திருமண பந்தம் பற்றிய ஓர் அழகான சிறுகதை.
உமாவை அன்றைக்கு பெண் பார்க்க கோவிலுக்கு வந்திருந்தனர்.
மாப்பிள்ளையின் அம்மா, அண்ணன், தங்கை, அத்தை மகன், அத்தை மருமகள், அத்தையின் பேரன் என ஏழு பேர் கொண்ட குழுவினர் பெண் பார்க்க வந்திருந்தனர்.
உமாவின் பெற்றோர், அத்தை, மாமா, தம்பி என்ற ஐவர் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.
உமாவினை மாப்பிளை சங்கரின் வீட்டினருக்கு நிறையவே பிடித்துப் போனது. உமாவிற்கும் மாப்பிளை மற்றும் அவரது உறவினர்களையும் மிகவும் பிடித்துப் போனது. உமாவிற்கும் சங்கருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இங்கே உமாவைப் பற்றி கட்டாயம் சொல்லியாக வேண்டும். உமா ரோஜா நிறத்துடன் உருண்டை விழிகளும், கூர்மையான நாசியும், வட்ட முகமும் கொண்டு அனைவரையும் வசீகரிக்கும் அழகினை உடையவள்.
பொறுமையும், அடக்கமும் உடைய அவளை திருமணம் செய்யப் போகும் நபர் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று அவளுடைய பாட்டி அடிக்கடி சொல்வதுண்டு. அவளுடைய அரசாங்க வேலை அவளுக்கு இன்னும் சிறப்பு சேர்த்தது.
உமா சைவ உணவினை மட்டுமே உண்ணுபவள். அவளுடைய உறவினர்கள் அனைவரும் அசைவ உணவினை உண்ணுபவர்கள்.
உமாவின் பெற்றோர் உட்பட அவளுடைய சொந்தங்கள் அனைவரும் ‘திருமணத்திற்குப் பின் மாப்பிளையின் விருப்பப்படி உமா அசைவ உணவினை கட்டாயம் உண்ண வேண்டியிருக்கும்’ என கூறிக்கொண்டே இருந்தனர். இதுவே அவளுக்கு திருமண பந்தம் பற்றி பயத்தினைத் தந்தது.
உமாவின் அலுவலகத் தோழி நித்யாவும் ‘வரப்போகும் மாப்பிளை அசைவ உணவினை விரும்பி உண்பவராக இருந்தால் நீ அசைவம் சமைக்க மாட்டேன் என்று கூற முடியாது.
ஆதலால் நீ அசைவத்தை சமைக்கக் கற்றுக் கொள்.’ என்று அடிக்கடி பலதடவை திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன் உமாவிடம் கூறினாள்.
உமாவும் வரப்போகும் மாப்பிளை அசைவ உணவு உண்பவராக இருந்தால் தான் அசைவ உணவினைத் தயாரித்துக் கொடுக்க மனதளவில் தயாராக இருந்தாள்.
திருமண நிச்சத்திற்குப் பின் உமா சங்கரிடம் பலமுறை போனில் உரையாடிய போதும் தான் சைவ உணவினை மட்டும் உண்ணுபவள் என்ற விசயத்தைக் கூறவில்லை. உமா சங்கரின் திருமணமும் முடிந்தது.
திருமண விருந்து
மறுநாள் மாப்பிள்ளை விருந்திற்கு உமாவின் குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நடப்பவைகள், பறப்பவைகள், நீந்துபவைகள் ஆகியவற்றின் வறுவல், பொரியல், பிரியாணி, கோலா என எல்லா வகையான அசைவ உணவுகளும் விருந்திற்கு தயார் செய்யப்பட்டிருந்தன.
விருந்திற்கு மாப்பிளை மற்றும் பெண் வீட்டார்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.
உமாவும் சங்கரும் உணவு உண்ணும் இடத்தின் மையத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிர்வரிசையில் மாப்பிளை வீட்டு உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.
வாழை இலை விரிக்கப்பட்டு உணவு பரிமாற தயார் நிலையில் இருந்தது.
