திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்

திருஞானசம்பந்தர் நாயனார் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர். உமையம்மை இவருக்கு சிவஞானம் கலந்த ஞானப்பாலை ஊட்டியதால் மூன்று வயதிலேயே இறைவனைப் போற்றிப் பதிகம் பாடும் திறனைப் பெற்றவர்.

பதிகம் என்பது இறைவனைப் போற்றும் முதல் பத்து பாடல்களையும், அப்பாடல்களால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் இறுதிப் பாட்டையும் கொண்ட தொகுப்பு ஆகும்.

திருஞானசம்பந்தர் நாயனார் சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ சமயக் குரவர்களில் ஏனையோர் ஆவர்.

மதுரையில் சைவத்தை தழைக்கச் செய்தது, பாண்டியனின் வெப்பு நோயையும் கூனையும் நீக்கியது, ஆண் பனையை காய்க்கச் செய்தது, எலும்புச் சாம்பல் தொகுப்பிலிருந்து பெண்ணை உயிர்ப்பித்தது மற்றும் வேதங்களால் மூடப்பட்டிருந்த சிவாலய கதவுகளை திறந்து மூடச் செய்தது என பல அற்புதங்கள் இவரால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இவர் கிரியை என்னும் சத்புத்திர மார்க்கத்தைப் பின்பற்றி இறைவனை வழிபட்டார். அதாவது சத்புத்திர மார்க்கம் என்பது இறைவனை சரியான வழிமுறைகளில் அபிசேகித்து, ஆராதித்து மனதாலும் உடலாலும் இறைவனை வழிபடுவதைக் குறிக்கும்.

வீடுபேற்றினை அடையும் சைவம் குறிப்பிடும் நான்கு வழிகளில் சத்புத்திர மார்க்கமும் ஒன்று. தாச மார்க்கம் (அப்பர்), யோக (சக) மார்க்கம் (சுந்தரர்), ஞான (சன்) மார்க்கம் (மாணிக்க வாசகர்) ஆகியவை ஏனையவை ஆகும்.

இவருடைய பதிகப் பாடல்கள் கொஞ்சு தமிழ் வகையைச் சார்ந்தவை. இவர் இறைவனுடன் மகன்மையை நெறியைப் பின்பற்றினார்.

அதாவது இறைவனை தந்தையாகக் கருதி வழிபட்டார்.

ஆளுடைய பிள்ளையார், சிவஞானம் பெற்ற பிள்ளை, காழிநாடுடைய பிள்ளை, பரசமயகோளரி, திராவிட சிசு, காழி வள்ளல், சந்தத்தின் தந்தை, கல்லாமல் கற்றவன், ஞானத்தின் திருவுரு என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார்.

பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் மிகப்பெரியது. 4287 பாடல்களைக் கொண்ட பெரியபுராணத்தில் 1256 பாடல்கள் திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. ஆதலால்தான் ‘பிள்ளை பாதி புராணம் பாதி’ என்ற பழமொழி வழக்கத்தில் வந்தது.

நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திருவந்தாதியில் இரண்டு பாடல்களால் சம்பந்தரைப் போற்றியதோடு அவரைப் பற்றி தனியே ஆறு பிரபந்தங்களை அருளியுள்ளார்.

அவை ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடையபிள்ளையார் திருத்தொகை ஆகியவை ஆகும்.

நம்பியாண்டார் நம்பி, ஒட்டக்கக்கூத்தர், அருணகிரிநாதர் ஆகியோர் ஞானசம்பந்தரை முருகனின் திருஅவதாரமாக தம்முடைய பாடல்களில் போற்றுகின்றனர்.

சைவசமய குரவர்கள் நால்வரையும் அவதார புருஷர்களாகவே பொரியோர்கள் கருதுகின்றனர். அப்பர் திருக்கையிலையில் இருந்த சித்தரின் அவதாரமெனவும், சுந்தரர் ஆலால சுந்தரரின் அவதாரமெனவும், மாணிக்கவாசகர் நந்தியெம்பெருமானின் அவதாரமெனவும் பெரியோர் கூறுவர். அவ்வகையில் திருஞானசம்பந்த நாயனார் முருகப் பெருமானின் திருவதாரமாகக் கொண்டாடப்படுகிறார்.

திருஞானசம்பந்தர் இறைவனைப் போற்றி மொத்தம் 16000 பதிகம் பாடியதாக திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்திருப்பது 384 பதிகங்கள் மட்டுமே. கிடைத்திருக்கும் பாடல்கள் 4181. இவர் சுமார் 220 திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் போற்றியுள்ளார்.

திருஞானசம்பந்தர் நாயானார் வரலாறு

கிபி ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது வடதமிழகத்தைப் பல்லவர்களும், தென்தமிழகத்தை பாண்டியர்களும் வலிமையாக ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் அப்போது தமிழகத்தின் பல்லவ மன்னனையும், பாண்டிய மன்னனையும் சமணமும் பௌத்தமும் ஆட்கொண்டிருந்தன. ஆதலால் சைவ வழிபாட்டிற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. மக்களில் பெரும்பான்மையோர் சமணர்களாக மாறிவிட்டிருந்தனர்.

அப்போது பிரளய காலத்தில் தோணியாக மாறி மிதந்த சிறப்புடைய தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழியில் சிவபாத இருதயர் என்ற வேதிய சிவனடியார் வசித்து வந்தார். அவருடைய மனைவியின் பெயர் பகவதியம்மையார் என்பதாகும்.

அத்தம்பதியர் இல்லற தர்மத்தைக் கடைப்பிடித்து சிவசிந்தனையில் மூழ்கி வாழ்ந்து வந்தனர். ‘சமண சமயத்தில் மூழ்கிக்கிடக்கும் மக்களைக் காப்பாற்று இறைவா’ என்பதே இறைவனிடம் அவர்களின் வேண்டுகோளாக அமைந்தது.

இறைவனாரும் அச்சிவத்தம்பதியரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தார். தோணியப்பர், பெரியநாச்சியார் கருணையால் ஒரு வைகாசி முதல் தேதியில் ஆண் மகவு ஒன்று அவர்களுக்கு பிறந்தது.

அவர்கள் அப்பிள்ளையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். அக்குழந்தையும் வளர்பிறை நிலாக வளர்ந்தது.

குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஒருநாள் சிவபாத இருதயர் வழக்கம்போல் திருக்கோயிலை அடுத்த பிரம்மதீர்த்தத்தில் நீராட கிளம்பினார். அவருடன் சிறுகுழந்தையும் கிளம்பினான்.

சிறுகுழந்தை பதிகம் பாடல்

முதலில் மறுத்த குழந்தையை அழைத்துச் செல்ல மறுத்த சிவபாத இருதயர் குழந்தையின் பிடிவாதத்தால் இறுதியில் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். குழந்தையை திருகுளத்தின் கரையில் அமர வைத்துவிட்டு பிரம்மதீர்த்தத்தில் நீராடத் துவங்கினார்.

அவர் நீரில் மூழ்கி இருந்ததை அறியாமல் குழந்தை தந்தையைக் காணவில்லை என்றெண்ணி தோணியப்பரின் கோபுரத்தைப் பார்த்து “அம்மா! அப்பா!” என்று அழைத்து அழத் தொடங்கினான்.

தம்முடைய செல்லக் குழந்தையின் அழுகுரலைக் கேட்டதும் தோணியப்பரும், பெரியநாச்சியாரும் விடை வாகனத்தில் குழந்தைக்குக் காட்சி அளித்தனர்.

குழந்தையின் அழுகுரலை நிறுத்தும்படி இறைவனார் கூற, இறைவியார் பொற்கிண்ணத்தில் சிவஞானம் கலந்த பாலை ஊட்டினாள்.

அதனை உண்ட பிள்ளையார் சிவஞான சம்பந்தர் ஆனார். சிவசக்தியால் ஆளப்பட்டதால் ஆளுடைய பிள்ளையார் ஆனார்.

ஞானப்பாலை உண்டதால் ஞானசம்பந்தருக்கு சிவனடியைச் சிந்திக்கும் ஞானம், பிறப்பை மாற்றும் ஞானம், கலைஞானம், மெய்ஞானம் ஆகியவை ஏற்பட்டதாக சேக்கிழார் தம்முடைய பாடலில் குறிப்பிடுகிறார்.

உலகப்பொருளின் நிலையாமையை அறிந்து நிலையான இறைவனை உணர்ந்து அவன் அடியை சிந்திக்கும் ஞானசித்தியை ஞானப்பால் அவருக்கு அளித்தது. அந்த ஞானசக்தியால் இறைவனின் புகழினைப் பாடி உலக மக்கள் உய்வதற்கு வழி வகுத்தார்.

சிவஞான பாலமுது கடைவாயில் வழிய நின்றார் ஞானசம்பந்தர். அப்போது சிவபாத இருதயர் குளித்துக் கரையேறி குழந்தையைக் கண்டார். குழந்தையின் கடைவாயில் பாலைக் கண்டதும் “யார் உனக்கு பால் கொடுத்தது?” என்று கோபமாகக் கத்தி கையில் குச்சியை எடுத்தார்.

அதனைக் கேட்டதும் ஞானசம்பந்தப் பெருமான் கோபுரத்தைக் காட்டி ‘தோடுடைய செவியன் விடை ஏறியோர்’ என்பதை முதல் பாடலாகக் கொண்ட பதிகம் ஒன்றைப் பாடினார். அதனைக் கேட்டதும் சிவபாத இருதயர் வியப்புற்றார். குழந்தையின் பாடும் திறனைக் கண்டு மகிழ்ந்தார்.

பின்னர் தந்தையாருடன் தோணிபுரத்து திருகோவிலுக்குச் சென்ற ஞானசம்பந்தர் இறைவனை வழிபட்டு மேலும் ஒருபதிகத்தைப் பாடினார்.

இதற்குள் ஞானசம்பந்தருக்கு ஏற்பட்ட அற்புத செயல்கள் சீர்காழிக்குள் பரவியது. மக்கள் எல்லோரும் திரண்டு வந்து செந்தமிழால் பதிகம் பாடும் அவரைக் கண்டு வியந்து போற்றினர். மக்களின் ஆரவாரத்தில் ஞானசம்பந்தர் தந்தையாருடன் தம் இல்லத்திற்குச் சென்றார்.

