காட்டின் அரசனான சிங்கராஜா முதலாக அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய குளத்தில் நீர் அருந்தி வாழ்ந்து வந்தன.
தாமரை மலர்கள் நிறைந்து இருந்த அக்குளத்தின் கரையிலிருந்து தாமரை இலைகளின் மீது தாவித் தாவி இக்கரையிலிருந்து அக்கரைக்கும் அக்கரையிலிருந்து இக்கரைக்குமாக செல்வதுதான் தவளை “தாத்தையா”வுக்கு பொழுது போக்கு.
வெகு தூரத்திலிருந்து தாத்தையா தவளையை காணவந்த தவளை தங்கமுத்து நகரப் பகுதயில் வாழ்ந்து பழக்கப்பட்டது. நகரத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைப்பற்றி கதைகதையாக தாத்தையாவுக்கு தங்கமுத்து கூறுவது வழக்கம்.
மனிதர்கள் ஒருவிதமான கருவியை கழுத்திலிருந்து கயிறு கட்டி மடிமீது வைத்து இருபுறமும் குச்சியால் அடிக்க அதிலிருந்து அழகான சப்தம் வரும். அதைக்கேட்க ஆனந்தமாக இருக்கும்.
அதற்கு மேளம் என்று பெயர். அந்த மேளத்தின் சத்தத்திற்கேற்ப பாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தங்கமுத்து கூறியதிலிருந்து தானும் தன் வாழ்நாளில் ஒரு நாளாவது மேள சப்தத்திற்கேற்ப தன் இனிய குரலால் பாடவேண்டும் என்ற ஆசை தாத்தையாவுக்கு உண்டானது.
அதைச் செயலாக்கும் எண்ணத்தோடு காட்டில் மரவேலை செய்யும் மரங்கொத்தியை தவளை தாத்தையா காணச் சென்றது. இது சென்ற நேரம் மரங்கொத்தி மணிக்கழுத்தன் தன் மூக்கால் ஒரு மரத்தை கொத்திக் கொண்டிருந்தது.
“மரங்கொத்தி மணிக்கழுத்தே
மண்ணில் சிறந்தது உன் பணியே!
உயர்ந்த மரங்களை உன் மூக்கால்
உரசி குடைவதும் அழகேதான்!
ஊரில் இருந்து எனைத்தேடி
உருண்டு வந்த தங்கமுத்து
கூறிய கதைகள் பலவுண்டு அவன்
கூறிடும் விதத்தல் அழகுண்டு
அங்கே வாழும் மனிதர்கள்தான்
அழகாய் மேளம் அடிப்பனராம்
அதுபோல் எனக்கும் ஒன்றைத்தான்
ஆக்கித் தந்திட இயன்றிடுமோ?
எதுதான் வேண்டும் அது செய்ய
என்பதை நீயும் சொல்வாயா?
என்பாட்டிற்கு இசையாய் அதனைத் தான்
அடித்திட ஆசை எனக்குத்தான்”
என்று தவளை தாத்தையா மரங்கொத்தி மணிக்கழுத்தனிடம் கேட்டதும் மரங்கொத்தி தான் மரம் கொத்துவதை நிறுத்திவிட்டு சிறிது யோசனை செய்தது. பின்னர் தாத்தையா தவளையைப் பார்த்து கூறியது.
“தவளையண்ணா! தாத்தையா!
கவலை ஏனோ உனக்கண்ணா! நீ
தட்டி மகிழ மேளத்தை
தந்திட என்னால் இயலாதே
மரத்தை குடைந்து தந்திட
மட்டும் என்னால் முடியுமாம்
அறுத்து கட்டி அதையெடுத்து
அழகாய் மாற்றிட செய்திட – நீ
விரும்பும் மேளம் போல்
அதனை மாற்றிக் கொள்வதற்கும்
எலியின் துணைதான் எனக்குத் தேவை
புலிபோல் விரைந்து நீ சென்று
எலியினை உடனே அழைத்து வா” என்று கூறியது.
