திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் பாடிய மூவரில் இரண்டாமவர். தம்முடைய அயராத உழவாரப் பணியால் உழவாரத் தொண்டர் எனப் போற்றப்படுபவர்.
இவர் கிபி ஏழாம் நூற்றாண்டில் தம்முடைய பாடல்கள் மூலம் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார் ஆவார்.
இவர் இறைவனைத் தலைவனாகவும், தம்மை அவர்தம் ஊழியனாகவும் கொண்டு தாச மார்க்கம் என்னும் வழியில் அன்பு செய்தவர்.
உழவாரப் படையாளி
திருநாவுக்கரசு நாயனார் தம் மனம், மொழி, மெய் என்னும் மூன்றாலும் இறைவனுக்கு திருத்தொண்டு புரிந்தவர். இறைவனை இடைவிடாது மனத்தில் எண்ணிக் கொண்டிருந்தார். இது மனதால் செய்த தொண்டு.
இறைவனை கெஞ்சு தமிழ்பாக்களால் பாடி இன்புற்றிருந்தார். இது மொழியால் செய்த தொண்டு. இவருடைய திருபெயரான திருநாவுக்கரசர் என்பதே இதற்குச் சான்று.
திருக்கோயில்களின் சுவற்றில் வளரும் சிறுதாவரத்தை நீக்கி, கல்லினை ஒதுக்கி, புல்லினைச் செதுக்கி உழவாரத் தொண்டு செய்து வந்தார். இது மெய்யாகிய உடலால் செய்த தொண்டு. எனவே அவரை உழவாரப் படையாளி எனப் போற்றுவர்.
உழவாரம் என்பது புல், சிறுசெடிகள் உள்ளிடவைகளைச் செதுக்கப் பயன்படும் கருவி. உழவாரப் பணியை தலையாயப் பணியாகக் கொண்டு அவர் செய்த காரணத்தினால் அவருடைய திருவுருவ ஓவியங்கள், படிமங்கள் ஆகியவற்றில் அவருடைய திருக்கரத்தில் உழவாரத்தை ஏந்தி இருப்பதைக் காணலாம்.
இவர் மருள்நீக்கியார், தருமசேனர், திருநாவுக்கரசு, அப்பர், வாகீசர், தாண்டக வேந்தர் மற்றும் ஆளுடைய அரசு என்ற பெயர்களில் எல்லாம் அறியப்படுகிறார்.
இளமைப் பருவம்
திருநாவுக்கரசு நாயனார் பல்லவ தேசத்தில் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் குலத்தில் பிறந்தார். திருவாமூர் தற்போது கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இவருடைய பெற்றோர் புகழனார், மாதினியார் ஆவர். இவருடைய தமக்கையார் பெயர் திலகவதியார். இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும்.
திலகவதியாரும், மருள்நீக்கியாரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்கள். திலகவதியார் வளர்ந்தும், அரசனிடம் சேனாதிபதியாக விளங்கிய கலிப்பகையார் என்பவர்க்கு மணம் பேசி நிச்சயத்தனர்.
இந்நிலையில் புகழனாரும், மாதினாரும் அடுத்தடுத்து மறைந்தனர். திலகவதியாருக்கும், மருள்நீக்கியாருக்கும் மீளாத்துயர் உண்டானது. அச்சமயத்தில் போருக்குச் சென்ற கலிப்பகையார் இறைபதம் எய்தினார். இதனை அறிந்த திலகவதியார் கணவனாக மனதில் நினைத்தவர் மறைந்ததால் தானும் உயிர் நீக்க எண்ணினார்.
அப்போது மருள்நீக்கியார் “தாயும், தந்தையும் நம்மைவிட்டு சென்றபின் நான் உன்னையே அவர்களாக எண்ணி வாழ்கிறேன். இப்போது நீயும் உலகைவிட்டு செல்லத் துணிந்ததால் உனக்கு முன்பு நானே இவ்வுயிரை நீப்பேன்” என்றார்.
அதனைக் கேட்டதும் திலகவதியார் தன்னுடைய மனமுடிவினை மாற்றிக் கொண்டார். நகைகளையும், பட்டாடைகளையும் தவிர்த்து உலக பற்றற்று, எல்லோரிடத்தும் அன்பு கொண்டு மனைத்தவம் புரியும் பெண்மணியாக விளங்கினார்.
இவ்வுலகில் உடல், பொருள், செல்வம் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்த மருள்நீக்கியார் அறசாலைகளை நிறுவி, தண்ணீர்ப்பந்தல், சாலைகள், நீர்நிலைகள் ஆகியவற்றை அமைத்து எல்லோரும் பயன்படும் வகையில் வாழ்ந்து வந்தார்.