மறுநாள் காலையில் தோணியப்பரின் ஆலயத்திற்கு வந்து அம்மையையும் அப்பனையும் வழிபட்டு பதிகம் பாடினார். இவ்வாற நாட்கள் சில கடந்தன.

வியக்கத்தக்க திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தர் நாயனார் உள்ளத்தில் பிற தலங்களில் உள்ள இறைவனாரைப் பாடி வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.

தம்முடைய விருப்பத்தை தந்தையாரிடம் தெரிவித்தார். சிவபாத இருதயரும் தம்முடை மகனாரின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டார்.

பொற்றாளம் பெற்றது

சீகாழிக்கு அருகில் இருந்த திருக்கோலக்கா என்னும் தலத்திற்கு தம்முடைய தோளில் குழந்தை சம்பந்தரை வைத்துக் கொண்டு சென்றார் சிவபாத இருதயர். அங்கே உள்ள இறைவனாரை வழிபட்டு ‘மடையில் வாளை பாய’ என்று திருப்பதிகம் ஒன்றை கையால் தாளமிட்டப்படி பாட ஆரம்பித்தார் சம்பந்தர்.

சம்பந்தரின் பிஞ்சுக்கைகள் தாளமிட்டதால் சிவக்கத் தொடங்கின. அதனைக் கண்ட இறைவனார் திருவருளால் ‘நமசிவாய’ என்னும் திருவைந்துதெழுத்து பொறித்த பொன்னாலாகிய தாளங்கள் குழந்தையின் கையில் தோன்றின.

இறைவனின் கருணையை எண்ணியபடி அத்தாளங்களை தலையில் வைத்து வணங்கி, பின்னர் அதனைக் கொண்டு தாளமிட்டு பதிகத்தைப் பாடி முடித்தார்.

திருக்கோலக்கா இறைவன் தாளங்களை வழங்க, அங்கிருக்கும் அம்மை அவற்றிற்கு நல்ல ஓசையைக் கொடுத்தாள் என்று வரலாறு கூறுகிறது.

அன்றிலிருந்து ‘திருக்கோலக்கா’ திருக்கோவில் ‘தாளமுடையார் கோவில்’ என்றும், இறைவனார் ‘சப்த புரீசர்’ என்றும், அம்மை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் வழங்கப்படுகின்றனர்.

சிலநாட்கள் திருக்கோலக்காவில் தங்கி இறைவனாரை வழிபட்டு பின்னர் சீர்காழி திரும்பினார் சம்பந்தர் பெருமான்.

அப்போது சிவனடியார்கள் சம்பந்தப் பெருமானின் பெருமைகளை அறிந்து வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஞானசம்பந்தரை வழிபட்டனர்.

அவர்களுடன் சென்று தோணிபுரத்து இறைவனாரை வழிபட்டு ‘பூவார் கொன்றை’ என்ற திருப்பதிகம் பாடி மகிழ்ந்து இருந்தார் சம்பந்தர்.

பாலை நிலத்தை மருதமாக்கியது

ஞானசம்பந்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட அருகில் இருந்த ஊர்மக்களும், சிவனடியார்களும் தங்களுடைய ஊரில் உள்ள சிவாலயத்தைத் தரிசனம் செய்ய திருஞானசம்பந்தரிடம் வேண்டினர்.

ஞானசம்பந்தரின் தாயார் ஊர் திருநனிப்பள்ளி. அவ்வூரினர் ஞானசம்பந்தரை விரும்பி அழைக்க அங்கு செல்ல எண்ணினார் சம்பந்தர். தந்தையாரும் உடன்பட்டார். சிறுகுழந்தையாக இருந்ததால் சிவபாத இருதயர் தம்முடைய தோளில் சம்பந்தரை வைத்துக் கொண்டு தலயாத்திரையைத் தொடங்கினார்.

நடந்து சென்று கொண்டிருந்தபோது, “எதிரே தோன்றும் இப்பதி யாது?” என்று தந்தையாரிடம் அவர் வினவ, “அதுதான் திருநனிப்பள்ளி” என்று தந்தையார் விடை பகர்ந்தார்.

அதனைக் கேட்டதும் ‘காரைகள் கூகைமுல்லை’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியபடி நனிப்பள்ளி ஆலயத்தை அடைந்து வழிபட்டு பின்னர் அருகேயுள்ள தலைச்சங்காடு, திருச்சாய்க்காடு, திருவெண்காடு முதலிய தலங்களை வழிபட்டு சீகாழிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிப்பள்ளி வளம் கொழிக்கும் மருதமாயிற்று.

சிலநாட்கள் கழித்து ஞானசம்பந்தர் மயேந்திரப்பள்ளி, குருகாவூர், முல்லைவாயில் ஆகிய திருத்தல இறைவனைப் போற்றி வழிபட்டு சீகாழிப்பதியை அடைந்தார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் தொடர்பு

ஞானசம்பந்தர் மிகஇளவயதில் இறையருளைப் பெற்றதைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்முடைய மனைவியார் மதங்க சூளாமணியுடன் சம்பந்தரைக் காண சீர்காழிக்கு வந்தார்.

பழங்காலம் முதல் இசைக்கலையை வளர்த்து வரும் பாணர் மரபில் தோன்றிய யாழ்ப்பாணர் சிறந்த சிவபக்தர். இன்று இராசேந்திரப்பட்டினம் என்று வழங்கப்படும் திருஎருக்கத்தம்புலியூரில் தோன்றியவர்.

சிவதலங்களுக்குச் சென்று இறைவனை யாழிசை மீட்டி வழிபடும் வழக்கத்தை உடையவர். அவ்வாறு தலதரிசனம் செய்யும்போது சீர்காழிப் பெருமானரின் புகழினைக் கேள்வியுற்று சீர்காழிக்கு வந்தார்.

அவருடைய வருகையை அறிந்த ஞானசம்பந்தர் அச்சிவனடியாரை வரவேற்று தோணிபுரத்து திருக்கோவிலுக்குச் சென்று இறைவனாரை வழிபட்டு யாழ்பாணரின் யாழிசை கேட்டு மகிழ்ந்தார்.

பின்னர் யாழ்பாணரும் அவர்தம் மனைவியாரும் தங்கும் பொருட்டு சீர்காழியில் அவர்களுக்கு தக்க இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்தார்.

அதன்பின்னர் யாழ்பாணர் ஞானசம்பந்தரின் பதிகங்களை யாழில் மீட்டு மகிழ்ந்தார். யாழ் இசையோடு பதிகங்களைக் கேட்போருக்கு தேனும் பாலும் போல் இருந்தது.

யாழ்பாணருக்கு ஞானசம்பந்தரின் பதிகங்களை யாழில் மீண்டுவதில் பேருவகை ஏற்பட்டது. ஆதலால் சம்பந்தரிடம் பதிங்களை யாழில் மீட்டும் இன்பத்தை எப்போதும் தனக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். சம்பந்தரும் அதற்கு உடனிசைந்தார்.

அது முதல் சம்பந்தர் பதிகங்களைப் பாடும் போது அதற்கேற்ப யாழ்ப்பாணர் யாழிசைப்பது வழக்கமாயிற்று.

தில்லையில் வழிபாடு

சம்பந்தருக்கு தில்லை சென்று ஆனந்தக்கூத்தரை வழிபட ஆசை ஏற்பட்டது. ஆதலால் தந்தையோடும் யாழ்ப்பாணரோடும் தில்லைக்குச் சென்றார்.

தில்லை ஆலயத்தின் தென்வாயிலின் வழியாக உள்ளே சென்று ஆனந்தக்கூத்தரை கண்குளிர வழிபட்டு ‘கற்றாங் கெரிஓம்பிக்’ எனத் தொடங்கும் பதிகம் பாடி வழிபட்டு திருவேட்களம் சென்று தங்கினார். பின்னர் மீண்டும் தில்லை வந்து ‘ஆடினாய் நறு நெய்யேயாடு’ என்னும் திருப்பதிகம் பாடி வழிபட்டார்.

முத்துச் சிவிகை, குடை, சின்னம் பெறல்

தில்லையில் ஆடலரசனை வழிபட்ட ஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு வேறு சிவதலங்களுக்குச் செல்ல விரும்பினார்.

யாழ்ப்பாணர் தாம் பிறந்த திருஎருக்கத்தம்புலியூருக்கு எழுந்தருளுமாறு சம்பந்தரை வேண்ட அவ்வாறே எருக்கத்தம்புலியூர் இறைவனாரை பதிகம்பாடி வழிபட்டு வெள்ளாற்றங்கரையிலுள்ள விருத்தாசலம் உள்ளிட்ட தலங்களை வழிபட்டார்.

இவ்வாறு திருதலயாத்திரை செல்லுகையில் சில இடங்களுக்கு ஞானசம்பந்தர் தந்தையின் தோள்மீது அமர்ந்து செல்வார். பல இடங்களுக்கு நடந்தே செல்வார். அவ்வாறு செல்லுகையில் திருநெல்வாயில் அரத்துறையை தரிக்க ஞானசம்பந்தர் விருப்பம் கொண்டு நடந்தே செல்லலானார்.

குழந்தையின் தாமரைதிருவடி நோகுவது கண்டு சிவபாத இருதயருக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. ஆனால் சம்பந்தர் அதனைப் பொருட்படுத்தாது அரத்துறை நாதரை வழிபடும் எண்ணத்திலேயே நடந்து சென்றார்.

அரத்துறை செல்லும்வழியில் மாறன்பாடி என்னும் இடத்தில் இரவில் இளைப்பாற சம்பந்தர் அடியவர் கூட்டதினருடன் தங்கினார்.

ஞானசம்பந்தரின் தளிர்கால்கள் நோகுவதைக் கண்ட அரத்துறை சிவனார் அரத்துறை அந்தணர் கனவில் தோன்றி “முத்துச்சிவிகை, முத்துக்குடை, சின்னங்கள் ஆகியவை கோவில் உட்புறத்தே உள்ளன. மாறன்பாடியில் இருக்கும் சம்பந்தனிடம் அவற்றை அளிப்பீர்களாக” என்று ஆணையிட்டார்.

