“என்ன நித்யா முகம் வாடியிருக்கு?”. நளினி இப்படிக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் கண்களில் கண்ணீராய் முட்டிக் கொண்டு நிற்க, நித்யாவின் பார்வை மங்கலாயிற்று.
நளினியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. வனிதா வார்த்தை அம்புகளை எய்திருப்பாள். முழு விவரமறிய மீண்டும் கேட்டாள்.
“வனிதா ஏதாவது சொன்னாளா?”
“அவ கிடக்கிறா. மனதைப் போட்டுக் குழப்பிக்காதே.”
“என்னவோ தெரியலை நளினி. என்னைப் பார்த்தாலே வனிதாவுக்குப் பிடிக்கலே. ஆரம்பத்துல எது பேசினாலும் ஸ்போர்ட்டிவ்வா தான் எடுத்துக்கிட்டிருந்தேன். வர, வர அவளோட ஏளனமும், கிண்டலும் ஜாஸ்தியாய்கிட்டே போகுது.”
“நேத்து நடந்த பேச்சுப் போட்டி சம்மந்தமாய் ஏதாவது சொன்னாளா?”
நளியின் இக்கேள்விக்கு நித்யாவிடமிருந்து அழுகைதான் பதிலாக வந்தது.
விஷயம் இதுதான்.
முந்தைய நாள் ஆசிரியர் தினம்.
நித்யா ஒரு மாணவியைத் தேர்ந்தெடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிப் பேச பயிற்சி அளித்திருந்தாள். விழாவில் பேசிய அம்மாணவி பேச்சை முடிக்கும் தருவாயில் சற்றுத் தடுமாறி பரிசை இழந்தாள்.
விழா முடிந்ததும் பயிற்சியளித்த ஆசிரியை என்கிற முறையில் அம்மாணவியை அழைத்து இப்படிச் செய்து விட்டாயே என்று கோபித்திருக்கிறாள் நித்யா. அந்தச் சமயம் பார்த்து அங்கு வந்த சகஆசிரியை வனிதா அம்மாணவியின் முன்பே
“நித்யா ரொம்ப அலட்டிக்காதே. என்ன இப்போ குடி முழுகிடுச்சு. இந்த அளவுக்காவது பேசினாளேன்னு சந்தோஷப்படு. என்ன இருந்தாலும் குழந்தை தானே அவ. குழந்தைகளை டீல் பண்ற முறையா இது? சைல்டு சைக்காலஜி பற்றி உனக்குத் தெரியுமா? உனக்கெங்கே தெரியப் போகுது? கல்யாணமாகி வருஷம் அஞ்சாகியும் உனக்குதான் குழந்தையில்லையே?” என்று பொரிந்து தள்ள, வனிதாவின் வார்த்தை அம்புகளின் தாக்குதலில் நித்யா நொறுங்கிப் போனாள்.
பள்ளியில் இருக்கப் பிடிக்காமல் அரைநாள் லீவில், மனம் முழுக்கப் பாரமாய் கிளம்பி விட்டாள். அழுகைக்கு நடுவே தேம்பித் தேம்பி விஷயத்தை எடுத்துச் சொன்னதும் நளினிக்கு மனம் வலித்தது. நித்யாவை சமாதானப்படுத்தினாள்.
ஒருசில மாதங்கள் சென்றன. வனிதா அடிக்கடி லீவில் சென்று கொண்டிருந்தாள். அவளது வகுப்பையும் சேர்த்து நித்யாதான் கவனிக்க வேண்டியிருந்தது.
நளினி கூட நித்யாவிடம் “எச்.எம். கூப்பிட்டுச் சொன்னா, முடியாதுன்னு சொல்லிட வேண்டியதுதானே. நன்றியில்லாத அந்த ஜென்மத்துக்கெல்லாம் உதவலாமா?” என்று சொன்னாள்.
