தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.
சூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 250 கிராம்
பச்சரிசி மாவு – 25 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
மிளகாய் வற்றல் பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
தவால் வடை செய்முறை
முதலில் கடலை மாவு, பச்சரிசி மாவு ஆகியவற்றை சலித்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, நறுக்கிய சின்ன வெங்காயம், சதுரமாக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு, உருவிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
எல்லா பொருட்களையும் ஒருசேர கலக்கவும்.
பின்னர் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
மாவு கெட்டியாக இருந்தால் வடை கடிப்பதற்கு கடினமாகவும், நீர்த்து இருந்தால் எண்ணெயில் மாவினை ஊற்றியதும் பிரிந்து பிரிந்து ஓடி விடும். ஆதலால் வடை மாவின் பதம் மிகவும் அவசியம்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெயைக் காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் குழிக்கரண்டியால் மாவினை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
வடையினை ஊற்றும் போது குழிக்கரண்டியை எண்ணெய்க்கு மேலே சிறிது உயரத்தில் வைத்து ஒரே சீராக கையை ஆட்டாமல் ஊற்றவும்.
வடையை ஊற்றும் போது கையை ஆட்டினால் மாவு பிரிந்து பிரிந்து போகும்.
வடை உப்பி எண்ணெயில் மேலே எழுந்ததும் அடுத்த வடையை ஊற்றவும். வடை ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடவும்.
வடையில் எண்ணெய் குமிழி அடங்கியதும் வடையை வெளியே எடுக்கவும்.
சுவையான தவால் வடை தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி மாவில் கலந்து வடை தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காயை சிறிய பற்களாகக் கீறி மாவில் கலந்து வடை தயார் செய்யலாம்.