கோவில் அந்தணர்கள் இறைவன் கனவில் தங்களுக்கு இட்ட ஆணையை ஒருவரிடம் ஒருவர் கூறி மகிழ்ந்தனர்.

சம்பந்தரின் கனவிலும் தோன்றிய இறைவனார் முத்துக்குடை, முத்து சிவிகை மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை ஏற்று கோவிலுக்கு வருமாறு கட்டளையிட்டார்.

இறையன்பினை உணர்ந்ததும் சம்பந்தர் ஆனந்தப்பட்டார். தந்தையாரிடமும், அடியவர்களிடம் இறைவனின் கருணையை வியந்து உரைத்தார்.

விடியல்காலையில் அரத்துறை அந்தணர்கள் இறைவனின் அன்பு பரிசுகளுடன் ஞானசம்பந்தரை மாறன்பாடியில் கண்டு இறைஆணை பற்றிக் கூறினர்.

இறைவனின் கருணையை வியந்து சம்பந்தர் ‘எந்தை ஈசன்’ எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி திருவைந்தெழுத்தை ஓதி முத்துசிவிகையில் (முத்துப் பல்லக்கு) ஏறி அரத்துறை நோக்கிப் புறப்பட்டார்.

அரத்துறை நாதனை கண்டு போற்றிப் பதிகங்கள் பாடினார். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் சீர்காழிக்கு புறப்பட்டார் சம்பந்தர்.

வழியில் பழுவூர், விசயமங்கை, திருப்புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், திருப்பந்தணை நல்லூர், ஓமாம்புலியூர், திருவாழ்கொளிபுத்தூர், கடம்பூர், திருநாரையூர், திருக்கருப்பறியலூர் முதலிய தலங்களை வழிபட்டு சீர்காழியை அடைந்தார்.

சீர்காழியில் தங்கியிருந்து அத்தல இறைவனை பதிகங்கள் பாடி வழிபட்டு வரலானார்.

சம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. ஆதலால் அவருக்கு உபநயச் சடங்கு நடத்தப்பட்டது. அப்போது சடங்கிற்கு வந்த அந்தணர்கள் முன் வேத மந்திரங்கள் பலவற்றை சொல்லி அங்கியிருந்தோர்களை வியப்பில் ஆழ்த்தினார் சம்பந்தர்.

மறையவர்களுக்கு மந்திரங்களில் இருந்த ஐயங்களைப் போக்கினார். மந்திரங்களில் எல்லாம் தலைசிறந்தது திருவைந்தெழுத்து என்பதை உணர்த்தி ‘துஞ்சலும் துஞ்சல்’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

அப்பர் சம்பந்தரைச் சந்தித்தல்

திருஞானசம்பந்தரின் புகழ் எங்கும் பரவியது. அவரின் புகழினைக் கேள்வியுற்ற அப்பர் பெருமான் அவரை சந்திக்கும் ஆர்வம் கொண்டு சீர்காழிக்கு பயணமானார். அப்பரின் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் அவரை எதிர்கொண்டு அழைத்து தோணிப்புரத்து திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் இறைவனை வழிபட்டு பின்னர் சம்பந்தரின் இல்லத்திற்கு திரும்பினர். அங்கு அப்பருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சீர்காழியில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு பிற சிவதலங்களை தரிசிக்க புறப்பட்டுச் சென்றார்.

ஞானசம்பந்தர் தோணியப்பரை செந்தமிழ் மாலை விகற்பங்களான திருமொழிமாற்று, திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம், திருஏக பாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை, திருவிராகம் போன்ற பலத் திருப்பதிகங்களைப் பாடினார். இப்பதிகங்கள் வீடுபேற்றிக்கான சன்மார்க்க மூலப்பதிகங்களாக விளங்குகின்றன.

முயலகன் நோய் தீர்த்தல்

ஞானசம்பந்தர் பிற சிவதலங்களை தரிசிக்கும் நோக்கில் தந்தையாருடனும், யாழ்பாண தம்பதியருடனும் தலயாத்திரை புறப்பட்டார். திருத்தல யாத்திரையின் போது அவ்வவ் ஊர்மக்கள் திரண்டு வந்து ஞானசம்பந்தரை போற்றியதோடு அவருடைய பதிகங்களைக் கேட்டு பேருவகை அடைந்தனர்.

சோழ நாட்டு தலங்களை தரிசிக்கும்போது காவிரி வடகரையில் உள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்தார் சம்பந்தர்.

அக்காலத்தில் மழவ நாட்டினை கொல்லி மழவன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் முயலகன் எனப்படும் வலிப்பு நோயால் மிகவும் துன்பமடைந்தாள்.

அதனைத் தீர்க்க மருந்தாலும், மந்திர தந்திரத்தாலும் குணப்படுத்த இயலவில்லை. ஆதலால் பாச்சிலாச்சிராம இறைவனே அவளைக் குணப்படுத்தட்டும் என்று எண்ணி கோவில் வாயிலில் அவளைக் கிடத்தி வைத்திருந்தான் கொல்லி மழவன்.

அப்போதுதான் சம்பந்தர் தம் தொண்டர்களுடன் பாச்சிலாச்சிராம் வந்தார். ஆவரின் வருகையை அறிந்த கொல்லி மழவன் சம்பந்தரை உரிய மரியாதைகளுடன் எதிர்கொண்டு திருக்கோவிலுக்கு அழைத்து வந்தான்.

கோவிலை அடைந்ததும் ஞானசம்பந்தர் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்ணைக் கண்டார். கொல்லி மழவன் அவளைப் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தான்.

அப்பெண்ணின் நிலையைக் கண்டு மனமிரங்கி பாச்சிலாச்சிராத்து இறைவனாரை போற்றி அவளுக்கு அருளுமாறு ‘துணிவளர் திங்கள்’ என்னும் திருப்பதிகம் பாடினார்.

திருஞானசம்பந்தரின் திருப்பதிகம் முடிந்ததும் அப்பெண் நோய் குணமாகி சம்பந்தரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினாள். கொல்லி மழவனும் மகளின் நோய் தீர்த்த பெருமானாரின் திருவடிகளைப் பணிந்தான்.
அங்கிருந்தோர் ஞானசம்பந்தர் வாழ்த்தினர்.

பின்னர் திருஞானசம்பந்தர் பாச்சிலாச்சிராத்து இறைவனாரை வணங்கி அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களை தரிசித்துவிட்டு திருச்செங்கோட்டை அடைந்தார்.

குளிர்சுரம் போக்கல்

திருச்செங்கோட்டிற்கு கொடிமாடச் செங்குன்றூர் என்றொரு பெயர் உண்டு. அங்கிருக்கும் பாதொரு பாகனாரை வணங்கி பின்னர் பவானியாகிய திருநணாக்குச் சென்று பதிகம் பாடி மீண்டும் திருச்செங்கோட்டிற்கு வந்தார்.

அப்போது பனிகாலம் தொடங்கியது. அடியவர்கள் பலர் பனியால் குளிர் சுரத்திற்கு ஆளானார்கள்.

அதனைக் கண்ட சம்பந்தர் ‘இந்நோயை இக்காலத்துக்கு இயல்பானாலும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது’ என்று கூறினார்.

பின்னர் ‘அவ்வினைக் கிவ்வினை யாம் என்று சொல்லும்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இப்பதிகப் பாடல்கள் யாவும் ‘திருநீலகண்டம்’ என்றே முடியும். ஆதலால் இப்பதிகம் திருநீலகண்ட பதிகம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

இப்பதிகப் பாடல்களைப் பாடி முடித்ததும் அடியவர்களைப் பற்றியிருந்த குளிர்சுரம் நீங்கியது. அத்தோடு அவ்வூர் மக்களும் குளிர்சுர நோயால் பாதிக்கபடாமல் இருந்ததோடு, வழக்கமாகத் தோன்றும் அந்நோய் ஒழிந்தது.

அங்கிருந்து புறப்பட்டு திருபாண்டிக்கொடுமுடி வந்து இறைவனைப் பதிகம் பாடி வணங்கி பின்னர் வெஞ்சமாக்கூடல், கருவூர் என்னும் கொங்குநாட்டுத் தலங்களைத் தரிசித்துவிட்டு மீண்டும் கிழக்கே சோழநாட்டுத் தலங்களை தரிசிக்கப் புறப்பட்டார்.

இரத்தினகிரியாகிய வாட்போக்கி, திருப்பராய்த் துறை, திருவாலந்துறை, திருச்செந்துறை, திருகற்குடி முதலிய தலங்களை வணங்கி திருவானைக் காவலை அடைந்து பதிகம் பாடி போற்றினார். அப்பதிகப் பாடல் ஒன்றில் கோசெங்கட் சோழன் இறையருள் பெற்றதை குறிப்பிடுகிறார்.

முத்துப்பந்தல் பெற்றது

அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களை தரிசித்துவிட்டு திருவலஞ்சுழியை அடைந்தார். அப்போது கோடைக் காலம் தொடங்கிற்று. வெயில் சுட்டெரித்தது. சம்பந்தர் திருசத்திமுற்றம் வந்து தரிசித்துவிட்டு பட்டீஸ்வரம் நோக்கி நடந்து செல்லலானார்.

அப்போது அவரின் மேல் வெயில் சுட்டெரித்தது. அதனைக் கண்ட பட்டீஸ்சுவரர் சிவகணத்தைக் கொண்டு முத்து பந்தல் கொண்டு நிழல் பரப்பச் செய்தார்.

அப்பூதகணம் இறைஆணையால் முத்துப்பந்தலைப் பரப்பியதோடு ‘இது பட்டீஸ்சுவரர் அருளிச் செய்தது’ என்று கூறியது.

வானத்தில் எழுந்த ஒலியையும், முத்துப் பந்தலையும் கண்டு சம்பந்தர் தரையில் வீழ்ந்து வணங்கினார்.

