தாய்க்கும் தாய்

ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம். தொழில் அதிபர் நம்பியின் வீடு .

மாடியில் உள்ள அவரது புதல்வி இளம்பெண் மோகனாவின் அறையின் முன் உள்ள கூடத்தில் நாற்காலிகளில் மோகனாவின் தோழிகள் கிருஷ்ணவேணியும் நித்யாவும் அமர்ந்து இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் மோகனாவும் அங்கு வந்தமர்ந்தாள்.

பாவாடை, தாவணி அணிந்த இளம் பணிப்பெண் ஒருவள் தாழ்வு மேசையில் தட்டுகளில் தின்பண்டங்களை வைத்து விட்டுச் சென்றாள்.

அந்த மூவரும் கதை விவாதத்திற்காக அங்கு குழுமி இருந்தனர் இருந்தனர்.

அவர்கள் தங்கள் விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக பணக்கார வீட்டுப்பெண் மோகனாவுடன் கிருஷ்ணவேணிக்கும் நித்யாவுக்கும் நட்பு எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்த்து விடுவோம்.

இவர்கள் மூவரும் பால்ய சிநேகிதிகளோ கல்லூரித் தோழிகளோ அல்லர். மாதர் சங்கத்தின் மகளிர் தினவிழாவில் பேச வந்த மூவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர்.

அதன் பின் அடிக்கடி பார்த்துப் பேசும் வாய்ப்புகளைத் தொடர்ந்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.

இவர்கள் ஒத்த வயதினரும் இல்லை. ஆனாலும் இப்போதெல்லாம் சொல்கிறார்களே கெமிஸ்ட்ரி என்று . அதுதான் வேலை செய்து விட்டது.

பருமனான உடல்வாகும் சிவந்த மேனியும் அழகுத் தோற்றமும் இளமையும் உடையவள் மோகனா.

கிருஷ்ணவேணியும் நித்யாவும் ‘துறுதுறு’ என்று இருக்கும் ஒடிசலான மாநிற மங்கையர்.

மோகனா இன்னமும் திருமண வாழ்வில் தடம் பதிக்கவில்லை. கிருஷ்ணவேணியும் நித்யாவும் திருமணம் ஆனவர்கள்.

கிருஷ்ணவேணியின் கணவர் சுப்பு என்கிற சுப்ரமணியன், பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்ன்ட் ஆக பணி புரிந்து வருகிறார். கிருஷ்ணவேணி ஹோம் மேக்கர்.

இவர்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதற்காக இந்த ஜோடி கருவூட்டல் மையங்களை நோக்கிச் செல்லவில்லை இது வரை.

நித்யாவின் கணவர் ராஜா என்கிற ராஜப்பா, கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார்.

நித்யாவுக்கு கணவருடைய கேட்டரிங்கின் நிதி நிர்வாகம் செய்வதுதான் வேலை. அதற்கு என்று அலுவலகம் எதுவும் இல்லை.

அவர்கள் வீடுதான் அலுவலகம். இந்த ஜோடிக்கு விக்னேஷ் என்று ஒரு ஆறு வயது மகன் இருக்கிறான்.

நித்யாவின் அப்பாவும் அம்மாவும் மாப்பிள்ளை வீட்டிலயே இருப்பதால் அவர்கள் குழந்தை வளர்ப்பை பார்த்துக் கொள்ள நித்யா, கணவனின் உணவக வர்த்தகத்தின் செலவழித்தல், பட்டுவாடா உள்ளிட்ட நிதி நிர்வாக வேலைகளைப் பார்த்துக் கொள்கிறாள்.

இவர்கள் மூவரும் நெருக்கமான தோழியர் ஆனார்கள் . சரி . அது என்ன கதை விவாதம்? என்று கேட்கிறீர்களா
அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக்.

அன்றொரு நாள். கிருஷ்ணவேணியின் வீடு. இரவு நேரம். படுக்கை அறையில் கட்டிலில் அமர்ந்து கிருஷ்ணவேணியின் கணவர் சுப்பு லேப்டாப்பில் மூழ்கி இருந்தார்.

கிருஷ்ணவேணி பின்பக்கமாக வந்து அவரது முதுகில் சாய்ந்து கொண்டு தன்னுடைய கைகளை அவர் மேல் மாலை போல் போட்டுக் கொண்டாள்.

“என்ன கிருஷ்ணா! இன்னிக்கு திடீர்னு காதல் பொங்குது எப்பவும் இல்லாம?”‘

சுப்பு லேப்டாப்பை மூடி வைத்து விட்டு கேட்டார்.

அவள் சொன்னாள் “ஒங்ககிட்ட ஒபினியன் கேட்கலாமன்னு தான்!”

