தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுக்களில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் பெரிய விருதாகும். இவ்விருது புகழ்பெற்ற வளைத்தடி பந்தாட்ட (ஹாக்கி) வீரரான தியான் சந்த் நினைவாக அவர் பெயரால் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது தனிநபர் மற்றும் குழுவிளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்விருது ஒரு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், அலங்கார உடை மற்றும் பணமுடிப்பைக் கொண்டுள்ளது. பணமுடிப்பானது ஐந்து இலட்சங்கள் ஆகும்.

இவ்விருதிற்கான பரிந்துரைப்போர் பட்டியல் விருது வழங்கும் குழுவினரிடம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30-க்குள் வழங்கப்பட வேண்டும்.

இதுவரையிலும் சுமார் 46 விளையாட்டு வீரர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். கூடைப்பந்தாட்டம், ஹாக்கி, குத்துச்சண்டை, கைப்பந்தாட்டம், துடுப்பு படகோட்டம், தடகளம், பில்லியட்ஸ் மற்றும் ஸ்நூக்கர், மற்போர், கபடி போன்ற விளையாட்டுகளுக்கு இதுவரையிலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்கள் அபர்ணா கோஷ், அசோக் திவான், சாகுராஜ் பிரஜ்தார் ஆகியோர் ஆவார். இவர்கள் முறையே கூடைப்பந்தாட்டம், ஹாக்கி, குத்துச்சண்டை போன்ற விளையாட்டுக்களுக்காக இவ்விருதினைப் பெற்றனர்.

 

இவ்விருது வழங்குவதற்கு உள்ள நியதிகள்

நம் நாட்டில் விளையாட்டிற்கான பரந்த தளத்தினை உருவாக்கி அதன் வளர்ச்சியை சிறப்பான வகையில் ஊக்குவித்தல் என்பதே இவ்விருதின் நோக்கம் ஆகும். தங்கள் வாழ்நாள் முழுவதையும் விளையாட்டிற்காக அர்பணித்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

தியான் சந்த் விருது பெற‌ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் புரிந்து அவ்விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தங்கள் பங்களிப்பினை அளித்து வரும் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு இயக்கத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக ஏற்பட்ட குற்றசாட்டுகளுக்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பவர்களும், தண்டனை பெற்றவர்களும் இவ்விருதினை பெறுவதற்கு தகுதியற்றோர் ஆவர்.

இவ்விருதினை ஒரு விளையாட்டுவீரர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற இயலும்.

இவ்விருது ஒருவரின் இறப்புக்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இவ்விருதிற்கான பரிந்துரைகள் பெறப்பட்ட ஆண்டிலேயே இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது வழங்கும் விழாவின்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மட்டுமே விருதினை வாங்க இயலும்.

விருது வழங்கும் விழாவிற்கு வரவியலாத தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கான விருது இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் பின்னர் வழங்கப்படும்.

இவ்விருதிற்கான விதிமுறைகளை இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமே தளர்வு செய்ய இயலும். ஆனால் விதி தளர்விற்கான தகுந்த காரணங்கள் எழுத்துப்பூர்வமாக அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான பரிந்துரைகள்

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டு மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியோர்களிடமிருந்து பெறப்படுகின்றன.

மேற்கூறியவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரே விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள் இரண்டு நபர்கள் வரை மட்டுமே பரிந்துரை செய்ய இயலும்.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய இயலும். இவ்விருதினை ஏற்கனவே பெற்றுள்ள விளையாட்டு வீரர், அர்ஜூனா விருது, துரோணாச்சர்யார் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகியோர்கள் தங்கள் விளையாட்டுப்பரிவிவைச் சேர்ந்த தகுதியான ஒரு விளையாட்டு வீரரை பரிந்துரைக்கலாம்.

பரிந்துரைகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 அல்லது ஏப்ரல் மாத கடைசி வேலை நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான தேர்வு முறை

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அனைத்தும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

பின் விளையாட்டு ஆணையத்தின் துணைச் செயலாளர் / இயக்குநர் மற்றும் இணை செயலாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் சரிபார்த்து பரிசோதிக்கப்படும்.

பின் சரியான பரிந்துரைகள் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட ஒன்பது நபர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினருக்கு அனுப்பப்படும். இக்குழுவில் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் மட்டுமே இடம் பெறுவர்.

 

தேர்வுக்குழு உறுப்பினர்களின் விவரம்

1. இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் 1

2. மாண்புமிகு விளையாட்டு வீரர்கள் (ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள், அர்ஜூனா விருது பெற்றவர்கள், தியான்சந்த் விருத பெற்றவர்கள்) 3

3. விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் அல்லது வர்ணனையாளர்கள் 2

4. விளையாட்டு நிர்வாகி 1

5. இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் 1

6. விளையாட்டு ஆணைய இணை செயலாளர் 1

மொத்தம் 9

2002-ல் இவ்விருது வழங்கும் வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயரினை இந்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும். விருது வழங்கும் இடம் மற்றும் நாளானது இந்திய அரசால் அறிவிக்கப்படும்.

ஒரு வருடத்தில் அதிகபட்சம் தகுதியான மூன்று நபருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விதி சிலநேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தளர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக 2003-ஆம் ஆண்டு ஐந்து இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.