டுள்ளது.

இசை அமைப்பாளர் இக்குறும்படத்தில் தமது திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மெல்லியதாகக் காற்று வீசுவதும், நீர் அலை அடிப்பதும், குளிப்பதுமான சப்தங்கள் மிகத் தெளிவாக உணர்வதற்கு வழிவகை செய்துள்ளார். நேரடியாகக் காண்பது போல் இருக்கிறது.

செல்பேசியில் எடுக்கப்பட்ட குறும்படம் போல் இல்லை. கலைத்துவமான கண்கள் இருந்தால் தான் செல்பேசியில் கூட இப்படி எடுக்க முடியும். நேர்த்தியான வண்ணக் கலவை அப்படியே மிதந்து செல்கிறது.

தேள் விட்ட இடத்தில் இருந்து துப்பாக்கி இருந்த இடத்திற்கு அருகாமையில் வந்ததைத் தவிர வேறு குறைகள் காணப்படவில்லை.

இலங்கை இயக்குனர் மதிசுதா இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். உலக அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த குறும்படத்திற்கான பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். படக்குழுவிற்குப் பாராட்டுகள்.

படக்குழு

இயக்கம்: மதிசுதா

திரைக்கதை மற்றும் எடிட்டிங்: மதிசுதா

ஒளிப்பதிவு மற்றும் ஒலி: ஸ்டீபன் சான்சிகன்

நடிகர்: சிந்தார்

தர்மா குறும்படம் பாருங்கள்

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com


Comments

“தர்மா குறும்படம் விமர்சனம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. எ. பாவலன்

    ஒரு நிமிடம் எட்டு வினாடிகள் கொண்ட ஒரு குறும்படத்திற்கு இத்தனை பெரிய விமர்சனத்தை எழுதியதற்காக முதலில் பாரதிசந்திரன் அவர்களை பாராட்டுகிறேன்.

    தேளின் குணம் கொட்டுவது என்பார்கள். ஒரு தேள் நீர் நிலையில் சிக்கித் தவிக்கும் பொழுது அதை காப்பாற்றும் துடிக்கும் மனம் கசிந்து உருகுகிறது. மற்றொரு காட்சியில் அதே மனம் தன் பசிக்காக பறவைகளை வேட்டையாடுகிறது.

    இந்த இரு நிகழ்வுகளை வைத்து இயக்குனர் அத்துணை அற்புதமாக இந்த குறும்படத்தை எடுத்து இருக்கிறார். வசனம் ஒரே ஒரு வார்த்தை கூட இல்லை.

    சில நேரத்தில் மௌனம் தான் தேசிய மொழியாக திகழ்கிறது என்பதற்கு இந்த படத்தில் வரும் மௌனம் ஒரு சாட்சி. தப்பித்தவறி கூட எங்கும் ஒரு வார்த்தை பேசியது இல்லை.

    இசையும் நடிப்பும் மட்டும் இப்படத்திற்கு கலங்கரை விளக்காக திகழ்கிறது.

    உணவு சங்கிலியின் கோட்பாட்டை மையமிட்டு உலக இலக்கியங்களில் பேசப்பட்ட தத்துவார்த்தமான சிந்தனைகளை கோட்படுத்தி மிக நேர்த்தியாக கட்டுரை ஒரு வடிவத்தில் இயங்குவதாக உணர்கிறேன்.

    நிச்சயம் இந்த ஒரு குறும்படத்தின் விமர்சனத்தை வைத்து உங்கள் சிந்தனையை தராசுத் தட்டில் நிறுத்திப் பார்க்க முடியும்.

    அந்த வகையில் இந்த குறும்படம் அதன் கோட்பாட்டு ரீதியில் ஒரு பக்கம் வெற்றியை நோக்கி பயணிப்பதைப் போல, உங்கள் விமர்சனமும் அந்தப் படத்திற்கு மெருகூட்டும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

    உண்மையில் மகிழ்கிறேன் பேராசிரியர். வாழ்த்துக்கள்!

  2. மதிசுதா

    படிக்கும் போதே பெரும் உணர்ச்சியைக் கிளர வைக்கின்றது.

    ஈழத்தின் மூலையில் உருவான படைப்புக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமிது.

    இவ்வங்கீகாரத்தை எழுதிப் பகிர்கின்றேன்

    மீண்டும் பெரு நன்றிகள்

    நன்றியுடன்
    மதிசுதா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.