திருநீலநக்க நாயனார் – திருஞானசம்பந்தருடன் சிவஜோதியில் கலந்தவர்

திருநீலநக்க நாயனார் தன்னுடைய மனைவியின் அன்பான செயலினை தவறாக எண்ணி பிரிந்தவர். பின்னர் இறையருளால் தன்னுடைய தவறினை திருத்தியவர்.

திருநீலநக்க நாயனார் திருஞானசம்பந்தருடன் சிவஜோதியில் கலந்தவர். ‘இறையடியார்கள் எல்லோரும் சமமே’ என்று நடத்தியவர்.

‘கண்ணால் காண்பது பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்பதற்கு உதாரணமாக திருநீலநக்க நாயனாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைச் சொல்லாம்.

அதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திருநீலநக்க நாயனார்

முன்பு சோழநாட்டில் திருசாத்தமங்கை என்னும் நீர்வளம் உள்ளிட்ட பலவளங்களைக் கொண்ட ஊர் ஒன்று இருந்தது.

இவ்வூரில் எப்போதும் நீர் பாயும் ஒலியானது கேட்டுக் கொண்டே இருக்கும் என்பதை ‘ஒலி புனல் சூழ் சாத்தமங்கை’ என்னும் சுந்தரரின் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.

தற்போது திருசாத்தமங்கை சீயாத்தமங்கை என்று வழங்கப்படுகிறது. இது நன்னிலத்திற்கு அருகே அமைந்துள்ளது.

இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்திற்கு அயவந்தி என்று பெயர். இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனும், இறைவியும் அயவந்தீஸ்வரர், இருமலர்க்கண்ணம்மை (உபய புஷ்ப விலோசனி) என்ற பெயர்களில் அறியப்படுகின்றனர்.

‘அயன்’ என்னும் ‘நான்முகன்’ வழிபாடு மேற்கொண்ட திருத்தலமாதலால் இது பிரம்மாவின் பெயராலே அயவந்தி என்றழைக்கப்படுகிறது.

வளங்கள் பல கொழிக்கும் சாத்தமங்கையில் வேதியர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் நீலநக்கரும் ஒருவர். அவர் சிவ வழிபாடும், சிவனடியார் தொண்டுமே வேதத்தின் உட்பொருள் என்பதாகக் கருதினார்.

ஆதலால் சிவனாரின் மீது பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். சிவனடியார்களை முறைப்படி உபசரித்து திருவமுது செய்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் தொண்டுகள் செய்து வந்தார்.

அவர் தினமும் வீட்டில் முறைப்படி சிவ வழிபாட்டினை மேற்கொள்வார். பின்னர் அயவந்தி ஆலயம் சென்று அம்மையும் அப்பனையும் சிவாகமப்படி வழிபடுவார்.

அவர் தம் மனைவியான மங்கையர்கரசியாரும் தம்முடைய கணவரின் சிவ வழிபாட்டிற்கு உதவுவதோடு சிவனாரிடத்தில் பெரும் பக்தி கொண்டிருந்தார்.

‘தீர விசாரிப்பதே மெய்’ என்பதற்கான சம்பவம்

இவ்வாறு இருக்கையில் ஒரு திருவாதிரை அன்று தம்முடைய வீட்டில் சிவ வழிபாட்டினை மேற்கொண்ட திருநீலநக்க நாயனார்,

அயவந்தி நாதரை வழிபட விருப்பம் கொண்டார். ஆதலால் வழிபாட்டிற்கு வேண்டிய பொருட்கள் மற்றும் தம்முடைய மனைவியாருடன் சிவாலயத்திற்குச் சென்றார்.

சிவாலயத்தில் திருநீலநக்கர் முறைப்படி வழிபாடு செய்வதற்கு தேவையான பொருட்களை அவரின் குறிப்பறிந்து அவருடைய மனைவியார் அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

வழிபாட்டின் இறுதியில் திருநீலநக்க நாயனார் திருவைந்தெழுத்தை (நம சிவாய) ஓதிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த சிலந்தி ஒன்று இறைவனாரின் திருமேனியில் விழுந்தது. இதனைக் கண்டதும் திருநீலநக்கரின் மனைவியார், குழந்தைக்கு நிகழும் ஆபத்தைக் கண்டு மனம் பதைக்கும் தாயுள்ளம் போல் தவித்தார்.

தம்முடைய வாயால் அச்சிலந்தியை ஊதி தள்ளினார். அப்போது அவருடைய வாயிலிருந்து எச்சில் இறைவனின் திருமேனி மீது தெரித்தது.

இதனைக் கண்ட திருநீலநக்கர் மனைவியின் உண்மையான அன்பினைப் புரியாமல், “உலகை ரட்சிக்கும் இறைவனின் மீது எச்சிலை ஏன் உமிழ்ந்தாய்?” என்று கோபமாகக் கேட்டார்.

அவ்வம்மையார் “இறைவனின் மீது சிலந்தி விழுந்தது. ஆதலால் இறைவனின் திருமேனிக்கு ஏதேனும் தீங்கு விளையக்கூடாது என்பதற்காக அச்சிலந்தியை ஊதித் தள்ளினேன்.” என்றார்.

அதனைக் கேட்டதும் நீலநக்கரின் கோபம் இன்னும் அதிகரித்தது.

“சிலந்தியை அப்புறப்படுத்த வாயால் ஊ துவதைவிட வேறு ஏதேனும் வழியைப் பின்பற்றியிருக்கலாமே. இறைவனுக்கு தீங்கிழைத்த உன்னோடு என்னால் இனி வாழ இயலாது” என்று கூறிவிட்டு மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

கணவனின் கொடுஞ்சொல்லைக் கேட்டதும் அவ்வம்மையார் செய்வதறியாது திகைத்து அவ்வாலயத்திலேயே தங்கி விட்டார்.

