திராட்சைப் பழம்

பழவகைகள் என்றவுடன் நம் எல்லோர் நினைவிலும் தவறாமல் இடம் பெறுவது திராட்சைப் பழம் ஆகும். இது முந்திரிப்பழம், கொடி முந்திரிப்பழம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

திராட்சைப் பழத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்த நரியின் கதையை பற்றி குழந்தைகளுக்கு வழிவழியாக சொல்லும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

திராட்சைப் பழமானது மத்திய கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டது. இப்பழத்தின்சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்துள்ளது.

தற்போது உலகெங்கும் பரவலாக பயிர் செய்யப்படுகிறது. இப்பழம் ஒயின் தயார் செய்யவும், நேரடியாக உண்ணவும், உலர் திராட்சையாகவும், பயன்படுத்தப்படுகிறது.

திராட்சை பண்டைய கால கிரேக்க, ரோமானிய மற்றும் எகிப்திய நாகரீகங்களில் சமூக விழாக்களில் முக்கிய இடம் பெற்றது.

திராட்சைப் பழமானது கொடியில் இருந்து பெறப்படுகிறது. இப்பழம் கருப்பு, கருநீலம், பச்சை, சிவப்பு வண்ணங்களில் காணப்படுகிறது. திராட்சையின் நிறத்திற்கு அதில் காணப்படும் பாலிபீனாலிக் நிறமூட்டிகளே காரணமாகும்.

திராட்சைப் பழம் உண்ணும் போது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் உடனடி ஆற்றலையும் வழங்கக் கூடியது. இப்பழமானது அதிக நீர்ச்சத்தையும், குறைந்த அளவு எரிசக்தியையும், குளிர்ச்சித் தன்மையையும் கொண்டுள்ளது.

திராட்சை உருண்டை வடிவ பழங்களை கொத்தாகக் கொண்டுள்ளது. ஒரு கொத்தில் 300 பழங்கள் வரைக் காணப்படும். இப்பழமானது உள்ளே வழவழப்பான சதைப்பகுதியையும் அதனைச் சுற்றி மெல்லிய தோல் பகுதியையும் கொண்டுள்ளது.

சில வகை திராட்சையில் விதைகள் காணப்படுகின்றன. இவைகள் குச்சிகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் நடவு செய்யப்படுகின்றன. திராட்சையிலிருந்து ஜெல்லிகள், ஜாம்கள், பழரசங்கள் தயார் செய்யப்படுகின்றன.

 

மருத்துவப் பயன்கள்

திராட்சையில் விட்டமின்கள் ஏ,சி,பி6,கே ஆகியவையும், தாதுஉப்புகளான பொட்டாசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், செலீனியம் ஆகியவையும், ஃப்ளவனாய்டுகள், நார்சத்துகள் ஆகியவையும் காணப்படுகின்றன.

 

இதய நோய்க்கு

திராட்சையில் காணப்படும் பாலிஃபீனால்கள் இதய நோய் வராமல் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இவை இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு இதயத்தையும் சரிவர செயல்பட செய்கின்றன. இப்பழத்தில் காணப்படும் ரெஸ்வெரடால் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

உயர் இரத்த அழுத்தத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை சரியாக செயல்படச் செய்கிறது. மேலும் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை பொட்டாசியம் ஈடுசெய்கிறது.

உடல் எடை குறைய

குறைந்த எரிசக்தியுடைய பொருட்களை வயிறு நிறைய உட்கொள்வதினால் அவை குறைவான எரிசக்தியையே கொடுக்கும். திராட்சை போன்ற குறைவான எரிசக்தி கொண்டவற்றை உண்ணம்போது அவை உடல் எடையைக் குறைக்கின்றன. அதே நேரத்தில் இப்பழத்தில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கின்றன.

