தினை உலர்பழ லட்டு சுவையானதும், சத்துமிகுந்ததும் ஆகும். இது சிறுதானிய வகையினுள் ஒன்றான தினை அரிசி, உலர்பழங்களான உலர் திராட்சை, பேரீச்சை, அத்திப் பழம் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்திக்கு இதனை செய்து கடவுளுக்கு படைத்து வழிபாடு மேற்கொள்ளலாம்.
இனி சுவையான தினை உலர்பழ லட்டு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி – ஒரு சிறிய குழிக்கரண்டி (2½ டேபிள் ஸ்பூன்)
தேங்காய் – ½ மூடி
உலர் திராட்சை (கிஸ்மிஸ்) – சிறிய குழிக் கரண்டி அளவு
பேரீச்சை – 10 எண்ணம் (பெரியது)
அத்திப் பழம் (உலர்ந்தது) – 5 எண்ணம்
பாதாம் பருப்பு – 10 எண்ணம்
முந்திரிப் பருப்பு – 15 எண்ணம்
ஏலக்காய் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)
நெய் – பாதி சிறிய குழிக்கரண்டி அளவு (1¼ ஸ்பூன்)
தினை உலர்பழ லட்டு செய்முறை
முதலில் தினை அரிசியை பொன்னிறமாக வறுத்து ஆறிய பின் பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
உலர் திராட்சை மற்றும் அத்திப் பழங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் ஆகியவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பேரீச்சையை விதைகளை நீக்கி மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
நெய் உருகியதும் அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அடுப்பினை அணைத்து விட்டு அதில் பேரீச்சம் பழக் கலவையைச் சேர்த்து கிளறி, அதனுடன் பொடித்த தினை அரிசியைச் சேர்த்துக் கிளறவும்.
தினைப் பொடியைச் சேர்க்கும்போது
பின் அதில் கரகரப்பாக அரைத்த பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
கலவையுடன் பொடியாக நறுக்கிய அத்திப் பழம், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி கலவையை ஆற விடவும்.
பழக்கலவை ஆறியவுடன் அதனை லட்டுகளாகப் பிடிக்கவும். சுவையான தினை உலர்பழ லட்டு தயார்.
இதனை உண்ணும் போது திகட்டல் ஏற்படாது. இதனைப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகக் கொடுக்கலாம்.
குறிப்பு
நெய்யினை உருக்கி தேங்காய்த் துருவலை வறுக்கும் போது அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!