திருத்தங்கல்

திருத்தங்கல் சிவகாசியிலிருந்து 5கி.மீ. தொலைவில் விருதுநகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர், ‘திருத்தங்கால்’ என்றும் ‘திருத்தங்கல்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

திருத்தங்கல் ஊரின் வடகிழக்கில் சுமார் 100 அடி உயரமடைய குன்று காணப்படுகிறது. திருப்பதி நாராயணர் திருவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாளின் திருமணத்திற்காக வரும் வழியில் இப்பாறையில் தங்கியிருந்து பின்னர் திருவில்லிபுத்தூர் சென்றதால் இவ்வூர் ‘திருத்தங்கல்’ என்று பெயர் பெற்றது.

இவ்வூர் தொல்லியல் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் உடைய ஊராகும். இவ்வூரின் அருகில் மேற்குப் பகுதியில் நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை சில்லு பெயர்த்தெடுக்கப்பட்டு மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு முனை அறுப்பான், இரு முனையறுப்பான், துளைப்பான், வட்டவடிவக் கருவி, பிறைவடிவக்கருவி போன்ற பல்வேறு வடிவத்தில் கற்கருவிகள் கிடைத்துள்ளன. இவை மத்திய கற்கால மனிதன் தன் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்திய கற்கருவிகளாகும். இத்தடையங்களால் இங்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழத் தொடங்கிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாட்டு மனிதன் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இவ்வூர்க்குளத்தருகே பெரிய மண்மேடு காணப்படுகின்றது. அங்கு கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சங்கு வளையல்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், வட்டாக்குச் சில்லுகள், கல்மணிகள், சுடுமண்ணாலான வடிதட்டுகள் போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவை தவிர முதுமக்கள் தாழிகளின் விளிம்புப்பகுதிகள் கிடைத்துள்ளன. சில பானை ஓடுகளின் குறியீடுகள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சான்றுகள் சங்க காலத்தில் இவ்வூர் செழிப்புற்று விளங்கியமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

திருத்தங்கல் ஊரில் சங்ககாலப் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அக்காலத்தில் அறிவுடைய மக்கள் பலரைக் கொண்ட நகராக திருத்தங்கல் இருந்தது என்று தெரிகிறது. மேலும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்நகர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒருசில செவிவழிக் கதைகள் வழியாக மதுரையிலிருந்து சேரநாடு செல்லும் பெருவழியில் திருத்தங்கல் இருந்தது என்று அறியமுடிகின்றது.

காவிரிப்பூம்பட்டினத்து அந்தண வணிகன் ஒருவன் சேர நாட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில் திருத்தங்கலில் தங்குகின்றான். அவ்வாறு தங்கிய போது சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கின்றான். அச்சிறுவர்களில் ஒரு சிறுவனின் முகம் மிகப் பொலிவுடன் இருப்பதைக் கண்டு அவனது அறிவைச் சோதிக்க எண்ணுகின்றான். அவனை அழைத்து அவன் பெயரை வினவுகின்றான். அச்சிறுவன் தன் பெயர் தஷ்ணாமூர்த்தி என்று கூறுகின்றான். அவனிடம் வேதங்களிலிருந்து பல கேள்விகளைக் கேட்க, அச்சிறுவனும் தயக்கமின்றி விடையளிக்க அச்சிறுவனின் அறிவைக் கண்டு வியந்து விலைமதிப்பற்ற பல பரிசுகளை அளிக்கின்றான். அவை முத்துக்களாலான முப்பரி நூல், பொன்னாலாகிய கடகம், தோடுகள், அபரணங்கள் என்பன்.

