தவளையின் பக்தி

தவளையின் பக்தி

மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று துரியோதனனின் நிபந்தனையின்படி வனவாசம் செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வனத்தில் பனி, காற்று, மழை போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு கிடைத்ததை உண்டு இறைவனை நினைத்தபடி வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டவர்களில் இரண்டாதவனாகிய பீமனுக்கு ‘நான்தான் தோள் வலிமையில் சிறந்தவன்‘ என்ற கர்வ எண்ணம் உண்டானது.

திரௌபதிக்கும் ‘தன்னைவிட கண்ணனின் திருவடி பக்தியில் சிறந்தவர் யாரும் இல்லை‘ என்ற கர்வம் ஏற்பட்டது.

இவ்விருவரின் எண்ணத்தையும் கண்ணபிரான் உணர்ந்தார். இவர்களின் கர்வங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

ஒருநாள் துவாரகையிலிருந்து பாண்டவர்கள் தங்கியிருந்த வனப்பகுதிக்கு கண்ணபிரான் நடந்தே வந்தார்.

பாண்டவர்களும் திரௌபதியும் கண்ணைக் கண்டதும் அவரை பக்தியுடன் வரவேற்றனர். அவருக்கு பழங்களைக் கொடுத்து உபசரித்தனர்.

திரௌபதி கண்ணனிடம், “அண்ணா, தங்களுக்கு தேர்கள்,
யானைகள், குதிரைகள் என பல வாகனங்கள் இருக்கின்றனவே? அப்படியிருக்கையில் தாங்கள் ஏன் பாதங்கள் நோகும்படி நடந்தே வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு கண்ணபிரான், “எனதருமைத் தங்கையே, உங்களைக் காண வேண்டும் என்று என் மனதில் ஆவல் பிறந்தது. ஆவல் மிகுதியால் வாகனங்கள் இருப்பதைக்கூட மறந்து கால்நடையாக வந்து விட்டேன். கால் வலிக்கத்தான் செய்கிறது” என்றார்.

உடனே அவள் “அண்ணா, வெந்நீர் தயார் செய்கிறேன். சுடசுட வெந்நீர் விட்டால் கால்வலி தீரும்” என்று கூறினாள்.

அப்போது பீமன் “இரு வெந்நீர் தயார் செய்ய நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

உடனே காட்டில் இருந்த முனிவரின் ஆசிரமத்தில் இருந்து பெரிய அண்டா பாத்திரத்தை இரவலாக வாங்கி வந்தான்.

தன்னுடைய தோள் வலிமையைப் பயன்படுத்தி ஆற்றிலிருந்து பெரிய அண்டா முழுவதும் தண்ணீரைக் கொணர்ந்தான்.

மூன்று பெரிய கற்களைக் கொண்டு அடுப்புக்கூட்டி அதில் நீருடன் கூடிய அண்டாவை வைத்தான். பின்னர் வனத்தில் இருந்து பெரிய பெரிய காய்ந்த மரங்களைக் கொண்டு வந்து விறகாக்கினான்.

திரௌபதி அடுப்பைப் பற்ற வைத்து தீயை மூட்டினாள். விறகுகள் ‘திகுதிகு’வென எரிந்தன.

சிறிது நேரம் கழித்து திரௌபதி தண்ணீர் சூடேறியதா என்று கைவிரலை வைத்து சோதித்துப் பார்த்தாள்.

தண்ணீர் சிறிதுகூட சூடாகவில்லை. பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்தது.

பீமன் தனது தோள் வலிமையைப் பயன்படுத்தி சலியாது காய்ந்த மரங்களைக் கொண்டு வந்து குவித்துக் கொண்டே இருந்தான்.

திரௌபதியும் இடைவிடாது விறகுகளை எரித்துக் கொண்டே இருந்தாள். ஆனால் தண்ணீர் சூடானபாடில்லை.

மற்றொருபுறத்தில் கண்ணபிரான் ஏனைய பாண்டவர்களுடனும் முனிவர்களுடனும் வேதாந்தங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் வெந்நீர் தயாராகி விட்டதாக திரௌபதியிடம் இருந்து அழைப்பு வராததால், அவளை கூப்பிட்டு கண்ணபிரான் “அன்பு தங்கையே வெந்நீர் வைத்துத் தருகிறேன் என்றாயே? வெறும் வாய் உபச்சாரமா? நேரம் அதிகமாயிற்றே! இன்னும் வெந்நீர் தயாராகவில்லையா?” என்று கேட்டார்.

“அண்ணா என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. பீமசேனர் நூற்றுக்கணக்கான மரங்களை ஒடித்துக் கொடுத்து தோள் வலிமை குன்றிவிட்டார்.

நெருப்பில் பிறந்த நானோ அடுப்பின் அருகில் நின்று நெருப்பெரித்து வேர்த்து விட்டேன். ஆனால் தண்ணீர் சிறிதும் சூடேறவில்லை. இது ஒரு பெரிய அதிசயமாகத்தான் இருக்கிறது.” என்றாள்.

அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். கண்ணபிரான் புன்னகை புரிந்தார். ஏனைய பாண்டவர்களும் முனிவர்களும் அடுப்பின் அருகில் வந்து நின்றனர்.

அப்போது கண்ணபிரான் “பீமா! இந்த அண்டாவை எடுத்து அதனுடைய நீரை கீழே கொட்டு” என்றார்.

பீமன் அண்டாவிலிருந்த நீரை கீழே கொட்டினான்.

அந்த நீரில் தவளை ஒன்று இருந்தது. அது “கிருஷ்ணா! தண்ணீர் சூடேறினால் நான் மாண்டு போவேனே! கிருஷ்ணா!” என்று உள்ளம் உருகி எம்பெருமானை மனதாரத் துதித்துக் கொண்டே இருந்தது. அதன் பக்தியைக் கண்டு அக்னி அஞ்சினான். அதனால் தண்ணீர் சூடேறவில்லை.

அதனைக் கண்டதும் திரௌபதியின் ‘நான்தான் சிறந்த கிருஷ்ண பக்தை’ என்ற எண்ணம் மறைந்தது.

தவளையின் பக்தியின் முன் தன்னுடைய தோள் வலிமை எடுபடவில்லை என்பதை உணர்ந்ததும் பீமனின் கர்வம் அடங்கியது.

கண்ணபிரான் “பார்த்தாயா திரௌபதி, தவளையின் பக்தியை. எனக்கு வெந்நீர் வேண்டாம். நான் வருகிறேன்” என்று கூறி சிரித்தார்.

பக்தியின் ஆற்றலுக்கு நிகர் ஏது?

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.