தாய்மொழியில் உயர் கல்வி

தாய்மொழியில் உயர் கல்வி என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

எனது கொள்கை, எனது தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் லட்சியம், “உடனடியாக தமிழகத்திலுள்ள எல்லாக் கல்லூரிகளிலுமே – எல்லா வகுப்புகளிலுமே தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும்” என்பதுதான். அது சாத்தியம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

ஆனால், இப்போது நாட்டின் முன்புள்ள முக்கிய பிரச்சனை, பயிற்சி மொழி விஷயத்தில் எனது கருத்து என்ன? அல்லது தமிழரசுக் கழத்தின் குறிக்கோள் எது? என்பதல்ல. “மாநில அரசின் திட்டம் என்ன?” என்பதேயாகும்.

மாநில அரசினரின் திட்டம் – குறிப்பாக, கல்வி அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களின் குறிக்கோள், “பயிற்சி மொழி விஷயத்தில், படிப்படியாக முன்னேற வேண்டும்.  அவசரப்பட்டு ஆங்கிலத்தை ஒரேயடியாகப் பயிற்சிமொழிப் பீடத்திலிருந்து அகற்றிவிடக் கூடாது” என்பதுதான்.

இது, தமிழரசுக் கழகத்திற்குத் திருப்தியளிப்பதல்ல என்றாலும், தவிர்க்க முடியாத வகையில் கல்வி அமைச்சரின் திட்டத்தைக் கழகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழைப் பயிற்சி மொழியாக்குவதைக் கொள்கை ரீதியாகப் பரங்கி மொழிப் பக்தர்கள் ஏற்றுக் கொள்வார்களானால், அதனைப் படிப்படியாகத்தான் அமுல் நடத்த வேண்டும் என்பதில் தங்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையே கருத்து வேற்றுமை இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

படிப்படியாக

தமிழகத்திலுள்ள கலைக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 60க்கும் மேலிருக்கும். அந்த அறுபது கல்லூரிகளிலுமே அரசாங்கம் தமிழைப் பயிற்சி மொழியாக்கியதா? – இல்லை.

அறுபது கல்லூரிகளை, அரசினர் துறைக் கல்லூரிகள் என்றும், தனியார் துறைக் கல்லூரிகள்’ என்றும் பிரிவினை செய்து, அரசினர் துறைக் கல்லூரிகளில் மட்டுமே தமிழைப் பயிற்சி மொழியாக்கப் பொறுப்பேறுள்ளார் கல்வி அமைச்சர்.

தனியார் துறைக் கல்லூரிகளில், அவற்றின் நிர்வாகிகள் விரும்பினால் தமிழைப் பயிற்சி மொழியாக்கலாம்; விரும்பாவிடில், ஆங்கிலத்தையே நீடித்து வைத்திருக்கலாம் என்றும் கல்வி அமைச்சர் கூறி விட்டார். இதன் மூலம் கல்லூரிகளின் சுதந்திரம் கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

அரசினரின் நேர் நிர்வாகத்திலுள்ள கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை எட்டு. அவை,

மாநிலக் கல்லூரி

கலைக் கல்லூரி

மேரி அரசியார் கல்லூரி

சேலம் கல்லூரி

கோவை அரசினர் கல்லூரி

உதகை அரசினர் கல்லூரி

குடந்தை அரசினர் கல்லூரி

புதுக்கோட்டை அரசு கல்லூரி

-இந்த எட்டுக் கல்லூரிகளிலுமே 1960-ஆம் ஆண்டிலே தமிழைப் பயிற்சி மொழியாக்கிருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யும்முன் அரசாங்கம் சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

அரசினர் கல்லூரிகள் சிலவற்றில், தமிழறியாதார் – தமிழரல்லாதார் பிரின்சிபால்களாக இருக்கின்றனர். சான்றாக‌, மாநிலக் கல்லூரியின் முதல்வர் தமிழறியாத மலையாளியாவார்.

அவர் போன்றவர்களுக்குப் பதவி மாற்றம் கொடுத்து அவர்களின் நிர்வாகத்திலுள்ள கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்சி மொழியாக்கிவிட முடியும். ஆனால், அதைச் செய்யவும் அரசினருக்கு அவகாசம் தேவைப்படுகின்றதாம்!

