தாயென வந்தாயே தேவதையே!

டி.வி.யில் ந்யூஸ் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு சங்கரா, ஜோதி டிவிகளில் ஆன்மிக நிகழ்ச்சிகளை சிறிது நேரம் பார்த்துவிட்டு டி.வி.யை அணைத்துவிடுவார் சாந்தா மாமி.

அண்ணாமலை, சீமான் இருவரின் பேச்சையும் அவர்களின் பேட்டியையும் கொஞ்சம் விரும்பிப் பார்ப்பார்.

மற்றபடி சினிமா, பிக்பாஸ், சீரியல் இவையெல்லாம் பார்க்கவே மாட்டார். சிறிது நேரம் செல்லை நோண்டிக் கொண்டிருப்பார்.

யூட்யூப்பில் வரும் ‘பசங்க தமிழ் கார்ட்டூன்’ நிகழ்ச்சியை ரொம்பவும் விருப்பத்தோடு பார்ப்பது மாமிக்கு வழக்கம்.

‘தாலிகட்டி வந்தவளை தலையில் தூக்கி வச்சுகிட்டு தாங்குவாண்டி தங்கமான புருஷன்’ என்ற பாட்டோடு தொடங்கும் அந்த நிகழ்ச்சிக்கு மாமி அடிமை.

அதில் வரும் அன்னக்கிளி, வனசா, மாடர்னு, நெடுவாளி என்ற நான்கு (கார்ட்டூன் கேரக்டர்கள்) தோழிகளையும் அவர்களின் நடிப்பையும் மாமி கண்களை மூடவும் மறந்து பார்ப்பார்.

அதுவும் நெடுவாளி கேரக்டரின் நடிப்பையும் பேச்சையும் அடிச்சுக்கவே முடியாது என்று நினைத்துக் கொள்வார்.

பங்கஜம் பாட்டி, மொட்டக்கார அம்மா, நயந்தாரா, சுப்ரமணி, ட்ரௌசர் அங்கிள், வனசா புருஷன் சிலுக்கு வார்பட்டி சிங்காரம் (இந்த கேரக்டர் குடித்துவிட்டு வந்து பண்ணும் அலம்பல் அமர்க்களம்) மனைவியை ‘வனஸ் பேபி’ என்று கூப்பிடும்போது மாமியால் சிரிக்காமல் இருக்க முடியாது.

இன்னும் வரும் மற்ற கேரக்டர்கள் என்று மொத்தமாய் எல்லா கேரட்டர்களும் நடிப்பில், சிரிக்க வைப்பதில் பின்னியெடுக்கும்.

மொத்தத்தில் நிகழ்ச்சி நடக்கும் இருபது நிமிடமும் மாமி தன்னை மறந்து லயித்துக் கிடப்பார். அந்த இருபது நிமிடம் மட்டுமே மாமிக்கான சிரிக்கும் நேரம்.

அன்றும் அப்படித்தான் இரவு எட்டு மணிக்கு யூட்யூபில் குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாமியின் மனது முழுவதுமாய் லயிக்காமல் கிலேசப்பட்டுப் போயிருந்தது.

கையில் செல்லை எடுத்துக் கொண்டு தானும் பேரன் சர்வேஷும் இரவு படுத்துத் தூங்கும் அறையை நோக்கி நடந்தவர் சாத்தியிருந்த கதவை மெல்லத் திறந்து பார்த்தார்.

பக்கத்தில் டிராயிங் நோட்டும் கலர் பென்சில்களும் சிதறிக் கிடக்க தூங்கிப் போயிருந்தான் ஆறு வயது சர்வேஷ்.

டிராயிங் நோட்டையும் பென்சில்களையும் எடுத்து வைக்கலாமென கட்டிலை நோக்கி நடந்த மாமியின் கண்களில் திறந்து கிடந்த டிராயிங் நோட்டில் ஒரு பெண் சிறுகுழந்தையொன்றை மார்போடு அணைத்தபடி நிற்கும் படம் பட்டது. அப்படத்திற்கு அரைகுறையாய்க் கலரடித்திருந்தான் சர்வேஷ்.

அப்பெண் அணைத்திருந்த குழந்தையின் அருகே ஆங்கிலத்தில் கோணல் மாணலாய் ‘சர்வேஷ்’ என்று எழுதியிருந்தது.

படத்தைப் பார்த்த நொடி மாமியின் கண்களில் கண்ணீர் குளமிட்டது.

‘இதென்ன இது?’ மாமி படத்தை உற்று நோக்கினார். சர்வேஷால் அரைகுறையாய்க் கலரடிக்கப்பட்டு ‘அம்மா’ என்று எழுதியிருந்த படத்திலிருந்த பெண்ணின் கன்னத்தில் பச்சைக் கலரில் உதடுகள் குவித்து முத்தமிட்டதுபோல் அடையாளம் தெரிந்தது.

சட்டென மாமி தூங்கும் பேரனின் உதடுகளைப் பார்த்தார். சர்வேஷின் உதடுகள் பச்சை நிறத்தில் தெரிந்தன.

‘பச்சைநிற பென்சில் முனையைத் தண்ணீரில் நனைத்து தன் உதட்டில் தேய்த்து படத்திலுள்ள பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டிருக்க வேண்டும்’ என்பது புரிந்தது. அழுதே விட்டார் மாமி. தாயின் அன்புக்கும் பாசத்துக்கும் ஸ்பரிசத்துக்கும் ஏங்கும் பேரனின் தவிப்பு.

