திருமூலர் நாயனார் – திருமந்திரம் அருளியவர்

திருமூலர் நாயனார் மூலன் என்ற இடையனின் உடலில் தன்னுயிரைச் செலுத்தி பின் இறையருளால் சிவாகமத்தை தமிழில் திருமந்திரமாக அருளியவர்.

திருக்கையலாயத்தில் நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. அவர்களுள் சுந்தர நாதர் என்பவரும் ஒருவர். அவர் அட்டாமா சித்திகளில் கைதேர்ந்தவர்.

இறைவனான சிவபெருமானை தன்னுடைய இதயத் தாமரையில் வைத்து எப்போதும் வழிபாடு செய்து கொண்டிருப்பவர்.

அவருக்கு ஒருமுறை தென்பொதிகையில் இருந்த அகத்தியரைச் சந்தித்து, அவருடன் சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.

ஆதலால் அவர் திருகையிலையை விட்டு புறப்பட்டு தென்திசை நோக்கி பயணமானார். வழியில் திருக்கேதாரத்தை வழிபட்டு, நேபாளத்தின் பசுபதீஸ்சுவரை வணங்கி கங்கை கரைக்கு வந்தார்.

அங்கு நீராடிவிட்டு காசி விசுவநாதரை வழிபட்டு, பின் ஸ்ரீசைலத்தை அடைந்து மல்லிகார்ஜூனரைப் போற்றி, பின் காளத்தியப்பரை போற்றி தென்திசைக்குப் பயணமானார்.

திருவாலங்காடு, காஞ்சி ஆகிய இடங்களில் இறைவனாரை வழிபட்டு, காஞ்சியில் சிலநாட்கள் தங்கியிருந்தார். பின்னர் திருவதிகையை வழிபட்டு தில்லையில் ஆடலரசனை வணங்கினார்.

அதன்பின் காவிரிக் கரையை அடைந்து திருவாடுதுறையை அணுகினார். அங்குள்ள இறைவனாரை வணங்கியதும் அவருக்கு அவ்விடத்தில் சிலகாலம் தங்க விருப்பம் உண்டானது.

ஆதலால் திருவாடுதுறையில் சிலகாலங்கள் தங்கி இறைவனாரை வழிபட்டார்.

சிவயோகியார் திருமூலராதல்

பின் அருகில் இருக்கும் தலங்களைத் தரிசிக்கும்பொருட்டு செல்லுகையில் காவிரிக்கரையில் பசுக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டார்.

அருகே சென்று பார்த்தபோது பசு மேய்ப்பவன் மூலன் என்பவன் விதிப்பயனால் இறந்து கிடந்தான்.

அவனைச் சுற்றிலும் பசுக்களில் சில நின்று கொண்டு கண்ணீர் வடித்தன. சில நாக்கால் அவனை நக்கிக் கொண்டிருந்தன.

மூலன் சோழநாட்டின் சாத்தனூரைச் சார்ந்தவன். சாத்தனூரில் உள்ளவர்களின் ஆநிரைகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தான்.

அவன் பசுக்களை அடித்து துன்புறுத்தாமல் நல்ல புற்கள் உள்ள இடங்களைத் தேர்வு செய்து மேயவிடுவான். நல்ல தண்ணீர் உள்ள இடத்தில் அவைகளை நீர் அருந்தச் செய்வான். கண்ணும் கருத்துமாக அவைகளைப் பாதுகாத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுவான்.

ஆதலால் பசுக்கள் மட்டுமின்றி பசுக்களின் உரிமையாளர்களும் மூலனிடம் அளவு கடந்த அன்பினைக் கொண்டிருந்தனர்.

மேய்ப்பவன் இறந்தால் பசுக்கள் படும் துயரினைக் கண்டதும் சிவயோகியரின் மனதில் கருணை பிறந்தது.

‘இம்மேய்ப்பான் உயிர்த்தெழுந்தால் ஒழிய இப்பசுக்களின் துயரம் ஓயாது. ஆதலால் எம்பெருமானாரின் கருணையால் இப்பசுக்களின் துயரினைப் போக்குவேன்’ என்று எண்ணினார்.

அட்டமா சித்திகளில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையைப் பயன்படுத்தி, தன்னுடைய உடலைப் பத்திரப்படுத்தி, மூலனின் உடலில் புகுந்து திருமூலராக உயிர்த்தெழுந்தார்.

திருமூலரைக் கண்டதும் பசுக்கள் தன்னுடைய மேய்ப்பான் எழுந்ததாகவே எண்ணின. அவரை நாவால் நக்கி அன்பினை வெளிப்படுத்தின.