பொறுக்கவில்லையே

இவ்வாறு உள்ள சில தடைகள் காரணமாக அரசினரின் நேர்நிர்வாகத்திலுள்ள எட்டுக் கல்லூரிகளில்கூட ஒரே மூச்சில் தமிழைப் பயிற்சிமொழியாக்க முடியவில்லை.

ஆதலால், கோவைக் கல்லூரி ஒன்றில் மட்டுமே தமிழைப் பயிற்சி மொழியாக்கியுள்ளது அரசாங்கம். அங்கும் பி.ஏ. வகுப்பில் மட்டும்தான்.

சுருங்கச் சொன்னால், நம் தாய் மொழியான தமிழுக்கு ஏற்பட்டுள்ள புதுவாழ்வு, கோவை அரசினர் கல்லூரி ஒன்றில்-பி.ஏ. வகுப்பில் தமிழைப்பயிற்சி மொழியாக வைத்ததுதான்.

அங்கும் பாட மொழி என்ற அளவில் ஆங்கிலத்திற்கும் ஆசனம் தரப்பட்டிருக்கிறது. அதன் தரத்தை அதிகரிக்கவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படி, அற்ப ‘வாழ்வு’ தமிழுக்குக் கிடைத்து விட்டதுகூடப் பரங்கிமொழிப் பக்தர்களுக்குப் பொறுக்கவில்லை.

கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றொரு சாகசம் புரிந்துள்ளார், பரங்கிமொழிப் பக்தர்களைச் சாந்தப்படுத்த! 1959 ஆம் ஆண்டுவரை ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில மொழி போதனை இல்லை.

உயர்நிலைப் பள்ளிகளில் முதல் படிவத்திலிருந்து பரங்கி மொழிப் பயிற்சி தொடங்கப்பட்டது. ஆனால், 1960 முதல் மாநிலத்திலுள்ள எல்லா ஆரம்பப் பள்ளிகளிலுமே ஐந்தாவது வகுப்பில் ஆங்கிலப் பயிற்சி தொடங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

கல்வி அமைச்சரின் ‘சாகசம்’ அதோடு நிற்குமென்று எதிர் பார்த்தேன். ஆனால், அவர் பரங்கி மொழி வழங்கும் நாடுகளுக்குச் சென்று திரும்பிய பிறகு, ஆரம்பப் பள்ளிகளில் நான்காம் வகுப்பிலிருந்தே பரங்கி மொழிப் பயிற்சியைத் துவக்கிவிடவும் திட்டமிட்டுள்ளார்.

கல்வி இலாகா அதிகாரி திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் “ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கியே ஆங்கிலப் பயிற்சி தருவதும் அவசியம்” என்று ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.

‘பாவ’ப் பிராயச்சித்தமா?

ஆம்; தாய் மொழிக்கு வாழ்வளிப்பதாக வாயளவில் சொல்லிக்கொண்டு, பரங்கி மொழியின் ஆதிக்கக் களம் விரிவாக்கப்படுகிறது.

ஒரே ஒரு கல்லூரியில் -பி.ஏ. வகுப்பு ஒன்றில் மட்டுமே தமிழைப் பயிற்சி மொழியாக்கி விட்டு, அந்தப் “பாவம்” தொலைவதற்காகப் பதினாயிரக் கணக்கான ஆரம்பப்பள்ளிகளில் பரங்கி மொழி திணிக்கப்பட்டு விட்டது!

கல்வி அமைச்சர் இவ்வளவு தூரம் பரங்கி மொழி பக்தர்களுக்கு வளைந்து கொடுத்தும், பரங்கிக்காரியின் வாழ்மனையைப் பெரிதுபடுத்தியும் “படித்த மேதைகள்” திருப்தி அடைவதாக இல்லை.

“பயிற்சி மொழிப் பிரச்சனை, பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்திற்கு உட்பட்ட விஷயம். அதில் அரசினர் தலையிடுவது கல்வித்துறையில் பல்கலைக் கழகங்களுக்குள்ள சுதந்திரத்தைப் பறிப்பதாகும்” என்று சொல்லப்படுகிறது.

பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதை வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். அந்தச் சுதந்திரம் சாதாரண மக்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகப் பயன்படுத்தப் பெற்றால், அதைத் தகர்த்தாக வேண்டுமல்லவா?

சென்னைப் பல்கலைக் கழகம் தனக்குள்ள சுதந்திரத்தை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகின்றதா? இல்லையே!

வடக்கு வழிகாட்டுகிறது!

