தேன் தித்திக்கும் தேன் என்ற பாடல் வரிகளைக் கேட்டவுடன் தேனின் தித்திப்பான இனிப்பு சுவையே நம் நினைவிற்கு வரும்.
இதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது இனிப்பு தங்க அமுதம் என்று அழைக்கப்படுகிறது.
உலகில் உள்ள உயர்மட்ட சுகாதார உணவுகளுள் தேனும் ஒன்று. இயற்கையின் அற்புதப் படைப்பான தேனானது உலகில் பயன்படுத்தப்பட்ட மிகப்பழமையான இனிப்புப் பொருளாகும்.
இது உலகில் பல்வேறு நாகரிகங்களில் பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்பட்ட பெருமையினை உடையது.
16-ம் நூற்றாண்டில் வெள்ளை சர்க்கரை பரவலாக கிடைப்பதற்கு முன்புவரை இனிப்புக்காக தேனானது பயன்படுத்தப்பட்டு வந்தது.
மனிதர்கள் மட்டுமல்லாமல் கரடி, பேட்ஜர்ஸ் உள்ளிட்ட விலங்குகளும்கூட தேனீக்களின் விஷக்கடியினையும் பொருட்படுத்தாது தித்திப்பான தேனை தேடி விரும்பி உண்கின்றன.
தேன் என்றால் என்ன?
தூய வடிகட்டப்படாத இயற்கையான கரிம சர்க்கரையினைக் கொண்ட தித்திப்பான திரவம் தேன் என்றழைக்கப்படுகிறது.
இது பண்டைய நாகரீகங்கள், மரபுகள் முதல் தற்போது வரை உணவு மற்றும் மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது.
தேனானது அடர் மஞ்சள் முதல் வெளிர் மஞ்சள் வரை கெட்டியாகவோ, நீர்த்தோ இருக்கும். தெளிவான நிறத்தினை உடைய கெட்டித் திரவ வடிவத் தேனே அதிக விலையில் விற்கப்படுகிறது.
தேனின் மணமானது அது சேகரிக்கப்படும் பூவின் மணத்தினைக் கொண்டிருக்கும். தேனானது அப்படியேவோ, பதப்படுத்தப்பட்டோ பயன்படுத்தப்படுகிறது.
தேனானது 80 சதவீதம் இயற்கை சர்க்கரையும், 20 சதவீதம் தண்ணீரையும் கொண்டுள்ளது. காற்றுப்புகாத பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் கெட்டுப் போவதில்லை.
தேனீக்கள் தேனினை உற்பத்தி செய்யும் முறை
சுமார் 60,000 தேனீக்கள் 88,000 கிமீ தொலைவு பயணம் செய்து 2 மில்லியன் பூக்களிலிருந்து 450 கிராம் தேனினை உற்பத்தி செய்கின்றன.
தேனினை உற்பத்தி செய்யும் முறையானது நிறைய காலஅளவினைக் கொண்ட கூட்டு முயற்சியாகும்.
தேனீ தன்னிடம் உள்ள இரண்டு வயிற்றுப் பகுதிகளில் ஒன்றில் தங்களின் உணவான மகரந்தத்தை பூக்களிலிருந்துச் சேகரித்து வைக்கின்றது.
மகரந்தத்திலுள்ள தேனுடன் தன்னிடம் உள்ள என்சைமினைக் கலந்து மற்றொரு தேனீயின் வாயில் சேர்த்து விடுகிறது. தேனானது பாதி செரிமானம் ஆகும் வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
பின் தேன்கூட்டில் உள்ள துளைகளில் பாதி செரிக்கப்பட்ட தேன் நிரப்பப்படுகிறது. பின் தேனீக்கள் தங்களின் இறக்கைகள் மூலம் காற்றினை உருவாக்கி பாதி செரிக்கப்பட்ட தேனில் உள்ள நீரினை ஆவியாக்கி தேனினை கெட்டிப்படச் செய்கின்றன.
