தவசு முருங்கை – மருத்துவ பயன்கள்

தவசு முருங்கை முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. கோழையகற்றும், ஜலதோஷம், இரைப்பு, இருமல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

இது ஏறத்தாழ வட்ட வடிவமான, சிறு காம்புகளைக் கொண்ட எதிடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட சிறு செடி வகைத் தாவரம். மலர்கள் சிறியவை, நாக்கு வடிவமானவை, இளஞ்சிவப்பு வரிகள் கொண்ட வெண்மை நிறமானவை.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் இயல்பாக வளர்கின்றன. கடற்கரையோரங்களில் அதிகமாகக் காணலாம். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

குழந்தைகளுக்கான சளி தீர ஒரு தேக்கரண்டி அளவுக்கு, தவசு முருங்கை இலைச் சாற்றை எடுத்து, சம அளவு தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

இரைப்புநோய் குணமாக தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

சளி, இருமல் குணமாக இந்த‌ செடியை முழுமையாக உலர்த்திப் பொடி செய்து, சம அளவு சர்க்கரை கலந்து, அரை தேக்கரண்டி அளவு, 1 தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டுவர வேண்டும். காலை மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை செய்யலாம்.

அடிபட்ட காயம், வீக்கம் குணமாக இலைகளை இடித்து, வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

பிரசவ அழுக்கு வெளியேற தவசு முருங்கை இலைச்சாறு 6 தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கு தவசுக்கீரை, மல்ட்டி விட்டமின் கீரை, வைட்டமின் கீரை, சத்துக்கீரை ஆகிய வழக்குப் பெயர்களும் உண்டு. தாவரம் முழுவதும் பச்சை நிறமான இலைகள் அடர்த்தியாக கொத்தாகக் காணப்படும். வைட்டமின் சத்துகளை அதிகமாகக் கொண்டவை. சமவெளிகள், கடற்கரையோரங்களில் இது இயற்கையாக வளர்கின்றது.

இதனுடைய உணவுப் பயன்களுக்காக, பெருமளவில் வீட்டுத் தோட்டங்களில் விளைவிக்கப்படுகின்றது. உடல் பலம்பெற, இலைகளைச் சமைத்துச் சாப்பிடலாம், கூட்டு, பொரியல், துவட்டல் செய்தும், சாப்பிடலாம், பச்சையாக மென்று சாப்பிட வாய்ப்புண் உடனடியாகக் குணமாகும்.