வட இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள் எல்லாம் தாய்மொழியில் உயர் கல்வி அளிப்பதில் அக்கறை காட்டி வருகின்றன. இதோ பட்டியல்:

வ. எண் பல்கலைக்கழகம் பாடமொழி வகுப்பு
1 ஆக்ரா பல்கலைக் கழகம் ஆங்கிலம், இந்தி பி.ஏ., பி.காம்
2 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உருது யூனானி மருத்துவம், அறுவை சிகிச்சை
3 அலகாபாத் பல்கலைக் கழகம் ஆங்கிலம், இந்தி பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்,.
4 காசி இந்துப் பல்கலைக் கழகம் ஆங்கிலம், இந்தி ஐ.ஏ., ஐ.எஸ்.சி., ஐ.காம்., பி.காம்.
5 பீகார் பல்கலைக்கழகம் இந்தி ஆங்கிலம் கீழ்ப் பட்டப்படிப்பு ஏனையவைகள்
6 லக்னோ பல்கலைக் கழகம் இந்தி பிஏ., பி.எஸ்., சி., பி.காம்
7 நாகபுரி பல்கலைக்கழகம் இந்தி அல்லது மராத்தி ஆங்கிலம் உயர் பட்டப் படிப்பு ஏனையவைகள்
8 உஸ்மானியா பல்கலைக்கழகம் ஆங்கிலம், இந்துஸ்தானி எல்லா வகுப்புகளுக்கும்
9 இராஜபுதனா பல்கலைக் கழகம் ஆங்கிலம், இந்தி ஐ.ஏ., ஐ.காம், பி.ஏ., பி.காம்
10 சாகர் பல்கலைக் கழகம் ஆங்கிலம், இந்தி பி.வி.எஸ்.சி., எம்.ஏ., பி.இ (ஆனர்ஸ்)
11 எஸ்.என்.டி.டி.பெண்கள் பல்கலைக்கழகம் சமீப காலத்திய இந்திய மொழி எல்லாவற்றிற்கும்
12 அண்ணாலைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் எல்லாவற்றிற்கும்
13 சென்னைப் பல்கலைக் கழகம் ஆங்கிலம் எல்லாவற்றிற்கும்

 

இந்தப்பட்டியலைப் பார்த்தால், வட இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகமும் பிரதேச மொழியைப் பயிற்சி மொழியாக்குவதில் திட்டமிட்டு முன்னேறி வருவது தெரியவரும்.

துரோகம்! துரோகம்! துரோகம்!

‘இந்தியா ஒரு நாடு’ என்பதை, அந்த நாட்டைத் துண்டாடவே கூடாது என்ற உணர்ச்சியைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும் ஏற்றுக் கொள்கின்றார்; எதிர்க்கவில்லை.

அப்படி இருந்தும், வடக்கிலுள்ள பல்கலைக் கழகங்களில் பரங்கிமொழியின் வாழ்வு தேய்பிறையாகிக் கொண்டிருக்கும் போது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் பரங்கி மொழி பௌர்ணமிச் சந்திரன் போல இருந்து வரக் காரணம் என்ன?

இந்த அவல நிலை – அவமான நிலை – தாய் மொழித் துரோகப் போக்கு நீடிப்பதற்குத் தான் பல்கலைக் கழகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமோ?.

சென்னைப் பல்கலைக் கழக செனட்சபை, “விருப்பமுடைய கல்லூரிகள் தமிழைப் பயிற்சி மொழியாக்கலாம்” என்று 1926-இல் தீர்மானித்தது.

1939-லும் அதை உறுதிப்படுத்தி மற்றொரு தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை அமுல் நடத்துவதற்கான வாய்ப்புகளை, வசதிகளைக் கல்லூரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கச் சென்னைப் பல்கலைக் கழகம் எந்தவிதமான ஏற்பாடும் செய்யவில்லை.

குறிப்பாக கலையியல்-தொழிலியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிப்பதற்கான திறமையுடைய பேராசிரியர்களைத் தயாரிக்கவோ, பாடப்புத்தகங்களை வெளியிடவோ சென்னைப் பல்கலைக்கழகம் முன்வரவில்லை.

தாய்மொழியில் உயர் கல்வி என்ற‌, தானே நிறைவேற்றிய ஒரு தீர்மானம் நடைமுறைக்கு வராதபடி பார்த்துக் கொள்ளும் சதியிலும் அது உள்ளுர ஈடுபட்டது. இதுதான் பல்கலைக் கழகச் சுதந்திரமா?