உடனே அடியவர்கள் முத்துப்பந்தலைப் பிடித்துக் கொண்டு நடக்கலானார்கள். அப்பந்தலின் நிழலில் நடந்து சென்று திருஞானசம்பந்தர் நாயனார் பட்டீஸ்வரரைப் போற்றி பதிகங்கள் பாடினார்.

எங்கே சென்றாலும் இறைவனின் திருவருளால் அற்புதங்கள் நிகழ்வதையும், சம்பந்தர் பெருமான் தமிழ்மறை பாடுவதையும் எல்லோரும் உருகிக் கொண்டாடினார்கள்.

உலவாக்கிழி பெற்றது

பட்டீஸ்சுவரத்திலிருந்து புறப்பட்டு சோழநாட்டு பல தலங்களையும் பாடிய ஞானசம்பந்தர் திருவாவடுத்துறையை அடைந்தார். அங்கிருந்தோர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து திருக்கோவிலை அடைந்தனர்.

இறைவனாரை வழிபட்டு பின்னர் அங்கே சிலகாலம் சம்பந்தர் தங்கியிருந்தார். ஆப்போது சிவபாதஇருதயர் உலகநலம் பெற வேள்வி ஒன்றினை நடத்த விரும்பினார். அதற்கு பொருள் வேண்டும் என்று சம்பந்தரிடம் கேட்டார்.

‘நமக்கு குறைவிலாச் செல்வம் இறைவன் அன்றோ’ என்று எண்ணினார். திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை நினைத்து ‘இடரினும் தளரினும்‘ எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.

பதிகம் முடிந்ததும் பூதம் ஒன்று தோன்றி ஒரு பீடத்தில் ஆயிரம் பொன் உள்ள உலவாக்கிழி ஒன்றை வைத்தது. ‘இது இறைவனால் அளிக்கப்பட்ட அள்ள அள்ள குறையாத பொற்கிழி’ என்று கூறி மறைந்தது.

அவ்வுலவாக்கிழியை ‘சிவனாரை முதல்வராக் கொண்டு செய்யும் வேள்விக்காக இறைவன் கொடுத்தது’ என்று சிவபாதஇருதயரிடம் கொடுத்தார் ஞானசம்பந்தர்.

அதனைப் பெற்றுக் கொண்ட சிவபாதஇருதயர் வேள்வி செய்யும் பொருட்டு சீர்காழி திரும்பினார்.

யாழ்மூரிப் பாடியது

திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட பல தலங்களைத் தரிசித்துவிட்டு திருதர்மாபுரத்துக்கு வந்தார். தர்மாபுரம் திருநீலகண்ட யாழ்பாணர் தாயார் பிறந்த ஊர். அங்கியிருந்த யாழ்பாணரின் உறவினர்கள் அவர்களை வரவேற்றனர்.

“ஞானசம்பந்தப் பெருமான் தாம் பாடியருளும் திருப்பதிகங்களை யாழில் அமைத்து வாசிக்கும் பெரும்பேற்றினை எனக்கு அருளியுள்ளார்.” என்று அவர்களிடம் யாழ்ப்பாணர் தெரிவித்தார்.

அதற்கு அவர்கள் “தாங்கள் யாழில் ஞானசம்பந்தரின் பாடல்களை இசைப்பதாலேதான் அவை எங்கும் பரவி புகழ் பெறுகின்றன” என்றனர்.

அதனைக் கேட்ட யாழ்ப்பாணர் நடுநடுங்கிப் போனார். ‘என்ன அறியாமை இது’ என்று வருந்தினார். உடனே ஞானசம்பந்தரை வணங்கி “தாங்கள் யாழில் இசைக்க இயலாத வகையில் திருப்பதிகம் ஒன்றைப் பாடியருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஞானசம்பந்தரும் இறைவனின் திருவருளை வழுத்தி ‘மாதர் மடப்பிடி’ எனத் தொடங்கும் பதிகத்தை அருளிச் செய்தார். அப்பதிகத்தை யாழில் இசைக்க முயன்றும் இயலாமல் போனது.

“இப்பெரியோருடைய பதிகத்தை யாழிலில் இசைப்பேன் என நான் கூறிய வார்த்தைகள்தான் எனக்கு செருக்கினை ஏற்படுத்திவிட்டது. இனி இதனை உடைத்து விடுவேன்.” என்றபடி யாழினை உடைக்கப் போனார்.

அதனைக் கண்ட சம்பந்தர் பெருமான் “இறைவனின் திருவருள் பெருமையை இதில் அடக்க முடியுமா? இந்தக் கருவியின் அளவுக்கு எவை அடக்குமோ, அவற்றை வழக்கம்போல் வாசித்து வருவீராக” என்று கூறினார்.

யாழ்பாணரின் சுற்றத்தாரும் தங்களுடைய செயல்களுக்காக வருந்தினர். அதிலிருந்து யாழ்பாணரும் தம்மால் முடிந்தளவுக்கு ஞானசம்பந்தரின் பதிகங்களை யாழில் இசைத்து வரலானார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சம்பந்தர் பல தலங்களை வழிபட்டு திருசாத்தமங்கை வந்து அங்கே வாழ்ந்து வந்த திருநீலநக்கரை கண்டு, அவர் வழிபட்டு உபசரிக்க, அங்கேயே தங்கி இறைவனை தரிசித்தார்.

பிறகு திருசெங்காட்டங்குடியை அணுகிய ஞானசம்பந்தரை சிறுதொண்டர் வரவேற்று கணபதீச்சரம் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அமைச்சராக இருந்த சிறுதொண்டர் அடியாராகிய திகழ்ந்ததை தம்முடைய பதிகம் ஒன்றில் சிறப்பித்துள்ளார் சம்பந்தர் பெருமான்.

பாம்பு தீண்டிய வணிகனை உயிர்ப்பித்தது

திருச்செங்காட்டங்குடியில் சம்பந்தர் தங்கியிருக்கையில் அருகிலுள்ள திருமருகல் என்னும் தலத்து இறைவனை தரிசிக்கச் சென்றார். அங்கே பதிகம் பாடி சில நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது ஒருநாள் “அரவம் அணிந்த பெருமானே, இறந்த காமனை அவனுடைய மனைவி இரதி வேண்ட உயிர்ப்பித்த பெருங்கருணையே, நீதான் எங்களைக் காக்க வேண்டும்” என்று பெண்ணொருத்தி திருக்கோவிலின் அருகே நின்று அரற்றிக் கொண்டிருந்தாள்.

மருகல் பெருமானை வணங்க சென்ற ஞானசம்பந்தரின் காதில் அவளின் அழுகுரல் கேட்டது. விரைந்து அவளிடம் சென்ற பெருமானார் ‘என்ன நிகழ்ந்தது?’ என்று வினவினார்.

அதற்கு அவள் அருகில் இறந்த கிடந்த இளைஞன் ஒருவனைக் காட்டி “இவர் எனக்கு அத்தை மகன். வைப்பூரைச் சார்ந்த தாமனின் புதல்வி நான்.

என்னுடைய தந்தை இவருக்கு என்னுடைய மூத்த சகோதரியை திருமணம் செய்விப்பதாகக் கூறியிருந்தார். இவரைவிட வசதியான இடம் கிடைத்ததும் அவளை அவ்விடத்தில் மணம் முடித்துவிட்டு அடுத்தவளை திருமணம் செய்விப்பதாகக் கூறினார்.

இவ்வாறாக ஆறு மூத்த சகோதரிகளுக்கும் வேறு இடத்தில் திருமணம் செய்துவிட்டார். இவருடைய வருத்தமான நிலையைக் கண்ட நான் இவரை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு தம் தந்தைக்குத் தெரியாமல் இவருடன் வீட்டைவிட்டு வெளியேறினேன்.

இங்கு ஒருமடத்தில் தங்கியிருக்கையில் இவரை அரவம் ஒன்று தீண்டிவிட்டது. ஆதலால் தலைக்கு நஞ்சு ஏறி இறந்து விட்டார். என்னுடைய துயரைத் தீர்ப்பார் யாரும் இல்லை. இவர் இல்லாமல் இனி எங்கனம் வாழ்வேன்’ என்று அழுது அரற்றினாள்.

அவளின் நிலையைக் கண்டு திருமகற்பெருமானை வழுத்தி ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி முடித்தார் சம்பந்தர்.

அப்போதே அவ்வணிகன் விடம் தீர்ந்து உறங்கி எழுவது போல எழுந்து சம்பந்தரை வணங்கினான். அவ்விருவருக்கும் திருமகற்பெருமானார் முன்பு மணம் முடித்து வாழ்த்தி அனுப்பினார் சம்பந்தர்.

பிறகு சிறுதொண்டர் வேண்டுகோளை ஏற்று திருச்செங்காட்டகுடிக்கு சென்று சிலநாட்கள் இருந்து விட்டு திருப்புகலூரை அடைந்தார். அங்கே முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார்.

அப்பருடன் தலயாத்திரை

அப்போது அப்பர் திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கிவிட்டு திருப்புகலூரை அடைந்தார். அப்பரை எதிர்கொண்டு அழைத்து திருப்புகலூர் இறைவனாரை வணங்கிவிட்டு திருவாரூர் தரிசனம் பற்றி அப்பரிடம் கேட்டார்.

அப்பரும் திருவாரூரின் பெருமை பற்றி பதிகம் ஒன்றைப் பாட அதனைக் கேட்ட திருஞானசம்பந்தர் நாயனார் அப்பரை திருப்புகலூரிலே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டு திருவாரூர் சென்றார்.

புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி பதிகம் பாடி வழிபட்டு சில நாட்கள் தங்கியிருந்து மீண்டும் திருப்புகலூரை அடைந்தார்.

அங்கியிருந்து அவ்விருவரும் ஒருங்கே திருத்தல யாத்திரையைத் தொடங்கினர். அப்பருடன் சம்பந்தர் நடந்தே சென்றார்.

