திருக்குறிப்புத் தொண்ட நாயனார் – அடியார் ஆடை அழுக்கு நீக்கியவர்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் இறையருளால் பாறையில் மோதாமல் தடுக்கப்பட்ட ஏகாலியர். அடியவர்களின் ஆடை அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் ஏகாலியர் குலத்தில் தோன்றிய அடியவர். இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை. ஏகாலியர் என்பவர் துணிகளை சலவை செய்பவர்கள்.

இவர் சிவனார் மேல் தீராத அன்பினைக் கொண்டிருந்தார். சிவனடியர்களின் குறிப்பினை அறிந்து தொண்டு புரியும் இயல்புடையவராக இருந்ததால், இவரை எல்லோரும் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கலாயினர். ஆதலால் நாளடைவில் இவருடைய இயற்பெயர் மறைந்து திருக்குறிப்புத் தொண்டர் என்ற பெயரே நிலைத்து விட்டது.

செய்யும் தொழிலிலும் அடியவர்களுக்கு தொண்டு செய்யலாம் என்பதற்கு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஓர் உதாரணம்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தம்முடைய குலத்தொழிலைச் செய்வதோடு, சிவனடியார்களின் துணிகளை அன்போடு சலவை செய்து அளிப்பதைத் தன்னுடைய தொண்டாகக் கொண்டு அதில் இன்பம் கண்டார்.

பிறருடைய ஆடைகளின் அழுக்கினை நீக்கும் தொழிலைச் செய்யதாலும், இறைவனை தன்னுடைய நினைவில் கொண்டு மனமாசு நீங்கி வாழ்ந்தார்.

இறையடியார்களுக்கு தொண்டு செய்வதற்கு பணம், பதவி, புகழ் ஏதும் தேவையில்லை; உடலுழைப்பு போதும். அதை உணர்ந்த‌ திருக்குறிப்புத் தொண்டர், உண்மையான தொண்டுள்ளத்தோடு தம்முடைய உடலுழைப்பினைக் கொண்டு சிவனடியார்களுக்கு தொண்டு புரிந்து வந்தார்.

இறைவனின் இச்சையும் கச்சையும்

(இச்சை என்றால் விருப்பம் என்று பொருள். கச்சை என்றால் ஆடை என்று பொருள்.)

திருக்குறிப்புத் தொண்டரின் தொண்டுள்ளத்தை உலகறியச் செய்ய இறைவனார் விரும்பினார்.

ஆதலால் தாம் வயதோதிக எளிய அடியவராகி, இடுப்பில் அழுக்கேறிய கச்சையுடன் வெண்ணீறு அணிந்து திருக்குறிப்புத் தொண்டரின் முன் வந்தார்.

அது மழைகாலம். காலை வேளையில் இறையடியாரைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டருக்கு அன்பு பெருகியது.

அவரின் அருகில் சென்று பணிவாக ‘ஐயா, தங்களின் திருமேனி ஏன் இவ்வாறு மெலிந்துள்ளது?’ என்று வினவினார்.

அதற்கு சிவனடியார் மெலிதாக புன்னகை புரிந்தார்.

அடியாரின் அழுக்கேறிய கச்சையைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டர் “ஐயா, தங்களுடைய கச்சை மிகவும் அழுக்காக உள்ளது. நான் இதனை உங்களுக்கு நன்கு சலவை செய்து தருகிறேன். ஆதலால் அதனைத் தருகிறீர்களா?” என்று பணிவுடன் வினவினார்.

சிலநாட்களாக மழை ஓய்ந்து இருந்தபடியால் எப்படியும் பொழுது சாய்வதற்குள் சலவை செய்து உலர்த்தி அடியாரிடம் தந்து விடலாம் என்ற நம்பிக்கை திருக்குறிப்புத் தொண்டருக்கு இருந்தது.

திருக்குறிப்புத் தொண்டர் கூறியதைக் கேட்டதும் சிவனடியார் “அழுக்காக இருந்தாலும் இதுதான் எனக்கு கவசம். இந்த குளிர்காலத்தில் என்னுடைய உடலைப் போர்த்திக் கொள்ள இது பயன்படும். இதனைக் கொடுத்துவிட்டால் நான் இரவில் குளிரில் நடுங்க நேரிடும்.” என்றார்.