‘ப்ரியா.. ஏம்மா.. ஏம்மா.. ஏம்மா இவன பெத்துப் போட்டுட்டு, போட்டதுமே இவன தாயில்லாப் புள்ளையாக்கிட்டுப் போய்ச் சேந்த. பாழுந்தெய்வத்துக்கு அப்பிடி என்ன அவசரம் ஒன்ன அழச்சுக்கறதுக்கு?

பாவி நா இருக்கேனே! என்ன அழச்சுண்டு போக்குடாது. தாயோட பாசத்துக்கு ஏங்கிப்போற இவன நா சமாதானப் படுத்த முடியாத தவிக்கிறது அந்த தெய்வத்துக்குத் தெரியாமயா போயிடுத்து”கன்னத்தில் இறங்கும் கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டார் மாமி.

டிராயிங் நோட்டு கலர்ப் பென்சில்களை எடுத்துக் கப்போர்டில் வைத்துவிட்டு, கையில் தண்ணீர் தொட்டு சவேஷின் உதட்டில் ஒட்டியிருக்கும் பச்சைக் கலரைத் துடைத்துவிட்டபோது “மம்மி! குட்மார்னிங் மம்மி!” என்று சொல்லிக் கொண்டே ஒருக்களித்துப் படுத்தான் சர்வேஷ்.

‘திக்’கென்றது மாமிக்கு. ‘இதென்ன? யாருக்கு இவன் குட்மார்னிங் சொல்றான்; மம்மீங்கறான்’ குழம்பிப் போனார் மாமி.

அன்று அப்படித்தான் “பாட்டி அம்மா எங்க போயிருக்கா? எப்ப பாட்டீ வருவா?” என்று தீடீரென அவன் பத்து நாட்களுக்கு முன்பு கேட்டதும் தலையில் இடி இறங்கியதைப்போல் அதிர்ந்து போனார் மாமி.

ஐந்து வயது வரை அவன் இப்படியொரு கேள்வியைக் கேட்டதே இல்லை. ஆறாம் வயதில் வேறு பள்ளிக்கு சர்வேஷை மாற்றியதிலிருந்து அவன் கொஞ்சம் மாறித்தான் போயிருந்தான்.

இப்போதெல்லாம் ‘அம்மா’ என்ற வார்த்தையை அதிகம் உபயோகிக்க ஆரம்பித்திருந்தான்.

பத்துநாள் முன்பு மாலை ஸ்கூலிலிருந்து வந்தவன் வழக்கம் போல் “பாட்டீ! பாட்டீ! இன்னிக்கு என்ன பாட்டீ ஸ்னாக்ஸ்?” என்று கேட்பவன் அன்று எதுவும் கேட்காமல் மௌனமாய் சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டான்.

மாமி பேரனிடம் “சர்வேஷ் குட்டா என்ன இன்னிக்கு அமைதியா சோஃபாவுல போய் ஒக்காந்துட்ட? திங்க என்ன பாட்டி வெச்சுருக்க? என்னபாட்டி வெச்சுருக்கன்னு? நச்சரிச்சு புடுங்கி எடுப்ப. ம்! என்னாச்சு ஒனக்கு? ஸ்கூல்ல மிஸ்ஸு திட்டினாங்களா? அதா இப்பிடி இருக்கியா?”

“ம்.. இல்ல…”

“அப்பறம் ஏ, இப்டி இருக்க? பாரு.. பாரு… குட்டிப் பையனுக்கு பாட்டி என்ன பண்ணி ரெடியா வெச்சுருக்கேம் பாரு. டொட்டொடய்ங்!” என்று சொல்லிக்கொண்டே பேரனின் முகத்தருகே சென்று கையிலிருக்கும் கிண்ணத்தின் மேல் மூடியிருந்த தட்டை அகற்றினார் மாமி.

குண்டு குண்டாய் கண் சிமிட்டியபடி ஜீராவில் மிதந்து கொண்டிருந்தன நான்கைந்து குலோப் ஜாமூன்கள்.

சாதாரணமாய் இருந்தால் குலோப்ஜாமூனைப் பார்த்தாலே சந்தோஷத்தில் குதிப்பவன் அன்று கண்ணெதிரே கிண்ணத்தில் ஜீராவில் மிதக்கும் ஜாமூனைக் கண்டு கொள்ளவே இல்லை.

மாமிக்கு பேரனின் மௌனம் புரியவே இல்லை; கவலையாகிப் போனது.

கிண்ணத்தை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, “சர்வேஷ் செல்லம்! என்னாச்சு கண்ணு ஒனக்கு? ஒடம்பு கிடம்பு சரியில்லையா? இப்பிடி இருக்கமாட்டியே!” என்றபடி பேரனின் நெற்றி கழுத்து என்று கை வைத்துப் பார்த்தார் ஜுரம் அடிக்கிறதோ என்று.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமாதானே இருக்கான். அப்றம் ஏன் இப்பிடி?’

“சர்வேஷ் குட்டிக்கு என்னாச்சு? பாட்டிமேல எதாவது கோவமா? பாட்டியோட டூவா? காயா? பேசமாட்டியா? பாட்டி பாவந்தானே! செல்லக்குட்டி பாட்டியோட காய்விட்டா பாட்டி அழுவேன்ல. எங்க.. எங்க.. பாட்டியோட பழம் விடு.. பழம் விடு.. பாட்டிய பாத்து சிரி.. சிரி…” பேரனின் இருபக்க விலாவிலும் கை வைத்துக் கிச்சுகிச்சு மூட்டினார் மாமி.

