திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது .

தமிழைத் தரணியில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதுடன் இவர் இயற்றிய திருக்குறள் நம் தமிழன்னையின் சிகையில் மின்னும் கிரீடமாக அழகு செய்கின்றது.

மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து இயற்றப்பட்ட இந்நூல், மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாக எடுத்து இயம்புவதால் இந்நூல் நீதிநூல் எனப் போற்றப்படுகின்றது.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகின் பலநாடுகளில், அவர்களது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகையே வலம் வருவதால் இதற்கு “உலகப் பொதுமறை” என்ற புகழ்ப் பெயரும் உண்டு.

திருக்குறளை தனி ஒரு மனிதனாக, அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் அதாவது, அரசன் முதல் ஆண்டி வரை மேற்கொள்ள வேண்டியவற்றை உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரமிக்கத்தக்கும் வகையில் இயற்றிய திருவள்ளுவரை “தெய்வப்புலவர்” என்று கூறுவது முற்றிலும் பொருந்தும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு!
என்று மணிமகுடம் தரிக்கப்பட்டவர் திருவள்ளுவர்.

நம் இந்தியாவிலே அனைத்துப் பள்ளிகளிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும், அறநெறிகளை மழலைகளின் மனத்தில் பதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இத்தகு உயரிய அங்கீகாரம் நம் தமிழுக்கு திருவள்ளுவரால் கிடைத்திருப்பது நமக்கே நமக்கான கௌரவம்.

தமிழை, தமிழர்களை உலகளவில் அடையாளம் காணச் செய்த வள்ளுவரை போற்ற வேண்டும்.

சிறப்புமிக்க இத்தமிழ்த் திருநாளில் திருவள்ளுவர் நம் ஒவ்வொருவர் வாழ்வில் இரண்டறக் கலந்து உள்ளார் என்பதனை நினைவு கூறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

அறமுடன் பொருளை அழகாய் அமைத்தார்!

இன்பம் எதுவெனத் திறமுடன் வகுத்தார்!

மக்களுக்கு வாழும் வழி சொன்னார்

சீரும் சிந்தனைக் கீற்றும் செழித்து வளரச் செய்தார்

ஈரடிக் குறிளின் வாயிலாக திருவள்ளுவரே!

– ஜெயந்தி

 

Comments are closed.