வெங்காயம் வெள்ளைபூடு விளையாட வந்ததாம்
வெள்ளரிக்கா தன்னையும் சேர்த்துகிடச் சொன்னதாம்
எங்களோட உன்னச்சேர்க்க எப்படித்தான் முடியும்?
என்றேதான் இரண்டும்சேர்ந்து ஒரே குரலில் சொன்னதாம்
தங்கம் போன்ற சிவந்த தோலு எனக்குண்டு தெரியுமா?
தாறுமாறா உருண்டு ஓட என்போல முடியுமா?
இங்குள்ள எவருமே எனக்கு இணை இல்லையே
என்று சொன்ன வெங்காயம் குதிச்சு குதிச்சு சிரிச்சதாம்
எங்கதையை கேளுநீ எனக்கு ஈடு யாருஇனி
என்றபடி வெள்ளைப்பூண்டு தலைநிமிர்ந்து நின்றதாம்
சிங்கம் போல சமையலிலே நானிருக்கேன் தெரியுமா?
சேர்க்காம என்னை விட்டா உணவு எல்லாம் வீணம்மா
இங்க நடக்கும் நாடகத்தை எங்கிருந்தோ கண்டபடி
இதுஎன்ன தலைக் கனமாம் இவங்களுக்கு என்றபடி
கொஞ்சநேரம் யோசிச்சார் சமையல்காரர் நின்றபடி
கொண்டு வந்த கரண்டியால போட்டாராம் ஓர்அடி
சிங்கமா வெள்ளைப்பூண்டே? சிதைச்சிடுவேன் உன்னையே
சிரிச்ச பல்லை தனித்தனியா போட்டிடுவேன் குழம்புல
தங்கமே வாயேண்டி வெங்காயம் நீயடி உன்
தோலை உரிச்சு போடப்போட ஒன்றுமின்றி போவநீ
எங்கயுமே அமைதியாக இருப்பதுதான் சிறந்த குணம்
என்றுவாழும் வெள்ளரியே உன்னைத் தேடி விரும்பியே
இங்குள்ள மனிதரெல்லாம் வந்திடுவர் தினம் தினம்
எடுத்து ரசித்து உண்டிடவே உணர்ந்திடுவர் மகிழ்வையே
சங்குநிற வெள்ளைப்பூடு சருகு போன்ற வெங்காயம்
சென்றனவாம் தலைகுனிந்து அங்கிருந்து மெல்லவே
உங்களிலே யாரொருவர் தலைக்கணமே கொண்டிருந்தால்
உதறிடுங்கள் இப்போதே உயர்ந்திடுங்கள் வாழ்விலே
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!