“ஐயா, நான் இரவு வருவதற்குள் இதனை சலவை செய்து உலர்த்தி உங்களுக்கு போர்த்திக் கொள்ள தயாராக தருகிறேன்.” என்று அடியவருக்கு தம்மால் ஆன தொண்டைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருக்குறிப்புத் தொண்டர் கெஞ்சினார்.

“இரவு வருவதற்கு முன் இதனை சலவை செய்து உலர்த்தி தருகிறேன் என்று உறுதியளிப்பாதால் இதனைத் தருகிறேன். கண்டிப்பாக உலர்த்தித் தந்துவிட வேண்டும்.” என்றபடி திருக்குறிப்புத் தொண்டரிடம் அழுக்குக் கச்சையைக் கொடுத்தார்.

அதனை பெற்றுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் நேரே சலவை செய்யும் இடத்திற்குச் சென்றார். வெள்ளாவியில் அழுக்குக் கச்சையை வேக வைத்தார். பின்னர் அதனைப் பிரித்து கச்சையை சலவை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது எதிர்பாராத வண்ணம் மேகங்கள் திரண்டு கருத்தன. முற்பகல் வேளையும் பிற்பகல் போல் இருந்தது. மழை கொட்டத் தொடங்கியது.

அதனைக் கண்டதும் திருக்குறிப்புத் தொண்டர் ‘இன்னும் சற்று நேரத்தில் மழை நின்று வானம் வெளுக்கும். அதுவரைப் பொறுத்திருப்போம்.’ என்று தம்மைத் தாமே தேற்றினார்.

ஆனால் மழை நிற்கவில்லை.பொழுது போய்க் கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல திருக்குறிப்புத் தொண்டரின் உள்ளத்தில் புயல் புகுந்தது.

‘ஐயோ, இதனை முன்பே வெளுத்துக் கொண்டு போய் வீட்டில் காற்றாட உலர்த்தியிருக்கலாமே. நான்தான் சரியாகிவிடும் என்று நேரத்தைக் கடத்தி விட்டேன். அடியவர் வந்து கேட்டால் என்ன செய்வேன?;. அவரின் உடல் குளிரில் நடுங்க காரணமாகி விட்டேனே.’ என்று மனதிற்குள் மருவினார்.

அடியவரை எவ்வாறு காண்பேன்?

‘அழுக்குக் கச்சையாக இருந்தாலும் குளிரிலிருந்து அவரைக் காக்குமே? நான்தான் அவரிடம் வலுக் கட்டாயமாக வெளுத்து உலர்த்தி தருகிறேன் என்று பிடுங்கினேன். அடியவரை நான் எவ்வாறு காண்பேன்? அடியாருக்கு துன்பம் இளைத்த நான் உயிரை விடுவதே சரி’ என்று எண்ணினார்.

துணி துவைக்கும் பாறையில் தன்னுடைய தலையை மோதி எண்ணி தலையைச் சாய்த்தார். அப்போது அப்பாறையின் அருகே ஏகாம்பர‌நாதர் தன்னுடைய திருக்கையால் திருக்குறிப்புத் தொண்டர் தலை பாறையில் மோதாமல் தடுத்தார்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டுக்கு உறுதுணையாக இருந்த துணி வெளுக்கும் பாறை, இறைவனின் திருக்கரம் எழுந்தருளிய ஆலயமாக மாறியது.

மேகங்கள் மறைந்தன. வெளிச்சம் எங்கும் பரவியது. சிவனார் உமையம்மையுடன் இடபவாகனத்தில் காட்சியருளினார். இறைவார் “உலகம் முழுவதும் உன்னுடைய திருத்தொண்டின் பெருமையை அறிவித்தோம். நீ எம்முடன் இருந்து இன்புறுவாயாக” என்று திருவாய் அருளினார்.

திருக்குறிப்புத் தொண்டர் நிலைத்த வீடுபேறாகிய சிவபதத்தில் மூழ்கி இன்புற்று இருந்தார்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்யும் தொழிலிலும் இறையடியார்களுக்கு தொண்டு செய்யலாம் என்று நிரூபித்த திருக்குறிப்பு தொண்ட நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில்திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.