திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப்பொடி தயாரிக்கவும் பயன்படுகின்றது.
திப்பிலி வாத நோய்களைக் குணப்படுத்தும். வயிற்று உப்புசத்திற்கான மருந்தாக, செரியாமை மருத்துவத்திலும் பயன்படுகின்றது. திப்பிலி இலைகள், பழங்கள் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
திப்பிலி தரையில் சுற்றிப்படர்வதுடன், மேலே ஏறக்கூடிய மணமுள்ள கொடியாகும். திப்பிலி கீழ்பகுதி இலைகள், 6-10 செ.மீ. நீளத்தில், அகன்ற நீள்வட்ட வடிவத்தில் காணப்படும். மேல்பகுதி இலைகள் நீள்வட்டமாகவும், இதய வடிவிலும் காணப்படும்.
திப்பிலி பழங்கள், நீள்வட்ட வடிவில், சதைப் பிடிப்புள்ள காம்பு பகுதியில் மறைத்தும், 2.5-4 செ.மீ. வரை நீளமாகவும், கரும் பச்சையாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.
இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் திப்பிலி பரவலாக வளர்கின்றது. இதன் மருத்துவப் பயன்களுக்காகப் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. உலர்ந்த திப்பிலி கனிகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
திப்பிலி பழைய இலக்கிய நூல்களில் மாகதி என்கிற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இது, வடக்கு பீகார் (மகத நாடு) பகுதியில் காணப்பட்டது என்பதைக் குறிப்பதாக இருக்கலாம் என்று தற்போது அறியப்பட்டுள்ளது. திப்பிலியின் உலர்ந்த பழங்கள் மருத்துவத்தில் பயன்படுகின்றன.
தேமல் குணமாக திப்பிலித் தூள் ½ தேக்கரண்டி அளவு, தேவையான அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். காலை, மதியம், மாலை வேளைகளில் 1 மாதம் வரை சாப்பிடலாம்.
திப்பிலித் தூள் ½ தேக்கரண்டி அளவு, தேவையான அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். தொடர்ந்து நீண்ட நாட்கள் உபயோகித்து வர குரல் வளம் ஏற்படும்.
காய்ந்த திப்பிலியை சுத்தம் செய்து, நெய்யில் வறுத்து, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ¼ முதல் ½ தேக்கரண்டி வரை, தினமும் காலை, மாலை வேளைகள், ½ தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு, கோழை, நாக்குச் சுவையின்மை தீரும்.
வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் குணமாக திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு, சமஎடையாக வறுத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு (திரிகடுகு சூரணம்), ½ தேக்கரண்டி அளவு, தேனில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள், 7 நாட்கள் வரை செய்யலாம்.