மதுரை – அருள்தாஸ்புரம், மீனாட்சி சுந்தரம் இல்லம்.
ஞாயிறு காலை 11 மணி. வீட்டின் முன் ஹாலில் அம்மா மீனாட்சி, ரேஷன் அரிசியை சீர் படுத்தி கொண்டு இருந்தார்.
தொலைகாட்சி சப்தம் ஹாலில் அதிகமாக இருந்தாலும், மீனாட்சிக்கு அந்த சப்தம் கொஞ்சமாக தான் இருந்தது.
உள்அறையில் ,
மீனாட்சியின் மகன் சரவணன், கண்களில் கண்ணீருடன் தனது வேட்டியை எடுத்து மேல இருந்த ஃபேனில் மாட்டி கொண்டு இருந்தான்.
தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்திருந்தான் சரவணன்.
சரவணன் – வள்ளி இருவருக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் நிறைய இடங்களில் அவப்பெயர்.
இதனாலே பொது விசேசங்கள் மற்றும் சொந்த பந்த வீட்டு விசேசங்களுக்கு செல்வதை இருவரும் தவிர்த்து வந்தனர்.
இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எந்த பிரச்சனை இல்லை என்று தான் வருகிறது. இருப்பினும் குழந்தை பாக்கியம் தட்டி கழிகிறது ஏன் என்று தெரியவில்லை.
இருவரும் போகாத கோவில் இல்லை; மருத்துவமனை இல்லை. பரிகாரம் எத்தனை என்று கணக்கில் இல்லை. இருந்தாலும் அந்த ஒரு நல்ல விசயம் மட்டும் இவர்கள் வாழ்வில் நடக்கவில்லை.
இருவருக்கும் இருந்த நம்பிக்கை குறைய துவங்கியது.
“ஒரு சிறுவேலை, அம்மா வீடு வரை சென்று வருகிறேன்!” என்று வள்ளி கூறி விட்டு காலையிலே சென்று விட்டாள்.
ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், சரவணன் தனியே இருந்தான். அம்மா மீனாட்சி சமையலை முடித்து விட்டு சரவணனை சாப்பிட கூப்பிட்டு ஓய்ந்து போய் இருந்தாள்.
“என்ன தான்? அந்த ரூமுக்குள்ள பண்றியோ தெரியல சரவணா! முத வந்து சாப்பிடு.
உன் பொண்டாட்டி, அவ அம்மா வீட்ல சாப்பிட்டு வந்திருவா. நீ அவ வருவான்னு உட்காந்திருக்காதா.
வா வந்து சாப்பிட்டு அப்புறம் போய் படு!” என்று அம்மா மீனாட்சியின் பேச்சிற்கு பதில் பேச்சு வரவில்லை.
அம்மாவும் கூப்பிட்டு கூப்பிட்டு ஓய்ந்து போனாள். பசித்தால் வந்து சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டாள்.
‘என்னை மன்னிச்சிருங்க அம்மா! அப்புறம் வள்ளி. என்னால இதனை ஏத்துக்க முடியல. எல்லா இடத்துலையும் அசிங்க பட வேண்டிருக்கு. நெறைய பேர் நக்கலா நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என்று மறைமுகமாக கேட்கிறார்கள்.
என்னைவிட சின்ன வயசு பையன் எல்லாம் என்னை ஒருகுறை உள்ளவன் மாதிரி பார்த்து பேசுறான். நான் ஒருபொது இடத்தில் பேச்சு பொருளாக மாறிட்டேன்.
எனக்கு ஆறுதலா பேசுறதுன்னு ஆரம்பிச்சு, என் குறையை வைத்து என் மனசை கஷ்டப்பட வச்சிடுறாங்க. குழந்தை பெத்துக்க முடியல என்பது பெரிய தேச துரோக குற்றமா!. நான் ஏனோ ஒரு குற்றவாளி போல் நடத்த படுகிறேன்!’ என்று எண்ணி சரவணன் கண்களில் கண்ணீருடன் அந்த ஃபேனில் மாட்டி வைத்த வேட்டியின் மற்றொரு முனையில் தன் தலையை நுழைத்து கொண்டு இருந்தான்.
செல்போன் சிணுங்கியது.
மனைவி வள்ளி பெயர் வந்தது. அதனை பார்த்து எடுக்கவில்லை.
