மாசிலாபுரம் என்ற ஒரு ஊரில் முனிவர் ஒருவர் தனது சீடர்களுடன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்.
முனிவரின் ஆசிரமம் நிறைய மரங்கள், செடி கொடிகளுடன் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது.
முனிவர் ஊர் மக்களிடம் மட்டுமல்லாது எல்லா உயிர்களிடத்தும் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். முனிவரின் ஆசிரமத்தில் இருந்த மரங்கள் ஒன்றில் காக்கை காளி வாழ்ந்து வந்தது.
முனிவர் அன்றாடம் தனது ஆசிரமத்திற்கு வரும் மக்களுக்கு ஆசீர்வாதம் செய்வார். முனிவர் தன்னுடைய தவவலிமையால் அவரிடம் ஆசிபெற வரும் மக்களின் துன்பங்களைப் போக்கி வந்தார்.
காக்கை காளி முனிவரின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து வந்தது. அவ்வப்போது காக்கை காளி முனிவரின் அருகில் வரும்.
முனிவரும் தன்னருகே வரும் காக்கை காளியிடம் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார்.
காக்கை காளி, முனிவருக்கு வலிமையானது அவர் கழுத்தில் அணிந்திருந்த ருத்திராட்ச மாலையினால் கிடைப்பதாகக் கருதியது.
என்றாவது ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது முனிவரின் ருத்திராட்ச மாலையைத் திருட காக்கை காளி நினைத்தது. அதனால் அது முனிவரை எப்போதும் பின்தொடர்ந்து சென்றது.
ஒரு நாள் முனிவர் நீராடுவதற்காக ருத்திராட்ச மாலையை கழற்றி ஆற்றின் கரையில் வைத்துவிட்டு ஆற்றில் இறங்கினார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கை காளி ருத்திராட்ச மாலையை எடுத்துக் கொண்டு பறந்தது விட்டது. ஆற்றில் இருந்து நீராடி விட்டு திரும்பி வந்த முனிவர் ருத்திராட்ச மாலையைக் காணாது திகைத்தார்.
பின்னர் தன்னுடைய தவவலிமையால் முனிவர் நடந்தது முழுவதையும் அறிந்தார். கோபத்தில் காக்கைக் காளியை சபித்தார்.
முனிவரின் சாபத்தால் காக்கை காளியானது உணவு உண்ண முடியாமல் உடல் மெலிந்து, சிறகுகள் முழுவதும் உதிர்ந்து நோய்வாய்ப்பட்டு திணறியது.
முனிவரின் சாபத்தால்தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக காக்கை காளி எண்ணியது. முனிவரின் ருத்திராட்ச மாலையை அவரிடம் திருப்பிக் கொடுக்க எண்ணியது. எனவே அது முனிவரின் ஆசிரமத்திற்கு மெதுவாக தத்தித் தத்தி வந்தது.
மெதுவாக நடந்து வந்த காக்கை காளியின் நிலையைக் கண்ட முனிவர் மிகவும் வருந்தினார். தன்னுடைய தவவலிமையால் காக்கை காளியை பழைய நிலைக்கு மாற்றினார்.
மனம் திருந்திய திருட்டுக் காக்கை காளி முனிவரிடம் ருத்திராட்ச மாலையை திருப்பிக் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டது. அதன் பின்பு காக்கை காளி மிகவும் மரியாதையாக நடந்து கொண்டது. முனிவரும் காக்கை காளியிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
குழந்தைகளே எப்போதும், எந்த சூழ்நிலையிலும் அடுத்தவருடைய பொருளுக்கு ஆசைப் படக்கூடாது. அவ்வாறு ஆசைப்பட்டு பொருளை அபகரித்தால் திருட்டுக் காக்கை காளிக்கு ஏற்பட நிலைதான் ஏற்படும்.
நல்லா இருக்கு