பாட்டியின் இருகைகளையும் தள்ளி விட்டுவிட்டு நகர்ந்து அமர்ந்தான் சர்வேஷ்.

பேரனின் செயல் ஏதோ சீரியஸான விஷயத்தைத் தெரிவிப்பதாகத் தோன்றியது மாமிக்கு.

“சர்வேஷ் குட்டி! நீ ஏங்கோவமா இருக்கேன்னு பாட்டிக்குத் தெரிலடா கண்ணு. என்னன்னு சொன்னாதானே பாட்டிக்குத் தெரியும்? நீ சமத்துப் பையந்தானே! வெரிகுட் பாய்தானே! ஒனக்குப் பாட்டிட்ட என்ன கோவம்னு சொல்லு. நா என்ன தப்பு பண்ணேன்னு சொல்லுவியாம். நீ சொல்லு. நா அப்றம் அப்டி செய்யமாட்டேன்”

கொஞ்சம் இறங்கி வந்தான் சர்வேஷ்.

“பாட்டி! நீ எனக்கு பாட்டியா? அம்மாவா?”

அதிர்ந்து போனார் மாமி..

“ஏங்கண்ணு! திடீர்னு இப்பிடி கேக்கற? பாட்டி..”

“அப்ப என்னோட அம்மா எங்க?”

நிலைகுலைந்து போனார் மாமி.

வெடித்து வரும் அழுகையை மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்திக் கொண்டார் மாமி.

சட்டென சர்வேஷுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் மாமி.

சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ள செயற்கையாய் இருமலை உருவாக்கிக் கொண்டார். இருமும் நேரத்தில் யோசித்தார்.

“சர்வேஷ் குட்டா! அம்மா.. அம்மா.. ஏதோ ஒன்னு என்னது அது அட மறந்துட்டேனே! ஏதோ ஒன்னு வாங்கிண்டு வர சாமிட்ட பேருக்கா. அத சாமி குடுத்ததும் அத வாங்கிண்டு வந்துடுவா”

“ஏம் பாட்டி அது கடேல கெடைக்காதா?”

“ம்கூம்! கடேல கெடைக்கல. அதா சாமிட்ட வாங்கிண்டு வர போயிருக்கா. வந்துடுவா?”

“அம்மாக்கு பசிக்காது? எங்க சாப்புடுவா?”

“சாமி சாதம் குடுக்கும்”

“ஏம் பாட்டி நாளைக்கும் நாத்திக் கெழமயும் ஸ்கூல் லீவுதா! நா போய் அம்மாவ அழச்சுண்டு வரட்டுமா? அம்மாக்கு குலோப்ஜாமூன் புடிக்குமா பாட்டி? டப்பால போட்டுத் தரியா? அம்மாக்குக் குடுக்குறேன்”

பேரனைக் கட்டிக்கொண்டு அழுதார் மாமி.

“ஏம் பாட்டி அழற? நீயும் வரணுமா? நீயும் வந்தா அப்பாக்கு யாரு சமச்சுத் தருவா? நீ இங்கியே இரு பாட்டி. பாட்டி அங்க எதுல ஏறிண்டு போணும். டிக்கெட்டு வாங்கணுமா பாட்டி? அப்பாவ டிக்கெட் வாங்கித் தரச் சொல்றியா?” அடுகடுக்காய் இன்னும் மழலைகூட சரியாய் மாறாத குரலில் கேள்வி கேட்கும் பேரனை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு கதறினார் மாமி.

அடுத்து வந்த பத்து நாட்களும் ‘டிக்கெட் வாங்கியாச்சா? அப்பா வாங்கிண்டு வந்துட்டாளா?’ என்ற கேள்வியோடவே ஸ்கூலிலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழையும் போதே கேட்டுக் கொண்டே வருவது வாடிக்கையாயிற்று.

இதோ இப்போது ‘குட்மார்னிங் மம்மி!’ என்று சொல்லி புரண்டு படுக்கும் பேரனைப் பார்த்து குழம்பித் தவித்துப் போனார் மாமி.

ஞாயிற்றுக்கிழமை. காலை டிபனுக்கு வந்தமர்ந்த மகன் விக்னேஷின் எதிரே டைனிங் டேபிளில் தட்டில் இரண்டு தோசையும் இருவித சட்டிகளையும் வைத்தார் மாமி.

தட்டிலிருந்த தோசையைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வாயருகே கொண்டு சென்ற விக்னேஷைத் தாயின் “விக்னேஷ்!” என்ற கண்டிப்பும் உறுதியுமான அழைப்பு தலை நிமிர்த்தித் தாயின் முகத்தைப் பார்க்க வைத்தது.

‘என்ன?’ என்பது போல் தாயைப் பார்த்தான் விக்னேஷ்.

“ஒம் மனசுல நீ என்னதா நெனச்சிண்ருக்க?”

“என்ன?”

“என்னவா? மூணுவருஷமா நானும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கடா. ஒலகத்துல பொண்டாட்டி எறந்துட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது தப்புமில்ல புதுசுமில்லன்னு கரடியா கத்திண்ருக்கேன் நீ காதுலயே வாங்க மாட்டேங்கற.

த பாரு! நா ஒன்னமட்டும் பெக்கல. ஒனக்கு மூத்தவாளா ரெண்டு புள்ளையும் ஒரு பெண்ணும் இருக்கா. கடந்த ஆறுவருஷமா இவா யாராத்துக்கும் நாம் போயி நாலுநாள் தங்கல.

