தாயின் மணிக்கொடி – சிறுகதை

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.

பரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு.

எப்படியோ பரதனின் முயற்சியால் மூன்று நாட்களில் ரம்யா பாடல் முழுவதையும் ராகத்துடன் பாடக் கற்றுக் கொண்டாள்.

தன் அம்மாவிடம் பாடலை பாடிக் காட்டினாள்.

“ஐயோ! என் கண்ணே பட்டுடும் போல” என்று கூறி இருகைகளாலும் ரம்யாவின் முகத்தினைச் சுற்றி தன்னுடைய நெற்றியில் நெறித்து திஷ்டி சுற்றினாள் அம்மா.

“நான் நல்லா பாடுறேன்னு, பாட்டு பாடுற ஐஞ்சு பேருல, நடுவில நின்னு என்னை பாட பிரின்சுபல் சொல்லியிருக்காங்க” என்றாள் ரம்யா முகத்தில் பெருமை பொங்க.

மகளின் பெருமையை ரசித்துக் கொண்டே பரதன் “ரம்யா, இந்த பாடல் என்னுடைய வாழ்வில் பெரிய திருப்புமுனையை தந்தது என்பது உனக்கு தெரியுமா?” என்றான்.

“எப்படிப்பா? சொல்லுங்க ப்ளிஸ்.”

 

“எனக்கு சின்ன வயசிலயிருந்தே கூட்டத்துக்கு முன்னாடி போய் பேசனும்னா ரொம்ப பயம்.

நான் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும்போது நம்ம நாடு சுதந்திரம் அடைச்சு 50 வருசம் ஆகியிருந்துச்சு. அதனால அந்த வருசத்த சுதந்திர பொன்விழா ஆண்டுன்னு அரசாங்கம் அறிவிச்சுச்சு.

சுதந்திர தினம் வர்றதுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி கல்லூரி முதல்வர் மாணவர்கள் அனைவரையும் கூப்பிட்டு மைதானத்தில் நிக்க வச்சாங்க.

“இந்த வருசம் சுதந்திர பொன்விழா ஆண்டுங்குறது உங்க எல்லாருக்கும் தெரியும். அதனால கப்பற்படையின் முன்னாள் தலைவர் வர்ற சுதந்திர தினவிழாவுக்கு நம்மோட தலைமை விருந்தினரா வர்றாங்க.

இந்த விழாவில எல்லாரும் தாயின் மணிக்கொடி பாடல் பாடணும். அதுக்காக ஒத்திகை பார்க்கத்தான் எல்லாரையும் இங்க வரச் சொன்னேன். எல்லோரும் தாயின் மணிக்கொடி பாடுங்கன்னு” முதல்வர் சொன்னாங்க.

உடனே நாங்க எல்லாரும் “தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்” அப்பிடின்னு பாடினோம்.

உடனே முதல்வருக்கு பயங்கரக் கோபம் வந்துருச்சு.

“எல்லாரும் பாடுறத நிப்பாட்டுங்க. நான் சொன்னது தாயின் மணிக்கொடி பாரீர் அப்படிங்கிற பாரதியோட பாடல. நீங்க என்னடான்னா சினிமா பாடல பாடுறீங்க.

பாரதியார் நாம சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடியே நம் தாய் நாட்டின் கொடியைப் பற்றியும், அதனை இந்திய மக்கள் எவ்வாறு போற்றிப் பாதுகாப்பர் என்பது பற்றியும் பாடியிருக்கிறார்.

நாம இன்னைக்கு சுதந்திரமாக கல்வி கற்கவும் பேசவும் எழுதவும் முடியுதுன்னா அதுக்கு நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான் காரணம்.

நாளைக்கு மறுபடியும் காலையில எல்லாரும் இங்க ஒன்னா கூடுவோம். தாயின் மணிக்கொடி பாடலை ஒன்னா சேர்ந்து ராகமா பாடுவோம்.

இடையில நான் யாரையாவது முன்னால கூப்பிட்டு பாடச் சொல்லுவேன். அப்ப அவங்க முன்னால வந்து பாடணும். மத்தவங்க பின்னால பாடணுமுன்னு சொல்லிட்டு போய்யிட்டாங்க.

 

மறுநாள் காலையில எல்லாரும் மைதானத்தில குழுக்களாக பிரிஞ்சு நின்னோம்.