அதனைக் கண்ட அப்பமூர்த்தியார் சம்பந்தரிடம் “தாங்கள் முத்து சிவிகையில் (முத்து பல்லக்கில்) அமர்ந்தே தலயாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதே இறைஆணை. ஆதாலால் தாங்கள் முத்துசிவிகையில் எழுந்தருள வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

அப்பர் நடந்து செல்ல தாம் சிவிகையில் செல்வது என்பதில் ஞானசம்பந்தருக்கு உடன்பாடில்லை.

இருப்பினும் இறைஆணையை எண்ணி அப்பரிடம் “அப்படியானால் தாங்கள் முன்னே நடந்து செல்லுங்கள். நான் பின்னே சிவிகையில் வருகிறேன்.” என்றார்.

அதன்பின்னர் அப்பர் ஒருதலத்தை அடைந்த பின்பு சம்பந்தர் பின்னே அத்தலத்திற்கு சிவிகையில் சென்றார். திருவம்பர், திருக்கடவூர் ஆகிய தலங்களை அவ்வாறே சென்று தரிசித்தனர்.

திருவீமிழலையும் திருமறைகாடும்

பல தலங்களை தரிசித்துவிட்டு அப்பரும் சம்பந்தரும் திருவீமிழலையை அடைந்தனர். திருஞானசம்பந்தர் திருவீமிழலையில் இருப்பதை அறிந்த சீர்காழி வேதியர்கள் அங்கு வந்து சீர்காழி எழுந்தருள சம்பந்தரிடம் வேண்டினர்.

திருவீமிழலைப் பெருமானிடம் விடைபெற்று நாளை புறப்படுவோம் என்று அவர்களிடம் திருஞானசம்பந்தர் நாயனார் கூறினார். அன்று இரவே சம்பந்தரின் கனவில் தோணிப்பர் தோன்றி ‘இத்தலத்தின் விண்ணிழி விமானக் கோயிலில் நாளை நம்முடைய காட்சியைக் காட்டுவோம்.’ என்றருளினார்.

மறுநாள் காலையில் திருவீமிழலைக் கோவிலில் ஞானசம்பந்தர் சீர்காழிப் பெருமானாரின் அழகுக்காட்சியைக் கண்டு பணிந்து இன்புற்றார். ‘மைம்மரு பூங்குழல்’ என்ற பதிகத்தைப் பாடினார்.

பின்னர் அங்கிருந்த சீர்காழி வேதியர்களிடம் “சிவதலயாத்திரை தடைபடக்கூடாது என்பதற்காகவே இக்கோவிலில் சீர்காழிப் பெருமான் திருக்காட்சி நல்கினான். ஆதலால் தாங்கள் எல்லோரும் சீர்காழி செல்லுங்கள்.” என்று சொல்ல அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

அப்பரும் சம்பந்தரும் நாள்தோறும் சீர்காழிப் பெருமானை தரிசித்து பதிகங்கள் பாடி அங்கே தம்தம் மடங்களில் தங்கியிருந்தனர். அப்போது அவ்வூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

பஞ்சத்தினால் அடியவர்களும் மக்களும் உணவின்றி வருந்தினர். அப்பரும் சம்பந்தரும் இறைவனிடம் மக்களின் துயர்தீர்க்க அருளுமாறு வேண்டினர்.

அப்போது ஒருநாள் திருவீமிழலை நாதர் அப்பர் மற்றும் சம்பந்தர் கனவில் தோன்றி “வருந்த வேண்டாம். மக்களின் பசியைப் போக்க நாள்தோறும் கிழக்கு மற்றும் மேற்கு பீடங்களில் ஒவ்வொரு காசு வைப்போம். அவற்றைக் கொண்டு மக்களின் பசிப்பிணியைப் போக்குங்கள்.” என்று அருளினார்.

இறைஆணையின்படி சம்பந்தர் கிழக்கு பீடத்திலும், அப்பர் மேற்கு பீடத்திலும் பொற்காசினைப் பெற்று அதனைக் கொண்டு தம்தம் மடங்களில் உணவிட்டு அடியார்கள் மற்றும் மக்களின் பசியைப் போக்கினர்.

அப்போது அப்பர் மடத்தில் உணவு விரைவாகவும் தான் தங்கியிருந்த மடத்தில் உணவு தாமதமாக வழங்கப்படுவதையும் சம்பந்தர் கவனித்தார்.

உணவு தாமதத்திற்கான காரணத்தை அங்கிருந்தோரிடம் வினவ, அவர்கள் “நம்முடைய காசு வாசியுள்ளது எனக் கூறி பொருட்கள் தருவதைத் தாமதிக்கின்றனர்.” என்றனர்.

அப்பர் உழவாரப்பணியால் (உழைத்து) வாசி தீர்ந்த காசினைப் பெறுகிறார். அவர் தொண்டு செய்து பெறும் காசினை நான் பாடும் பணி செய்து பெறுவேன் என்று மனதில் எண்ணிய சம்பந்தர் பெருமான் திருவீமிழலைக் கோவிலை அடைந்தார்.

வாசி தீரவே காசு நல்குவீர்‘ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். அதுமுதல் அவருக்கு வாசி தீர்ந்த நல்ல காசு கிடைக்கலாயிற்று. வாசி தீர்ந்த காசால் பொருட்களை விரைவாகப் பெறப்பட்டு தக்க நேரத்தில் சம்பந்தர் மடத்திலும் மக்களின் பசி போக்கப்பட்டது.

(வாசி என்றால் வேறுபாடு என்றும் பொருள் உண்டு)

இறையருளால் அங்கு விரைவில் மழை பெய்து பஞ்சம் நீங்கி மக்கள் வாழ்வு செழித்தது. பின்னர் திருவீமிழலையில் இருந்து அப்பரும் சம்பந்தரும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டை அடைந்தனர்.

மறைக்காட்டீசுவரரைத் தரிசிக்க கோவிலை அவ்விருவரும் அடைந்தனர். திருக்கோயிலின் திருவாயில் அடைக்கப்பட்டிருந்தது. மக்கள் வேறு ஒருவாயிலைப் பயன்படுத்தி திருக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அது பற்றி அங்கிருந்தோரிடம் விசாரிக்க வேதங்கள் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு செல்லும்போது திருக்கோவிலின் தலைவாயிலை அடைத்துவிட்டு சென்று விட்டன. ஆதலால் தாங்கள் மற்றொரு வாயிலைப் பயன்படுத்துவாத அவர்கள் தெரிவித்தனர்.

அதனைக் கேட்ட சம்பந்தர் பெருமான் அப்பரிடம் திருக்கதவம் திறக்க பதிகம் பாடும்படி கேட்டுக் கொண்டார். அப்பரும் இறைவனின் திருவருளை நினைத்து பதிகம் ஒன்றைப் பாடினார்.

பதிகத்தின் முதல் பத்து பாடல்கள் பாடியும் திருக்கதவம் திறக்கவில்லை. அதனால் அடுத்த பாடல் ஒன்றில் தம்முடைய வருத்தத்தைத் தெரிவித்து பாடினார். அப்பாடல் முடிந்ததும் திருக்கதவம் திறந்து கொண்டது.
அதனைக் கண்ட எல்லோரும் ஆரவாரித்து உள்ளே சென்று இறைவனை வணங்கினர்.

பின்னர் வெளியே வந்ததும் அப்பர் ஞானசம்பந்த பெருமானிடம் “இத்திருக்கதவம் மீண்டும் அடைக்கவும் மூடவும் எளிதாக இருக்க வேண்டும். ஆதலால் தாங்கள் பாடி இதனைச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

திருஞானசம்பந்தர் நாயனார் ‘சதுரம்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். முதல் பாடல் முடிந்ததும் திருக்கதவம் மூடிக்கொண்டது. அதுமுதல் திருவாயில் எளிதாக திறக்கவும் மூடவும் செய்தது.

திருமறைக்காட்டில் தங்கியிருந்த போது இறைவனார் அப்பரை திருவாய்மூருக்கு வருமாறு பணித்தார். இறைஆணைக்கிணங்க அப்பர் திருவாய்மூரை அடைந்தார். ஆதனை அறிந்த சம்பந்தர் திருவாய்மூருக்குச் சென்று இறைதரிசனம் பெற்றார்.

பின்னர் அப்பருடன் திருமறைக்காடு திரும்பி அங்கே தங்கியிருந்தார் சம்பந்தர்.

மதுரைப் பயணம்

திருமறைக்காட்டில் சம்பந்தர் தங்கயிருந்த சமயத்தில் மதுரையை கூன் பாண்டியன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு பிறவிலேயே முதுகில் கூன் இருந்ததால் நெடுமாறன் என்ற அவனுடைய இயற்பெயர் மருவி கூன் பாண்டியன் என்றே அழைக்கப்பட்டான்.

அவனுடைய மனைவியார் மங்கையர்கரசியார். அமைச்சர் குலச்சிறையார். கூன் பாண்டியனுக்கு சமணத்தின் மேல் பற்று உண்டாக பாண்டிய நாட்டு மக்களில் பெரும்பாலோர் அரசனைப் பின்பற்றி சமணத்தைத் தழுவினர்.

ஆனால் பாண்டிமாதேவியும் அமைச்சரும் சைவர்களாகவே இருந்தனர். சைவத்தைப் பின்பற்றியதால் அவ்விருவருக்கும் சைவ மக்களுக்கும் சமணர்கள் இடையூறுகள் விளைவித்தனர். சைவம் தனது ஒளியை பாண்டிய நாட்டில் இழக்க ஆரம்பித்தது.

இதனைக் கண்ட அரசியாரும் அமைச்சரும் எப்படியாவது சைவத்தை பாண்டிய நாட்டில் மீண்டும் தழைக்கச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அப்போதுதான் திருஞானசம்பந்தர் இறையருளல் பெற்று பல அற்புதங்கள் நிகழ்த்துவதையும் அவர் தற்போது திருமறைக்காட்டில் இருப்பதையும் கேட்டறிந்தனர். ஆதலால் தூதுவர்கள் மூலம் திருஞானசம்பந்தர் நாயனார் பாண்டிய நாட்டிற்கு வந்து மீண்டும் சைவம் தழைக்கச் செய்ய வேண்டுகோள் அனுப்பினர்.

