மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்

தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு முன்பு காந்தியடிகள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.

நம் தமிழ் நாட்டில் இன்றைய குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ் வழியே நாம் பயிற்றுவிக்கவில்லை.

குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழியாகவாவது படிக்க, எழுதக் கற்றுக் கொடுப்போம் என்று வேண்டுகிறோம்.

இனி காந்தியின் உரை.

 

(1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை இது.)

அனைவருக்கும் என் இனிய வணக்கம்.

அனைவரும் நலந்தானே?

குஜராத் மாநிலத்தில் நான் ஆற்றிய உரையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என விரும்பினேன்.

என் பிறந்த நாளில் அந்தக் கருத்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பயிற்று மொழி பற்றி நிறைவான ஒரு முடிவுக்கு வருவதுதான், கல்வி கற்பித்தலில் நாம் செய்ய வேண்டிய முதல்செயல். அதைப்பற்றி  நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது நல்லது.

பயிற்று மொழி குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதைப் போன்றது.

இது பற்றிக் கல்வியாளர்களிடையே இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

தாய்மொழியின் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனச் சிலர் விவாதிக்கின்றனர்.

ஆங்கிலத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனச் சிலர் விவாதிக்கின்றனர்.

இந்த இரு கருத்திலும் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து இந்த விவாதத்திற்கு முடிவான ஒரு தீர்வு காணவேண்டும்.

கவி இரவீந்தரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம், ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றுதலுந்தான்.

முன்சிராம் பேசும்போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாடுடன் கேட்கிறார்கள். இதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.

உயர்ந்த மனம்படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியைப்போல ஒளிவிட்டாலும், அவரது தாய்மொழிப் பேச்சு, தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்றது.

தாய்மொழியை வளமுறச் செய்வதற்குத் தேவையானவை, தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தானே தவிர, ஆங்கில அறிவு இல்லை என்பதை மேலே காட்டிய சான்றுகள் ஐயமின்றி விளக்குகின்றன.

ஒரு மொழியை பயன்படுத்துகின்றவர்களின் எண்ணங்கள், அம்மொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும். மொழியின் தன்மை, மக்களின் தன்மையைச் சார்ந்திருப்பது இயற்கையே.

மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும். வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின்மீது சீற்றம் கொண்டானாம் என ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு.

மொழி நிறைவு பெற்றதாக இல்லை எனக் குறை சொல்லுபவர்கள் இந்த தொழிலாளியைப் போன்றவர்களே. குறைபாடு, மொழியைப் பயன்படுத்துபவர்களிடம்தான் இருக்கிறதே அன்றி மொழியில் இல்லை.

ஜெகதீஷ் சந்திரபோஸ், பி.சி.இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு, நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் தாய்மொழிமூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள்.

பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும், பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.

சிறந்த பயன் ஏற்படவேண்டுமாயின், அத்தகைய தொடர்பு இன்றியமையாதது. தெரிந்தறியாத ஒருமொழியின்மூலம் கல்வி கற்பிப்பது, இந்த இணக்கத்தைக் குலைத்துவிடும்.

தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதைப்பற்றிச் சிந்தனை செய்ய வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

படித்த இந்தியர் அனைவரும் அயல்மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இந்த அயல்மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கம் அளிப்பதோ தேவையில்லை எனவும் கருதுகிறேன்.

நீங்கள் உங்கள் தாய்மொழியில் அறிவுபெற வாழ்த்தும் ஆசியும்.

–  மோகன்தாஸ் காந்தி