1938-ஆம் ஆண்டிலேயே….

1938-இல் அப்போதைய சென்னை ராஜ்யத்திலிருந்த உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் போதனா மொழியாக இருந்த ஆங்கிலத்தை அகற்றி, எல்லாப் பாடங்களும் தாய்மொழியிலேயே போதிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அமுல் நடத்தப்பட்டது.

அப்போது கல்வி இலாகா அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர், “உயர் கல்வி தாய்மொழியில் அளிப்பதற்கான முதற்படி இது. அடுத்த படியில் கல்லுரிகளிலும் பாடங்கள் தாய்மொழியிலே போதிக்க ஏற்பாடாகும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்தார்.

அதற்குப் பிறகேனும் சென்னைப் பல்கலைக் கழகம் தனது கடமையை உணர்ந்து அரசினர் ஏற்படுத்திய மாறுதலுக்கேற்ப தமிழைக் கல்லூரிகளிலும் பயிற்சி மொழியாக்குவதற்கு முன்வந்திருக்க வேண்டும்.

அப்படியும் செய்யவில்லை. இதுதான் பல்கலைக்கழக சுதந்திரத்தைப் பயன்படுத்தும் லட்சணமா?

பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு 1948-இல், பல்கலைக்கழகக்            கல்விமுறையில் சீர்திருத்தம் காண்பதற்குத் திட்டம் தயாரிக்க டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் மத்தியஅரசாங்கம் கமிஷன் ஒன்றை நியமித்தது. தற்போது சென்னை பல்கலைக் கழகத்தின்  துணைவேந்தராக உள்ள டாக்டர்.லட்சுமணசுவாமி முதலியாரும் அதில் அங்கம் வகித்தார்.

அந்தக் கமிஷன் 1949-ல் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் கல்லூரிப் பாடங்கள் பிரதேச மொழியில் போதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது.

எதிர்ப்புக்கிடையே அல்ல, ஏகமனதாக. தான் அங்கம் வகித்த                ஒருகுழுவின் ஏகமனதான அபிப்பிராயத்திற்கு இணங்கவேனும் தமிழகத்தில் தமிழைப் பயிற்சிமொழியாக்கும் பணியில் சென்னைப் பல்கலைக்கழகத்தை ஈடுபடுத்தியிருக்க வேண்டும் அதன் துணைவேந்தரான டாக்டர் ஏ.எல்.முதலியார்.

ஆனால், அந்த தர்மத்தையும் அவர் கடைப்பிடிக்கவில்லை! கடைப்பிடிக்காததோடு, ‘என்றென்றும் ஆங்கிலமே பயிற்சி மொழியாக இருந்துவர வேண்டும்’ என்றும் பிரசாரம் செய்து வந்தார்.

இதற்குத்தான், ‘சென்னைப் பல்கலைக் கழகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்கிறார் போலும்!

‘பல்கலைக் கழகச் சுதந்திரம்’ என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டுள்ள பொருள், அகராதிக்கு மாறுபட்டது போலும்!

துணைவேந்தர்களின் போக்கில்!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பரங்கி மொழிப் பக்தியை நன்கு புரிந்துகொண்ட கல்வி அமைச்சர் தமிழின்பால் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினால் துணைவேந்தர் பெருமானின் சித்தமும் திருந்தக் கூடுமென்று நம்பினார்.

அதன்படி மூன்று ஆண்டுகட்கு முன் சென்னை செனேட் மண்டபத்தில் கல்வித்துறை பிரமுகர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில், சென்னை-அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர்.

தமிழைப் பயிற்சி மொழியாக்குவது பற்றிச் சுமார் 8 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இறுதியில் தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டியதன் அவசியம் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆம்; இரு துணை வேந்தர்களின் ஆதரவோடு!
அந்த மாநாட்டின் இறுதியில், தமிழுக்கு வாழ்வளிக்க இசைந்ததற்காகத் துணைவேந்தர் பெருமான்களுக்குத் தமது மனமார்ந்த பராட்டையும் வழங்கினார் கல்வி அமைச்சர்.

அந்த மாநாட்டில் பங்கு கொண்டவர்களுள் நானும் ஒருவன். அந்த மாநாட்டிற்குப் பிறகு, விஞ்ஞானப் பாடப் புத்தகங்களைத் தமிழில் தயாரிக்கும் பணிக்கென டாக்டர் ஏ.எல். முதலியார் தலைமையில் கலைச் சொல்லாக்கக் குழு ஒன்றையும் நியமித்தார் கல்வி அமைச்சர்.

