திருமண வாழ்வில் ஒத்த உரிமை அவசியம்

திருமண வாழ்வில் ஒத்த உரிமை அவசியம் என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். இருவரும் B.Sc. பட்டதாரிகள்.

இருவருக்கும் ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம், ஆக இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்குப் பெற்றோருடைய ஒப்புதலையும் பெற்றுவிட்டனர். ஆனால், திருமணம் மட்டும் நடைபெறவில்லை.

மாப்பிள்ளையின் தந்தை காங்கிரஸ்காரர். மாமன் கம்யூனிஸ்டு. பெண்ணின் தந்தை தி.மு.க. மாமன் தி.க.

நடைபெறுமா கல்யாணம்?

யாரை வைத்துத் திருமணம் நடத்துவது என்ற குழப்பத்திலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. கடைசியாக அழைப்பு எனக்கு வந்தது.

நான் போய் அத்திருமணத்தை நடத்தி வந்தேன்.

ஒத்த உரிமை

அப்பொழுது ஒத்த கல்வி, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம் ஆகியவைகளில் ஒன்றுபட்ட நீங்கள், ஒருவருக்கொருவர் திருமண வாழ்வில் ஒத்த உரிமை  கொடுத்து வாழுங்கள் என்று அறவுரை கூறி வந்தேன்.

ஆறுமாதம் கழித்து, மணமகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நீங்கள் கூறிய அறவுரை எனக்கு தொல்லையாய்ப் போயிற்று. பெண் எதற்கெடுத்தாலும் சமஉரிமை கோருகிறாள்.

தண்ணீர் இறைப்பதிலும், துணி துவைப்பதிலும், சமைப்பதிலும்கூட நான் பங்குபெற வேண்டுமெனக் கட்டாயப் படுத்துகிறாள். நான் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

ஒரு நாள் கதவைச் சாத்திவிட்டு மனைவியை உட்கார வைத்து, ‘நமக்குள் சண்டை வேண்டாம். தண்ணீர் இறைக்கவும் வேண்டாம். அடுப்புப் பற்றவைக்க வேண்டாம். சமைக்கவும் வேண்டாம்.  பக்கத்திலுள்ள ஓட்டலுக்குச் சென்று உணவு வாங்கி வந்து, நாம் இருவரும் சாப்பிட்டு விடலாம்‘ என்றேன்.

அதற்கு என் மனைவி ‘இது நல்ல யோசனைதான், எனக்கும் சம்மதமே’ எனக் கூறி, இன்றைக்கு நீங்கள் போய்ச் சாப்பாடு வாங்கி வாருங்கள் நாளைக்கு நான் போய்ச் சாப்பாடு வாங்கி வருகிறேன்.’ என்று கூறுகிறாள்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இதற்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும். ஏனென்றால், இது உங்கள் அறவுரையால் வந்த வினை’ என்று எழுதப்பெற்று இருந்தது.

அடக்கிப் பார்

வந்த கடிதத்தில் என் விடைக்கு ஒரு அஞ்சலட்டையும் இருந்தது. இதைக்கண்டு நான் அஞ்சவில்லை.

அஞ்சலட்டையின் நடுவில், ‘அடக்கிப் பார்‘ என்று ஏழு எழுத்துக்களை மட்டும் எழுதி அனுப்பிவிட்டேன்.

இதைப் பார்த்ததும், ‘துணிகளைத் துவை’ என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறான். அப்பெண் ‘நீங்கள் இரண்டு துவையுங்கள். நானும் இரண்டு துவைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறாள்.

‘துவைக்கிறாயா இல்லையா?’ என்று அதட்டிக் கையை ஓங்கியிருக்கிறான்.

அப்பெண் அருகில் வந்து மெதுவாக “என்ன இரண்டு நாட்களாக வேறு மாதிரிக் காட்சியளிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கிறாள்.

‘கி.ஆ.பெ. கடிதம் எழுதியிருக்கிறார். இதோ பார்’ என்று எடுத்துக் காட்டியிருக்கிறான்.

அதைப் பார்த்த அப்பெண், ‘கி.ஆ. பெயுமாச்சு, நீங்களுமாச்சு, நான் மணப்பாறைச் சந்தையில் வாங்கி வந்த மாடு அல்ல. என்னை அடிமைப் படுத்துவதற்கு’ என்று கூறிவிட்டாள்.

அடங்கிப் போ

மறுநாள் எனக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான். ‘அதில் உங்கள் ஆலோசனை பயன் தரவில்லை. நான் என்ன செய்யட்டும்?’ என்று எழுதியிருந்தான்.

அப்பொழுதுதான் நான் சிந்திக்கத் தொடங்கினேன். இவனுக்கு ஏழு எழுத்து தப்பு என்று எண்ணி, ஒரு எழுத்தைக் குறைத்துக் கொண்டு, ஆறே எழுத்தில் ஒரு சொல்லை எழுதி அனுப்பி விட்டேன். அது ‘அடங்கிப் போ‘ என்பது.

இது பெரும் பலன் தந்தது. படித்த பெண் அல்லவா? அடக்க அடக்க அடங்காத பெண், அடங்க அடங்க அடங்கிப் போய்விட்டது. அவர்கள் வாழ்வில் நல்லொளி வீசியது.

சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபொழுது, அவர்கள் இல்லத்திற்குச் சென்று நலம் வினவினேன். இரண்டு ஆண் குழந்தை. ஒரு பெண் குழந்தை, ‘நாங்கள் நல்வாழ்வு வாழ்கிறோம். எங்களைப் போல மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் இங்கு வேறு எவருமில்லை‘ எனக் கூறினர். மகிழ்ந்தேன்.

இதையே நான் இப்பொழுதும் கூறுகிறேன். அடக்கிப் பார்க்க வேண்டும். முடியாது போனால் அடங்கிப் போக வேண்டும். ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

என்ஜினானாலும் காரானாலும் இரட்டை மாட்டு வண்டியானாலும் ஒத்தை மாட்டு வண்டியானாலும், வண்டியை ஓட்டுபவர் ஒருவராய்த்தான் இருக்கமுடியும். இருவரால் ஓட்ட முடியாது. ஓட்டினாலும் சரியாக ஓடாது.

அதுபோலத்தான் இல்லறமும். ஆண் நடத்துவதில் பெண் தவறு கண்டால், குடும்பத்தையும் வருமானத்தையும் பெண்ணிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆண்டு முழுவதும் போராட்டமோ தொல்லையோ இராது. இல்லறம் அமைதியாக நடைபெறும்.

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

மணமக்களின் காது, கண், வாய் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.