திருவண்ணாமலை

திருவில்லிபுத்தூரிலிருந்து 4கி.மீ. தொலைவில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. இதன் வடக்கிலுள்ள மலைப்பாறையில் ஒரு விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இவ்விஷ்ணு கோயிலே இவ்வூருக்குப் புகழை ஈட்டித் தந்துள்ளது. தொடக்க காலத்தில் இவ்வூர் ‘திருமலை’ என்று அழைக்கப்பட்டு பின்னர் திருவண்ணாமலை எனப் பெயர் பெற்றது.

மக்களால் தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை கோயில் உள்ள இடத்திற்கு வெங்கடாசலபதிப் பெருமாள் வேட்டைக்கு வந்ததாகவும் பின் மக்களுக்கு அருள் செய்யும் வகையில் இக்கோயில் எழுந்தருளியதாகவும் கூறப்படுகிறது. கோயில் திருச்சுற்றுமதிலுடன் அமைந்துள்ளது. வடப்புறச் சுவற்றிற்கு வடபுறப் பாறையில் விஷ்ணுவின் புடைப்புச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் காணப்படுகின்றார் இப்பெருமாள்.

நாயக்கர் காலத்தில் திருவண்ணாமலை கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் நின்றநிலையில் வெங்கடாசலபதி காட்சி தருகின்றார். சுமார் 10அடி உயர விநாயகர் சிலை ஒன்று குளக்கரை அருகிலுள்ளது. இது பார்ப்போரை வியப்படையச் செய்வதாக உள்ளது. இச்சிலையும் நாயக்கர் காலத்தியதேயாகும்.

இவ்வூரினருகிலுள்ள இலந்தைக் குளத்தில் கிடைத்த செப்பேடு ஒன்று, நாயக்க மன்னன் ‘திருமலை நாயக்கர்’ இம்மலையில் தங்கி இருந்ததாகக் கூறுகின்றது. எனவே திருமலை நாயக்கர் காலத்திலேயும் சிறப்புடைய ஒரு ஊராக திருவண்ணாமலை விளங்கிற்று என்று கூறல் பொருந்தும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.