சம்பந்தரைச் சந்தித்த தூதுவர்கள் நடந்தவற்றை விளக்கி பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளுமாறு கோரிக்கை எழுப்பினர். சம்பந்தரும் மதுரை வருவதாக கூறி அனுப்பினார்.

சமணர்களின் பிடியில் இருக்கும் மதுரையில் இறையருளால் சைவம் தழைக்க தாம் மதுரை செல்ல இருப்பாதாக அப்பரிடம் சம்பந்தர் தெரிவித்தார்.

அதனைக் கேட்டதும் அப்பர் “சமணர்கள் மிகவும் பொல்லாதவர்கள். அவர்கள் தங்களின் சுயநலத்திற்காக எதனையும் செய்யத் துணிவார்கள். அத்தோடு நாளும் கோளும் தற்போது நன்றாக இல்லை. ஆதலால் தாங்கள் தற்போது மதுரை செல்ல வேண்டாம்.” என்று தடுத்தார்.

அதனைக் கேட்ட சம்பந்தர் இறையடியார்களான தங்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று கூறி ‘வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்‘ என்னும் பதிகம் பாடி மதுரைக் கிளம்பினார்.

ஞானசம்பந்தரின் வருகை அறிந்த மங்கரையர்கரசியார் பாண்டிய நாட்டு எல்லையிலேயே அவரை வரவேற்க அமைச்சர் குலச்சிறை நாயனாரை அனுப்பி வைத்தார்.

மதுரை எல்லையில் சம்பந்தரை வரவேற்ற குலச்சிறையார் அவரை ஆலவாய் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஆலவாய் கோபுரத்தை தூரத்தில் காணும் போதே கீழே விழுந்து வணங்கிய சம்பந்தர் ‘மங்கையர்கரசி வளவர்கோன் பாவை’ எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார்.

பின்னர் திருக்கோவிலுக்குள் சென்று இறைவரை வணங்கி பதிகங்கள் பாடி வழிபட்டார். திருக்கோவிலில் இருந்து வெளியேறிய சம்பந்தரை வரவேற்ற அரசியார் மதுரையில் மீண்டும் சைவத்தை தழைக்க வேண்டுவன செய்யுமாறு வேண்டுகொள் வைத்தார்.

சம்பந்தபெருமான் அவரிடம் “இறையருளால் சைவம் மீண்டும் மதுரையில் தழைக்கும்” என்று உறுதிபடத் தெரிவித்து திருமடம் ஒன்றில் தங்கினார். அரசியார் கட்டளைப்படி குலச்சிறை நாயனார் அம்மடத்தில் அவருக்கு அறுசுவையுடன் திருவமுது செய்வித்தார்.

சம்பந்தரின் வருகையை அறிந்த சமணர்கள் அரசனிடம் சூழ்ச்சியாகப் பேசி சம்பந்தரை மதுரையில் இருந்து விரட்ட தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கப் போவதாகக் கூறினர்.

சமணத்தின் பால் பற்று கொண்ட நெடுமாறப் பாண்டியனும் சமணர்களின் சூழ்ச்சிக்கு அடிபணிந்து அவர்களின் விருப்பத்திற்கு இசைந்தான்.

சமணர்கள் திட்டமிட்டபடி சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். இறையருளால் திருஞானசம்பந்தர் நாயனார் அத்தீயிலிருந்து உயிர் தப்பினார்.

‘மக்களின் குற்றச் செயல் மன்னனையே சாரும். ஆதலால் சமணர்கள் வைத்த இத்தீயானது பாண்டியனை மெதுவாகப் பற்றட்டும்’ என்று எண்ணி ‘சேய்யனே திருஆலவாய் மேவிய’ எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார்.

சமணர்கள் வைத்த தீயானது பாண்டியனைச் சென்று வெப்பு நோயாகப் பற்றியது. நெடுமாறன் கடுமையான வெப்பு நோயால் பாதிக்கப்பட்டு அரற்றினான்.

மன்னனின் நிலையைக் கண்ட அரசியார் மிகவும் வேதனை கொண்டார். இந்நோயைத் தீர்க்க வல்லவர் ஞானசம்பந்தரே என்று உணர்ந்தார்.

மன்னனிடம் தன்னுடைய கருத்தை வெளியிட, மன்னனும் சம்பந்தர் வந்து தன்னுடைய நோயைத் தீர்க்கட்டும் என்று உடனிசைந்தான்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்று சம்பந்தர் இறைஆணையைப் பெற்று அரண்மனைக்கு வருகை தந்தார். மன்னனின் வெப்புநோயைத் தீர்க்க சம்பந்தர் வந்திருக்கிறார் என்ற விவரம் அறிந்த சமணர்கள் மன்னனை அடைந்து தங்களாலும் வெப்பு நோயை தீர்க்க இயலும் என்று வாதிட்டனர்.

சமணர்கள் கூறியதைக் கேட்ட பாண்டியன் தம்முடைய இடதுபக்க வெப்புநொயை போக்குமாறு கூறினான். அவர்களும் மந்திரங்கள் கூறி மயிற்பீலியால் மன்னனின் இடப்புறத்தை தடவ முன்னிலும் அப்பக்கத்தின் வெப்பம் அதிகரித்தது.

அதனைக் கண்ட திருஞானசம்பந்தர் இறையருளை வேண்டி ‘மந்திரமாவது நீறு‘ என்று பதிகம் பாடி திருநீற்றை எடுத்து மன்னனின் வலப்பக்கம் முழுவதும் பூசினார்.

மன்னனின் வலப்பக்க வெப்புநோய் நீங்கியஅதனைக் கண்ட பாண்டியன் தன்னுடைய இடப்பக்க நோயையும் தீர்க்குமாறு சம்பந்தரிடம் இறைஞ்சி வேண்டினான்.

சம்பந்தரும் இறைவனை வேண்டி மன்னனின் இடப்பக்க வெப்புநோயையும் தீர்த்தார். நோய் நீங்கியதும் பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் சம்பந்தரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.

அதனைக் கண்ட சமணர்கள் வாதில் வென்றால் மட்டுமே தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்வோம் என்று கூறினர்.

திருஞானசம்பந்தர் நாயனாரும் சமணர்களுடன் அனல் வாதம் மற்றும் புனல் வாதம் புரிய சம்மதித்தார்.

அனல் வாதம் மற்றும் புனல் வாதம்

சமணர்கள் மன்னனிடம் அவரவர் மதம் சார்ந்த நூல்களை தீயில் இட்டு இறுதியில் தீக்கிரையாமல் இருக்கும் நூலினைக் கொண்ட மதமே சிறந்தது. அதனையே மன்னன் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். திருஞானசம்பந்தரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

அனல் வாதத்திற்காக மன்னன் தீமூட்ட சொன்னான். சும்பந்தர் தாம் எழுதிய பதிகங்கள் கொண்ட ஏட்டைப் பிரித்தார். ‘போகம் ஆர்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் வந்தது.

அதனை எடுத்து ‘தளரிள வளர்ஒளி’ என்ற பதிகம் பாடி திருநள்ளாற்றுப் பதிகத்தை தீயில் இட்டார். அப்பதிகம் தீயில் கருகாமல் பச்சையாக நின்றது. அதனைக் கண்ட சமணர்கள் நடுங்கி தங்களுடைய ஏட்டினை தீயில் இட்டனர்.

சமணர்களின் ஏடு தீயில் வெந்தது. ச்ம்பந்தர் தீயில் இட்ட தம்முடைய ஏட்டினை எடுத்து அங்கிருந்தோரிடம் காட்டினார்.

அப்போதும் சமணர்கள் தங்களுடைய தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் சம்பந்தரைப் புனல் வாதம் செய்ய அழைத்தனர். சம்பந்தரும் அதற்கு இசைந்தார்.

இதனைக் கண்ட குலச்சிறையார் ‘இப்போட்டியிலும் சமணர்கள் தோற்றால் என்ன செய்வது?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமணர்கள் ‘கழுவிலேற்றுங்கள்’ என்றனர்.

ஒப்பந்தப்படி வைகை ஆற்றின் நீரில் சமணர்கள் தங்கள் மதம் சார்ந்த கருத்துக்களை எழுதி விட்டனர். சமணர்களின் ஏடு வைகை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

சம்பந்தர் இறைவரை வேண்டி ‘வாழ்க அந்தணர் வாழ்க ஆனினம் வீழ்க தன்புனல் வேந்தனும் ஓங்குக’ என்ற பதிகத்தை எழுதி ஏட்டினை வைகை ஆற்றில் விட்டார். சம்பந்தரின் ஏடு வைகை ஆற்று நீரினைக் கிழித்துக் கொண்டு ஆற்றோட்டத்திற்கு எதிர்திசையில் சென்றது.

ஏடு நீரினை எதிர்த்துச் செல்வதை எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். அப்போது பாண்டியனும் கூன் இருந்த காரணத்தால் தலையை நிமிர்த்தி எட்டினைப் பார்க்க முயன்றான்.

‘வேந்தனும் ஓங்குக’ என்ற சம்பந்தரின் வரிகளால் இறையருள் பெற்று அவனுடைய கூன் நிமிர்ந்தது. அது முதல் கூன் பாண்டியன் ‘நின்றசீர் நெடுமாறன்’ ஆனான்.

இந்த அற்புதங்களைக் கண்டதும் எல்லோரும் ‘அர அர’ என்று கோஷமிட்டனர். ஆற்றினை எதிர்த்து செல்லும் ஏட்டை எடுக்க குலச்சிறையார் குதிரையில் ஏறிக் கொண்டு சென்றார்.

அப்போது சம்பந்தர் ஓரிடத்தில் ஏடு நிற்கும் பொருட்டு இறைவனை நினைத்து பதிகம் ஒன்றைப் பாடினார். ஏடு கரை ஒதுங்கிய இடம் திருவேடகம் என்று அழைக்கப்பட்டது. கரை ஒதுங்கிய ஏட்டை எடுத்துக் கொண்டு குலச்சிறையார் மன்னனிடம் திரும்பி வந்தார்.

தோல்வியடைந்த சமணர்கள் கழுவிலேறி மடிந்தனர்.