பயிற்சி மொழி பற்றிய விவாதப்போர் அதோடு முடிந்ததாக எல்லோரும் எண்ணினர். ஆனால் நடந்ததென்ன?

மீண்டும் வேதாளம்

“வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது” என்ற பழமொழிபோல, சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பயிற்சி மொழிப் பீடத்திலிருந்து ஆங்கில மொழியை அணுவளவும் அகற்றக்கூடாது என்று சென்னை மேல் சபையில் பேசினார்.

அந்தப் பேச்சைக் கேட்டுத் துணை வேந்தரின் போக்கில் அதிருப்தி கொண்ட கல்வி அமைச்சர், தமது போக்கில் செயல்படத் துணிந்தார்.

அப்போது ஜனநாயக முறைப்படி செய்யவேண்டும் என்ற பண்புடன் “தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சிக் குழு” ஒன்று அமைத்தார்.

அதில், பல கட்சிகளின் தலைவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், அரசாங்க இலாக்காக்கள் சிலவற்றின் தலைவர்கள், கல்வித்துறை நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றனர்.

தமிழரசுக் கழகத் தலைவன் என்ற முறையில் யானும் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

இந்தக் குழுவின் முதல் கூட்டத்தில் “1960-ஆம் ஆண்டில் கோவை அரசினர் கல்லூரியில் பி.ஏ.பாடத்திற்கு மட்டும் தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும்” என்று தீர்மானிக்கப்பட்டது.

1963-இல் மாநிலத்திலுள்ள எல்லா கலைக் கல்லூரிகளிலுமே தமிழைப் பயிற்சி மொழியாக்க இக்கூட்டம் ஏகமனதாக ஒப்புக்கொண்டது.

இந்த முடிவுக்குச் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களுடைய துணைவேந்தர்களின் எழுத்து மூலமான அங்கீகாரத்தையும் பெற்றார், நமது திறமை மிக்க கல்வி அமைச்சர்!

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி எதிர்ப்பு அதோடு முடிந்ததாக நம்பினோம். நாடே நம்பியது! ஆனால், வேதாளம் திரும்பவும் முருங்கைமரம் ஏறிக் கொண்டது.

தொடர் நாடகம்!

‘தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும்’ என்பதனைக் கொள்கையளவில் ஏற்பதும், நடைமுறையில் அதனைச் செயல்படுத்த மறுப்பதுமாகச் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திவரும் ‘தாய்மொழி எதிர்ப்பு’ நாடகத்தின் பல காட்சிகளை ஏற்கனவே கண்டோம்.

1926-முதல் 1960-வரையுள்ள 35 ஆண்டுகளாக இந்தத் தொடர் நாடகத்தை மிகத் திறம்பட நடத்தி வருகின்றது சென்னைப் பல்கலைக் கழகம்.

இந்த அவல நாடகத்தில், ‘தமிழ்ப் பல்கலைக் கழகம்’ என்று சொல்லப்படுகின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் குறைவறப் பங்கு கொண்டு வருகின்றது.

இதே காலத்தில் வடக்கேயுள்ள பல்கலைக் கழகங்கள் பிரதேச மொழியைப் பயிற்சி மொழியாக்க முனைந்து, அத்துறையில் வெகு தூரம் முன்னேறி விட்டதையும் பட்டியல் தொகுத்துக் காட்டினேன்.

வட இந்தியப் பல்கலைக் கழகங்கள் 1941-ஆம் ஆண்டு முதற்கொண்டே-பரங்கியர் பாரதத்தை ஆண்ட காலத்திலேயே-பரங்கி மொழிக்குப் பதில் தாய்மொழியில் உயர் கல்வி போதிக்கத் துணிந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய மொழிகளிலேயே மிகப் புராதனமான-வளமான, மொழி, தமிழ் மொழிதான். அப்படியிருந்தும் மராத்தி, குஜராத்தி, இந்தி, உருது ஆகிய மொழிகளெல்லாம் பயிற்சி மொழியாக்கப்படுகின்றன.

பண்டைப் பசுந்தமிழ் இதுவரை பயிற்சி மொழியாக்கப் படவில்லை. பரங்கி மொழிக்கு முழு அளவில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.