என்னைச் சுற்றி எப்பொழுதும் ஆர்ப்பரிப்புகள்
எத்தனையோ மனிதர்கள் எத்தனையோ முகஸ்துதிகள்
நித்தம் புதிய மனிதர்களின் அறிமுகங்கள்
நண்பர்கள் உறவுகளின் நலன் விசாரிப்புகள்
புதிய வாய்ப்புகளை உருவாக்கும் தேடல்கள்
நினைத்ததை சாதிக்கும் மனதின் திண்ணம்
நான் இறுமாந்தேன் நானும் வெற்றியாளன் என்று
காலச்சூழலில் நானும் சிக்கினேன்.
இன்று என்னை சுற்றி மனிதர்களின் ஆர்ப்பரிப்பு இல்லை
நித்தம் புதிய மனிதர்களின் அறிமுகங்கள் இல்லை
நண்பர்கள் உறவுகளின் நலன் விசாரிப்புகள் இல்லை
எங்கு சறுக்கினேன் என்று தெரியவில்லை
ஆனால் சறுக்கியது நிஜம்
நானும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன் நித்தமும்
சுற்றியுள்ள மனிதர்களின் ஆர்ப்பரிப்பில் சுயம் மறந்தேன்
மனிதர்களின் முகஸ்துதியில் என்னை மறந்தேன்
நித்தம் புதிய அறிமுகங்களில் இறுமாப்பு கொண்டேன்
நலன் விசாரிப்புகளில் புளகாங்கிதம் கொண்டேன்
சுயம் மறந்த குருடாய் நானும் வாழ்ந்து இருக்கிறேன்
எதைத் தேடினேனோ அதுதான் கிடைத்தது
வெற்று புன்னகைகள் கயமையான வார்த்தைகள்
சறுக்கல் என்னை புடம் போட்டுக் கொண்டு இருக்கிறது
தனிமை நெப்பில் நானும் தகித்துக் கொண்டு இருக்கிறேன்
இன்று இயற்கை எனக்கு உணர்த்துகிறது
தாமரை இலை நீர் போல வாழ்வது நன்று
வாழ்க்கையை வாழ வேண்டும் அதில் சிக்கிப் போகக் கூடாது
உறவுகளிடம் பழக வேண்டும் பந்தத்தில் சிக்கிப் போகக் கூடாது
இயற்கையே நீ எனக்குக் கொடுத்தது சறுக்கல் அல்ல
வாழ்கையை உள்ளபடி உணர ஒரு வரம்
– சிறுமலை பார்த்திபன்