தழுதாழை மூலிகை – மருத்துவ பயன்கள்

தழுதாழை இலை, வேர் ஆகியவை கைப்பு, துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வாத நோய்களைக் கண்டிக்கும்; உடல் வலியைப் போக்கும்.

தொடர்ந்து உபயோகித்து வந்தால் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கத்தைச் சரியாக்கும் வல்லமை கொண்டது தழுதாழை என்கின்றனர் மருத்துவர்கள்.

தழுதாழை செடி, காடுகளில் வளர்வது, புதர்செடி அமைப்பிலும் காணப்படும். வெளிர்ப்பச்சையான, வட்ட அடுக்கில் அமைந்த இலைகளை உடைய தாவரம், 6 மீட்டர் வரை வளரும். இலைகள் முக்கோணம் அல்லது முட்டை வடிவமானவை, நெருடலான மணம் கொண்டவை. மலர்கள் இள மஞ்சள் நிறமானவை.

வெப்பமண்டல புதர்க்காடுகளில், தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வீட்டுத் தோட்டங்களிலும், வேலிகளிலும் வளர்க்கப்படுகின்றது.

தக்காரி, வாதமடக்கி, நத்தக்காரி ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

வாதவலி குணமாக 1 பிடி இலைகளை, 1 வாளி நீரில் இட்டுக் கொதிக்கவைத்து அந்த நீரால் குளிக்க வேண்டும். மேலும் இரவில், இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வேண்டும்.

சுளுக்கு, மூட்டுவலி குணமாக தழுதாழை இலைகளைக் கழுநீரில் வேகவைத்து, துணியில் முடிந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும் அல்லது இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட வேண்டும்.

காய்ச்சல் குணமாக இலைச்சாறு 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்குச் சாப்பிட வேண்டும. காலை, மதியம், மாலை வேளைகளில் 1 நாள் மட்டும் சாப்பிடலாம்.

விரை வாதம், நெறிக்கட்டிகள் குணமாக இலைகளை ஆலிவ் எண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போட வேண்டும்.

 

Comments are closed.