திருஞானசம்பந்தர் நாயனார் நின்றசீர் நெடுமாறப் பாண்டியனோடும், பாண்டிமாதேவி மற்றும் குலச்சிறையாருடன் ஆலவாய் அண்ணலைச் சென்று வணங்கினார்.

பின்னர் சிலகாலம் மதுரையில் தங்கியிருந்து பதிகங்கள் பாடி ஆலவாய் அண்ணலை வழிபட்டு வந்தார். அப்போது சிவபாதஇருதயர் தம்முடைய புதல்வனைப் பார்க்க மதுரைக்கு வந்தார். தந்தையாரைக் கண்டதும் தோணியப்பரை நினைந்து பதிகம் ஒன்றினைப் பாடினார் ஞானசம்பந்தர்.

பிற பாண்டியநாட்டு தலங்களைத் தரிசிக்க எண்ணிய சம்பந்தர்பெருமான் பாண்டிய அரசன், அரசி மற்றும் அமைச்சரோடு திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், திருப்புத்தூர், திருப்பூவணம், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி, இராமேஸ்சுவரம் ஆகிய இடங்களை வழிபட்டார்.

இராமேசுவரத்தில் சிலகாலம் தங்கியிருந்து இலங்கையில் உள்ள திருக்கோணமலை, திருக்கேத்தீசுவரம் என்னும் தலங்களைப் பாடினார். பின்னர் திருவாடானை, திருப்புனவாயில் தலங்களை வழிபட்டு குலச்சிறையார் பிறந்த ஊராகிய மணமேற்குடிக்கு வந்து சிலநாட்கள் தங்கியிருந்துவிட்டு சோழநாட்டு தலங்களை தரிசிக்க புறப்பட்டார்.

ஆற்று வெள்ளத்தில் ஓடம் தானாகச் சென்றது

சோழநாட்டின் முள்ளிவாய் என்னும் ஆற்றின் கரையினை அடைந்தார். ஆற்றின் அக்கரையில் கொள்ளம்புதூர் என்ற தலம் இருந்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆதலால் ஓடக்காரர்கள் ஓடத்தினை ஓரிடத்தில் கட்டி வைத்திருந்தனர்.

கொள்ளம்புதூர் இறைவனாரை தரிசிக்க எண்ணம் கொண்ட சம்பந்தர் ஓடத்தை அவிழ்த்துவிட்டு அடியார்களோடு ஓடத்தில் அமர்ந்தார். ‘கொட்டமே கமழும்’ என்னும் பதிகத்தைப் பாட ஓடம் ஆற்றில் தானாக ஓடி கொள்ளம்புத்தூர் தலத்தை அடைந்தது.

கொள்ளம்புத்தூர் இறைவனை வணங்கி புறப்பட்டு திருநள்ளாற்றை அடைந்து கனல் வாதத்தில் வெல்லக் காரணமான திருநள்ளாற்றுப் பதிகத்தை அருளிய இறைவனை வணங்கி ‘பாடக மெல்லடி பாவையோடும்’ என்ற பதிகத்தைப் பாடி வழிபட்டார்.

புத்தர்களை வெல்லுதல்

அதன் பின்பு வேறு தலங்களை தரிசித்துவிட்டு போதிமங்கை என்னும் ஊரினை அடைந்தார். அடியார்கள் புடைசூழ ‘பரசமய கோளரி வந்தான்’ என்று விருதுகாளம் ஊத சம்பந்தர் முத்துச்சிவிகையில் எழுந்தருளினார்.

அவ்வூரில் இருந்த புத்த தலைவனான புத்தநந்தி திருஞானசம்பந்தர் நாயனாரை வாதத்திற்கு அழைத்தான். “எங்களை வெல்லாமல் நீங்கள் எப்படி விருதுகாளம் ஊதலாம்?” என்று பொங்கி எழுந்தான்.

அப்போது சம்பந்தர் இயற்றும் பதிகங்களை எழுதும் அடியவர் ஒருவர் கோபத்துடன் ‘புத்தநந்தி தலையில் இடி விழட்டும்’ என்று சபிக்க, புத்தநந்தி தலையில் இடிவிழுந்து மாண்டான். இதனைக் கண்ட புத்தர்கள் ஓடி ஒளிந்தனர்.

பின்னர் சாரி புத்தன் என்பவன் தலைமையில் ஒன்று திரண்டு சம்பந்தரை வாதிற்கு அழைத்தனர். சம்பந்தரிடம் சாரிபுத்தன் வாதில் தோற்றான். இதனால் புத்தர்கள் பலர் சைவத்திற்கு மாறினர். சிலர் அவ்வூரை விட்டு அகன்றனர்.

அங்கிருந்து புறப்பட்டு திருக்கடவூரை அடைந்து காலகாலனை வழிபட்டார் சம்பந்தர். அவருக்கு அப்பரைக் காணும் ஆவல் உண்டானது. திருப்பூருத்தியில் அப்பர் இருப்பதைக் கேள்வியுற்று அவரைக் காண திருப்பூந்திருத்திக்குச் செல்லலானார்.

திருப்பூந்திருத்தியில் இருந்த அப்பரடிகள் திருஞானசம்பந்தரின் வரவை அறிந்து சமணர்களை வாதில் வென்று வரும் அக்குழந்தையை வரவேற்க சென்றார். அடியார்களின் கூட்டத்தில் கலந்து சம்பந்தரின் முத்துசிவிகையை தோளில் சுமந்தார்.

எங்கு தேடியும் அப்பரைக் காணாது திகைத்த சம்பந்தர் “அப்பர் எங்கு இருக்கிறார்?” என்று கேட்க “ஒப்பற்ற தங்களைச் சுமக்கும் பேறு பெற்றேன்.” என்றபடி குரல் கொடுத்தார் அப்பர்.

“தாங்கள் இவ்வாறு செய்யலாமா?” என்ற கேள்வி கேட்ட சம்பந்தரிடம் “தங்களுக்கு அடியேன் வேறு எவ்வாறு திருத்தொண்டு செய்வது?” என்று கூறினார் அப்பர்.

பின்னர் இருவரும் திருப்பூந்திருத்தி இறைவனாரை வணங்கினர். பின்னர் திருஞானசம்பந்தர் மதுரையில் நிகழ்ந்தவைகளை அப்பரிடம் எடுத்துக் கூறினார். அப்பர் தன்னுடைய தொண்டை நாட்டு தலத்தரிசனத்தைப் பற்றிக் கூறினார்.

அதனைக் கேட்ட சம்பந்தருக்கு தொண்டைநாட்டு தலங்களை தரிசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அப்பருக்கு பாண்டிய நாட்டுத் தலங்களை காணும் ஆர்வம் உண்டானது.

அப்பரிடம் விடைபெற்ற சம்பந்தர் சீர்காழி திரும்பி தோணியப்பரை தரிசித்து ‘உற்றுமை சேர்வது மெய்யினையே’ என்ற பதிகம் பாடி சிலநாட்கள் சீர்காழியில் தங்கியிருந்து தொண்டைநாட்டுத் தலங்களைத் தரிசிக்கக் கிளம்பினார்.

தொண்டை நாட்டு தரிசனம்

முதலில் சிதம்பரத்தை அணுகி ஆடலரசனை தரிசித்துவிட்டு தொண்டை நாட்டிற்குப் பயணமானார். பல தலங்களை தரிசித்துவிட்டு திருவோத்தூரை அடைந்தார். ஆங்கிருக்கும் வேதபுரீசுவரரை வணங்கினார்.

அப்போது அடியர்களில் ஒருவர் “தொண்டர்களுக்கு பயன்தரும் பொருட்டு சிலபனைகளை நான் இங்கு நட்டு வைத்தேன். ஆனால் அவை காய்க்கவில்லை. இதனை அறிந்த சமணர்கள் கேலி செய்கின்றனர்.” என்றார்.

அப்போது அடியாரின் குறையை போக்கியருளுமாறு இறைவனிடம் ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். இறையருளால் ஆண்பனைகள் குலை ஈன்றன. அதனைக் கண்ட சமணர்கள் அஞ்சி ஒதுங்கினர்.

திருவோத்தூரை அடுத்து குரங்கணில் முட்டம் என்பதைத் தரிசித்துவிட்டு காஞ்சியை அடைந்தார். காஞ்சியில் ஏகாபரநாதரையும், காமகோட்டத்தில் அம்மையும் பதிகங்கள் பாடி தரிசித்துவிட்டு திருப்பாச்சூர், திருவாலங்காடு தலங்களையும் வழிபட்டு திருகளாத்தியை அடைந்தார்.

திருகாளத்தியப்பரை போற்றி பதிகங்கள் பாடி கண்ணப்ப நாயனாரையும் வணங்கினார். அங்கிருந்து வடக்கிலுள்ள திருக்கையிலாயம், திருக்கோகர்ணம், திருக்கேதாரம், ஸ்ரீசைலம் உள்ளிட்ட தலங்களைப் பாடி மகிழ்ந்தார்.

திருவொற்றியூர் நினைவுவரவே அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு, திருவலியதம் தலங்களை வணங்கி திருவொற்றியூரை அடைந்தார். அங்கிருக்கும் இறைவனாரை வழிபட்டு சிலகாலம் தங்கி இருந்தார்.

எலும்பு பெண்ணுரு ஆனது

மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு பூம்பாவை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் சிவநேசர்.

இறையருள் பெற்ற திருஞானசம்பந்தர் நாயனார் பற்றி அறிந்த சிவநேசர் தம்மையும், தம்முடைய பெண்பிள்ளையையும், செல்வங்களையும் திருஞானசம்பந்தருக்கு உரித்தாக்குவதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார்.

ஆதலால் அப்பெண்ணை கன்னிமாடம் ஒன்றில் வளர்ந்து வரச் செய்தார். அப்பெண்பிள்ளையும் நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள்.

அவளுக்கு பன்னிரெண்டு வயதாயிருக்கும்போது நந்தவனத்தில் பூப்பறிக்கச் சென்றாள் பூம்பாவை. அங்கிருந்த அரவம் ஒன்று அவளைத் தீண்ட அவள் மாண்டாள். இதனை அறிந்த சிவநேசர் துடிதுடித்தார்.