ஒனக்கும் ஒம்புள்ள எம்பேரனுக்கும் சமச்சுப் போடன்னே இங்கியே கதியா கெடக்கேன். எனக்கும் வயசாச்சு. ஒருநாளப் போல என்னால ஓடிஓடி வேல செய்ய முடில.

சொன்ன பேச்ச கேளு. ஒருநல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க. அப்பறம் அவளாச்சு நீயாச்சு ஒம்புள்ளையாச்சுன்னு நா கவலய மறந்து கொஞ்சநாள் இருந்துட்டு கைலாசம் போய்ச் சேருவேன்”

பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தான் விக்னேஷ்.

“இப்பவும் நீ பதிலேதும் சொல்ல மாட்ட. இந்த ஆத்துல என்ன நடந்துண்ருக்குன்னு தெரியுமா ஒனக்கு?”

“மாசத்துல இருவது நாளுக்கு மேல நீ வேல விஷயமா வெளியூர் போயிடற. கொஞ்ச நாளா சர்வேஷ் கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல!”

“அப்பிடி என்னம்மா அவங்கேக்கறான்?”

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சர்வேஷ் கேட்கும் கேள்விகளையும் தாய் அன்புக்காகவும் பாசத்துக் காகவும் தாயின் அணைப்புக்காக ஏங்குவதையும் அடுத்த சனி ஞாயிறுக்குள் அம்மாவைப் பார்க்கச் செல்ல டிக்கெட் வாங்கித் தர கெடு வைத்திருப்பதையும் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ் அதிர்ச்சியில் சிலைபோல் ஆகிவிட்டான்.

“விக்னேஷ்!” மகனின் தோளைத் தட்டி நிகழ்வுக்குக் கொண்டு வந்தார் மாமி.

“அம்மா நீ சொல்றாப்புல கல்யாணம் பண்ணிண்டேன்னு வையி, வர்ர பொண்ணு சர்வேஷ்க்கு அம்மாவா, பாசத்தையும் அன்பையும் காட்ற தாயா இருப்பாங்கறது என்ன நிச்சயம்? சித்தியா மாறி கொடுமப்படுத்தினா?”

பதில் சொல்லாத் தடுமாறினார் மாமி. சட்டென சமாளித்துக் கொண்டார்.

“ஏண்டா! ஆண்டவன் ஒருமுறை தான் சோதிப்பான். ஆச தீர சோதிச்சிட்டான். மறுபடியுமா சோதிப்பான். நல்லதே நடக்கும்னு நெனைப்பமே. இப்பிடி எதையாவது சொல்லிச் சொல்லி தட்டிக் கழிக்காத. இப்பவே ஒனக்கு முப்பத்தாறு வயசாச்சு. இன்னும் நாலுவருஷம் கழிச்சி யோசிச்சயானா பொண்ணு கெடைக்காது. கெழவிதான் கெடைப்பா!” ‘நறுக்’கென்று சொன்னார் மாமி.

“என்னமோ பண்ணு. ஆனா ரெண்டு கண்டிஷன்”

‘பிள்ளை கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். அதுவே போதும். பெரிசா என்ன கண்டிஷன சொல்லிடப் போறான்?’ என்று தோன்றியது மாமிக்கு.

“சொல்லு! சொல்லு!” என்றார் பரபரப்பாக.

“அய்யோ! இதென்ன கூத்து?” காதைப் பொத்திக் கொண்டார் மாமி.

“இந்தமாரி பொண்ணு கெடைப்பாள? இப்பிடீல்லாம் மொதல்ல இருப்பாளா? நீ
இல்லாத ஊருக்கு வழி தேடற”

“இல்லம்மா, இந்த மாரி பொண்ணுங்க நிறையபேர் இல்லாட்டியும் ஒரு, ரெண்டு பேராவது இருப்பாங்கம்மா. கெடச்சா பாப்பம். இல்லாட்டி மாத்தி யோசிக்கலாம்” எழுந்து கொண்டான்.

தமிழ், ஆங்கில தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. மெட்ரிமோனியில் புகைப்படத்துடன் விளம்பரம் வெளியானது.

விளம்பரம் வெளியான இரண்டாம் நாள். அன்று வீட்டிலேதான் இருந்தான் விக்னேஷ்.

லேப்டாப்பில் மூழ்கிக் கிடந்தபோது பக்கத்திலிருந்த செல்போன் திரை மிளிர்ந்தது.

அன்னோன் நம்பர். அலட்சியம் காட்டினான். அடுத்தடுத்து அதே எண்ணிலிருந்து மூன்று முறை அழைப்புவர, எடுத்து ஆன் செய்து “ஹலோ!” என்றான்.

“ஹலோ! மிஸ்டர் விக்னேஷா?” பெண்ணின் குரல்; நளினம் வழிந்தது.

“யெஸ்! நீங்க?”

“தோ! நாம் பேசறேனே, இந்த என்னோட குரல எப்பவாவது கேட்டது போல இருக்கா?”

கேட்ட குரலாகவும் இருந்தது; இல்லாதுபோலும் இருந்தது விக்னேஷுக்கு. தடுமாறினான்.

எதிர் முனையில் சிரிப்பொலி கேட்டது. நெஞ்சைத் தொடும் வஞ்சமில்லாத இதயத்தைக் காட்டும் கபடமற்ற சிரிப்பு.