தருமசேனர் திருநாவுக்கரசு ஆனார்
அப்போது திருவாமூர் அமைந்திருந்த நாட்டின் அரசன் சமண சமயத்தைப் பின்பற்றியிருந்தான். ஆதலால் சமண சமயத்தவர் தம்முடைய மதத்தினைப் பரப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். மருள்நீக்கியார் அவர்களுடன் வாதில் ஈடுபட்டு சமண சமயத்தில் சேர்ந்தார்.
சமண மடத்தில் தங்கியிருந்த தருமசேனர் தம்முடைய அறிவுத்திறத்தால் சமண குருவானார். சமண சமயத்தில் மருள்நீக்கியாருக்கு தருமசேனர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
திலகவதியார் திருவதிகையில் திருமடம் அமைத்து திருவதிகை வீராட்டானேஸ்வரரை வணங்கி தொண்டுகள் பல புரிந்து வந்தார். வீரட்டானேஸ்வரிடம் சமண சமயத்தை பின்பற்றும் தம்முடை தமையனார் மீண்டும் சைவத்திற்கு வர அருள வேண்டும் என்பதை வேண்டுகோளாகக் கொண்டு வழிபட்டார் திலகவதியார்.
சிவனாரும் மருள்நீக்கியாருக்கு அருள் புரிய எண்ணினார். ஆதலால் தருமசேனருக்கு தீராத சூலை நோய் (வயிற்றுவலி) உண்டானது. அவரின் வயிற்றுவலியைப் போக்க சமணர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தனர். ஆனால் தருமசேனரின் சூலை நோய் குறையவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது.
சமணர்களால் தன்னுடைய சூலை நோயைப் போக்க இயலாது என்று எண்ணிய தருமசேனர் தன்னுடைய நிலையைப் பற்றி தமக்கைக்கு ஆளை தூது அனுப்பி தமக்கையை அழைத்து வரச் சொன்னார்.
தமையனாரின் நிலைக் கேட்டறிந்த திலகவதியார், தம்மை வந்து தருமசேனரைப் பார்க்கச் சொல்லி சமண மடத்திற்கு வர மறுத்து விட்டார்.
சூலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தருமசேனர் சமண சமயச் சின்னங்களான பாய் ஆடை, மயிற்பீலி முதலியவற்றை ஒதுக்கிவிட்டு திருவதிகை திருமடத்தில் திலகவதியாரைச் சந்தித்தார்.
திலகவதியார் தருமசேனரை திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று திருவெண்ணீறு அளித்து திருவைந்தெழுத்தை கூறும்படி பணித்தார்.
தருமசேனர் திருவைந்தெழுத்தை ஓதியதும் அவருக்குள் சிவனார்பால் அன்பு மேலிட்டது. ‘கூற்றாயினாவாறு விலக்கலீர்’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இறைவனின் கருணையால் உடனே அவருடைய சூலை நோய் தீர்ந்தது.
‘ஐயனே, உம்முடைய கருணையால் உயிரையும், அருளையும் பெற்றேன்’ எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போது இறைவனார் ஒலி வடிவில் “செந்தமிழ் பாக்கள் பாடிய நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று அருளினார். அது முதல் தருமசேனர் திருநாவுக்கரசு ஆனார். அது முதல் திருநாவுக்கரசு நாயனார் சைவத் தொண்டு செய்யலானார்.
யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்
இதனைக் கண்ட சமணர்கள் அரசர் மகேந்திரவர்மனிடம் தருமசேனர் சைவ சமயத்திற்க மாறியதால் அவரைத் தண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். சமண சமயத்தைப் பின்பற்றியிருந்த அம்மன்னனும் அதற்கு இசைந்தான். ஆட்களை அனுப்பி திருநாவுக்கரசரை அழைத்துவர ஆணையிட்டான்.
அரசனின் ஆட்கள் திருநாவுக்கரசரை அணுவி விவரங்களைத் தெரிவித்தனர். அதனைக் கேட்டதும் நாவுக்கரசர் ‘யாமர்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்‘ என்ற மறுமாற்ற திருதாண்டகத் திருப்பதிகம் பாடி அவர்களுடன் புறப்பட்டார்.
சைவ சமயத்திற்கு மாறிய நாவுக்கரசரைக் கண்டதும் சினம் கொண்ட சமணர்கள் வெண்ணீறு அணிந்திருக்கும் நாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாசலில் அடைக்குமாறு அரசனிடம் கூறினர்.
மன்னனும் அவர்களின் சொல்படி நாவுக்கரசரை கொழுந்துவிட்டு எரியும் சுண்ணாம்பு நீற்றறையில் அடைக்க ஆணையிட்டான். மன்னின் ஆணைப்படி சுடும் சுண்ணாம்புக் காளவாசலில் நாவுக்கரசரை அடைத்துவிட்டு காவல் புரிந்தனர்.