தேனீ தன்னுடைய வயிற்றுப்பகுதியில் சுரக்கும் மெழுகு போன்ற பொருளினால் துளைகளை அடைத்து தண்ணீர் மற்றும் காற்றினால் கெட்டிப்பட்ட தேனினை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
குளிர்காலத்திற்கான உணவுப் பொருளாக தேனானது தேனீக்களால் அதிகளவு உற்பத்தி செய்யபட்டுப் பாதுகாக்கப்படுகிறது.
தேனின் வரலாறு
ஸ்பெயில் உள்ள வாலென்சியாவில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரான குகை ஓவியத்தில் மனிதன் ஒருவன் தேன் கூட்டிலிருந்து தேனினை அறுவடை செய்யும் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் பேரோக்களின் கல்லறையில் பாதுகாக்கப்பட்ட தேனானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமானியர்கள் சண்டையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக தேனினைப் பயன்படுத்தினர்.
ஹன்னிபால் என்னும் போர்வீரன் ரோமுடன் சண்டையிட ஆல்ப்ஸ் மலையை யானைகளில் கடக்கும்போது தனது ராணுவத்தினருக்கு தேனினையும், வினிகரையும் கொடுத்தான்.
பத்தாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அரசரும், ராணியும் புளிக்கவைக்கப்பட்ட தேன் மதுவினை விரும்பி அருந்தினர்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தேனானது பாராம்பரிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டது.
தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இதில் இயற்கை சர்க்கரைகள், என்சைம்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், வாசனை கலவைகள் மற்றும் பாலிபீனால்கள், கார்போஹைட்ரேடுகள் ஆகியவை காணப்படுகின்றன.
விட்டமின் சி, பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), கோலைன் ஆகியவை உள்ளன.
இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து, மாங்கனீசு, செலீனியம், ஃப்ளுரைடு ஆகியவை காணப்படுகின்றன.
பிரக்டோஸ், குளுக்கோஸ், மால்டோஸ், கெலாக்டோஸ் ஆகிய இயற்கைச் சர்க்கரைகள் தேனில் உள்ளன.
தேனின் மருத்துவப் பண்புகள்
தேனானது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் எதிர்ப்புப் பண்பினைக் கொண்டுள்ளது. லேசான அமிலத் தன்மையைக் கொண்டுள்ள தேனானது பொருட்களை கெட்டுப் போகாமல் வைக்கிறது.
சீரான உடல்எடை பராமரிப்பிற்கு
தேனானது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடல்எடையை பராமரிக்கிறது. தேனினை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கும்போது உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெறுவதோடு, உடலின் எடையும் குறைகிறது.
உடனடி ஆற்றலைப் பெற
தேனில் ஆற்றலை வழங்கக்கூடிய இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. அதனால் இதனை உண்ணும்போது இயற்கை சர்க்கரையானது இரத்தத்தில் எளிதில் நேரடியாகக் கலந்து உடனடி ஆற்றலை வழங்குகிறது.
மேலும் தேனில் உள்ள கார்போஹைட்ரேடானது எளிதில் செரிக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றப்பட்டு ஆற்றலை வழங்குகிறது.
பண்டைய காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு உடனடி ஆற்றலை வழங்க தேன் உபயோகிக்கப்பட்டது.
தேனானது உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது என தற்காலத்து ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இது விளையாட்டு வீரர்களுக்கு தசைகள் மற்றும் கிளைகோஜென் அளவுகளை மீட்டு எடுக்கவும், இன்சுலின் அளவினை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க
தேனானது அதிகளவு ஆன்டிஆக்ஸிஜென்டுகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்பினையும் கொண்டுள்ளது.
இதனால் தேனினை உண்ணும்போது நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலோடு நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெறலாம். தினமும் காலையில் தேனினை உண்ணும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு தொற்றுநோய் காலத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பே தேனினை தொடர்ந்து கொடுத்து வந்தால் தொற்று நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
சருமப்பொலிவிற்கு
தேனினை சருமத்தில் பயன்படுத்தும்போது அது சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, சருமத்திற்கு தேவையான ஊட்டசத்துக்களையும் அளிக்கிறது.
இயற்கை ஈரப்படுத்தியான தேனினை வறண்ட சருமத்தினை உடையவர்கள் எளிதாக தேய்த்து நிவாரணம் பெறலாம்.
குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பிற்கு தேனினைத் தடவி சரிசெய்யலாம். தேனினை முகம் முழுவதும் தடவி பொலிவான முகத்தினைப் பெறலாம்.
தேனானது இயற்கை ஆன்டிசெப்டிக் தன்மையினைக் கொண்டுள்ளதால் காயங்கள், வெட்டுக்கள், பருக்கள், தீக்காயங்கள் ஆகியவற்றிற்கு இதனை உபயோகித்து பயன்பெறலாம்.
சருமத்தில் ஒவ்வாமை ஏற்படும்போது தேனினை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி நிவாரணம் பெறலாம்.
நினைவாற்றலைப் பெருக்க
தேனினை உண்ணும்போது அது நினைவாற்றலை அதிகரிப்பதோடு மூளையின் செறிவுத்தன்மையையும் பாதுகாக்கிறது. தேனானது வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து மூளையை அமைதிபடுத்துகிறது.
தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நினைவாற்றலை தடுக்கும் செல்களின் வளர்ச்சியை தடைசெய்கின்றன. தேனினை அடிக்கடி உண்ணும்போது வயதான காலத்திலும் நினைவாற்றல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
இருமலைச் சரிசெய்ய
தேனானது இருமலுக்கு சிறந்த நிவாரணப் பொருளாக விளக்குகிறது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் தொண்டைப் புண்ணினை சரிசெய்வதோடு இருமலையும் போக்குகிறது.
சிறுவர்களுக்கு ஏற்படும் இருமலைத் தடைசெய்யும் சிறந்த பொருளாக தேன் பயன்படுத்தப்படுகிறது. இது இருமலைச் சரிசெய்வதோடு இரவில் ஆழ்ந்த தூக்கத்தினையும் குழந்தைகளிடம் உருவாக்குகிறது.
கேசபராமரிப்பிற்கு
கேசத்தில் உண்டாகும் பொடுகிற்கு வீட்டில் உள்ள எளிய மருந்துப்பொருளாக தேனானது பயன்படுத்தப்படுகிறது. தேனினை கேசத்தில் தடவும்போது வறண்ட கேசத்திற்கு ஊட்டத்தினை வழங்கி கேசத்தை பொலிவாகவும், பளபளக்கவும் செய்கிறது. தேனுடன் பச்சை தேயிலைச்சாற்றினைச் சேர்த்து கேசத்தில் தடவ கேசம் உதிர்வது தடைசெய்யப்படுகிறது.
காயங்களை ஆற்ற
தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு ஆகியவை காயங்களை விரைந்து ஆற்றுகின்றன. உடலில் காயங்கள் ஏற்படும்போது பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.
தேனினை காயங்களின் மீது தடவும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைடு உருவாகி காயங்களை சுத்தம் செய்து விரைவில் ஆற்றுகிறது.
ஈறுகளில் காயங்கள் ஏற்படும்போது காயங்கள் மீது நேரடியாக தேனினைத் தடவி காயங்களை ஆற்றலாம். தண்ணீருடன் தேனினைக் கலந்து வாய்கொப்பளிக்க வாய்துர்நாற்றம் நீங்கும்.
ஆழ்ந்த தூக்கத்தினைப் பெற
தேனினை பாலில் கலந்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்த ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். தேனானது வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குவதோடு தூக்கத்திற்கு காரணமான ஹார்மோனான மெலாடோனின் உற்பத்தியைத் தூண்டி ஆழ்ந்த தூக்கம் ஏற்படுத்துகிறது.
தேனினைப் பற்றிய எச்சரிக்கை
தேனில் மகரந்தங்கள் கலந்திருப்பதால் இதனை ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது செரிமானமின்மை, வாந்தி, மயக்கம் ஏற்படக்கூடும்.
எனவே ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேனினைத் தவிர்த்தல் நலம்.
தேனில் இயற்கை சர்க்கரை கலந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை குறைந்தளவு பயன்படுத்துதல் சிறந்தது.
இயற்கையின் கொடையான தித்திக்கும் தங்கஅமுதம் தேனினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.