திருமூலரும் அவைகளுக்கு நல்ல உணவினை அளித்து நீரருந்த செய்து இளைப்பாற செய்தார். மாலை நெருங்கியது. பசுக்கள் தம் கன்றுகளை நினைந்து சாத்தனூருக்கு திரும்பத் தொடங்கின. திருமூலரும் அவைகள் பின்னே சென்றார்.

பசுக்கள் தத்தம் வீடுகளை அடையாளம் கண்டு அதனுள் புகுந்தன. திருமூலர் மட்டும் ஊரின் வெளிப்புறத்தில் நின்றார். அப்போது கணவனைக் காணாது தேடிய இடையன் மூலனின் மனைவி அவ்விடத்திற்கு வந்தாள்.

திருமூலரை தன்னுடைய கணவன் என்று எண்ணி “இவ்வளவு தாமதம் ஏன் உண்டானது?” என்று வினவினாள். திருமூலர் அவளின் கேள்விக்கு பதில் ஏதும் கூறவில்லை. “சரி வாருங்கள்” என்றபடி திருமூலரின் கையை தொட முற்பட்டபோது திருமூலர் விலகினார்.

“நீ நினைப்பது போல் நான் உன்னுடைய கணவன் அல்லன். உடலே அவனுடையது. உள்ளிருப்பது சிவயோகி. ஆதலால் நீ திருக்கோவில் சென்று அரனாரை வழிபட்டு அமைதியடைவாயாக.” என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்று ஊர் பொதுமடத்தில் தங்கினார்.

திருமூலரின் கூற்றைக் கேட்டதும் அப்பெண்மணி அதிர்ச்சி அடைந்தாள். வீடு திரும்பிய அவள் உறக்கம் இல்லாமல் இரவினைக் கழித்தாள். பொழுது புலர்ந்ததும் ஊராரிடம் நடந்தவைக் கூறினாள்.

ஊரார்கள் அவளை ஊரின் பொதுமடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களைக் கண்டதும் திருமூலர் “மூலன் விதிப்பயனால் நேற்று இறந்து விட்டான். பசுக்களின் துயரினைப் போக்கவே நான் அவன் உடலில் புகுந்தேன். ஆதலால் நீங்கள் இப்போது இங்கியிருந்து செல்லுங்கள்.” என்றுகூறி யோகத்தில் ஆழ்ந்தார்.

அவருடைய முகப்பொலிவினையும் பேச்சினையும் கண்டு கேட்டதும் எல்லோரும் வியந்தனர்.

“இவருக்கு பித்துப் பிடிக்கவில்லை. வேறு ஒரு பெண்ணிடத்தில் வைத்த அன்பினால் புறக்கணிக்கவில்லை. சித்த விகற்பம் நீங்கித் தெளித்த சிவயோக நிலையில் இருக்கிறார். பழையபடி நீ இவருடன் இணைந்து வாழ இயலாது.” என்று கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.

திருமந்திரம் இயற்றல்

திருமூலர் யோகநிலையில் இருந்து தெளிந்து பசுக்களுடன் திருவாடுதுறைக்குச் சென்றார். மறைத்து வைத்திருந்த தன்னுடைய உடலைத் தேடிப் பார்த்தபோது அதனைக் காணவில்லை.

தம்முடைய யோக வலிமையால் அதனைத் தேடியபோது சிவாகமப் பொருளை தமிழில் எல்லோருக்கும் கிடைக்கவே, இறைவனின் திருவருளால் உடல் மறைந்தது என்பதை அறிந்து கொண்டார்.

ஆதலால் திருவருளின் வழியே நடக்க எண்ணி, திருவாடுதுறை திருக்கோவிலை அடைந்து இறைவனாரை வழிபட்டு, அக்கோவிலின் தலவிருட்சமான அரசமரத்தடியில் அமர்ந்து சிவயோகம் செய்ய தலைப்பட்டார்.

யோகநிலையில் இருந்து திருமூலர் ஓர்ஆண்டு கழித்து கண்விழித்து ஒரு பாடல் பாடுவார். இவ்வாறு ஆண்டு ஒன்றுக்கு ஒருபாடலாக மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திரம் என்ற அரிய நூலை இயற்றினார்.

திருமந்திரத்தை இயற்றிய பின் திருமூலர் இறைவனின் திருவருளால் மீண்டும் திருக்கையிலாயத்தை அடைந்து, சிவனாரை பிரியாமல் வாழும் பெறு வாழ்வைப் பெற்றார்.

திருமூலர் நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் அசுபதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒப்பற்ற சிவாகம விதிகளை தமிழில் திருமந்திரமாகத் தந்த திருமூலர் நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.

திருமூலரின் திருவாக்கு

இன்றும் நம்மிடம் வழக்கத்தில் உள்ள கீழ்கண்ட நல்வாக்குகள் திருமூலர் அருளியவை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

அன்பே சிவம்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்