நாவுக்கரசரோ ‘மாசில் வீணையும் மாலை மதியமும்‘ என்ற பதிகம் பாடி சிவனாரின் நினைவாகவே இருந்தார். ஏழுநாட்கள் கழித்து சமணர்கள் காளவாசலைத் திறந்த போது இறையருளால் உயிருடன் இருந்த நாவுக்கரசரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மன்னனிடம் சென்று சமண சமயத்தில் கற்றுக் கொண்ட வித்தைகளைப் பயன்படுத்தி நாவுக்கரசர் உயிர் பிழைத்திருப்பதாகவும், ஆதலால் அவருக்கு தண்டனையாக நஞ்சு கலந்த பால்சோற்றை உண்ணச் செய்யுமாறு கூறினர்.
மன்னனும் அவ்வாறே ஆணையிட நஞ்சு பால்சோற்றை உண்ணும்போது சிவனடியாருக்கு நஞ்சும் அமுதமாகும் என்றுகூறி திருவைந்தெழுத்தை ஓதினார் நாவுக்கரசர்.
ஆலகால விசத்திலிருந்து உலக உயிர்களைக் காப்பாற்றிய பரமனின் திருவருளால் அக்கொடிய விசம் நாவுக்கரசரை ஒன்றும் செய்யவில்லை.
நாவுக்கரசர் உயிருடன் இருப்பதைக் கண்ட சமணர்கள் மதயானை கொண்டு நாவுக்கரசரைக் கொல்ல திட்டம் போட்டு அரசனிடம் தெரிவித்தனர். அரசனும் மதயானையை நாவுக்கரசரை நோக்கி செலுத்துமாறு பாகன்களுக்கு கட்டளையிட்டான்.
நாவுக்கரசரும் எதிரில் நின்ற மதயானையைக் கண்டு சிறிதும் அஞ்சாது ‘கண்ணவெண் சந்தைனச் சாந்தும்’ எனத் தொடங்கும் பாடலை இறைவனை நினைத்துப் பாடினார்.
மதயானை நாவுக்கரசரை வணங்கிவிட்டு அங்கிருந்த பாகர்களையும், சமணர்களையும் கொன்றுவிட்டு, பல்லவனின் தலைநகரை நாசப்படுத்தியது.
இதனைக் கண்டதும் அஞ்சிய சமணர்கள், நாவுக்கரசரின் உடலில் கல்லினைக் கட்டி கடலில் வீச ஆணையிடுமாறு மன்னனிடம் கோரிக்கை வைத்தனர். அரைகுறை மனதுடன் சமணர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மன்னன் அவ்வாறே ஆணையிட்டான்.
அரச ஆணையின்படி முதுகில் கற்களைக் கட்டி கடலில் வீசப்பட்டார் நாவுக்கரசர். அப்போது ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ என்ற பதிக்கத்தை இறைவனை நினைத்துப் பாட கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்து கல் தெப்பமாக கடலில் மிதந்து திருபாதிரிப்புலியூருக்கு அருகே கரை சேர்ந்தார் நாவுக்கரசர்.
திருபாதிரிப்புலியூரில் (கடலூர்) குடிகொண்டிருக்கும் இறைவனாரை வணங்கி ‘ஈன்றாளுமாயெனக் கெழுந்தையுமாய்‘ எனத் தொடங்கும் திருபதிகத்தைப் பாடி வழிபட்டார்.
நடந்த நிகழ்வுகளைக் கேள்வியுற்ற மகேந்திரவர்மன் உடனே மனம் திருந்தி சைவ சமயத்திற்கு மாறி திருநாவுக்கரசரைக் காண திருபாதிரிப்புலியூர் விரைந்தான். ஆனால் நாவுக்கரசரோ திருபாதிரிப்புலியூரில் இருந்து கிளம்பி பல சிவதலங்களை வழிபட்டு திருவதிகையை அடைந்து உழவாரப்பணி செய்து அங்கேயே தங்கியிருந்தார்.
திருவதிகையில் உழவாரப்பணி செய்து இறைவனை வழிபட்டு வருதை அறிந்த மகேந்திரவர்மன் திருவதிகையை அடைந்து அங்கு சிலகாலம் தங்கி வீரட்டானேஸ்வரரை வழிபட்டு தலைநகர் திரும்பி சமணர்களை ஒழித்து சைவத்தைத் தழுவினான்.
அப்பர் ஆனார் திருநாவுக்கரசு
திருநாவுக்கரசர் சிவதலங்களைத் தரிக்க தலயாத்திரையைத் தொடங்கினார். திருவெண்ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவிலூர் போன்ற தலங்களில் இறைவனை வழிபட்டு பின்னர் பெண்ணாடம் வந்தடைந்தார்.
