திருப்பதி என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டும்தான்.
திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லாத காலத்தில் பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்துள்ளன.
கி.பி.1445-ம் ஆண்டு வரை ‘திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் எளிதில் கெட்டுப்போகாத இனிப்பாக சுய்யம் வழங்கப்பட்டது.
1456-ம் ஆண்டு முதல் அப்பம், 1460-ம் ஆண்டிலிருந்து வடை, 1468 முதல் அதிரசம், 1547 முதல் ‘மனோகரம்’ என்ற இனிப்பு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
1803 முதல் அன்றைய மதராஸ் அரசாங்கம் பிரசாதங்களை விற்கத் தொடங்கியது. இதற்காக ஸ்ரீனிவாச ஆலயத்தில் பிரசாத விற்பனைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த காலத்தில் லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அந்த பூந்திதான் லட்டாக உருப்பெற்றது.
லட்டை அன்றாடப் பிரசாதமாக்கிய பெருமை ஆலய பிரசாதங்களை தயாரித்து வழங்கிய கல்யாணம்
அய்யங்காரையே சாரும்.
கல்யாணம் அய்யங்கார் மிகப்பிரம்மாண்ட லட்டுவை தயாரித்து அதை உடைத்து பக்தர்களுக்கு வழங்குவதைவிட சிறியளவில் லட்டு தயாரித்து பக்தர்களுக்க வழங்கலாம் என ஆலோசனை கூறினார்.
அவரது ஆலோசனை ஏற்கப்பட்டு திருமலையில் அனைத்து சேவைகளுடன் லட்டு பிரசாதம் அளிக்கும் முறை அமலுக்கு வந்தது.
லட்டு பிரசாதம் ஆலயத்தின் உட்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னை வகுளாதேவியின் நேரடி பார்வையில் மடப்பள்ளி அறையில் தயாரிக்கப்பட்டது.
அங்கு மகனுக்கு தயாரிக்கப்பட்ட பிரசாதங்களை தாய் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம்.
நாளடைவில் லட்டு விற்பனை அதிகரித்ததை அடுத்து, ஆலயத்தின் உள்ளே மட்டுமல்லாமல் வெளிப்பகுதியிலும் லட்டு தயாரிக்கப்பட்டது.
லட்டுகள் ஆஸ்தான லட்டு, கல்யாண உத்ஸவ லட்டு, புரோகிதம் லட்டு என்று மூன்று வகைப்படும்.
ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இது 750 கிராம் எடையுடனும் பிற லட்டுகளைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்தும் தயாரிக்கப்படும்.
கல்யாண உத்ஸவ லட்டு என்பது கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கு தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.
புரோகிதம் லட்டு தான் பொதுவாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 100 கிராம் அளவுடையது. இந்த லட்டுகள்தான் அதிகளவில் தயார் செய்யப்படுகின்றன.
வெறுமனே ஆசைப்பட்டால் திருப்பதி லட்டு கைக்கு வந்துவிடாது. பெருமாளின் ஆசி இருந்தால் மட்டுமே எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கைக்கு லட்டு வந்து சேரும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!