பெரும்பாலான குடும்பங்களில் இன்று கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
பொருளாதார நிலைமையை உயர்த்தி, அதிக வசதிகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பணம்! பணம்!! பணம்!!! அவர்களின் தாரக மந்திரமே பணம்தான்.
காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு வீட்டை விட்டுச் சென்றால், இரவு தாமதமாகத்தான் வீடு திரும்புகின்றனர்.
குழந்தைகளை வீட்டுப் பெரியவர்களின் பொறுப்பிலோ, வேலையாட்கள் பொறுப்பிலோ விட்டுச்சென்று விடுவதால், குழந்தைகள் பற்றிய எண்ணமே இவர்களுக்கு ஏற்படுவதில்லை.
இவர்கள் காலை கிளம்பும் சமயம் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். இரவு வீடு திரும்பும் சமயம் அவர்கள் உறங்கிப் போய்விடுவார்கள்.
பெற்றோர்களின் அரவணைப்பு முறையாகக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
குழந்தைகளை கொஞ்ச, அவர்களை சந்தோஷப்படுத்த, அவர்களுடன் பேச, அவர்களின் ஏக்கங்களை அறிந்து கொள்ள, அவர்களது உள்ளத்தைப் புரிந்து கொள்ள பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
வாழ்க்கையை சிரமமின்றி நடத்த பணம் இன்றியமையாததுதான். அதற்காக பிள்ளைகள் மீது எவ்வித அக்கறையுமின்றி கண்மூடித்தனமான வெறியுடன் சம்பாதிக்க ஆசைப்படுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்திவிடும்.
அவர் ஒரு பிஸ்னஸ்மேன். அயராது உழைப்பவர்.
வெகுநேரம் கழித்து வீடு திரும்பிய போது, தனது ஐந்து வயது மகன் உறங்காமல் அவர் வருகைக்காக வாயிலிலேயே காத்திருப்பதைக் கண்டார்.
மிகுந்த களைப்புடன் இருந்த அவரிடம் மகன் கேட்டான்.
“அப்பா, உங்களிடம் கேள்வி ஒன்று கேட்கலாமா?”
“கேளுடா ராஜா!” என்றார் தந்தை.
“ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?”
மகனின் கேள்வி தந்தைக்கு அதிகப்பிரசங்கித்தனமாகவே பட்டது.
கோபத்துடன் “என்னடா கேள்வி இது? உனக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம். பேசாமல் போய் படு” என்றார்.
மகன் விடவில்லை.
“ஜஸ்ட்! தெரிந்து கொள்ளலாமென்றுதான் கேட்டேன். சொல்லுங்க டாடி!” எனக் கேட்டான்.
“இருநூறு ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்” எனப் பதிலளித்தார் தந்தை.
“அப்பா, நூறு ரூபாய் எனக்கு கடனாகத் தரமுடியுமா?’ மகனின் கேள்வி அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது.
“டேய்! உடம்பு எப்படியிருக்கு? மாங்கு மாங்குன்னு வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு சம்பாதிச்சிட்டு வர்றது உனக்கு பொம்மை வாங்கவும், காமிக்ஸ் புத்தகம் வாங்கவும் இல்லே. போய்ப் படுடா. நூறு ரூபாய் வேணுமாம். அதுவும் கடனா வேணுமாம்.” என கர்ஜித்தார்.
மகன் மேலும் எதுவும் பேசவில்லை. மௌனமாக உள்ளே அறைக்குச் சென்று படுத்துவிட்டான்.
அவன் சென்றதும், தந்தை யோசனையில் ஆழ்ந்தார்.
‘மகனிடம் தேவையில்லாமல் கோபித்துக் கொண்டு விட்டோமோ?’ எனப் புழுங்கினார்.
‘பாவம்! அவன் பணமே கேட்க மாட்டானே? என்ன அவசரத் தேவையோ அவனுக்கு?’ மனம் இளகியது.
மகன் படுத்திருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அவன் உறங்காமல் படுக்கையில் அமர்ந்து கொண்டிருந்தான்.
அவன் அருகில் அமர்ந்து அவனை சமாதானப்படுத்தினார்.
“அப்பா ஏதோ கோபத்தில் சொல்லி விட்டேன். இந்தா நீ கேட்ட நூறு ரூபாய். இப்போது திருப்திதானே?”
மகனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தந்தையிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தலையணை உறையிலிருந்து தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து தந்தை கொடுத்த நூறு ரூபாயையும் அத்துடன் சேர்த்து எண்ண ஆரம்பித்தான்.
தந்தை மீண்டும் கோபம் அடைந்தார்.
“டேய், உன்னை என்ன செய்தால் தேவலாம்? இவ்வளவு பணத்தை தலையணை உறைக்குள் வச்சுக்கிட்டுத்தான் மறுபடியும் எங்கிட்ட பணம் கேட்டியா? இவ்வளவு பணத்தை என்னடா செய்யப் போகிறே?”
“டாடி உங்களிடம் கொடுக்கத்தான் பணம் சேர்த்துக்கிட்டிருந்தேன். இதுவரை போதுமான பணம் சேரவில்லை. இப்போது நீங்க கொடுத்த நூறு ரூபாயையும் சேர்த்து எனக்கு இருநூறு ரூபாயைச் சேர்த்துவிட்டேன்.
இப்போது என்னால் நீங்கள் வேலை செய்யும் நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வாங்க முடியும். இந்தாங்க இருநூறு ரூபாய்.
அதிகமாக ஒரு மணி நேரம் வேலை செய்தால் இருநூறு ரூபாய் கிடைக்கிறது என்பதால் தானே தினம் வீட்டுக்கு லேட்டா வர்றீங்க?
நாளைக்கு ஒரு மணி நேரம் முன்னால வந்துவிடுங்கப்பா. வந்து என்னோட உட்கார்ந்து சாப்பிடுங்கப்பா!”
கண்கள் கலங்க மகன் கெஞ்சினான்.
தந்தை அப்படியே சிலையானார். அவரால் எவ்வித பதிலும் கூற முடியவில்லை.
மகனை கட்டி அணைத்துக் கொண்டார்.
உங்கள் வீட்டில் உங்கள் குழந்தைகள்கூட இதே மனநிலையில், ஏக்கத்தில் இருக்கலாம். அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
உங்களின் அருகாமைக்காக தவம் கிடக்கும் இளம் பிஞ்சு உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
அருமை
EXCELLENT STORY