திருநீலகண்ட பதிகம்

திருநீலகண்ட பதிகம்

திருநீலகண்ட பதிகம் திருஞான சம்பந்த சுவாமிகளால் திருகொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோட்டில் பாடப் பெற்றது ஆகும்.

திருச்செங்கோட்டில் இறைவனும் இறைவியும் ஒரே திருமேனியில் அர்த்த நாரீசுவரர் (மாதிருக்கும் பாதியன்) என்ற திருப்பெயருடன் எழுந்து அருள் புரிகின்றனர்.

திருஞானசம்பந்தப் பெருமான் திருநணாவில் சங்கமுகநாதரை வணங்கிப் பதிகம் பாடித் துதித்து மீண்டும் திருகொடிமாடச் செங்குன்றூர் வந்து அங்குத் தங்கியிருந்தார்.

அப்போது அங்கு பனிகாலம் நிலவியது. அதனால் குளிர் சுரம் பரவி மக்களைப் பெரிதும் வருத்தியது.

திருஞான சம்பந்தருடன் இருந்தவர்களையும் குளிர் சுரம் பற்றியது. இச்செய்தியினை அறிந்த திருஞான சம்பந்தர் சிவபிரானது திருவடியைத் தொழுது குளிர் சுரத்தைப் போக்குமாறு அவ்வினைக்கிவ்னை என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவில் தீண்டப் பெறா திருநீலகண்டம் என்று பாடப்பட்டுள்ளது. இதனால் இப்பதிகம் திருநீலகண்ட பதிகம் என்றழைக்கப்படுகிறது. இப்பதிகத்தினால் மக்களின் குளிர் சுரம் நீங்கியது.

இன்றும் இப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும். (இப்பதிகத்தின் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை.)

 

திருநீலகண்ட பதிகம்

 

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்                   1

 

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்                      2

 

முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்

விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்

இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்                  3

 

விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்                                4

 

மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்                    5

 

மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்                               6

 

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே

உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்

செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே

திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்                                8

 

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்

சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்                         9

 

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்

பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்

தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்                           10

 

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே                     11

-திருஞானசம்பந்தர்


Comments

“திருநீலகண்ட பதிகம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. அன்புடையீர்,

    ஏழாவது பதிகம் கிடைக்கவில்லை,என்ற விபரம் தெரிந்தவுடன்,எனது மனது நொடியில்,கீழ்வரும்,நாலடி களை எடுத்துக் கொடுத்தது.

    “ஆ தன் கன்றினை அன்பாலனைவது போல்,

    பா தன்இசையைப் பாடாதியைவது போல்,

    சேய் நான் செய்பிழையெல்லாம் பொறுத்து எத்,

    தீவினையும் எனைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம்.’”

    ஆக்கியோன்
    கோபாலசாமி வேங்கடசாமி
    Diary DTD: 28.3.2021
    பெங்களூரு

  2. […] வழிபட்டு நோய் நீங்கி சுகமாக வாழ, திருநீலகண்ட பதிகம் பாடல்களைப் […]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.