நீலநக்கர் இரவில் உறங்கும் போது அவருடைய கனவில் தோன்றிய அயவந்தி நாதர் “உன்னுடைய மனைவி ஊதிய இடத்தினைத் தவிர மற்ற இடங்களில் இருக்கும் கொப்புளங்களைப் பார்.” என்று தன்னுடைய திருமேனியைக் காட்டினார்.

வெண்ணீறு பூசிய திருமேனியில் ஒரு இடத்தை தவிர ஏனைய இடங்கள் முழவதும் கொப்புளங்கள் நிறைந்து காணப்பட்டன.

“தாயுள்ளத்தோடு அவள் செய்த செயலை தவறாகப் புரிந்து தண்டித்து விட்டாயே. அவளை அழைத்துக் கொள்.” என்று கட்டளை பிறப்பித்தார் இறைவர்.

இறைவரின் ஆணையைக் கேட்டதும் திருநீலநக்க நாயனார் மகிழ்ச்சியில் ஆடினார்; பாடினார்; துள்ளிக் குதித்தார்.

விடிந்ததும் அயவந்தி திருக்கோவிலுக்குச் சென்றார். அங்கியிருந்த தன்னுடைய மனைவியிடம் “இறைவனின் மீதான உன்னுடைய பேரன்பினை எனக்கு காட்டி விட்டார் இறைவர்” என்று கூறி மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு சென்றார். அவ்விருவரும் மீண்டும் சிவ வழிபாட்டினையும், சிவனடியார் திருத்தொண்டினையும் மேற்கொண்டனர்.

திருஞானசம்பந்தருடன் நட்பு கொள்ளல்

திருநீலநக்கர் இறைவனின் அருளால் ஞானக் குழந்தையாக திகழும் திருஞானசம்பந்தரைப் பற்றிக் கேள்வியுற்றார். அவரை நேரில் காணும் ஆவல் திருநீலநக்கருக்குப் பிறந்தது.

அப்போது ஒருநாள் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை அயவந்தி நாதரை வழிபாடு மேற்கொள்ள வரவிருக்கிறார் என்ற செய்தி திருநீலநக்கருக்கு கிடைத்தது.

உடனே அவர் ஞானசம்பந்தரையும் அடியவர் கூட்டத்தையும் வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி வாழை நட்டினார். பின்னர் உறவினர் கூட்டத்தோடு மேளதாளத்துடன் சம்பந்தரை பூரணக்கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

ச‌ம்பந்தரையும் அவருடைய அடியார்களையும் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறுசுவை திருவமுது செய்வித்தார். சம்பந்தர் தங்குவதற்கு தம்முடைய இல்லத்தில் ஏற்பாடுகள் செய்தார். சம்பந்தருடன் திருநீலகண்ட யாழ்பாணரும், அவருடைய மனைவியான மதங்க சூளாமணியும் வந்திருந்தனர்.

சம்பந்தர் திருநீலநக்கரிடம் “நம்முடன் வந்திருக்கும் நீலகண்ட யாழ்பாணரின் தம்பதிகள் தங்குவற்கு இடம் அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

சாதிக் கொடுமை இருந்த அக்காலத்தில், அதனைப் பொருட்படுத்தாது ‘இறையடியார்கள் எல்லோரும் சமம்’ என்றெண்ணி பாணரினத்தைச் சார்ந்த திருநீலண்ட யாழ்பாணரின் தம்பதியருக்கு தம்முடைய வேள்விச்சாலைக்கு அருகில் இடமளித்தார் திருநீலநக்கர்.

“இவ்வடியாரினும் தூயவர் எவர்?” என்று எண்ணியபடி திருநீலகண்ட யாழ்பாணர் தம்பதியர் அவ்விடத்தில் துயின்றனர்.

அயவந்தி நாதரை வழிபாடு மேற்கொண்ட திருஞானசம்பந்தர், திருப்பதிகம் பாடுகையில் பதிகத்தின் 2-வது மற்றும் 11-வது திருக்கடைக்காப்பிலும் திருநீலநக்கரை சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

‘பொடிதனைப் பூசும் மார்பில்
புரிநூல்ஒரு பாற்பொருந்தக்
கொடியன சாய லாளோடு
உடனாவதும் கூடுவதே!
கடிமணம் நல்கி நாளும்
கமழும்பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ
அயவந்தி அமர்ந்தவனே!’

‘மறையினர் மல்கு காழித்
தமிழ்ஞானசம் பந்தன் மன்னும்
நிறையினார் நீல நக்கன்
நெடுமாநகர் என்று தொண்டர்
அறையும்ஊர் சாத்த மங்கை
அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்த வல்லார்’

திருஞானசம்பந்தர் அயவந்தியை வழிபாடு மேற்கொண்டுவிட்டு அடுத்த திருத்தலத்திற்குச் செல்லுகையில் திருநீலநக்கரும் உடன் செல்ல விருப்பம் கொண்டார்.

அதனைக் கண்ட ஞானசம்பந்தர் திருநீலநக்கரை அயவந்தி நாதரை வழிபட்டு திருச்சாத்தமங்கையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஆதலால் அவ்வப்போது திருஞானசம்பந்தர் இருக்கும் தலங்களுக்கு திருநீலநக்கர் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார்.

திருஞான சம்பந்தரின் திருமணத்திற்குச் சென்ற திருநீலநக்க நாயனார் மற்றும் அவருடைய துணைவியார் சிவஜோதியில் கலந்தனர்.

திருநீலநக்க நாயனார் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

இறையடியார்கள் எல்லோரும் சமமே என்று நடத்திய திருநீலநக்க நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்‘ என்று போற்றுகிறார்.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.