தவழ் வடை இனிதுவின் தீபாவளிக்கான சிறப்பு வடையாகும். இதில் எல்லா வகையான பருப்பும் பயன்படுத்துவதால், இதற்கு தனிச்சுவை கிடைக்கிறது.
நீங்களும் இந்த தீபாவளிக்கு தவழ் வடையைச் செய்து அசத்துங்கள்.
இனி தவழ் வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 100 கிராம்
புழுங்கலரிசி – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
உளுந்தம் பருப்பு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
சின்ன வெங்காயம் – 20 எண்ணம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லி இலை – 3 கொத்து
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும்.
அதனுடன் உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை கழுவி பொடியாக வெட்டவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடியாக வெட்டவும்.
மல்லி இலையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மல்லி இலையை ஆகியவற்றை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதனுடன் கரண்டியில் மாவினை எடுத்து ஊற்றும் அளவிற்கு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் குழிக் கரண்டியால் மாவினை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

ஒருபுறம் வெந்ததும் வடையை திருப்பிவிட்டு மறுபுறம் வேக விடவும்.

எண்ணெய் சத்தம் அடங்கியதும் வடையை எடுத்து விடவும்.

சுவையான தவழ் வடை தயார்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இதற்கு சாம்பார்,
தேங்காய் சட்னி பொருத்தமானது.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகினைப் பொடித்துச் சேர்க்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இஞ்சியை இழைத்து மாவில் கலந்து வடை தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!