 

கண்கள் பாதுகாப்பிற்கு

தினசரி உணவில் திராட்சையை உட்கொள்வதினால் கண்ணின் விழித்திரை ஆரோக்கியத்தோடு சரிவர செயல்பட ஏதுவாகிறது. அத்தோடு இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ கண்பார்வையை தெளிவாக்குவதோடு கண்களையும் பாதுகாக்கின்றது.

 

இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கு

திராட்சையை அடிக்கடி உணவில் சேர்க்கும்போது அவை மனிதரில் இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதை தடைசெய்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் திராட்சையை உண்ணுவதால் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட்டுவதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை அளவோடு உண்ணலாம்.

 

புற்றுநோய் வராமல் தடுக்க

திராட்சையில் காணப்படும் ஆற்றல்மிகு ஆண்டிஆக்ஸிடென்டான பாலீஃபீனால்கள் குடல், நுரையீரல், வாய், உணவுக்குழாய், கல்லீரல், மார்பகம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கின்றன. மேலும் புற்றுச்செல்களின் தாக்கத்தைக் குறைக்கின்றன.

 

செரிமானம் மற்றும் மலசிக்கலுக்கு

திராட்சை ஓர் எளிமையான‌ நீர்சத்து நிறைந்த உணவு. எனவே இது நன்கு செரிப்பதோடு மற்ற உணவையும் செரிக்கத் தூண்டுகிறது. இதில் காணப்படும் நார்சத்து மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாகும். அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ளவதால் மலச்சிக்கல் தீரும்.

 

சருமம் மற்றும் கேசப் பராமரிப்பிற்கு

சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படும் போது திராட்சையை கூழாக்கி முகத்தில் தடவ பாதிக்கப்பட்ட சருமம் பொலிவடைகிறது. மேலும் தோலில் சுருக்கங்கள் விழுந்து வயதாவதை தடைசெய்கிறது.

திராட்சை கேசம் உதிர்தல், பொடுகுப் பிரச்சினை ஆகியவற்றை சரிசெய்வதோடு கூந்தலைப் பளபளபாக்குதல் மற்றும் கூந்தல் அடர்த்தியாதல் ஆகிய நன்மைகளையும் செய்கிறது.

அல்சீமர் போன்ற மூளையைப் பாதிக்கும் வியாதிகளிலிருந்து பாதுகாப்பதோடு மூளையைப் பலப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதைத் தடை செய்கிறது.

 

திராட்சையை வாங்கும் முறை

திராட்சையை வாங்கும்போது தோல்கள் சுருக்கங்கள் இல்லாமல் பழம் முழுவதும் சீரான நிறத்துடன் அளவில் பெரியதாகவும் இருக்க வேண்டும்.

திராட்சையின் காம்பானது கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்காமல் பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும். திராட்சை குலையினை எடுத்து காம்பினைப் பிடித்து ஆட்டினால் பழங்கள் உதிராமல் இருக்க வேண்டும்.

சாதாரண வெப்பநிலையில் திராட்சை ஓரிரு நாட்களே நல்ல நிலையில் இருக்கும். இதனைப் பையில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் அதிகம் குளிர்ச்சியான பகுதியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

 

திராட்சையை உண்ணும் முறை

திராட்சையை ஓடும் தண்ணீரில் நன்கு அலச வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரினை எடுத்து அதில் ஓரிரு நிமிடங்கள் மூழ்க வைத்து கழுவி பின் மெல்லி துணியால் துடைத்து உண்ண வேண்டும்.

திராட்சை அமிலத் தன்மை மிகுந்தது. எனவே இதனை மருந்து மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள் குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.

புளிப்பு சுவை அதிகம் உள்ளதால் அல்சர், வாயுபிரச்சினை, நெஞ்செரிச்சல் இருக்கும்போது சாப்பிட வேண்டாம்.

மருத்துவ குணங்கள் நிறைந்த பெரும்பாலும் எல்லா காலங்களிலும் கிடைக்கும் திராட்சையை அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.