“இது.. இது.. சாகித்யாவின் சிரிப்பு. அவளால் மட்டுமே இப்படி சிரிக்க முடியும். ஒன்பது வருடங்களிருக்கும் இந்த சிரிப்பைக் கேட்டு. கடைசி சந்திப்பின்போது அழுகையோடு முடிந்தது அந்த சந்திப்பு. இப்போது மீண்டும் அந்த சிரிப்பு’ ‘குப்’பென்று ரத்தம் வேகமாக உடலெங்கும் பரவியது. பதில் சொல்லத் திணறினான் விக்னேஷ்.

“மிஸ்டர் விக்னேஷ்! நா யார்னு கண்டுபிடிச்சுடீங்களா?”

“ம்..”

“என்னடா ஒம்பது வருஷத்துக்கு முன்ன ஒருநாள் இந்த சாகித்யாகிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணினோம். அடுத்த நொடி கண்ணீரோட ஒரு பை கூட சொல்லாத வேகமா அந்த எடத்தவிட்டு ஓட்டமும் நடையுமா ஓடிப் போனாங்க. இப்ப இத்தன வருஷங்கழிச்சி அவங்களாவே ஃபோன் பண்றாங்கன்னு யோசிக்கிறீங்க.. ரைட்டா?”

“………”

“நாந்தானே கால் பண்ணேன். நானே மேட்டருக்கு வரேன். ஒங்க விளம்பரம் பாத்தேன். அதுவிஷயமா ஒங்கள மட்டுமில்ல ஒங்க மதரையும் சந்திக்க விரும்பறேன். அனுமதி கிடைக்குமா?”

பரபரத்தது விக்னேஷின் மனது. ‘அம்மாவயுமா?’

“ஏ.. எதுக்கு? அம்மாவ..”

எல்லாத்தியுமே ஃபோன்ல பேசிட முடியாது. சந்திக்கறதுல ஒங்குளுக்கு சம்மதம்னா எதாவது ஒரு கோவில்ல சந்திக்கலாமுன்னு தோணுது. ஒங்க பதிலுக்காக காத்திருக்கேன். வெச்சுடறேன்..” எதிர் முனையில் ஃபோன் அமைதியானது.

முதலில் மாமி தயங்கினாலும் கடைசியாய் அந்தப் பெண்ணைக் கோயிலில் சந்திக்க ஒப்புக் கொண்டார்.

அந்த சிவன் கோயிலில் அன்று வெறும் சாதாரண நாளாய் இருந்ததால் அதிகக் கூட்டமில்லை.

பிராகாரத்திலிருந்த தியான மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள் மாமியும்
விக்னேஷும்.

இருவர் மனதிலும் ஏகத்துக்கும் பரபரப்பு. சர்வேஷ் ஸ்கூல் போயிருந்ததால் அவனை அழைத்து வரவில்லை.

அவர்கள் வந்தமர்ந்த பத்தாவது நிமிடம் இவர்களை நோக்கி நடந்து வந்தாள் சாகித்யா.

தங்களை நோக்கி நடந்து வரும் பெண் கண்களில் பட்ட வினாடி, ‘அப்பா இதென்ன இது அலங்காரம் பண்ணி வெச்ச அம்பாளே நடந்துவரா மாரின்னா இந்தப் பொண்ணு இப்பிடியோரு அழகா இருக்கா.

தேவத ஒன்னு நடந்து வராப்லன்னா இருக்கு. இவனோட கண்டிஷனுக்கும் இந்தப் பொண்ணுக்கும் சம்பந்தமா இருக்கும் கடவுளே! நீ என்ன செய்ய நெனைக்கிறேன்னே தெரியலயே..” என்று தவித்தது மாமியின் மனம்.

விக்னேஷின் பார்வை சாகித்யா மீது பட்ட நொடி, இதயப் பிரதேசத்தில் ஏதோ ஒரு உணர்வு பொங்கி வழிந்தது.

தங்களை நெருங்கி விட்ட சாகித்யாவை பார்த்தபடி இருந்த விக்னேஷ் தன்னை
அறியாமல் எழுந்து நின்றான்.

“ஹலோ ஆன்ட்டி!” என்றபடி கைகளைக் கூப்பி வணங்கினாள், மாமியின் அருகே வந்து நின்ற சாகித்யா.

மாமிக்கு வந்து நிற்கும் பெண்ணைத் தானும் கைகூப்பி வணங்குவதா பார்த்து சிரித்தால் மட்டும் போதுமா என்று தெரியாமல் தடுமாறினார்.எதற்கும் இருக்கட்டுமென்று சிரித்து வைத்தார்.

“நா சாகித்யா. ஒங்க விளம்பரம் பாத்து மிஸ்டர் விக்னேஷுக்கு நான்தான் ஃபோன் பண்ணினேன். நா கடந்த ஆறு வருஷமா பெங்களுருல இருந்து வேல பார்த்தேன். சமீபத்துலதான் சென்னைக்கு வந்தேன்” சொல்லிக் கொண்டே மாமியிடமிருந்து பார்வையை நகர்த்தி இரண்டடி தள்ளி நிற்கும் விக்னேஷைப் பார்த்தாள் சாகித்யா.

தாயிடம் விபரம் சொல்லிக் கொண்டிருந்த சாகித்யாவை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ், சாகித்யா தன்னை நோக்கித் திரும்பியதும் சட்டெனப் பார்வையை மீட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

‘தான் சாகித்யாவையே பார்த்தபடி நின்றதை அவள் உணர்ந்திருப்பாளோ?’ என்று குறுகுறுத்தது மனது.

“ஹலோ மிஸ்டர் விக்னேஷ்!”

சாகித்யாவை முதன்முதலில் பார்ப்பவன்போல் ஏறிட்டுப் பார்த்தான். “ஹலோ!” என்றான்.