இவ்விலையுயர்ந்த ஆபரணங்களையணிந்த அச்சிறுவனைக் கண்ட அரண்மனைக் காவலர்கள் அச்சிறுவனைத் திருடன் என எண்ணிச் சிறையிலிடுகின்றனர். இதனைக் கண்ட அச்சிறுவனின் தாய் கொற்றவைக் கோயிலுக்குச் சென்று தன் மகனுக்கு நேர்ந்த அநீதியை இறைவியிடம் முறையிட, துர்க்கைக் கோயில் கதவுகள் மூடிக் கொள்கின்றன. இந்நிகழ்ச்சி மன்னன் செவிக்கு எட்டுகின்றது. தன் காவலன் செய்த தவறுக்காக வருத்தி அச்சிறுவனை விடுதலை செய்து அச்சிறுவனின் குடும்பத்திற்கு திருத்தங்கல், வயலூர் ஆகிய இரு சிற்றூர்களையும் பிரம்மதேயமாக வழங்கினான். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் துர்க்கைக் கோயில் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன என்று கூறப்படுகின்றது.

திருத்தங்கல் ஊரிலுள்ள வரலாற்று சின்னங்களில் குறிப்பிடத் தக்கது முற்காலப் பாண்டியர் காலத்து விஷ்ணு கோயிலாகும். இது ஒரு குடைவரைக் கோயில். கருவறையில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட உயரிய திண்ணையில் திருமால் கிடந்த கோலத்தில் காணப்படுகின்றார். அவரைச் சுற்றியுள்ள பிற உருவங்கள் பிற்காலத்தியதாகும். சுதையாலாகிய பச்சை வண்ணப்பூச்சும், ஆபரணங்களும் பிற்காலத்தியவை.

மலைமீது கட்டப்பட்டிருக்கும் நின்றருளிய நாராயணர் கோயில் பழமையானதாகும். வைணவத் திருத்தலங்கள் 108னுள் இதுவும் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. முற்காலப் பாண்டியர் கோயிலாக இருப்பினும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் போன்ற ஆழ்வார்கள் இவ்விறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அவனது அதிகாரி, ‘சேரன் உய்யநின்றாடுவான் குருகுலத்தரையன்’ என்பவன் கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் ஆகியவற்றை எடுப்பித்ததாகக் கல்வெட்டுகளின் வழி அறிய முடிகின்றது. இவன் தடங்கண்ணிச் சிற்றூரினன். முதலாம் மாறவர்மன் குலசேகரனின் காலத்தில் இக்கோயிலுக்கான திருச்சுற்று எழுப்பப்பட்டுள்ளது.

அம்மன் கோயிலும் நரசிம்மருக்கான தனிச் சன்னதியும் இம்மன்னன் காலத்தில்தான் கட்டப்பட்டுள்ளன. பிறகு நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டன. நாகலாபுரம் சமீன்தார் ரெங்கசாமி நாயக்கர் என்பவர் வெள்ளிக்கிழமை பூசை நடைபெறுவதற்காக சுக்கிரவாரக்குறடு என்ற மண்டபத்தை கி.பி.19-ஆம் நூற்றாண்டில் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது உருவச்சிலையும் இம்மண்டபத்தில் காணப்படுகின்றது.

இங்கு முதலாம் வரகுணன், பராந்தகசோழன், முதற்குலோத்துங்கன், ஸ்ரீவல்லபன், முதலாம் சடையவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரன் போன்ற சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

முதலாம் வரகுணன் கல்வெட்டு, அழற்றூர் நாட்டுக் கிழவன் என்பவனால் நொந்தா விளக்கு எரிப்பதற்காக ஆடுகள் தானமாக வழங்கப்பட்டுள்ள செய்தியைத் தருகின்றது. திருத்தங்கல் கிராமம், ஒரு பிரம்மதேய கிராமமாக விளங்கியுள்ளது. அக்கிராமத்து நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக ‘மூலபருடையார்’ என்ற அந்தணர் சபை இயங்கிற்று என்பதைக் கல்வெட்டுகள் வழி அறிய முடிகின்றது.

கல்வெட்டுகள் இக்கோயிலில் நடந்த பல்வேறு காலகட்டத்துத் திருப்பணிகளையும் கோயிலுக்குத் தானமாக நிலங்களும், பொருட்களும் வழங்கப்பட்ட செய்திகளையும் தெரிவிக்கின்றன. திருத்தங்கல் நிலங்களுக்கு நீர் பாய்வதற்காக ‘தேவேந்திர வல்லபப் பேரேரி’, ‘நின்ற நாராயணப் பேரேரி’ என்று இரு பெருங்குளங்கள் இருந்ததைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகின்றது.