அங்குள்ள இறைவனை வழிபட்டு ‘ஐயனே, சமணத்தோடு வாழ்ந்த இவ்வுடலை விரும்பவில்லை. ஆதலால் தங்களின் சின்னமான இடபத்தையும், சூலத்தையும் பொறித்தால் தங்களின் திருநாமத்தை போற்றி வழிபட்டு மகிழ்ந்திருப்பேன்.’ என்று வேண்டினார். போன்னாற் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.
நாவுக்கரசர் பதிகத்தை முடித்தவுடன் சிவகணம் ஒன்று யாரும் அறியாத வண்ணம் அவருடைய தோள்களில் இடப முத்திரையையும், சூலச்சின்னத்தையும் பொறித்தது. இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்தார். அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து திருப்பணிகள் செய்து பின்னர் அங்கிருந்து திருவரத்துறை, திருமுதுகுன்றம் தலங்களில் வழிபாடு நடத்தி தில்லையை அடைந்தார்.
தில்லையின் மேற்கு கோபுரம் வழியே உள்ளே சென்று ஆடலரசனைக் கண்குளிரக் கண்டு கையுந் தலைமிசை புனையஞ்சலியென எனத் தொடங்கும் பதிகத்தையும், கருநட்ட கண்டனை என்னும் விருத்தத்தையும், பத்தனாய்ப் பாட மாடேன் எனத் தொடங்கும் நேரிசையையும் பாடி வழிபட்டார்.
தில்லையில் சிலகாலம் தங்கியிருந்து வழிபாடு மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையாரை வணங்கி சீர்காழியை வந்தடைந்தார். திருநாவுக்கரசரின் வருகையை அறிந்த திருஞானசம்பந்தர் தம்முடைய அடியார் கூட்டத்தினரோடு சென்று அவரை வரவேற்று அவரைப் பணிந்தார்.
தம்முடைய தந்தையைப் போல் சிறப்பு மிக்கவர் எனக் கருதி நாவுக்கரசரை ஞானசம்பந்தர் ‘அப்பரே’ என்று அழைத்தார். திருநாவுக்கரசர் அதற்கு அடியேன் என்று தம்முடைய அன்பினை பணிவாக வெளிப்படுத்தினார்.
அப்பர் என்பதற்கு தந்தையைப் போன்றவர் என்பது பொருளாகும்.
சீர்காழியில் உள்ள தோணிப்பரை ‘பார் கொண்டு முடி’ என்னும் பதிகத்தால் பணிந்தார் நாவுக்கரசர். அங்கு ஞானசம்பந்தருடன் சிலகாலம் தங்கிவிட்டு பின்னர் இருவரும் திருக்கோலக்கா என்னும் பதியை அடைந்து இறைவனாரை வழிபட்டனர். பின்னர் சம்பந்தர் சீர்காழி திரும்பினார்.
திருநாவுகரசு நாயனார் அங்கிருந்து கருப்பறியலூர், திருப்புன்கூர், நீடூர், திருக்குறுக்கை, வீராட்டம், திருநின்றயூர், திருநனிப்பள்ளி ஆகிய தலங்களை வழிபட்டு பின்னர் திருசத்திமுற்றத்தை வந்தடைந்தார்.
திருசத்திமுற்றத்தில் உள்ள இறைவரை வழிபட்டு, தமது சென்னியில் இறைவனின் திருவடி பதியம்படி வேண்டி கோவாய் முடகியடுறதில் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அப்போது இறைவனார் திருநல்லூருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இறைவனாரின் விருப்பத்தை ஏற்று திருசத்திமுற்றத்திலிருந்து திருநல்லூருக்கு வந்தார் நாவுக்கரசர். அங்கே அவரின் விருப்பப்படி தமது திருவடியை நாவுக்கரசரின் சென்னியில் பதிய வைத்தார் இறைவர்.
இறைவரின் அருள் வெள்ளத்தில் மகிழ்ந்த அப்பரடிகள் ‘நினைந்துருகும் அடியாரை‘ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் அங்கிருந்து திங்களுரை வந்தடைந்தார்.
உயிர் மீட்டார்
திருநாவுக்கரசு நாயனாரின் பெயரால் தொண்டுகள் பல செய்து வரும் அப்பூதி அடிகளைச் சந்தித்தார்.
திருவமுது செய்ய அப்பூதி அடியாரின் வீட்டிற்கு சென்ற போது அரவத்தால் மாண்ட அப்பூதியாரின் மூத்த மகனை திருப்பதிகம் பாடி உயிர் மீட்டெழச் செய்தார்.