கட்டாயம் இன்றைக்கு அசைவ உணவினை உண்ண வேண்டும் என்பதை நினைக்கையில் உமாவின் மனம் திக்திக் என்றிருந்தது. ‘கடவுளே என்னைக் காப்பாற்று’ என்று பிரார்த்தித்துக் கொண்டாள் உமா.
உமாவின் மாமா இலையில் மட்டன் கோலாவை வைக்கப் போனார். உமா ‘வேண்டாம்’ என்று தலையசைத்தாள்.
இதனைப் பார்த்ததும் சங்கரிடம் ‘உமாவை அசைவம் சாப்பிடச் சொல்லுங்க. இதுதான் அவளை அசைவம் சாப்பிட வைக்க சரியான தருணம். நீங்க சொன்னா அவ கட்டாயம் சாப்பிடத்தான் செய்யணும்.’ என்று கூறினார்.
உமாவின் கண்களில் நீர்க்கட்டியிருப்பதை சங்கர் கவனித்தான்.
எதிர்வரிசையில் இருந்த அனைவரும் சங்கர் உமாவை அசைவ உணவை உண்ணுமாறு கூறவேண்டும் என்று கண்களாலே சங்கரிடம் தெரிவித்து சங்கரின் நடவடிக்கைகாகக் காத்திருந்தனர்.
சங்கருக்கோ மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
ஆனாலும் உமாவின் மாமாவிடம் ‘அவளுக்கு எது விருப்பமோ அதனையே பரிமாறுங்கள். எனக்காக அவள் அசைவ உணவினை உண்ண வேண்டாம்.’ என்றான்.
சங்கரின் உறவினர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ‘ஒரேநாளிலே சங்கர் இப்படி மாறிவிட்டானே. தலையணை மந்திரம் வேலை செய்யத் தொடங்கி விட்டதோ?’ என்று முணுமுணுத்தனர்.
சங்கர் எதனையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான். உமாவும் தயக்கத்துடனே சாப்பிட்டு எழுந்தாள்.
சங்கரின் வீட்டிற்கு புறப்படுவதற்காக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த உமா சங்கரிடம் ‘நீங்கள் அசைவ உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறியதற்கு நன்றி.’ என்றாள்.
‘உனக்கு விருப்பம் இல்லை என்றால் நீ அசைவ உணவினை எனக்காக சமைக்க வேண்டாம்.’ என்றான் சங்கர்.
இதனைக் கேட்டதும் உமாவின் கண்களில் நீர்வழிந்தது.
கண்ணீரைத் துடைத்த சங்கர் ‘உமா, கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள்.
ஏதேனும் ஒருமாடு மற்றொன்றை ஜெயிக்க நினைத்து வேகமாக ஓடினால் மாட்டுவண்டிக்குதான் நஷ்டம்.
இரண்டு மாடுகளும் ஒரே வேகத்தில் ஓடினால்தான் மாட்டுவண்டி சேதாரம் இல்லாமல் அடைய வேண்டிய இடத்தை அடையும்.
உன்னைக் கட்டாயப்படுத்தி அசைவத்தை உண்ணச் செய்தால் எனக்கான வெற்றியாக என்னுடைய உறவினர்கள் கருதுவர். ஆனால் நீ தோற்றுப்போய் விட்டதாக உனக்குத் தோன்றும். இது நம்முடைய திருமண வாழ்வில் பெரிய பிளவினை உண்டாக்கும்.
திருமண வாழ்வு என்பது நம் இருவருடைய வாழ்வு. இவ்வாழ்வில் எதிலும் நீயும், நானும் சேர்ந்து வெற்றி பெற்றால்தான் அது நம்முடைய திருமண வாழ்விற்கான உண்மையான வெற்றி.
அதனால்தான் என்னுடைய உறவினர்களைப் பொருட்படுத்தாமல் உன்னை நான் அசைவம் உண்ணவும், சமைக்கவும் கட்டாயப்படுத்தவில்லை.’ என்றான்.
திருமண பந்தம் பற்றி புரிந்து கொள்ள வைத்த கணவனைக் கொடுத்தற்காக கடவுளுக்கு நன்றி கூறினாள் உமா.