இவ்வூரில் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களிலிருந்து நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டுவதற்காகவும், நீதிக்கதைகள் சொல்வதற்காகவும் கல்மண்டபம் ஒன்றிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் இவ்வூரின் அருகில் 54 மறையவர்களுக்காகக் குலசேகரச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் உருவாக்கப்பட்டதையும் கல்வெட்டு மூலம் அறியமுடிகின்றது. வைகாசி விசாகம், அமாவாசையன்று இறைத்திருவுரு எழுந்தருளவும், ஆவணித் திருநாள் போன்ற திருவிழாக்கள் நடைபெறவும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் தானங்கள் ஏற்படுத்தப்பட்டன. சுந்தரபாண்டியன் சந்தி, குருகுலத்தரையன் சந்தி போன்ற பூசைகள் நடைபெற குருகுலத்தரையன் தானங்கள் வழங்கியுள்ளான்.

கி.பி.10-ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் திருவுருசெப்புத் திருமேனியாக எழுந்தருளுவிக்கப்பட்டது. காலிங்கராயன் மனைவி ‘சடகோபன் திருமங்கையாண்டாள்’ என்பவள் இறைவன் இறைவி செப்புத் திருமேனிகளை  திருத்தங்கல் கோயிலுக்குச் செய்து வழங்கியுள்ளாள் என்பதை முதலாம் சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டு கூறுகின்றது.

சிவன் கோயில் : பாறையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இறைவன் கருநெல்லிநாத சுவாமி என்றும், இறைவி மீனாட்சியம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடங்கண்ணிச் சிற்றூர் உடையான் சோரன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் கி.பி.1233-இல் கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் ஆகியவற்றை அடிமுதல் முடிவரை கருங்கல்லால் கட்டிக் கொடுத்ததாக சுந்தரபாண்டியனின் 17-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பாடல் வடிவில் குறிப்பிடுகின்றது.

தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க சிவபெருமான் பிச்சையெடுத்து வந்ததாகப் புராணங்கள் குறிப்பிகின்றன. இந்நிகழ்ச்சி கோயில்களில் பிஷாடனரின் செப்புத் திருமேனியினை வைத்து நிகழ்த்திக் காட்டுவது வழக்கமாகும். இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடும் கி.பி.13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில் திருநெல்வேலி நாடான ஒருவன் பிஷாடன மூர்த்தி இனிக் கபாலம் ஏந்தி பிச்சை எடுக்க வேண்டாம் நிலங்கள் கொடுத்துள்ளேன் என்று தான் தானம் கொடுத்ததைக் குறிப்பிட்டுள்ளான்.

குதிரை வீரனின் வீரக்கல் ஒன்றும் கோயில் வளாகத்தில் காணப்படுகின்றது. அதில் கல்வெட்டொன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு, வரதுங்கராம தனிப்புலி கலங்காத கண்ட நாயக்கனுக்கு வேலைக்காரன் உள்ளி பொம்மன் கலங்காத கண்ட நாயக்கனுக்கு திருத்தங்கலில் இரத்த காணிக்கையாக நிலம் வழங்கிய செய்தியையும் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கின்றது.

திருத்தங்கல் பழமையையும் பெருமையையும் அறிவதற்காகத் தமிழக அரசின் தொல்லியல்துறை இவ்வூரில் மேற்பரப்பாய்வும், அகழாய்வும் மேற்கொண்டது. அவ்வமையம் பல தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் பாண்டியர், சோழர், நாயக்கர் காலக்காசுகள் அடங்கும். அவற்றுள் சங்ககாலப் பாண்டியர் காசு சதுரவடிவில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காசின் ஒருபுறம் மீனின் உருவமும், மறுபக்கம் யாளையின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன.

 

One Reply to “திருத்தங்கல்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.