அங்கு சிலகாலம் தங்கிவிட்டு பின்னர் திருப்பழனம், நல்லூர் பழையாறை, வலஞ்சுழி, திருக்குடமுக்கு, திருச்சேறை, திருக்குடவாயில், திருநாரையூர், திருவாஞ்சியம், பெருவேளுர், திருவிளாமர் முதலிய தலங்களை வழிபட்டு திருவாரூரை வந்தடைந்தார்.
திருவாரூரில் தியாகேசரை வழிபட்டு திருவாதிரைத் திருநாளைக் கண்டு களித்தார். அங்கியிருந்து வலிவலம், கீழ்வேளுர், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் வழிபட்டு திருப்புகலூருக்கு புறப்பட்டார்.
அப்போது ஞானசம்பந்தர் தம் அடியார் கூட்டத்தினரோடு திருப்புகலூருக்கு வந்து முருக நாயனார் மடத்தில் தங்கி இறைவனாரை வழிபட்டுக் கொண்டிருந்தார்.
நாவுக்கரசரின் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் அவரை எதிர் சென்று அழைத்து ஆரதழுவி வரவேற்றார். முருக நாயனார் மடத்தில் ஞானசம்பந்தர் நாவுக்கரசரிடம் தியாகேசரின் திருவாதிரைத் திருநாளைப் பற்றிக் கேட்டார்.
நாவுக்கரசரும் ‘முத்துவிதான மணீப பொற்கவரி’ எனத் தொடங்கும் பதித்தைத் தொடங்கி தியாகேசரின் திருவாதிரை திருவிழாவைப் போற்றினார். இதனைக் கேட்டதும் தியாகேசரை காணும் ஆவல் ஞானசம்பந்தருக்கு உண்டானது. அவர் தமது கூட்டத்தினரோடு திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார்.
திருப்புகலூரில் சில நாட்கள் தங்கிவிட்டு பின்னர் அப்பரடிகள் திருசாத்தமங்கை, திருமருகல் சென்று வழிபட்டு மீண்டும் திருப்புகலூரை அடைந்தார். ஞானசம்பந்தர் திருவாரூர் சென்று தியாகேசரை வழிபட்டு திருப்புகலூர் திரும்பினார்.
சிறுதொண்ட நாயனாரும், திருநீல நக்க நாயனாரும் நாவுக்கரசரையும், ஞானசம்பந்தரையும் முரக நாயனார் மடத்தில் சந்தித்து பின்னர் அனைவரும் திருப்புகலூர் இறைவரை வழிபட்டனர்.
பின்னர் அங்கிருந்து நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் திருகடவூர் சென்று குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் தங்கி காலனை உதைத்த காலகாலனை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து திருஆக்கூர் வழியாக பல சிவதலங்களுக்கும் சென்று இறுதியில் திருவீழிமிழலையை அடைந்தனர்.
அங்கியிந்தோர் அவ்விருவரையும் மகிழ்வுடன் வரவேற்றனர். திருவீழிமிழலையானை வழிபட்டு அப்பரடிகள் திருவீழிமிழலையானைச் சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே என்ற திருதாண்டவ திருப்பதிகத்தைப் பாடினார்.
பின்னர் அவ்விருவரும் அங்கேயே சிலகாலம் தனித்தனி மடங்களில் தங்கியிருந்தனர். அப்போது அவ்வூரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற அடியார்கள் இருவரும் இறைவனிடம் வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலை ஏற்று கிழக்கு பலிபீடத்தில் ஞானசம்பந்தருக்கும், மேற்கு பலிபீடத்தில் நாவுக்கரசருக்கும் படிக்காசுகளை வழங்கினார் இறைவர். அப்படிக்காசுக்களைக் கொண்டு இருவரும் வேண்டிய பொருட்களை வாங்கி மக்களின் பசிப்பிணியைப் போக்கினர்.
சிறிது காலத்திற்குப் பின்னர் இறைவரின் அருளால் வானம் பொழிந்து நெல்வளம் பெருகி மக்கள் வாழ்வு செழித்தது. ஆங்கிருந்து அவர்கள் இருவரும் திருவாஞ்சியம் வழியாக வேதாரண்யத்தை வந்தடைந்தனர்.
பாட்டால் திறந்த கதவு
வேதாரண்யத் திருக்கோயில் கதவுகள் வேதங்களால் மூடப்பட்டிருந்தது. ஆதலால் மக்கள் வேறு ஒருவழி அமைத்து கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி வந்தனர்.
இதனைக் கண்ட நாவுக்கரசர் ‘பண்ணின் நேர் மொழியாள்‘ எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். பதிகம் பாடியதும் கதவுகள் திறந்தன. உள்ளே சென்று அனைவரும் இறைவனை வழிபட்டு வெளியே வந்தனர்.