அது கேட்ட தாத்தையா தவளை எலியைத் தேடி புறப்பட்டது. வெகுதூரம் தத்திச் சென்று ஒரு வழியாக எலியின் வளையை அடைந்தது.
அப்போதுதான் வெளியில் சென்று திரும்பி வந்த எலி ஏகாம்பரன் தவளை தாத்தையாவை வரவேற்று உணவு கொடுத்து உபசரித்து பின்னர் தன்னை தேடி வந்த காரணத்தைக் கேட்டது.
தாத்தையாவும் தன் மனதில் உள்ள ஆசையை எலி ஏகாம்பரனிடம் கூறியது. எலியும் சற்று யோசனை செய்து பின்னர் தவளைக்கு பதில் கூறியது.
“தவளை மாமா தாத்தையா!
தத்தி செல்ல உந்தனுக்கு
தகுமோ இந்த ஆசைதான்
ஏகாம்பரன் செய்ய இயன்றிடுமாம்!
அறுத்த மரத்தை ஒட்டிடவே
அழகுப் பசையை நீ சென்று
அருமை வேம்பிடம் வாங்கி வர
கனவு உனக்கு நனவாகும்
கைகளில் மேளம் கிடைத்து விடும்” என்றது எலி
இது கேட்ட தாத்தையா உடனே அங்கிருந்த வேப்பமரத்தை நோக்கி தாவிச் சென்றது.
“வேப்பமரமே பாப்பம்மா!
வேணும் கொஞ்சம் பிசினம்மா,
தவளை எனக்கு மேளத்தை
தட்டி மகிழ்ந்திட தரவென்றே
மரங்கொத்தி மணிக்கழுத்தன்
ஏகாம்பரன் எலியை அழைத்தானே
எழுந்த எலி அவனும்தான்
மேளம் செய்திட தனக்குத்தான்
மிகவும் தேவை பிசின் என்றான்
போதுமான பிசினைத் தான்
கசிந்தே நீ எனக்களித்து
கனிந்த இசையில் நான்பாட
கனத்த மேளம் செய்வதற்கு
தந்திட வேண்டும் பாப்பம்மா
தயவு செய்யணும் பாப்பம்மா!” என்று கேட்டுக் கொண்டதும், வேப்ப மரம் வேண்டிய அளவு பிசினைக் கொடுத்தது.
அதைக் கொண்டு சென்ற தவளை தாத்தையா எலியிடம் கொடுக்க, எலி அதை எடுத்துக் கொண்டு மரங்கொத்தி மணிக் கழுத்தனிடம் சென்றது.
அங்கு ஏற்கனவே மரங்கொத்தி மரத்தைக் குடைந்து தயாராக வைத்திருந்தது. அவற்றைத் தேவையான அளவு நறுக்கி வேப்பம் பிசினால் ஒட்டி மேளத்தை கொடுத்தது.
இருபுறமும் இதில் வைப்பதற்கு தோல் வேண்டுமே! தோலால் இதைக் கட்டி, அடித்தால் தான் இசையைப் பெறமுடியும் எனவே என்ன செய்வது என மூன்றும் யோசிக்கலாயின.
எலி ஏகாம்பரன் தவளை தாத்தையாவிடம் “நீ சென்று காட்டெருமை காங்கேயனிடம் இறந்து போன அவனது உறவினர்களின் தோல் ஒன்றை வாங்கி வா” என்றது.
தவளை தாத்தையாவும் வேகமாகத் தாவி ஓடி காட்டெருமை காங்கேயனைக் கண்டு பிடித்தது.
“கருத்த அழகா காங்கேயா!
