தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

நம் இனிது இணைய இதழின் உணவுப் பகுதியில் இந்த வருட தைப்பொங்கல் சிறப்பாக தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது பற்றிப் பார்ப்போம்.

நாம் சாதாரணமாக பச்சரிசியில் இனிப்பு பொங்கல் செய்வோம்.

சிறுதானியமான தினை அரிசியில் சர்க்கரைப் பொங்கல் எளிதாக செய்யலாம்.

 

தேவையான பொருட்கள்

தினை அரிசி – ¾ கப்

பாசிப் பருப்பு – 1 கப்

மண்டை வெல்லம் – 2¼ கப் (பொடியாக தட்டியது)

கல்கண்டு – ¼ கப் (பொடியாக தட்டியது)

முந்திரிப் பருப்பு – 20 கிராம்

கிசுமுசுப் பழம் – 20 கிராம்

ஏலக்காய் – 5 எண்ணம்

சுக்கு – சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் – ஒரு எண்ணம் (சிறியது)

நெய் – 150 கிராம்

தண்ணீர் – 3½ பங்கு (அரிசி பாசிப்பருப்பு)

 

செய்முறை

முதலில் தேங்காயை உடைத்து திருகிக் கொள்ளவும்.

சுக்கையும், ஏலக்காயையும் தட்டிக் கொள்ளவும்.

தினை அரிசியையும், பாசிப் பருப்பினையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

அரிசிக் கலவையில் உள்ள தண்ணீரை வடிகட்டி ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.

 

நனைந்த அரிசி மற்றும் பாசிப் பருப்பு
நனைந்த அரிசி மற்றும் பாசிப் பருப்பு

 

பின் குக்கரில் 3½ பங்கு தண்ணீரை ஊற்றி அதில் நனைந்த அரிசிக் கலவையை போடவும்.

 

குக்கரில் இட்ட‌ அரிசி மற்றும் பாசிப் பருப்பு
குக்கரில் இட்ட‌ அரிசி மற்றும் பாசிப் பருப்பு

 

குக்கரினை மூடி விசில் போட்டு அடுப்பில் வைக்கவும்.

5 அல்லது 6 விசில் வந்தவுடன் அடுப்பினை அணைத்து விடவும்.

வாணலியில் சிறிதளவு நெய்யினை ஊற்றி முந்திரிப் பருப்பு, கிசுமுசு பழத்தினை வறுக்கவும்.

 

முந்திரிப் பருப்பு, கிசுமுசு வறுக்கும் போது
முந்திரிப் பருப்பு, கிசுமுசு வறுக்கும் போது

 

குக்கரின் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து சாதத்தினை நன்கு கரண்டியால் மசித்து விடவும்.

 

சாதம் நன்கு வெந்ததும்
சாதம் நன்கு வெந்ததும்

 

பின் குக்கரை அடுப்பின் சிறுதீயில் வைத்து தூளாக உள்ள சர்க்கரை, கல்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும்.

 

சர்க்கரை இட்டுக் கிண்டும்போது
சர்க்கரை இட்டுக் கிண்டும்போது

 

சர்க்கரை முழுவதும் கரைந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு, கிசுமுசுப் பழம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பின் அதனுடன் தட்டி வைத்துள்ள ஏலக்காய், சுக்கு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான தினை சர்க்கரைப் பொங்கல் தயார்.

 

சுவையான‌ தினை சர்க்கரைப் பொங்கல்
சுவையான‌ தினை சர்க்கரைப் பொங்கல்

 

இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

 

குறிப்பு

பொங்கலுக்கான சாதம் தயார் செய்யும் போது சாதம் கெட்டியாக இருக்க வேண்டும். ஆதலால் தண்ணீரை சரியான அளவு வைத்து சாதம் தயார் செய்ய வேண்டும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.