அப்போது ஞானசம்பந்தர் கோவில் கதவு எளிதில் மூடும் வகையில் பாடல் ஒன்றைப் பாடினார். ஞானசம்பந்தரின் ஒருபாடலிலே கதவு மூடியது. இதனைக் கண்டதும் மக்கள் ஆரவாரித்தனர்.
அன்று இரவு அப்பரடிகள் தாம் ஒரு பதிகம் பாடிய உடனேதான் திருக்கதவு திறந்தது. ஞானசம்பந்தர் ஒருபாடல் பாடியதும் கதவு மூடிவிட்டது.
இறைவனின் உள்ளக்கிடக்கையை அறியாமல் தாம் பாடியது தவறு என்று மிகவும் வருத்தம் கொண்டார். அப்படியே உறங்கிப் போனார்.
இறைவனார் கனவில் ‘நீ எம்மை திருவாய்மூரில் காண்பாயாக’ என்று மலர்ந்தருளினார்.
உடனே எழுந்த அவர் எம்பெருமானைப் பணிந்து எங்கே என்னை இருந்திடத் தேடிக் கொண்டு என்று பதிகம் பாடினார்.
நள்ளிரவில் மடத்தில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு திருவாய்மூர் புறப்பட்டார். இறைவார் அந்தணர் கோலத்தில் முன்னால் நடக்கலானார்.
அவரைப் பின்தொடர்ந்த அப்பரடிகள் அதிவேகமாக நடந்தும் அந்தணரைப் பிடிக்க முடியவில்லை.
அப்போது செல்லும் வழியில் பொன்மயமான கோவில் ஒன்று தென்பட்டது. அந்தணர் உள்ளே சென்றார்.
அவரைப் பின்தொடர்ந்த நாவுக்கரசர் இறைவரைக் காணாது திகைத்தார். கண்ணீர் மல்க நின்றார். அங்கேயே துயின்றார்.
விவரம் அறிந்த ஞானசம்பந்தர் விரைந்து திருவாய்மூரின் பொற்கோவிலை அடைந்தார்.
நிகழ்ந்தவைகளை விவரித்த அப்பரடிகள் இறைவனாரிடம் “உம்முடைய விருப்பமின்றி கதவு திறக்க பதிகம் பாடியது என் தவறுதான். கதவு மூட ஒருபாடல் மட்டும் பாடிய ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். அவருக்கு காட்சி தராமல் தண்டிக்கலாமா?” என்று மனமுருக வேண்டினார்.
அப்பரடிகளின் கோரிக்கையை ஏற்று இறைவனார் ஞானசம்பந்தக்கு காட்சியளித்தார். அதனைக் கண்ட ஞானசம்பந்தர் ‘அப்பரே ஐயனை காணும்’ என்றதும் அப்பருக்கு இறைவனாரின் திருவருள் கிடைத்தது.
நாளும் கோளும் கிடையாது
அங்கேயே தங்கியிருந்த அவ்விருவரும் சிலநாட்களுக்குப் பின்னர் திருமறைக்காட்டிற்கு திரும்பி தங்கி தொண்டு செய்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து சிலர் ஞானசம்பந்தரைத் தேடி வந்தனர்.
மதுரையில் சமணத்தை அழித்து சைவத்தை வளர்க்க மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதனை அறிந்த அப்பரடிகள் சமணர்கள் மிகவும் கொடுமையானவர்கள். அத்தோடு இப்போது கோளும் நாளும் இப்போது சரியில்லை. ஆதலால் மதுரை பயணம் செல்வது தள்ளி வைக்குமாறு ஞானசம்பந்தரிடம் கேட்டுக் கொண்டார்.
சிவனடியார்களுக்கு நாளும் கோளும் கிடையாது என்று கூறிய ஞானசம்பந்தர் மதுரை புறப்பட்டார்.
சிலநாட்கள் திருமறைக்காட்டில் தங்கியிருந்த நாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு நாகைக் கோகரணம், திருவீழிமிழலை, திருவாடுதுறை வழியாக திருப்பழையாறை வந்தடைந்தார்.
பழையாறைக்கு அருகில் வடதளி என்னும் திருத்தலத்தில் சமணர்கள் திருக்கோவிலையும், சிவலிங்கத்தையும் மறைத்து சூழ்ச்சியால் சமண கோவிலாக மாற்றியிருந்தனர்.
அதனை அறிந்த நாவுக்கரசர் வடதளிப் பெருமானிடம் இறைவனாரை வெளிப்படுத்தி காட்டி அருளுமாறு வேண்டினார்.
நாவுக்கரசரின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சோழ மன்னனின் கனவில் சென்று வடதளியில் மறைந்துள்ள சிவலிங்கத்தை வெளிக்கொணருமாறு ஆணை பிறப்பித்தார்.