“கருத்து கேட்க ரொமான்சா? புதுசா இருக்கு! என்கிட்ட கருத்து கேட்டு நீ எதையும் செய்ய மாட்டியே! சரி சொல்லு!”

“நாங்க மூணு பேரும் சேர்ந்து … “

“என்ன பிசினஸ் ஆரம்பிக்கப் போறிங்களா?”

“யோவ்! பேச விடுய்யா!”

“மரியாதை தேயுது. சரி பேசு!”

“நான், மோகனா, நித்யா மூணு பேரும் சேர்ந்து கதை எழுதலாம்னு இருக்கோம்!”

“நீங்க மூணு பேரும் ‘மகளிர் மட்டும்’ படத்துல வர்ற மாதிரி ஒண்ணா சுத்திகிட்டு இருக்கீங்கன்னு எனக்கு உளவுத்துறை தகவல் வந்துச்சு.மூணு பொண்ணுங்க சேர்ந்தா வம்பு பேசுவாங்கன்னுதான் இந்த ஊரு சொல்லும்”‘

“மூணு ஆம்பிளைங்க சேர்ந்தா மதுபானக்கூடத்திற்குப் போவாங்கன்னு தான் ஜனங்க சொல்வாங்க!”

“சரி அதை விடு. சுந்தர், பாலான்னு ரைட்டர் டியோ, இரட்டை எழுத்தாளர்கள் சுபா-ங்கற ஒத்தை பேர்ல நாவல்கள் எழுதறாங்க

பல வருசமா! நீங்க மூணு பேரும் சேரந்து கதை எழுதுங்க; ஜமாய்ங்க; தூள் கிளப்புங்க உனக்கு அதுக்காகவே நான் ஒரு டேப்லட் வாங்கித் தரேன். என்ன பேர்ல எழுதப் போறிங்க?”

“நீங்க சொன்னா மாதிரி ஒத்த பேரு தான் எங்க மூணு பேரோட முதல் எழுத்தை சேர்த்து மோகனா, கிருஷ்ணவேணி, நித்யா ‘மோகினி’ன்ற பேர்ல தான்”

“நல்லா இருக்கு. நாளைக்கே தொடங்குங்க. அதுக்கு முன்னால இப்ப!” என்ற கணவனை கிருஷ்ணா இறுக அணைத்துக் கொண்டாள்.

இப்படித்தான் மூவரும் கதை சொல்லிகளாக தங்கள் கதை எழுதும் பயணத்தைத் தொடங்கினார்கள் . இணைய இதழ்களில் இவர்களுடைய புனைக்கதைகள் வெளி வந்தன.

டிஜிட்டல் புத்தக தளமொன்றில் இ- புக் ஆகவும் அவர்களுடைய ஒரு கதை தொகுப்பு வெளியிடப்பட்டது.

மூவரும் கலந்து பேசி முடித்த பின்னர், கிருஷ்ணவேணி முழு கதையை டேப்லட்டில் தட்டச்சு செய்து முடித்து மற்ற இருவருக்கும் அனுப்புவாள்.

தோழியரின் கருத்துகளுக்கு ஏற்ப இறுதி ட்ராப்ட்டை அவள் தயார் செய்வாள்.

இன்று மோகனாவின் வீட்டில் அவர்கள் தங்களுடைய புதிய கதை பற்றி என்ன தான் கதைக்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

கிருஷ்ணவேணி பேசத் தொடங்கினாள்.

“ஸ்டெம் செல் பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த சிறுகதை.

விசாலாட்சி நடுத்தர வயது பேராசிரியை. ஏற்கனவே அவளுக்கு இருபத்திரண்டு வயசுல பொண்ணு இருக்கும் போது மீண்டும் இப்ப மகப்பேறு வந்திடுது.

அவங்க புருசன்கிட்ட கூட சொல்லாம கலைச்சிடலாம்னு யோசிக்கறா.

ஆனா தொப்புள் கொடி இரத்தம் ஸ்டெம் செல் சேமிக்கறதால வருங்காலத்துல பயனளிக்கும் தெரிய வர்றதால குழந்தை பெத்துக்கலாமனு முடிவு பண்றா!”

நித்யா நெளிந்தாள் “நான் என்ன சொல்றேன்!”

மோகனா சொன்னாள்.

“நீ ப்ளோவை விடாதே! தொடர்ந்து சொல்!”

நித்யா மீண்டும் ஆரம்பித்தாள்.

“சமீப காலத்துல தாய்ப்பால் வங்கிங்கற கான்செப்ட் நல்லா வந்தா மாதிரி, நான் தேடிப் பிடிச்சு படிச்ச வரைக்கும் ஸ்டெம் செல் பத்தி ஆராய்ச்சி பண்ணவங்ககிட்ட பேசியதை வெச்சு பார்த்தா ஸ்டெம் செல் சேகரிப்பு அந்த அளவுக்கு இன்னும் நடைமுறைக்கு வரல.