“அப்படி சொல்லாதே நளினி. பாவம் மூணு மாசமோ, நாலு மாசமோ, தலைப்பிரசவக்காரி. முடியலை அவளால். உடம்பு இடம் கொடுக்கலே. அடிக்கடி லீவுல போறா. அவ மேல் இருக்கிற மனக்கசப்பை மாணவங்க மேலே காண்பிக்கிறதுல என்ன நியாயம்?”
நித்யா வனிதாவுக்காக பரிந்து பேசினாள்.
அன்று மாலை.
உடல்நிலை சரியில்லாத தன் மாமியாரை அழைத்துக் கொண்டு அந்த நர்சிங்கோம் சென்ற நித்யா, வனிதாவும் அங்கு வந்திருந்ததைக் கண்டாள்.
வனிதாவிடம் சென்று அவளின் உடல்நலம் குறித்து விசாரித்தாள். வனிதா பதில் கூறும் முன்பே உள்ளே அழைக்கப்பட்டாள். வனிதாவின் கணவரும் கூடவே சென்றார்.
பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வனிதாவின் கணவர் டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டு ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
அவர் திரையை விலக்கி வெளியே வருகையில், லேடி டாக்டர் வனிதாவை பெஞ்ச் மேல் படுக்க வைத்து வயிற்றின் அடிபாகத்தைத் தொட்டு சோதித்துக் கொண்டிருந்தது நித்யாவுக்கு நன்றாகத் தெரிந்தது.
சோதித்து முடித்தபின், டாக்டர் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து, அடுத்த பேஷண்ட்டை உள்ளே அனுப்ப அழைப்பு விடுக்க, நித்யா தன் மாமியாருடன் உள்ளே நுழைந்தாள்.
வனிதா ஓரமாக இருந்த பெஞ்ச் மேல் படுத்திருந்தாள். டாக்டர் நித்யாவின் மாமியாரைச் சோதித்து மருந்தெழுதிக் கொடுத்தபின், கிளம்புகிற சமயம் நித்யா டாக்டரிடம் கேட்டாள்.
“வனிதா எப்படியிருக்கிறாள் டாக்டர்? அவளும் என்னோடுதான் வேலை செய்யறா. வயிற்றில் குழந்தை நல்ல வளர்ச்சியோட இருக்கா டாக்டர்?”
நித்யாவின் கேள்விகளுக்கு டாக்டர் பதிலேதும் கூறவில்லை. அச்சமயம் பார்த்து வனிதாவின் கணவர், டாக்டர் எழுதிக் கொடுத்திருந்த ஊசி மருந்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
அதை வாங்கி சிரிஞ்சில் ஏற்றி வனிதாவுக்குச் செலுத்தினார்.
அப்போது நித்யாவை நோக்கி “எழுதிக் கொடுத்த மருந்தை ஒழுங்காய் சாப்பிடறியா நித்யா? ரொம்ப லேட்டாய் கன்சீவ் ஆகியிருக்கே. உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும். தினம் காலாற நடக்கணும். மாமியார் உடம்பை கவனிக்கிறேன்னு, உன் உடம்பைக் கவனிக்காமல் இருந்திடாதே. ஓ.கே? போயிட்டு, அடுத்த வாரம் செக்கப்-க்கு வா” என்றார் டாக்டர்.
நித்யா மாமியாருடன் வெளியேறும் சமயம், வனிதாவின் கணவரிடம் லேடி டாக்டர் கூறிக் கொண்டிருந்தார்.
“மிஸ்டர் நந்தகுமார், வனிதா வயிற்றில் வளருவது கட்டிதான்ங்கிறது கன்ஃபர்ம் ஆயிடுச்சு. ஷீ ஹேஸ்டு அன்டர்கோ ஹிஸ்டரக்டமி. கர்ப்பையை எடுக்கிறதைத் தவிர வேறு வழியில்லை.”
டாக்டர் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த இரண்டு உள்ளங்கள் அதிர்ச்சி அடைந்தன.
ஒன்று தாய்மைப் பேற்றை இழக்கப் போகும் வனிதாவுடையது. மற்றொன்று, தாய்மையடைந்து இருக்கும் நித்யாவுடையது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
மறுமொழி இடவும்