மன்னனும் இறை ஆணைக்கு இணங்க, வடதளியை அணுகி சிவலிங்கத்தை வெளிக்கொணர்ந்து கோவிலைப் புதுப்பித்ததோடு சமணர்களை அழித்தான்.
வடதளி இறைவனாரை வணங்கிய நாவுக்கரசர் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருகற்குடி, திருப்பாத்துறை வழியாக திருப்பைஞ்சீலியை நோக்கி புறப்பட்டார்.
நாட்கணக்காக நடந்ததால் அவர் மிகவும் சோர்வடைந்திருந்தார். பசியும், தாகமும் மிகுந்திருந்தது.
ஆனால் அவர் அவற்றைப் பொருட்படுத்தாமல் திருப்பைஞ்சீலி இறைவனாரை எண்ணியபடி நடந்தார்.
இறைவனார் தம்முடைய அடியவரின் துன்பத்தைப் போக்க வழியெங்கும் பொய்கைகளையும், சோலைகளையும் உருவாக்கினார். வேதியர் உருவில் நாவுக்கரசரை எதிர்பார்த்து அவர் வரும் வழியில் பொதிச் சோற்றுடன் இறைவனார் காத்திருந்தார்.
நாவுக்கரசர் வந்ததும் அவருக்கு பொதிச் சோற்றை அளித்தார். அதனை உண்ட நாவுக்கரசர் தண்ணீரை குடித்து சோர்வு நீக்கினார்.
எங்கே செல்கிறீர் என்று வினவிய இறைவனாரிடம் திருப்பைஞ்சீலி நாதரைக் காணப் போவாதாக நாவுக்கரசர் தெரிவித்தார்.
அதனைக் கேட்டதும் தானும் அங்கே செல்வதாகக் கூறிய வேதியர் திருக்கோவில் அருகே சென்றதும் மறைந்தருளினார்.
தனக்கு பொதிச் சோறு அளித்தது திருப்பைஞ்சீலி நாதரே என்பதை உணர்ந்த நாவுக்கரசர் மெய் சிலிர்த்தார். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்தார்.
பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை உள்ளிட்ட தொண்டைநாட்டுத் திருத்தலங்களைத் தரிசித்து காஞ்சிபுரத்தை அடைந்தார்.
ஏகாம்பரநாதரைத் தரிசித்து சிலகாலம் அங்கு தங்கி பின்னர் திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாச்சூர், திருவாலங்காடு, திரிக்காரிகை வழியாக திருக்களாத்தியை வந்தடைந்தார்.
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
காளத்தியப்பரையும், கண்ணப்ப நாயனாரையும் தரிசித்துவிட்டு ஸ்ரீசைலத்திற்கு சென்று மல்லிகார்ச்சுனரை வழிபட்டு தெலுங்கு மற்றும் மாளவ தேசத்தின் வழியாக காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு திருக்கயிலையை நோக்கிப் பயணமானார்.
உயர்ந்த மலைகளையும், காடுகளையும் கடந்து செல்லும் போது அவர் உணவினை உட்கொள்ளாது இறைதரிசனத்தை மட்டுமே எண்ணி சென்றார்.
நீண்ட நடை மற்றும் களைப்பினால் அவருடைய பாதங்கள் தேய்ந்தன. ஆதலால் கைகளை ஊன்றி நடந்தார். கைகளும் தேய உடலினை இழுத்துக் கொண்டு சென்றார்.
அடியவரின் துயரத்தை கண்ட இறைவனார் அவர் முன் வயோதிகராகத் தோன்றி எங்கே செல்தாக வினவினார். திருக்கயிலை தரிசனம் காணச் செல்வதாக நாவுக்கரசர் கூறினார்.
தேவர்களாலும் காண இயலாத கயிலாய தரிசனத்தை மனித உடலால் சென்று காண்பது கடினம் என இறைவனார் கூற, அதற்கு நாவுக்கரசர் மனித உடல் அழியும் வரை இறைவனைக் காணும் முயற்சி தொடரும் என்று உறுதிபடக் கூறினார்.
அங்கு வயதோதிகர் மறைந்தார். அங்கு பொய்கை ஒன்று உருவானாது. “இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுவாயாக. அங்கு உனக்கு யாம் கயிலைக்காட்சியை அருளுவோம்.” என்ற தேவ ஒலி கேட்டது.
நாவுக்கரசரின் உடல் பழைய நிலைக்கு மாறியது. இறைவனாரின் ஆணைக்கு இணங்க அப்பரடிகள் பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தார்.
அங்கு இறைவனார் உமையம்மையோடு கயிலைக்காட்சியை நாவுக்கரசருக்கு காட்சியருளினார். சிறிது நேரத்தில் கயிலைக்காட்சி மறைந்தது. அதனைக் கண்டு திகைத்தார் அப்பர்.