முதல்வர் வந்ததும் கொடிப் பாடலைப் பாட ஆரம்பிச்சோம். அவங்க‌ குழுக்களுக்கு இடையில நடந்து வந்தாங்க.

திடீருன்னு என்னோட தோள்ல கைவச்சாங்க. போய் முன்னால மைக்ல பாடுன்னு சொன்னாங்க.

எனக்கு குப்புன்னு வேர்த்திருச்சு. கைகால் உதறல் எடுத்துச்சு. தலையில பாறாங்கல்ல வைச்ச மாதிரி இருந்திச்சு.

அவுங்க என்ன மறுபடியும் பார்த்து போன்னு தலைய அசைச்சாங்க.

நடக்க ஒரு எட்டு எடுத்து வைச்சா பூமி கீழே எங்கேயே ஓடிப்போன மாதிரி இருந்துச்சு. மெல்ல மைக்குக்குப் பக்கத்தில போனேன்.  பாட வாயத் திறந்தா காத்துதான் வருது. எச்சக்கூட என்னால முழுங்க முடியல.

என்னோட நிலைமைய முதல்வர் புரிஞ்சுகிட்டாங்க.

அவங்க இன்னொரு மைக்ல முதல பாடுனாங்க. அவங்களத் தொடர்ந்து நான் மைக்லேயும், மத்தவங்க நின்ன இடத்தில இருந்தும் பாடுனோம்.

அப்பயும் என்னோட சத்தம் வெளியே கேட்கல. எப்படா விடுவாங்ன்னு இருந்துஞ்சு.

பாடி முடிச்சதும் மறுநாளும் ஒண்ணா சேர்ந்து பாடணும்னு சொல்லிட்டாங்க. என்னை தனியா கூப்பிட்டு பேசுனாங்க.

 

“கூட்டத்துக்கு முன்னாடி பேச எனக்கு ரொம்ப பயமுன்னு” நான் அவங்ககிட்ட சொன்னேன்.

உனக்கு முன்னால நிக்குறவுங்க உன்ன மாதிரி மாணவர்கள் தான. உன்னோட நண்பர்கள் தான.

நீ ஒரு திறமைசாலின்னு முதல்ல நம்பு.

பின் சாதாரணமா பாட ஆரம்பி. உன்னால உன் கூச்ச சுபாவத்த விட்டுட்டு பாட முடியும்” அப்படின்னு ஊக்கப்படுத்தினாங்க.

 

மறுநாள் காலையில கூட்டத்துக்கு முன்னாடி முதல சிறிது தளர்ச்சியோட பாட ஆரம்பிச்சேன்.

நீ திறமைசாலி என்ற முதல்வரின் வார்த்தை நினைவிற்கு வர எனக்குள்ளேயே மாற்றம் தெரிஞ்சிச்சு. என்னுடைய குரல் கணீரென ஒலிக்க ஆரம்பித்தது.

பாடல் முடிந்ததும் முதல்வர் கை தட்டினார். அதனைப் பார்த்து மாணவர்களும் பெரிய கைதட்டலைத் தந்தனர்.

சுதந்திர தினத்தன்று நான் மைக்கில் கூட்டத்தின் முன்னால் நின்று முதலில் பாட பின்னர் எல்லோரும் பாடினர்.

விழா முடிந்ததும் முதல்வர் என்னைப் பெரிதும் பாராட்டினார்.

அன்றைக்கு அவர் கொடுத்த தன்னம்பிக்கை என்னை எதிலும் முயற்சிக்கத் தூண்டியது. முயற்சி வெற்றியைத் தந்தது.

இன்றைய என்னுடைய நல்ல நிலைமைக்கு தாயின் மணிக்கொடி பாடல் பாடிய ‌நிகழ்ச்சியே பிள்ளையார் சுழி போட்டது.’ என்றான் பரதன்.

தந்தைக்கு ஊக்கம் அளித்த தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை ரம்யா தந்தையுடன் இணைந்தே ராகத்துடன் பாடினாள்.

வ.முனீஸ்வரன்

 

நூறு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் போராட்டத்தில் உத்வேகம் அளித்த பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை நீங்களும் ஒரு முறை பாடிப் பாருங்கள்!

 

One Reply to “தாயின் மணிக்கொடி – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.