“நா.. சாகித்யா”

சாகித்யா லேசாய் இதழ் விரித்துச் சிரித்ததுபோல் தோன்றியது விக்னேஷுக்கு. அதெல்லாம் இருக்காது. நம்ம கற்பனையா இருக்கும் என மனதை அடக்கியவன், “நீங்க அம்மாகிட்ட சொல்லிண்ருந்தத கேட்டேன்” என்றான். குரல் பிசிறடித்தது.

“நா ஆன்ட்டிகிட்ட கொஞ்சம் தனியா பேசனுமே!”

“ஓகே..நோ ப்ராப்ளம்” அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

“ஆன்ட்டி!”

“சொல்லும்மா”

“ஆன்ட்டி நா சுத்திவளச்சுப் பேச விரும்பல. நேரிடையாவே விஷயத்துக்கு வரேன்”

‘இந்தப் பொண்ணு என்ன சொல்லப் போறுதோ?’ என்ற தவிப்போடு அவளின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தார் மாமி.

“ஆன்ட்டி! ஒங்க விளம்பரத்துல ஒங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வர இந்த ரெண்டு தகுதிகள் இருக்னும்னு குறிப்பிட்டிந்த அந்த ரெண்டு தகுதிகளும் என்கிட்ட இருக்கு ஆன்ட்டி”

“அடிப்பொண்ணே! நீ என்ன சொல்ற?” கிட்டத்தட்ட கத்தியே விட்டார் மாமி.

“கூல்.. கூல் ஆன்ட்டி.. ஆமா ஆன்ட்டி ஒங்க முதல் கண்டிஷன்படி ஒங்க பேரனுக்கு தாயன்பையும் பாசத்தையும் வாரிவாரிக் குடுத்து அவனக் கண்போல பாதுகாக்க அவனுக்கான தேவைகளைப் பாத்துப் பார்த்து செய்ய நா முழு உடல் தகுதியோட இருக்கேன் ஆன்ட்டி.

எனது அன்பு மொத்தத்தையும் தாயன்பாய் மாத்தி ஒங்க பேரனுக்கு மட்டுமேதான் என்னால கொடுக்க முடியும்.

ஏன்னா என்னால ஒரு கொழந்தைய வயிற்றில் தாங்கி தாயாக முடியாது. எனது பதினெட்டாவது வயசுல நான் சந்தித்த ரெயில் விபத்துல என் வயத்துல கம்பிகுத்தி உள்ளே நொழஞ்சு என் யூட்ரஸ நா இழக்கக் காரணமாயிடுத்து.

கருப்பைய இழந்துவிட்ட நான் குழந்தை பெறும் தகுதிய எழந்துட்டேன். அதுனால ஒங்க ரெண்டாவது கண்டிஷனுக்கும் நான் பொருத்தமானவளா இருப்பேன்னு நெனைக்கிறேன்”

சாகித்யா சொல்லி முடித்த போது மாமி மொத்தமாய் அழுதே விட்டார். எமோஷனல் ஆகிப் போனார். உணர்ச்சி மிகுதியில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவராய் சட்டென சாகித்யாவை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

“அடிப்பொண்ணே! நீதாண்டிம்மா எங்காத்து மாட்டுப்பொண்ணு!” என்று நா
தழுதழுக்கச் சொன்னபோது சாமிக்கு தீபாராதனை நடந்ததோ என்னவோ கோவில் மணி ‘டாண் டாண்’ என்று ஒலித்தது.

“பாத்தியா.. பாத்தியா.. ஆண்டவனே உத்தரவு குடுத்துட்டான். நீந்தான் நீந்தான் எம் மாட்டுப்பொண்ணு” ஆவேசமானவர் போல பேசினார் மாமி.

“ஆன்ட்டி! அமைதி! அமைதி! இதுல ஒங்க புள்ளையோட சம்மதமும் வேணுமில்ல. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்கோ ஆன்ட்டி.

ஏன் ஆன்ட்டி, முன்னப் பின்னத் தெரியாத நான் ஒங்ககிட்ட வந்து இப்பிடி பேசரத நீங்க எப்பிடி ஆன்ட்டி நம்பறீங்க? நா பொய்யானவளா இருந்தா கல்யாணத்துக்கு அப்றம் என்ன செய்வீங்க ஆன்ட்டி?” சிரித்தபடி கேட்டாள் சாகித்யா.

சுருண்டு மருண்டு போனார் மாமி.

“கோவில்ல நின்னுண்டு யாராவது பொய் சொல்லுவாளா?” என்றார். பயம் தெரிந்தது குரலில்.

“ஆன்ட்டி சும்மா கேட்டேன். பயப்படாதிங்கோ! எங்க அப்பா, அம்மா, அண்ணா மூணு பேரும் ஒங்காத்துக்கு வந்து பேசுவா. நீங்குளும் எங்காத்துக்கு வாங்கோ ஆன்ட்டி” என்ற போது ‘எப்பேர்ப்பட்ட பொண்ணு இது’ என்ற எண்ணம் எழுந்து மாமியை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்தது.

“ஆன்ட்டீ.. நா ஒங்க புள்ள கூடவும் பேசனுமே!”

சற்று தள்ளிப்போய் நின்றிருந்த விக்னேஷை அழைத்தார்.

அவன் அருகில் வரவும், “இந்தப் பொண்ணு ஒன்னண்ட பேசனுமாம்” சொல்லிவிட்டு அம்பாள் சந்நிதி நோக்கி மாமி நடந்தார்.

