திருவாதிரை என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.
இத்திருவிழா 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்பதை வரலாற்று ஆய்வுகள் மற்றும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.
திருவாதிரை திருவிழா சிவபெருமானுக்கு உரியதாகும்.
திருவாதிரையைக் கொண்டே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. இத்திருவிழாவினைப் பற்றி மாணிக்க வாசகர் திருவாசகத்திலும், திருஞானசம்பந்தர் தேவாரத்தின் பூம்பாவாய் பதிகத்திலும, திருநாவுக்கரசர் தேவாரத்தின் திருவாதிரை பதிகத்திலும் பாடியுள்ளனர்.
திருவாதிரையானது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், கர்நாடகத்தில் ஒரு சில இடங்களிலும் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் திருவாதிரைக் கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் இத்திருவிழா எல்லா சிவாலயங்களிலும் விமர்சையாக நடைபெறுகின்றது. இவ்விழாவில் சிவனின் வடிவமான நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நடராஜர் தனது ஆனந்த நடனத்தின் மூலமே ஐந்தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை செய்கின்றார் என்று நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சிதம்பரத்தில் மொத்தம் 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறுகின்றது. திருவாதிரைக்கு முந்தைய ஒன்பதாவது நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10 வது நாள் (திருவாதிரை அன்று) கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மைக்கு அதிகாலையில் அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது.
வழிபாட்டின் போது திருவாதிரைக்களி மற்றும் ஏழுகறிக் கூட்டு நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றது. திருவாதிரைக்களி அரிசி மாவு, நாட்டுச் சக்கரை, தேங்காய், பாசிப்பருப்பு, ஏலக்காய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பூசணிக்காய், வாழைக்காய், பச்சை மொச்சை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக் கிழங்கு, கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளைக் கொண்டு ஏழு கறிக்கூட்டு தயாரிக்கப்படுகிறது. பின் நடராஜர் சிவகாமி அம்மையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.
மார்கழி திருவாதிரையன்று உத்திரகோச மங்கையில் மரகத நடராஜரின் மேலே உள்ள சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. பின் மீண்டும் நடராஜருக்கு சந்தனக் காப்பு இடப்படுகின்றது.
இலங்கையில் தின்னபுரம் சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இக்கோயில் ஈழத்து சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.
திருவாதிரைக்களி
சேர்ந்தனார் என்ற சிவனயடியார் நாகூரில் வசிந்து வந்தார். தினமும் சிவனடியார் ஒருவருக்கு உணவிட்டு பின் உணவருந்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவருடைய பக்தியை எல்லோருக்கும் எடுத்துக்காட்ட சேந்தனாருடைய செல்வ வளத்தை சிவபெருமான் குறையச் செய்தார். அப்போதும் சிவனடியார்க்கு உணவிடுவதை சேந்தனார் கைவிடவில்லை. அப்பொழுது ஒரு நாள் சிவனடியார்க்கு உணவிடுவதற்கு சிறிதளவு அரிசியே சேர்ந்தனாரிடம் இருந்தது.
அவர் அரிசியை மாவாக்கி அதிலிருந்து களி தயார் செய்து சிவனடியாராக வந்த சிவபெருமானுக்கு உணவிட்டார். சேர்ந்தனார் தயார் செய்த களியானது சிதம்பரம் சன்னிதானத்தில் சிதறிக் கிடந்ததைக் கண்டு எல்லோரும் சேர்ந்தனாரின் பக்தியைக் கண்டு வியந்தனர்.
சேர்ந்தனார் சிவபெருமானுக்கு களியை உணவாக இட்ட திருநாள் மார்கழி திருவாதிரை ஆகும். எனவே தான் வழிபாட்டில் திருவாதிரைக்களி முக்கிய இடம் பெறுகிறது என்று கூறப்படுகிறது.
கேரளத்தில் திருவாதிரைக் கொண்டாட்டம்
கேரள மக்கள் மார்கழி திருவாதிரையை சிவபெருமானின் பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்துக்களின் காதல் கடவுளான மன்மதன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த பொறிகளால் எரிக்கப்பட்டது திருவாதிரையன்று தான் என்பதும் கேரள மக்களின் நம்பிக்கையாகும்.
பெண்களின் அன்பு, அழகு, பக்தி ஆகியவற்றை பாடல்கள் மற்றும் நாட்டியத்தின் மூலம் இவ்விழாவின் போது அறியலாம். பெண்கள் வீட்டிலும் கோவிலிலும் வழிபாடு நடத்துகின்றனர்.
அன்று அதிகாலையில் எழுந்து ஆற்றில் நீராடி கோவிலுக்குச் சென்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி பற்றிய பாடல்களைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.
திருமணமான பின் வரும் முதல் திருவாதிரை பூத்திருவாதிரை என்று அழைக்கப்படுகிறது. பூத்திருவாதிரைக்கும் விமர்சையான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அன்று இரவு பெண்கள் எல்லோரும் வட்டமாக நின்ற கைத்தட்டி பாடல்கள் பாடி ஆடுகின்றனர்.
பத்தி பூச்சூடல் என்ற நிகழ்வு இவ்விழாவின் போது நடைபெறுகின்றது. பத்தி பூச்சூடல் என்பது நள்ளிரவில் பூச்சூடல் என்று பொருள் படும். ஊஞ்சலாட்டம் என்பது இவ்விழாவின் போது நடைபெறுகின்ற முக்கிய நிகழ்வாகும்.
திருவாதிரை விரதம்
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒன்பது நாள் முன்பாக இவ்விரதம் தொடங்குகிறது. அவித்த உணவு மட்டும் ஒருவேளை உண்ணப்படுகிறது.
கன்னிப் பெண்கள் நல்ல கணவன், மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டி விரதம் மேற்கொள்கின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்வு நீடிக்கவும், செழுமையான வாழ்க்கை வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.
Comments
“திருவாதிரை திருவிழா” மீது ஒரு மறுமொழி
[…] திருவாதிரை திருநாளன்று இறைவனைப் போற்றி வழிபட்டு, சிவனடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னையும் கொடுத்து மகிழ்வார். […]