கோயில் வாசலில் கேட்ட
வித வித பிச்சை ஒலிகள்
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து
பின்புலப் படமுடன் கதை விரிந்தது.
எச்சூழ்நிலை தள்ளியது அவளை?
எல்லாம் வல்ல தான்தோன்றி அவன்
வாசலை ஏன் வறுமையின்
சின்னமாக்கினான்?
சாலைகளின் நடுவில்,
பேருந்து நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள் பூங்காவில்
இப்படியாய் தாயை நிறுத்திய
எவனோ ,எவளோ-
தாய்ப்பால் குடித்த அவர்களின்
வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?
தலை மேல் கை வை
வாழும் என் வாழ்வென
கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப்
பத்தோ ,ஐம்பதோ
தரும் தருமர்களே
பிச்சைத் தாய் வருவது
மறந்து போனது ஏனோ ?
பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்த
பாவம் போக்க, முதிர்ந்த பொழுது பணம் கட்டி
அனுப்பி வைத்தாயோ முதியோர் இல்லத்திற்கு ?
அவளும் பிச்சைத் தாய் தானோ?
– பேரா. பாரதிசந்திரன்