திருவாதிரைக் களி என்பது மார்கழியில் வரும் திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்குப் படைக்கப்படும் அரிசிக் களி ஆகும்.
திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்று பெரியோர் கூறுவர். களி என்பது எல்லா வயதினராலும் உண்ணக் கூடிய உணவு. இது செரிமானத்திற்கும் ஏற்றது.
சேர்ந்தனார் என்ற சிவனடியார் தனது ஏழ்மையிலும் மார்கழி திருவாதிரையில் சிவனடியராக வந்த சிவபிரானுக்கு அரிசியை மாவாக்கி களி செய்து உணவிட்டார்.
ஆதலால் தான் திருவாதிரைக்கு களி செய்து நடராஜரை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இனி சுவையான திருவாதிரைக் களி செய்முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 100 கிராம் (1 பங்கு)
பாசிப் பருப்பு – 25 கிராம் ( ¼ பங்கு)
தேங்காய் – ¼ மூடி (சிறியது)
மண்டை வெல்லம் – 150 கிராம் (1½ பங்கு)
தண்ணீர் – 2½ பங்கு
சுக்கு – சிறிதளவு
ஏலக்காய் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)
நெய் – 2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 4 எண்ணம்
திருவாதிரைக் களி செய்முறை
முதலில் பச்சரிசி மற்றும் பாசி பருப்பினை தனித்தனியே வெறும் வாணலியில் அடுப்பினை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, ஆற விடவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பரபரப்பாக ரவைப் பதத்திற்கு அடித்துக் கொள்ளவும்.

பெரிய ஓட்டை உள்ள சலிப்பில் போட்டு சலித்து மேலே உள்ளவற்றை மீண்டும் மிக்ஸியில் அடித்து சலிக்கவும். இவ்வாறு எல்லாவற்றையும் ஒரே பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
மண்டை வெல்லத்தை நன்கு தட்டி பின் 2½ பங்கு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.


ஏலக்காய் மற்றும் சுக்கை பொடியாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் கரைத்து வடிகட்டிய சர்க்கரைக் கரைசலை வைத்து மிதான தீயில் சூடேற்றவும்.
சர்க்கரைத் தண்ணீர் சூடாகி ஆவி வந்ததும் துருவிய தேங்காய் துருவலைச் சேர்க்கவும்.

சர்க்கரைக் கரைசல் நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும்.


பின்னர் அதனுடன் தட்டிய சுக்கு ஏலக்காய் கலவையைச் சேர்த்துக் கிளறவும்.

இரண்டு நிமிடங்களில் கலவை கெட்டியாகி விடும். கலவை நன்கு திரண்டு வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.
மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரிப் பருப்பினைப் போட்டு வறுக்கவும்.

பின்னர் இதனை களியில் சேர்த்து ஒரு சேரக் கிளறி விடவும்.

சுவையான திருவாதிரைக் களி தயார்.


குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு கடலைப் பருப்பினையும் வறுத்து அரிசியுடன் சேர்த்து அரைத்து களி தயார் செய்யலாம்.
அரிசி மாவுக் கலவையை சர்க்கரை நீரில் சேர்த்ததும் விடாமல் கிளறி விடவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!