தொப்புள் கொடி இரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல் பலவித நோய்களைக் குணப்படுத்தக் கூடியதுதான் இருந்தாலும் அது வருங்காலத்துல குடும்ப உறுப்பினர்களுக்கு தக்க தருணத்தில் கை கொடுக்கும் தான்

அதனால தொப்புள் கொடி இரத்தம் ஸ்டெம் செல்லுக்காக இக்கட்டான வயசுல குழந்தை பெத்துக்க முடிவு எடுக்கறான்னு நாம கதையில சொல்ல முடியாது. மிஸ் லீடிங் ஆக கூட ஆயிடும்!”

இளம் பணிப்பெண் வந்து நின்றாள்.

“மேடம் பெரிய அம்மா!”

“இதோ வரேன்! நீங்க டிஸ்கஸ் பண்ணுங்க. நான் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்!” என்று கூறியபடியே படிகளில் இறங்கினாள் மோகனா .

நித்யா எழுந்து வந்து கையில் இருந்த நாளிதழின் இணைப்பு புத்தகத்தால் கிருஷ்ணவேணியின் முதுகில் அடித்தாள் .

“ஏங்க அடிக்கறீங்க?”

“ஏன் அடிக்கறேன்னா கேட்கற? பாவி!. ஏதோ ஒரு தமிழ்ப் படத்துல டைரக்ட்டர், ப்ரொட்யூசர் கிட்ட கதை சொல்லும் போது டைரக்ட்டர் சொல்ற சம்பவம் எல்லாம் தயாரிப்பாளர் வாழ்க்கைல நடக்கும்.”

“ஆமா! நாரதன்னு படம்”

“அது மாதிரிதான் ஆச்சு நீ சொன்ன கதை!”

“என்னங்க சொல்றீங்க?”

“மோகனா அம்மாவுக்கு எதிர்பாராத விதமா இப்ப மகப்பேறு உண்டாயிருக்கு.

அம்மா கலைச்சு ஏதாவது பண்ணி அவங்க உயிருக்கு ஏதாவது ஆயிடப் போவுதுன்னு,

“உறவுகள், ஊர் உலகத்தைப் பத்தி எல்லாம் நீ யோசிக்காம குழந்தைய பெத்துக்க.

நான் ஆபீஸ் அங்க இங்கன்னு போகாமல் இப்பவும் உன் கூட இருக்கேன்.

குழந்தை பெத்தப்புறமும் உன் கூடயே இருக்கேன்னு சொல்லி மோகனா அவங்க அம்மாவை உளவியல் ரீதியா தயார்ப்படுத்தி இருக்கா!” முடித்தாள் நித்யா.

“இவ்வளவு நடந்து இருக்கு. என்கிட்ட ஜாடையாவது சொல்லி இருக்க வேண்டாம்!” கேட்டாள் கிருஷ்ணவேணி.

நித்யா அவளை முறைத்துப் பார்த்தாள். அதற்குள் மோகனா வந்து நின்றாள்.

கிருஷ்ணவேணி எழுந்து நின்றாள். அவளிடம் பேசினாள்.

“சாரிப்பா! இடம், பொருள், ஏவல் தெரியாமல் சந்தர்ப்பம் தெரியாம இந்த கதையை சொல்லிட்டேன். இப்பதான் நித்யா சொன்னாங்க!”

மோகனா சொன்னாள் “அதனால பராவல்லே. கோயின்சிடென்ஸ்!”

“மோகனா! உனக்கு தான் இந்த சின்ன வயசுல எவ்வளவு பக்குவம்? ஒரு பெண்ணால தாய்க்கும் தாயாக முடியும் நீ நிருபிபிச்சுட்டே!” என்று கூறி கிருஷ்ணவேணி மோகனாவைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

சூழலை லேசாக மாற்ற நினைத்த நித்யா நாற்காலியிருந்து எழுந்து வந்து “உன் டயலாக் எல்லாம் நல்லா தான் இருக்கு! அதுக்காக அவளை ஏன் அணைச்சுக்கறே? உன் ஹபி நினைப்பு வந்துடுச்சா!”‘ என்று கூறி கிருஷ்ணவேணியை இழுத்து விலக்கி விட்டாள்.

மோகனாவின் முகத்தில் புன்னகை பூத்தது. கிருஷ்ணவேணி நித்யாவின் முதுகில் அடித்தாள்.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“தாய்க்கும் தாய்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] தாய்க்கும் தாய் ஆவிகளின் உரையாடல் […]

  2. […] தாரகை – சிறுகதை தாய்க்கும் தாய் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.