தலைப்பாகையைத் தேடிய தொப்பிகள்

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு அவர்கள் இந்தியாவை ஆண்டபோது சிம்ம சொப்பமனமாக இருந்தவர் சர்.சி.பி.ராமசாமி ஐயர்

ஒருமுறை சர்.சி.பி.ராமசாமி ஐயர் ரயிலின் முதல் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் இரு ஆங்கிலேயர்களும் பயணம் செய்தனர்.

ராமசாமி ஐயர் இந்திய முறைப்படி பஞ்சகச்சம் கட்டி, தலைக்கு தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தார்.
ராமசாமி ஐயர் அணிந்திருந்த ஆடை அவருடன் பயணித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்குப் பிடிக்கவில்லை.

இதனால் ராமசாமி ஐயரின் முகத்தைக்கூடப் பார்க்க பிடிக்காமல் அவர்கள் ஜன்னலுக்கு வெளியே பார்த்தப்படி பயணித்தனர்.

சிறிது நேரம் ஆனதும் கழிப்பறை செல்வதற்காக ராமசாமி ஐயர் தலைப்பாகை கழற்றி, தான் அமர்ந்திருந்த சீட்டில் வைத்துவிட்டு சென்றார்.

அவர் கழிப்பறை சென்று திரும்பியதும் தலைப்பாகையைக் காணவில்லை.

அந்த ஆங்கிலேயர்களைத் தவிர, அந்தப் பெட்டியில் வேறு எவருமில்லை. வண்டியும் வேறு எங்கும் நிற்கவில்லை.

ஆங்கிலேயர்களைப் பார்த்து “எங்கே என் தலைப்பாகை?” என்று கேட்டார் ராமசாமி ஐயர்.

“எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று கூறி இருவரும் கைவிரித்து விட்டனர். இதைக் கேட்ட அமைதியாக இருந்து விட்டார் ராமசாமி ஐயர்

சிறிது நேரத்திற்குப் பின் சிகரெட்டைப் பற்ற வைத்து கழிப்பறைப் பக்கம் ஆங்கிலேயர்கள் இருவரும் சென்றனர்.

வண்டி வேகமாக சென்று கொண்டிருந்தது.

ஆங்கிலேயர்கள் தங்கள் சீட்டில் விட்டுப் போயிருந்த தொப்பிகளை எடுத்து, ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு, தன் இருக்கiயில் அமைதியாக உட்கார்ந்து விட்டார் ராமசாமி ஐயர்.

திரும்பி வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் தொப்பிகளைக் காணாமல் திகைத்தனர்.

அவர்கள் ராமசாமி ஐயரைப் பார்த்து “எங்கே எங்கள் தொப்பிகள்?” என அதட்டலாகக் கேட்டனர்.

“உங்கள் தொப்பிகள் என் தலைப்பாகையைத் தேடிப் போயிருக்கின்றன!” என சிறிதும் அஞ்சாமல் கூறினார் ராமசாமி ஐயர்.

அதனைக் கேட்ட ஆங்கிலேயர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.