தாயின் குரலிலும் முகத்திலும் மகிழ்ச்சி வழிவதை உணர்ந்தான் விக்னேஷ்.

இருவருக்குமிடையே நிமிடநேரம் வியாபித்திருந்த மௌனத்தை “விக்னேஷ்!” என்ற சாகித்யாவின் அழைப்புக் குரல் உடைத்தது.

“ம்..”

“ஸாரி விக்னேஷ்!”

“எதுக்கு?”

“கடைசியா நாம பேசினப்ப நீங்க என்ன விரும்பறதா சொன்னப்ப ஒங்க விருப்பத்த ஏத்துக்கறதாவோ மறுக்குறதாவோ எந்த பதிலையும் தராம அழுதுண்டே போனேனே நினைவு இருக்கா?”

“மறக்கல!”

“இப்ப முழுசா ஒம்பது வருஷங் கழிச்சு அதுக்கான பதிலச் சொல்றேன் கேப்பீங்களா விக்னேஷ்?” குரல் கேவியது.

பேசாமல் நின்றான் விக்னேஷ்.

“நீங்க கேக்க விரும்பலேன்னாலும் இத்தன வருஷமா குற்ற உணர்ச்சியால தவிச்சிருண்ருக்குற எம்மனசுக்கு விடுதலை தர ஒரு பத்து நிமிஷம் குடுங்க விக்னேஷ்!” கெஞ்சினாள் சாகித்யா; கைகூப்பினாள்.

மனசுக்குள் தவிப்பாய் இருந்தது விக்னேஷுக்கு. “ம்.. சொல்லுங்க” என்றான் தவிப்பை வெளிக்காட்டாமல்.

“விக்னேஷ் அன்னிக்கு நீங்க ஒங்க காதல சொன்னப்ப அத ஏத்துக்குற நிலைல நானில்ல. காரணம்.. காரணம்..” அவள் சொல்லி முடித்தபோது அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றான் விக்னேஷ்.

“அன்னிக்கி உண்மைய நான் சொல்லிருந்தா நிச்சயமா என்ன தவிர்த்திருக்க மாட்டேள் விக்னேஷ். அதுனால என்ன? ஒனக்கு நான்; எனக்கு நீ; நமக்கு எதுக்கு கொழந்தன்னு ஏதேதோ சொல்லி என்ன கன்வின்ஸ் பண்ணிருப்பேள்.

“சாகீ..” கத்தியே விட்டான் விக்னேஷ். சாகித்யா என்று அழைக்காமல் சாகீ என்று அவன் அழைத்ததே அவன் அவளை ஏற்கத் தயாராகி விட்டதை உணர்த்தியது சாகித்யாவுக்கு.

அடுத்தடுத்து விக்னேஷ்-சாகித்யா திருமண ஏற்பாடுகள் இரு குடும்பத்தினரின் சந்தோஷ சம்மதத்தோடு நடந்தன. சில காரணம் கருதி சர்வேஷிடம் சொல்லப்படவில்லை.

திருமணத்துக்கு முதல்நாள் ஏதோ ஒரு பண்டிகைக்காக ஸ்கூல் லீவு விட்டிருந்தார்கள்.

தினமுமே காலை தூங்கி எழுந்ததுமே, “பாட்டீ அம்மாவ அழச்சுண்டு வர அப்பா டிக்கெட் வாங்கிண்டு வந்துட்டாளா?” என்று பிடுங்க ஆரம்பிக்கும் சர்வேஷிடம் அவன் கண் விழித்ததுமே மாமி தானாகவே அவனிடம் ஓடினார்.

படுக்கையிலிருந்து எழுந்துகூட உட்காராத சர்வேஷை அப்படியே தூக்கிக் கொண்டார். பாட்டி சந்தோஷமாய் இருப்பது அவனுக்குப் புரிந்தது.

“என்ன பாட்டி ஜாலியா இருக்க? அப்பா டிக்கெட் வாங்கிண்டு வந்துட்டாளா?” ஆர்வாமாய்க் கேட்டான்.

“எஞ் செல்லக்கண்ணே! சர்வேஷ் குட்டி! அம்மா ஃபோன் பண்ணினா. நாளைக்கு வராளாம். சர்வேஷப் பாக்கப்போறோம்னு ஜாலியா இருக்காம் அம்மாக்கு”

“பாட்டீ! அம்மா வராளா? அம்மா நாளைக்கு வராளா? நெஜமாவே அம்மா வரப் போராளா?” மாமியின் கைகளை விலக்கிக் கீழே குதித்தான்.

“ஹையா! அம்மா! அம்மா! எம் மம்மி! என்னோட மம்மி நாளைக்கு வரப்போறா!” சந்தோஷ மிகுதியால் கத்திக் கொண்டே இங்கு மங்கும் ஓடினான்.

“பாட்டீ! பாட்டீ! அம்மா ஸ்ரீராமு, ரவிராஜா, தினேஷ், பர்வீன், தர்ஷிணி அம்மால்லாம் அவாள ஹக் பண்ணி கிஸ் குடுக்கறமாரி என்னோட அம்மாவும் என்ன ஹக் பண்ணிப்பாளா. கிஸ் குடுப்பாளா? என்ன தூக்கி வெச்சுண்டு கொஞ்சுவாளா?” ஏக்கத்தோடு கேக்கும் பேரனை இழுத்து கட்டிக்கொண்டார் மாமி.