தற்கொலை முயற்சியில் தீவிரம் காட்டி கொண்டிருக்க, மூன்று முறை வள்ளியின் செல்போன் அழைப்பை அவன் எடுக்கவில்லை.
கழுத்தில் வேட்டியை இறுக்கி கொண்டு இருந்தான் சரவணன்.
அப்போது அம்மாவின் செல் போன் சிணுங்கும் சப்தம் ஹாலில் இருந்து கேட்டது.
அம்மா மீனாட்சி செல்போனில் சப்தமாக தான் பேசுவாள். காது கொஞ்ச தூரம் என்பதால்.
“சரவணன் உள்ள தான் இருக்கான். தூங்கிட்டான் போல. நான் இங்க நேர்ல இருந்து கூப்பிட்டே, எந்திரிக்க மாட்டேங்கிறான். நீ போன்ல கூப்பிட்டா எப்படி எந்திருப்பான். என்ன வள்ளி என்ன சொல்லணும்?“ என்று அம்மா மீனாட்சி போனில் கேட்பது, உள் அறையில் நன்றாகவே கேட்டது.
வேட்டியை நன்கு கழுத்தில் மாட்டி கொண்டு காலுக்கு அடியில் இருந்த அந்த பலகையை கீழே தள்ளினான் சரவணன்.
பலகை கீழே விழும் சப்தமும் அம்மா மீனாட்சிக்கு கேட்கவில்லை. சரவணன் உடல் அங்கும் இங்கும் சுற்ற ஆரம்பித்தது. தடுமாற ஆரம்பித்தான் சரவணன்.
“என்ன வள்ளி சொல்ற?
அப்டியா! என் பையன் அப்பா ஆக போறானா!
ரொம்ப சந்தோசம்!
அதான் உங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போனியா. சரி வீட்டுக்கு வாம்மா! நான் அவனை எழுப்பி விடுறேன்.
அங்கேய இரு, சரவணன் வண்டியில் வந்து கூட்டிட்டு வருவான் “ என்று செல்போன் இணைப்பை துண்டித்து, சரவணனின் அறையை நோக்கி நகர்ந்தாள் அம்மா மீனாட்சி.
அம்மா பேசிய பேச்சு உயிருக்கு போராடி கொண்டு இருந்த சரவணனுக்கு ரொம்ப தெளிவாக கேட்டது.
அம்மா கதவை தட்டி கொண்டு இருந்தாள். சரவணன் மரணத்தின் வாசலை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
கடவுள் புண்ணியத்தில் மேல இருந்த ஃபேன் சரவணனின் உடல் எடை தாங்க முடியாமல் அறுந்து விழுந்தது.
தப்பித்தோம், பிழைத்தோம் என்று வேகமாக சென்று கதவை திறந்தான் சரவணன்.
சரவணனுக்கு தெரியாத விஷயத்தை கூறுவதை போல அம்மா மீனாட்சி புன்னகையுடன் கூறினாள். இருவரின் முகத்தில் எல்லை இல்லா மகிழ்ச்சி.
மனைவி வள்ளியை அழைத்து வர புறப்பட்டான் சரவணன்.
“ஃபேனை கழட்டி தொடச்சிருக்கான் போல!. புது வேட்டிய வச்சா தொடைக்கிறது. லூசு பய!“ என்று அந்த அறையை எட்டி பார்த்து அம்மா மீனாட்சி வெள்ளந்தியாகக் கூறினாள்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒன்று மட்டும் தீர்வு ஆகாது.
எந்த பிரச்னை வந்தாலும் அதனை எதிர் கொள்ளும் தைரியம் அனைவருக்கும் வேண்டும்.
குழந்தையின்மை என்பது பெரிய பிரச்னை அல்ல.
பெற்றால் மட்டும் தான் குழந்தையா? தத்து எடுத்தும் வளர்க்கலாமே.
அரசு ஆலோசனை படி குழந்தையை தத்து எடுத்துக்கலாமே.
இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை என்பது அதிகம் பேசப்படுகிறது.
அவர்களுக்கு நாம் முடிந்தால் ஆறுதல் கூறுவோம். ஆறுதல் கூறுவோம் என்ற பெயரில் அவர்களை காயப்படுத்த வேண்டாமே!

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!