பூம்பாவையின் விடத்தைப் போக்குவொருக்கு அவர் வேண்டும் செல்வத்தை வழங்குவதாக சிவநேசர் முரசறிவித்தார்.

ஏராளமானோர் திரளாக வந்து பூம்பாவையின் விடத்தைப் போக்கும் முயற்சியினை மேற்கொண்டு பலன் இல்லாமல் திரும்பினர். மூன்று நாட்கள் கழித்து ‘இப்பெண் சம்பந்தருக்கு உரியவள் என்று எண்ணியதால் இது பற்றி இனி துன்பம் இல்லை’ என்று நினைத்து அவளின் உடலை எரித்தார்.

அப்பெண்ணின் சாம்பலையும் எலும்பையும் சேகரித்து கலசத்தில் வைத்து தினமும் அதற்கு ஆடை அணிகலன் அணிவித்து சந்தனம் குங்குமம் இட்டு மாலை சாற்றி தீபதூபம் காட்டி நிவேதானம் செய்து போற்றி வந்தார்.

அப்போது ஒருநாள் திருஞானசம்பந்தர் நாயனார் திருவொற்றியூரில் தங்கி இறைவனை வழிபட்டு வருவதைக் கேள்வியுற்றார். அவர் விரைவில் மயிலாப்பூர் வருவிருப்பதைக் கேள்விப்பட்டு அவரை கோலாகலமாக வரவேற்க தயார் ஆனார்.

ஞானசம்பந்தரும் மயிலாப்பூருக்கு எழுந்தருளி சிவநேசருடன் மயிலை கபாலீசுவரரையும் கற்பகாம்பியையும் பதிகம் வழிபட்டார். சிவநேசரின் மகள் பூபாவைக்கு நிகழ்ந்த சோகத்தை அவர் ஏற்கனவே கேள்வியுற்றிருந்தார் சம்பந்தர்.

ஆதலால் சிவநேசரிடம் பூபாவையின் சாம்பல் இருந்த கலசத்தை மயிலைக் கோவிலின் மதிற்புறத்திற்கு எடுத்துவருமாறு கூறினார்.

சிவநேசரும் கலசத்தை எடுத்துவந்து மயிலைக் கோவிலின் மதிற்புறத்தே வைத்தார். அப்போது திருஞானசம்பந்தர் ‘மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலை’ எனத் தொடங்கும் பூம்பாவை பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் பூம்பாவை சிறுசிறுக உருவம் பெறலானாள்.

பதிகத்தின் இறுதியில் குடத்தை உடைத்து பேரழகு நிறைந்த பன்னிரெண்டு வயதுப் பெண்ணாக பூம்பாவை தோன்றினாள். நடந்தவைகளைக் கண்ட அங்கிருந்தோர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

பூம்பாவை திருஞானசம்பந்தரைப் பணிந்தாள். ‘இப்பெண்ணை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சிவநேசரிடம் சம்பந்தர் தெரிவித்தார்.

“தங்களுக்காகவே வளர்ந்தவள் இவள். ஆதலால் இவளை தாங்கள் மணம் புரிந்து கொள்ளுங்கள்.” என்று சிவநேசர் வேண்டினார்.

“நீங்கள் வளர்த்த பூம்பாவை இறந்து விட்டாள். இவள் இறையருளால் என்மூலம் உயிர்ப்பிக்கப்பட்ட‌வள். ஆதலால் நான் இவளுக்கு தந்தைக்குச் சமமாவேன்” என்று கூறி மறுத்துவிட்டார்.

பூம்பாவையும் கன்னிமாடத்திலேயே இறையடியைப் போற்றி வாழ்ந்தாள்.

இறைவனை வணங்கிய சம்பந்தர் மயிலையிலிருந்து புறப்பட்டார்.

திருமணசோதி

மயிலையிலிருந்து புறப்பட்ட திருஞானசம்பந்தர் நாயனார் திருவான்மியூர், திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டு தில்லையை அடைந்தார். அங்கேயே சிலநாட்கள் தங்கியிருந்து பதிகங்கள் பாடி தங்கியிருந்தார்.

பின்னர் சீர்காழியை அடைந்து இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கி பதிகங்கள் பாடி மகிழ்ந்திருந்தார்.

அப்போது சம்பந்தரின் பெற்றோரும் ஏனைய மறையவர்களும் அவரை திருமணம் செய்து கொள்ள கேட்டுக் கொண்டனர்.

சம்பந்தர் முதலில் அதற்கு உடன்படவில்லை என்றாலும், மறையவர்களுக்குரிய ஆறு தொழில்களையும் செய்து வைதிக முறையில் ஒழுகுவதற்கு திருமணம் அவசியம் என்றதும் அதற்கு இசைந்தார்.

ஆச்சாள்புரம் எனப்படும் திருப்பெருமண நல்லூரில் வசித்த நம்பாண்டார் நம்பி என்பவரின் மகளை சம்பந்தருக்கு மணம் முடிக்க சிவபாதஇருதயர் பேசி முடித்தார்.

குறித்த நாளில் திருமணம் செய்விக்க சம்பந்தர் உறவினருடன் திருப்பெருமண நல்லூருக்குச் சென்றார். ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு திருநீலநக்கர் நாயனார், முருக நாயனார், திருநீலகண்டயாழ்பாணர் ஆகியோர் தம் மனைவியருடன் வந்திருந்தனர்.

திருஞானசம்பந்தரின் திருமணம் இனிதே நடந்தேறியது.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடனும் திருப்பெருமண நல்லூர் திருக்கோவிலை அடைந்த சம்பந்தர் ‘எம்பிரானே, என்னைத் தேவரீர் தங்கள் திருவடியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி ‘கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

அப்போது இறைவனார் நீயும் நின்மனைவியும் இத்திருமணத்திற்கு வந்திருப்போர் எல்லோரும் இங்கு தோன்றும் சோதியுள் உட்புகுவீர்களாக’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அப்போது திருக்கோயில் முழுவதும் பெருஞ்சோதி தோன்றி அதில் வாயில் ஒன்று உருவானது. அதனைக் கண்ட திருஞானசம்பந்தர் நாயனார் ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி‘ எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.

பின்னர் அங்கிருந்தோர்களிடம் “ஈனமாம் பிறவி தீர எல்லோரும் யாவரும் புகுக” என்றார். அங்கிருந்த எல்லோரும் அச்சோதியினுள் புக ஆரம்பித்தனர்.

திருநீலநக்கர் நாயனார், திருநீலகண்டயாழ்பாண நாயனார், முருக நாயனார், சிவபாதஇருதயர், நம்பாண்டார் நம்பி ஆகியோர் தம் மனைவியருடன் சோதியுள் புகுந்தனர்.

அங்கிருந்தோர் எல்லோரும் சோதியுள் புகுந்த பின்பு சம்பந்தர் தம்முடைய மனைவியுடன் சோதியுள் புகந்தார்.

திருப்பெருமண நல்லூர் திருக்கோவில் மீண்டும் பழைய நிலையை அடைந்தது.

திருஞானசம்பந்தர் நாயனார் அருளிய திருப்பதிகங்கள் தற்போது பன்னிருதிருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக விளங்குகின்றன.

இறைவனிடமிருந்து கிடைக்க பெற்றவை

பொற்றாளம் – திருகோலக்கா

முத்துசிவிகை – அரத்துறை

முத்துப்பந்தல் – முத்துப்பந்தல்

உலவாக்கிழி – திருவாடுதுறை

படிக்காசு – திருவீழிமிழலை

நிகழ்த்திய அற்புதங்கள்

திருபாலாச்சிலாச்சிரமத்தில் கொல்லி மழவன் மகளின் வலிப்பு நோயை நீக்கியது.

திருமருகலில் பாம்பு தீண்டிய வணிகனின் விடத்தை நீக்கி உயிர்ப்பித்தது.

திருமறைக்காட்டில் மூடியே இருந்த கோவில் கதவுகளை திறந்து மூடச் செய்தது.

மதுரையில் பாண்டிய மன்னனின் வெப்பு நோயை நீக்கி, அவனுடைய கூனை நிமிர்த்தி சைவத்தை தழைக்கச் செய்தது.

திருவோத்தூரில் ஆண் பனைகளை காய்க்கச் செய்தது.

மயிலாப்பூரில் எலும்புச் சாம்பலை பெண்ணுருவாக்கி பூம்பாவையை உயிர்ப்பித்தது.

திருஞானசம்பந்தர் நாயனார் பாண்டிமாதேவி மங்கையர்கரசியார், பூம்பாவை ஆகிய இரு பெண்களை மட்டுமே தம்முடைய பாடலில் விளித்து பாடியுள்ளார்.

இவருடைய அனைத்து பதிகங்களிலும் எட்டாவது பாடல் ‘இராவணன்’ பற்றியும், ஒன்பதாவது பாடல் நான்முகனும் திருமாலும் காண இயலாத சிவபெருமானின் பெருமை பற்றியும், பத்தாவது பாடல் சமணபௌத்த சமயங்களை சிவனருளால் வென்றதையும் குறிப்பிடுகின்றன.

திருஞானசம்பந்தர் நாயனார் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.

மதுரையில் அனல் வாதம் மற்றும் புனல் வாதத்தில் திருஞானசம்பந்தரிடம் தோற்ற சுமார் 8000 சமணர்கள் கழுவில் ஏறி மாய்ந்தனர்.

இவர் தம்முடைய பாடல்களில் 23-வகையான பண்களை இசைந்து பாடியுள்ளார்.

ஏறத்தாழ 110 சந்தங்களை தம்முடைய பாடல்களில் பாடியுள்ளதால் இவர் ‘சந்தத்தின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

யமகம், மடக்கு முதலிய சொல்லணிகளையும் சித்திரகவியையும் தொடங்கி வைத்தவர் சம்பந்தரே ஆவார்.

திருஞானசம்பந்தர் நாயனார் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பர் நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில்

‘வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர் நல் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியாற்கும் அடியேன்’ என்று கொண்டாடுகிறார்.

One Reply to “திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.