“செல்லக்குட்டி! நிச்சயமா ஒன்னோட அம்மா ஒன்ன ஹக் பண்ணிப்பா; முத்தம் குடுப்பா; தூக்கி வெச்சுண்டு கொஞ்சுவா” வெடித்து வரும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டார் மாமி.

அன்று முழுவதும் சர்வேஷ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி மாளவில்லை மாமிக்கு. அன்று ராத்திரி முழுதும் கண்மூடாமல் பேசிக்கொண்டே இருந்தவன் விடிகாலை அசந்துபோய் தூங்கிப் போனான்.

காலை விடிந்தது. அன்று திருநீர்மலையில் திருமணம்.

காலை எழுந்தவுடன் அப்பா எங்கன்னு சர்வேஷ் கேட்டா ‘அம்மா ஏரோப்பேன்ல வரதா ஃபோன் பண்ணிருக்கா; அதுனால அப்பா அம்மாவ அழச்சுண்டு வர போயிருக்கான்னு சொல்ல வேண்டியது’ என்று தீர்மானித்திருந்ததால் அதன்படியே காரியங்கள் நடந்தன.

காலை எழுந்தவுடன் தாயிடம் ஆசி பெற்று கிளம்பி திருநீர்மலைக்குப் போனான் விக்னேஷ்.

அவன் கிளம்பிச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் சர்வேஷ் எழுந்து விட்டான். மாமி வீட்டைக் கொஞ்சம் அழகுபடுத்தி வைத்திருந்தார் மணமக்களை வரவேற்க.

“பாட்டி! அப்பா எப்ப அம்மாவ அழச்சுண்டு வருவா?”

“தோ! வந்துடுவா!”

திரும்பத் திரும்ப சர்வேஷ் கேட்பதும் மாமி “தோ! வந்துடுவா! தோ! வந்துடுவா”ன்னு சொல்லிச் சொல்லி சமாளிப்பதுமாய் இருக்க, வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம்.

“சர்வேஷ் குட்டி! அம்மா வந்துட்டா; வாசல்ல கார் வந்ருக்குப் பாரு; வா வா அம்மாவ வாசல்ல போய் கூப்டுண்டு வருவோம்”

சட்டென பாட்டியின் புடவை யைப்பிடித்து இழுத்த சர்வேஷ், சாதாரணமாய் வீட்டிற்கு புதிதாய் யாராவது வந்தால் அவர்களைப் பார்க்க வெட்கப்பட்டு தாயின் பின்புறம் போய் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி வந்தவர்களைப் பார்க்கும் குழந்தைகளைப்போல், ஆறே வயதான சர்வேஷும் முதன்முதலாய்த் தன் அம்மாவைப் பார்க்க வெட்கப்பட்டு பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் நீட்டி வாசலைப் பார்த்தான்.

வலது காலை முதலில் வைத்து உள்ளே நுழைந்தாள் சாகித்யா.

வரும் போதே அவள் பார்வை தனது மாமியாரும் சர்வேஷின் பாட்டியுமான மாமியின் பின்னால் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டித் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சர்வேஷின் மீது விழுந்தது. சிரித்துக் கொண்டாள்.

வேண்டுமென்றே பரபரப்பைக் கூட்டிக் கொண்டாள்.

என் செல்லக் குட்டிய நாம் பாக்கணும். அவுனுக்கு என்னெல்லாம் வாங்கிண்டு வந்துருக்கேன் குடுக்கனும்னு. எங்க அவனக் காணும்?” இங்குமங்கும் ஓடி ஓடித் தேடுவது போல் பாவனை செய்தாள்.

கடைசியாய் பாட்டியின் பின்னால் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டு பிடித்து விட்டதைப்போல் சர்வேஷிடம் ஓடினாள். ‘லபக்’கென்று அவனைத் தூக்கிக் கொண்டாள்.

தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கன்னத்தில் முத்தமிட்டாள். தாயின் அணைப்பு; தாயின் ஸ்பரிசம்; தாயின் முத்தம்; தாயின் கொஞ்சல் முதல்முதலாய் உணர்ந்த அந்தப் பிஞ்சின் மனமும் உடலும் சாகித்யாவைத் தன் தாய் என்றே நம்பி அவளுக்குள் ஒன்றிக் கொண்டது.

“அம்மா! இனிமே என்ன வுட்டுட்டு எங்கியும் போமாட்டியே!”

“மாட்டேண்டா செல்லம். அம்மா ஒன்ன விட்டுட்டு இனிமே எங்கியும் போமாட்டேன்”

“ப்ராமிஸ்!”

“ப்ராமிஸ்!”

“தெனமு ஸ்கூலுக்கு கொண்டு விடனும்; கைய புடிச்சி அழச்சிண்டு போணும்; ஸ்ரீராமு, தினேஷு, பர்வீன், தர்ஷிணி அம்மாமாரி நீயும் என்ன ஹக் பண்ணிக்கனும்; முத்தம் குடுக்கனும். செய்வியாம்மா?”

“நிச்சயமா செய்வேண்டா கண்ணு! நிச்சயமா செய்வேன்!” பொங்கி வரும் கண்ணீரோடு தன்னை அணைத்துக் கொள்ளும் தாயின் கன்னத்தில் முத்தமிட்டான் சர்வேஷ்.

இந்தப் பாசப்பிணைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த இருவீட்டார் கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்து கன்னங்களில் கோலமிட்டன.

கண்களில் கண்ணீர் பெருக நின்றிருந்த மாமிக்குச் சாகித்யா, தன் பேரனுக்கு ‘தாயென வந்த தேவதை’யாகவே தோன்றினாள்.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்