திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

இன்றைக்கு எல்லோரும் தனிமையையே விரும்பிகின்றனர். சுற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ளவது இல்லை.

எல்லோருடனும் இணைந்து வாழ்வதே பலத்தினையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இதனையே திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சந்தியா புதிதாக திருமணமாகி சந்திரனின் கூட்டுக் குடும்பத்திற்கு மருகளாக வந்தாள்.

புகுந்த வீட்டில் மாமனார், மாமியார் சந்திரனின் அண்ணன்கள் இருவர், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்வது சந்தியாவிற்கு பிடிக்கவில்லை.

குழந்தைகளின் சேட்டையும், மாமியாரின் விருப்பபடி, குடும்பத்தினர் எல்லோருக்கும் ஒரேமாதிரியான உணவினை சமைப்பது உள்ளிட்ட விசயங்களால் அடிக்கடி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி சந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சந்திரனுக்கோ அன்பான அழகான கூட்டு குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு தனிக்குடித்தனம் செல்ல விருப்பமில்லை.

கூட்டு குடும்பத்தின் நன்மையையும், மகிழ்ச்சியையும் தன்னுடைய மனைவிக்கு எடுத்துச் சொல்ல எவ்வளவோ முயன்றும் சந்தியாவை மாற்ற முடியவில்லை.

ஒருநாள் சந்தியாவும் சந்திரனும் கடைவீதிக்குச் சென்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினர்.

அப்போது சந்திரன் வழக்கமாக பழங்கள் வாங்கும் பெண்ணின் கடைக்கு சந்தியாவை அழைத்துச் சென்றான். கடைக்காரப் பெண்மணி அவர்களை வரவேற்றார்.

ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை ஆகியவற்றை சந்தியா வாங்கினாள். திராட்சை பழத்தினை வாங்க எண்ணி திராட்சையைப் பார்த்தாள்.

கொத்தாக உள்ள திராட்சை தனியாகவும், கொத்திலிருந்து உதிர்ந்த திராட்சை தனியாகவும் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

கடைக்கார பெண்ணிடம் “திராட்சையின் விலை என்ன?, ஏன் திராட்சையை இரு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு அப்பெண்மணி “கொத்தாக உள்ள திராட்சை கிலோ 80 ரூபாய், உதிர்ந்த திராட்சைகள் கிலோ 50 ரூபாய்” என்று கூறினாள்.

கடைக்காரப் பெண்மணி கூறியதைக் கேட்டதும் சந்தியா “இரண்டும் ஒரே தரத்தில் தானே உள்ளன. பின் ஏன் விலையில் வித்தியாசம்?” என்று கேட்டாள்.

 

“திராட்சைக் கொத்தில் இருந்து பிரிந்து வந்ததால் தனியாக உள்ள பழங்கள் விரைவில் கெட்டுப் போய் விடும். ஆதலால் அவற்றின் மதிப்பினைக் குறைத்து விற்கிறோம்.” என்று கூறினாள்.

 

நிகழ்ந்தவைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சந்திரன் திராட்சைக் கொத்தினை வைத்து சந்தியாவிற்கு கூட்டுக்குடும்ப ஒற்றுமையை விளக்க எண்ணினான்.

பழக்கடையை விட்டு வெளியேறியதும் சந்திரன் சந்தியாவிடம் “சந்தியா, திராட்சை கொத்தைவிட்டு கீழே விழுந்த பழங்களின் விலையைக் குறைந்து கடைக்கார பெண் நமக்கு கொடுத்ததைக் கவனித்தாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம் அதற்கென்ன இப்போது?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள்.

 

“திராட்சைக் கொத்தைப் போன்றதுதான் கூட்டுக்குடும்பமும். திராட்சைக் கொத்திலிருந்து பிரிந்த பழங்கள் எப்படி தன்னுடைய மதிப்பினை இழந்தனவோ, அப்படித்தான் நாமும் நம்முடைய மதிப்பினை இழப்போம்.

 

நம்முடைய சொந்தங்கள், நண்பர்கள் உள்ளிட்ட எல்லோருடனுமான சுமுகமான உறவானது நமக்கு எப்போதும் மதிப்பையும், வலிமையையும் கூட்டும்.” என்றான்.

சந்திரன் கூறியதைக் கேட்டதும் சந்தியா தெளிவடைந்து “நாம் நம்முடைய வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையைத் தொடருவோம்.” என்றாள். சந்தியா கூறியதைக் கேட்ட சந்திரன் பெரும் மகிழ்ச்சி கொண்டான்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.