கறுப்பே உனக்கு அழகய்யா
ஊரில் இருந்து எனைத் தேடி
உருண்டு வந்த என் தம்பி
மேளம் ஒன்றைத்தான்
செய்திடச் சொன்னான் என்னைத்தான்
மேளம் செய்து நான் மகிழ
மெல்லிய தோல் ஒன்றை நீ
மெதுவாய்த் தந்திட நான் மகிழ்வேன்”
என காங்கேயன் காட்டெருமையிடம் கேட்டது. இது கேட்ட காட்டெருமை
“தவளை தம்பி தாத்தையா
தருவேன் உனக்கு தோலய்யா
இருநாள் முன்னே இறந்த என்
இனிய தந்தையின் உடல் இதுதான்
எலும்பும் சதையும் பிரித்தெடுக்க
ஏற்ற நரியைக் காணவில்லை
என்று அவனிங்கு வருவானோ
அன்றே இத்தோல் தன்னை
அழகாய் அறுத்து அவன் தருவான்
இன்றே நீ சென்று அழைத்து வர
இனிதாய் தோலுடன் சென்றிடலாம்” என்றது.
சில இடங்களில் தேடி அலைந்து ஒரு வழியாகத் தவளை தாத்தையா நரியைக் கண்டு பிடித்து விட்டது.
“நரியே நரியே நரியண்ணா!
காட்டின் மந்திரி நீயண்ணா!
ஊரில் இருந்து எனைத் தேடி
உருண்டு வந்த தங்கமுத்து
அழகு மேளம் ஒன்றைத்தான்
ஆக்கிட வேண்டும் என்றானே!
மேளம் செய்திட தோலைத்தான்
காங்கேயன் காளை தனதன்பு
தந்தையின் இறந்த உடல்தன்னில்
கணக்காய் எடுத்துக் கொள் என்றான்
இறந்த அவனது தோலை நீ
உரித்து எனக்குத் தந்திட்டால்
இனிய மேளம் செய்திடுவேன்
இனிக்கும் இசையைத் தந்திடுவேன்” என்று நரியிடம் தவளை தாத்தையா கூறியது.
தாத்தையாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நரி விரைந்து சென்று இறந்துபோன காட்டெருமையின் உடலை பிரித்து அதன் தோலை மட்டும் தவளையிடம் கொடுத்து அனுப்பியது.
தோலைப் பெற்றுக் கொண்ட தவளை நரிக்கு நன்றி கூறிவிட்டு விரைவாக எலி ஏகாம்பரனை அடைந்து அதனிடம் கொடுத்து விட்டு சற்று மூச்சு வாங்கியது.
எலி ஏகாம்பரனும் மரங்கொத்தி மணிக்கழுத்தனின் துணையோடு மேளத்தைச் செய்து அதை வேப்ப மரப் பிசினால் ஒட்டி இரு புறங்களிலும் காட்டெருமைத் தோலைக் கட்டி தவளை தாத்தையாவிடம் கொடுத்தன.
மேளத்தைக் கண்ட தவளைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாவித்தாவி குதித்தபடியே ஆடிப்பாடி சந்தோசமாக மேளத்தை அடிக்க தொடங்கியது.
“டும் டும் டும் டும் மிருகங்களே!
டம் டம் டம் டம் கேளுங்களேன்!
டம் டம் டம் டம் மரங்கொத்தி
டும் டும் டும் டும் குடைந்தெடுத்து
டம் டம் டம் டம் ஏகாம்பரன் எலியவனும்
டும் டும் டும் டும் இனிதாய் செய்த மேளம் இது
டம் டம் டம் டம் என்றே நான்
மேளம் ஒலித்திட நீங்களும் தான்
எழுந்தே வந்தே ஆடுங்களேன்”
என பாடிக்கொண்டே ஆடியபடி குளக்கரையில் சென்ற தவளை தாத்தையாவின் கைகளிலிருந்த மேளம் நழுவி குளத்தினுள் விழுந்து விட்டது.
பாவம் தாத்தையா. மேளத்தை அடித்து அடித்து கைகள் விரிந்தபடியே நின்று விட்டன. இன்றுவரை தவளை அந்த மேளத்தை தேடி தண்ணீரில் விழுந்து தேடுவதை வாடிக்கையாகக் கொண்டு விட்டது.
இசையுடன் பாட ஆசைப்பட்ட தாத்தையா இன்றும் மழைக்காலங்களில் மேளம் இல்லாமல் பாடிக் கொண்டிருப்பதை நாமும் கேட்கலாம்!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)