தினை அரிசி உப்புமா செய்வது எப்படி?

தினை அரிசி உப்புமா மிகவும் சத்தானதும், சுவையானதும் ஆகும். தினை அரிசி சிறுதானிய வகையினுள் ஒன்று.

நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானிய வகைகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமானது.

இனி எளிய முறையில் தினை அரிசி உப்புமா செய்வது பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 150 கிராம் (1½ பங்கு)

பாசிப் பருப்பு – 25 கிராம் (¼ பங்கு)

காரட் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

முருங்கை பீன்ஸ் – 5 எண்ணம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

இஞ்சி – பாதி சுண்டுவிரல்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

சுடு தண்ணீர் – 3 பங்கு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

உளுந்தம் பருப்பு – 1½ டேபிள் ஸ்பூன்

தினை அரிசி உப்புமா செய்முறை

முதலில் தினை அரிசியை கழுவி தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பாசிப் பருப்பினை பாதியளவு வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.

காரட், முருங்கை பீன்ஸை சிறுதுண்டுகளாக வெட்டவும்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து சிறுசதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பச்சை மிளகாயினை கழுவி துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி இரண்டு துண்டாக வெட்டவும்.

இஞ்சியை தோல்நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

தினை அரிசியினை அளந்து அதே போல் இரு மடங்கு தண்ணீரை சூடாக்கிக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின் அதனுடன் சதுரங்களாக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பெரிய வெங்காயம் பாதி வெந்ததும் அதனுடன் இஞ்சி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை வதக்கும் போது
வெங்காயத்தை வதக்கும் போது

 

½ நிமிடத்திற்கு பின் நறுக்கிய முருங்கை பீன்ஸ், காரட், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

 

காய்கறிகளை வதக்கும் போது
காய்கறிகளை வதக்கும் போது

 

காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் பாதி வேக வைத்த பாசிப்பருப்பினைச் சேர்த்து கிளறவும்.

 

பாசிப்பருப்பை சேர்த்த‌தும்
பாசிப்பருப்பை சேர்த்த‌தும்

 

பின் அதனுடன் ஊறிய தினை அரிசியை தண்ணீரினை வடித்துச் சேர்த்து கிளறுவும்.

 

தினை அரிசியை சேர்த்ததும்
தினை அரிசியை சேர்த்ததும்

 

பின் அதனுடன் தேங்காய் துருவல், இரு மடங்கு சுடுதண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.

 

தேங்காய் துருவல், இரு மடங்கு சுடுதண்ணீர், தேவையான உப்பு சேர்த்ததும்
தேங்காய் துருவல், இரு மடங்கு சுடுதண்ணீர், தேவையான உப்பு சேர்த்ததும்

 

ஒரு கொதி வந்ததும் கலவையை சிம்மில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். அவ்வப்போது கிளறி விடவும்.

 

கலவை கொதித்ததும்
கலவை கொதித்ததும்

 

தினை அரிசி வெந்து கலவை பொல பொல என வரும்போது இறக்கி விடவும்.

 

கலவை பொல பொலவென இருக்கும்போது
கலவை பொல பொலவென இருக்கும்போது

 

பின் அதனுடன் மிளகு, சீரகப் பொடியைக் கலந்து ஒருசேர கிளறவும்.

 

மிளகு, சீரகப் பொடி சேர்த்ததும்
மிளகு, சீரகப் பொடி சேர்த்ததும்

 

சுவையான தினை அரிசி உப்புமா தயார்.

 

தினை அரிசி உப்புமாவினை கிளறும் போது
தினை அரிசி உப்புமாவினை கிளறும் போது

 

 

சுவையான தினை அரிசி உப்புமா
சுவையான தினை அரிசி உப்புமா

 

இதனுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு எலுமிச்சை சாற்றினை உப்புமாவை இறக்கிய பின் சேர்த்து கிளறலாம்.

விருப்பமுள்ளவர்கள் பச்சை பட்டாணி, குடைமிளகாய், முட்டைகோஸ் ஆகியவை சேர்த்தும் உப்புமா தயார் செய்யலாம்.

 ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.