அப்போது ஐயாரப்பரைக் காண திருக்கோவிலுக்குச் செல்லுகையில் ஆணும் பெண்ணுமாக யானை, குயில், மயில், அன்னம், மான், பன்றி, மாடு போன்றவற்றை கண்டார்.
அவ்வுயிர்களில் அம்மையையும், அப்பனையும் கண்டு ‘மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி‘ என்னும் பதிகத்தைப் பாடினார். அப்பாடல்களின் உட்பொருள் இதுதான்.
இறைவனைத் தேடிப் போகிறேன் என்று சொல்லி, திருமணம் செய்யாமல் துறவுக் கோலம் பூண்டு அலைய வேண்டியதில்லை. அன்பைப் பண்பாகவும் அறத்தைப் பயனாகவும் கொண்டு மகிழ்வோடு வாழும் இல்வாழ்க்கையும் இறைவனுக்குப் பிடித்ததே ஆகும்.
சிலநாட்கள் திருவையாற்றில் தங்கி உழவாரப் பணி செய்த அப்பரடிகள் அங்கிருந்து திருப்பூந்துருத்தி சென்று தங்கினார்.
தொண்டரின் தொண்டன்
அப்போது சமணர்களை வாதில் வென்று சைவத்தை மதுரையில் தழைக்கச் செய்த ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி வந்தடைந்தார்.
அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருப்பதை அறிந்து அவரைக் காண ஞானசம்பந்தர் முத்து சிவிகையில் விரைந்தார். அப்பரோ முத்து சிவிகையைச் சுமந்து வரும் ஆளாக ஞானசம்பந்தரை சுமந்தார்.
இதனை அறியாத ஞானசம்பந்தர் அப்பரை காணாது தேடியபோது சுமப்பவர்களில் ஒருவராக இருப்பதை அப்பர் வெளிப்படுத்தினார்.
இதனைக் கண்டதும் ஞானசம்பந்தர் அவரை வணங்க முற்பட்டபோது அவருக்கு முன்னதாக அப்பர் அவரை வணங்கினார். இறையடியார்கள் இருவரின் இயல்பினையும் கண்ட அங்கிருந்த மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.
திருப்பூந்திருத்தியில் இறைவனை வழிபட்ட பின்னர் சம்பந்தர் மதுரையில் சமணர்களை வென்று சைவத்தை நிலையாட்டியதைத் தெரிவிக்க, தென்னாட்டு சிவாலயங்களைத் தரிசிக்கும் ஆவல் அப்பருக்கு உண்டானது.
அங்கிருந்து புறப்பட்டு மதுரையம்பதி, திருநெல்வேலி, திருக்கானப்பேர், திருராமேச்சுரம், திருப்புவனம் போன்ற பாண்டிய நாட்டுத் தலங்களை வழிபட்டு பின்னர் சோழ நாடு திரும்பினார். திருப்புகலூரில் தங்கி உழவாரப் பணியைச் செய்தார்.
அப்பொழுது அப்பரடிகள் நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருத்தலக்கோவை, குறைந்த நேரிசை, தனித்திரு நேரிசை, ஆருயிர் விருத்தம் தசபுராணம், பாவநாசப்பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடினார்.
திருப்புகலூரில் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது பொன்னும் மணியும் இறையருளால் சுத்தம் செய்ய வேண்டிய இடத்தில் சிதறிக் கிடந்தது. அப்பரடிகள் அவற்றைப் பொருட்படுத்தாது குப்பையாக எண்ணி ஒதுக்கித் தள்ளினார்.
பெண்ணாசையும் ஒதுக்கியவர் அப்பரடிகள் என்பதை உலக்குணர்த்த இறைவனார் அரம்பையர்களை அப்பரின் முன் தோன்றச் செய்தார். அவர்களையும் பொருட்படுத்தாது ஒதுக்கித் தள்ளினார் அப்பர்.
திருப்புகலூரில் உழவாரப் பணி செய்து வந்த அப்பரடிகள் பெருமானின் திருவடியை அடையும் நிலைக்கு வந்ததை உணர்ந்து ‘எண்ணுக்கேன் எனச் சொல்லி‘ என்னும் திருத்தாண்டகத்தைப் பாடினார்.
பின்னர் ஒரு சித்திரை சதயத்தில் திருநாவுக்கரசு நாயனார் இறையடியை எய்தினார்.
திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் வணங்கப்படுகிறது.
இறைவழிபாட்டில் தொண்டையே முதன்மையாகக் கொண்டு திகழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.
Comments
“திருநாவுக்கரசு நாயனார் – உழவாரத் தொண்டர்” மீது ஒரு மறுமொழி
[…] சோழ நாட்டில் வேதாரண்யத்தில் திருநாவுக்கர நாயனாருடன் […]